ஒரு மாநிலமாக இருந்த ஜம்மு காஷ்மீருக்கு, இந்திய அரசு 370 என ஒரு சிறப்பு சட்டப் பிரிவை இயற்றி சில சுதந்திரங்களையும், அதிகாரங்களையும் வழங்கி இருந்தது. அது கடந்த 2019 ஆகஸ்ட் 5ஆம் தேதி ரத்து செய்யப்பட்டதோடு தற்போது ஜம்மு & காஷ்மீர் மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, ஜம்மு & காஷ்மீர் ஒரு தனி யூனியன் பிரதேசமாகவும், லடாக் ஒரு தனி யூனியன் பிரதேசமாகவும் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
ஜம்மு & காஷ்மீர் மக்களின் அனுமதியின்றி சட்டப்பிரிவு 370ஐ நீக்கியது சரி தவறு என்கிற விவாதத்தைக் கடந்து, 2019ஆம் ஆண்டில் ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒரு அங்கமாக அறிவிக்கப்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் லடாக்கை நோக்கிப் படை எடுக்கத் தொடங்கினர்.
இதற்கிடையில் இந்தியா - சீனாவுக்கு இடையிலான எல்லைப் பிரச்னைகளால் லடாக் யூனியன் பிரதேசத்தில் மக்கள் வரத்து சற்று குறைவாக இருந்தது.
அப்பிரச்னைகள் எல்லாம் ஒருவழியாகத் தீர்க்கப்பட்ட பின், இந்த 2022ஆம் ஆண்டில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தாறுமாறாக அதிகரித்துவிட்டது என்கிறார் முனைவர் ஷேக் குலாம் ரசுல். இவர் ஜம்மு & காஷ்மீர் ஆர்டிஐ செயற்பாட்டுக் குழுவின் தலைவர் மற்றும் சூழலியல் ஆர்வலர்.
லடாக்கில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சகட்டுமேனிக்கு அதிகரித்து இருப்பதாகவும், அது லடாக் பிராந்தியத்தில் தண்ணீர் பற்றாக்குறை மற்றும் சூழலியலுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக இருப்பதாகவும் இந்தியா டைம்ஸ் பத்திரிகையிடம் கூறியுள்ளார்.
என் அனுபவத்தில் உள்ளூர் மக்கள் சுமார் 20 - 21 லிட்டர் நீரில் குளிப்பர், சுற்றுலாப் பயணிகளோ 105 - 107 லிட்டர் நீரில் குளிக்கிறார்கள். அது போக ஹோம்ஸ்டே கலாச்சாரம் லடாக் முழுக்க தலையெடுத்துப் பரவத் தொடங்கியுள்ளதால் அப்பிராந்தியத்தில் தண்ணீருக்கான தேவை பயங்கரமாக அதிகரித்துள்ளது என்கிறார்.
அதே போல லடாக் வரும் சுற்றுலாப் பயணிகள் குடிக்க பிளாஸ்டிக் பாட்டில் நீரைப் பயன்படுத்துகிறார்கள். அதோடு அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களின் வருகை லடாக்கில் மாசுபாட்டை அதிகரிக்கிறது. இப்படி பல வழிகளில் லடாக்கில் உள்ள சூழலையும், பல வன உயிரினங்களின் வாழ்விடங்களும், குறிப்பாக பனிச் சிறுத்தைகளின் வாழ்விடங்கள் பாதிக்கப்படுவதாகக் கூறினார்.
இந்த பிரச்னைகளைச் சமாளிக்க, லடாக் பிராந்தியத்தில் அதிக எண்ணிக்கையில் சுற்றுலா பயணிகள் வருவதற்கு தடை விதிக்கப்பட வேண்டும்.
அதற்கு பதிலாக சமூகமாகச் சுற்றுலாப் பயணம் மேற்கொள்வதை ஊக்குவிக்க வேண்டும் என்கிறார் ஷேக் குலாம் ரசுல். அதோடு லடாக் பிராந்தியத்துக்குள் வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையையும் அதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்கிறார்.
லடாக் பகுதியைச் சேர்ந்த லதீஃப் அஹ்மத் ஒரு ஹோம்ஸ்டே விடுதியை நடத்துகிறார். சுற்றுலாப் பயணிகளிடம் நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறும், குடிநீருக்கு பிளாஸ்டிக் பாட்டில்களைப் பயன்படுத்துவதற்கு பதிலாக நீர் ஏடிஎம்களை பயன்படுத்துமாறும் அறிவுறுத்துவதாகக் கூறுகிறார். குடிநீருக்கு அரசே ஏற்பாடு செய்து வைத்திருக்கும் நீர் ஏடிஎம்களை பயன்படுத்துமாறு சுற்றுலாப் பயணிகளிடம் அரசும் கோரிக்கை வைக்கிறது.
லடாக் பகுதியில் ஒவ்வொரு சுற்றுலா காலத்திலும் சுமார் 30 லட்சம் குடிநீர் பாட்டில் கழிவுகள் சேகரிக்கப்படுவதாக இந்தியா டைம்ஸ் கட்டுரை ஒன்றில் குறிப்பிடுகிறது.
லடாக் என்றாலே இயற்கை அழகு, தெளிந்த வானம், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மலைகள், புத்த மடாலயங்கள், பண்டிகைகள் என வண்ணமயமான விஷயங்களே நம் நினைவுக்கு வரும். அதோடு இருசக்கர வாகனத்தில் லடாக் பகுதிக்குச் செல்வது மற்றொரு சுகானுபவம்.
லடாக் பகுதியில் மொத்தம் 31,000 குடும்பங்கள் மட்டுமே வசிக்கின்றன. ஒட்டுமொத்த மக்கள் தொகை எண்ணிக்கை சுமார் 1.33 லட்சம் பேர்.
2022ஆம் ஆண்டு ஜூன் & ஜூலை ஆகிய இரு மாதங்களில் மட்டும் சுமார் 2.5 லட்சம் சுற்றுலாப் பயணிகள் லடாக் வந்திருக்கிறார்கள். இது கிட்டத்தட்ட ஒட்டுமொத்த லடாக் மக்கள் தொகையை விட சுமார் இரு மடங்கு.
இதுவே 2022ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை எட்டு மாத காலத்தில் லடாக் வந்திருக்கும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 4.5 லட்சம் என்கிறது இந்தியா டைம்ஸ்.
அடல் பாலம் ஒரு முக்கிய காரணம்:
கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபர் 3ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அடல் சுரங்கப் பாதையைத் திறந்து வைத்தார். உலகிலேயே கடல்மட்டத்திலிருந்து 10,000 அடிக்கு மேல் அமைந்துள்ள நீளமான (9.1 கிலோமீட்டர்) சுரங்கப் பாதை இது தான். இந்த சுரங்கப் பாதை செயல்பாட்டுக்கு வந்த பிறகு, மணாலியில் இருந்து கேலாங் பகுதிக்குச் செல்லும் நேரம், தூரம் எல்லாமே குறைந்துவிட்டது.
அதோடு, இந்தச் சுரங்கப் பாதையில் எந்தவித காலநிலை பிரச்னைகளும் இல்லாமல் ஒரு சாதாரண சாலையைப் பயன்படுத்துவது போலப் பயன்படுத்தலாம். இதுவும் லடாக் பகுதிக்கு அதிக மக்கள் வர ஒரு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
2022ஆம் ஆண்டில் இதுவரை இந்தச் சுரங்கப் பாதை பயன்படுத்தி 7.62 லட்சம் வாகனங்கள் பயணித்துள்ளன, இது முந்தைய ஆண்டுகளை விட அதிகம் என்கிறது தரவுகள்.
இப்படி லட்சக் கணக்கில் மக்கள் வந்து செல்வது லடாக் சூழலைக் கடுமையாக பாதிப்பதாக சூழலியல் நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். கடந்த 2018ஆம் ஆண்டு ஒரு முக்கிய இருசக்கர வாகனப் பேரணி லடாக் சூழலியலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் நடக்கவிருந்தது. தொடர் போராட்டம் காரணமாக அப்பேரணியின் பாதை மாற்றப்பட்டது நினைவுகூரத்தக்கது.
காஷ்மீர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பூகோளவியல் மற்றும் பேரிடர் மேலாண்மைப் பேராசிரியர் ஒருவர், உடனடியாக லடாக் அதிகாரிகள் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இப்போது கூட நிலைமை கை மீறிப் போய்விடவில்லை என்கிறார்.
நம்மிடம் உள்ள ஏரிகள் வறண்டு வருகின்றன. அதை எப்படிச் சமாளிக்க வேண்டும் என நமக்குத் தெரியவில்லை என்பது தான் பிரச்னை. வெளிநாட்டில் உள்ள சுற்றுலாக்கள் மாசுபாட்டை ஏற்படுத்துவதாக இல்லை என்கிறார் அப்பேராசிரியர்.
லடாக் பிராந்தியத்தின் துணைநிலை ஆளுநர் ஆர் கே மாதுரோ, சுற்றுலாவின் பயனை லடாக் பிராந்தியம் முழுமைக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்கிறார். அதற்கு குவாலிட்டி டூரிசத்தை முன்வைக்கிறார்.
இமய மலை வெறுமனே ஆன்மிக பக்தர்களுக்கான மலை அல்ல, அது ஒட்டுமொத்த இந்தியாவின் வாழ்வாதாரத்தை தீர்மானிக்கும் சூழலியல் சக்தி. கங்கை போன்ற பெரிய ஆறு தொடங்கி பலரும் உயிர் வாழத் தேவையான நீரைக் கொடுக்கும் பனிமலை என்பதை அரசு கவனத்தில் கொண்டு செயல்படும் என நம்புவோம். அடுத்த சில தலைமுறைகளாவது லடாக்கை உயிர்ப்போடு காணக் கொஞ்சம் சூழலியல் சிந்தனையோடு செயல்படுவோம்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust