மனிதர்களின் அனைத்து கண்டுபிடிப்புகளும் பெரிதாகக் கொண்டாடப்படுவதில்லை. ஒரு கண்டுபிடிப்பு பலதரப்பட்ட, அதிக எண்ணிக்கையிலான மக்களைச் சென்றடையும் போது தான் அதன் தாக்கம் அதிகமாக இருக்கும். அதற்குத் தகுந்தாற் போலப் பெயர், பணம், புகழ் எல்லாம் கிடைக்கும்.
உதாரணமாக மின்சார ஒளிவிளக்கைக் கண்டுபிடித்தது யார் என்கிற கேள்விக்கு தாமஸ் ஆல்வா எடிசன் என நம்மில் பலர் பதில் கூற முடியும். ஆனால் பெண்களின் மார்பகத்தில் ஏற்படும் புற்றுநோயைக் கண்டறிய உதவும் மாலிகுலர் பிரெஸ்ட் இமேஜிங் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்தவர் யார் என்று கேட்டால் நம்மில் பலருக்கு விடை தெரியாது.
சாதாரண மக்கள் தொடங்கி, மாற்றுத் திறனாளிகள், மன வளர்ச்சி குன்றியவர்கள், உடல் நலக் குறைபாடு கொண்டவர்கள் என அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கியது தான் ஒரு சமூகம். அவர்களின் வளர்ச்சியைப் புறக்கணித்துவிட்டு வெகுஜன மக்கள் மட்டும் பார்க்கும் வளர்ச்சி அர்த்தமற்றது.
நம்மோடு இச்சமூகத்தில் வாழும் பெரிய அரசியல் அதிகாரம் இல்லாத மக்கள் கூட்டத்தில் கண் தெரியாதவர்கள் & பார்வைத் திறன் சவால் கொண்டவர்கள், பிரெய்லி என்கிற மொழியில் தான் புத்தகத்தைப் படிக்கிறார்கள். ஒரு பிரெய்லி புத்தகத்தை அச்சிட பிரெய்லி பிரின்டர்கள் தேவை. பொதுவாக தற்போது நடைமுறையில் சந்தையில் கிடைக்கும் பிரெய்லி பிரின்டர்கள் சுமார் 2,000 முதல் 3,000 அமெரிக்க டாலர் விலை கொண்டதாக இருக்கிறது. எனவே நிறைய நல்ல நூல்கள் மற்றும் குறிப்புகள் பார்வைத் திறன் இல்லாதவர்கள் மற்றும் பார்வைத் திறன் சார்ந்த விஷயத்தில் சிரமத்தை எதிர்கொள்பவர்களால் படிக்க முடிவதில்லை.
இப்பிரச்சனையைப் போக்க, கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த கவிராஜ் பிரித்வி என்பவரது அணி, ஒரு விலை மலிவான பிரெய்லி பிரின்டரை கண்டுபிடித்துள்ளது. SmartIDEAthon 2022 என்கிற போட்டி, ஸ்டார்ட் அப் இந்தியா மற்றும் பல்வேறு பல்கலைக்கழகங்களோடு இணைந்து நடைபெற்றது. சமீபத்தில் (ஜூன் 4ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை) நடந்து முடிந்த இப்போட்டியில் தன் பிரெய்லி பிரின்டர் யோசனையைச் சமர்ப்பித்து, சமூக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் சிறந்த யோசனை என்கிற பட்டத்தையும் பெற்றுள்ளது.
இவர்கள் கண்டுபிடித்திருக்கும் பிரெய்லி பிரின்டர், டெஸ்க்டாப்பில் பயன்படுத்தும் மவுஸ் அளவுக்கு சிறியதாக இருப்பதாக 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' தளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது மற்ற எந்த பிரெய்லி பிரிண்டரை விடவும் விலை மலிவானதாகவும், எளிதில் எந்த இடத்துக்கும் எடுத்துச் செல்லக் கூடியதாகவும் இருப்பதாகச் செய்திகளில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
ஐஐடி கெளஹாத்தியில் இயற்பியல் படித்துக் கொண்டிருக்கும் கவிராஜ் பிரித்வி, தன் கண்டுபிடிப்புகள் அனைத்திலும் ஒரு உதவக் கூடிய கோணம் இருக்க வேண்டும் என்று கருதுவதாக ஊடகங்களிடம் கூறியுள்ளார். சிறு வயதிலேயே தனக்கென ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தைத் தொடங்க வேண்டும் என்றும், அதில் கண்டுபிடிக்கப்படும் விஷயங்கள் அனைத்துக்கும் ஒரு சமூக அக்கறை சார்ந்த கோணம் இருக்க வேண்டும், அது ஏழை எளிய மக்களுக்கு உதவ வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
பிரெய்லி பிரின்டர் தவிர ஒரு ரோட்டர் சிஸ்டத்தைக் கண்டுபிடித்து அதற்குக் காப்புரிமையும் வாங்கியுள்ளார். இந்த ரோட்டரைப் பயன்படுத்தி அதிக சலனமின்றி ஹெலிகாப்டரில் நோயாளிகளை இடமாற்றம் செய்யலாமாம். கண் பார்வை திறனில் சவால்களை எதிர்கொள்பவர்களுக்காக புதிய பிரெய்லி பிரின்டரைக் கண்டுபிடித்த கவிராஜ் பிரித்விக்கு நம் வாழ்த்துகள்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust