ராஜகுமாரி அம்ரித் கவுர்; யார் இவர்? அரச குடும்ப சொத்து விவகாரம் வெளியானது எப்படி?

1950 ஆம் ஆண்டு ஹரிந்தர் சிங் தன்னுடைய முதல் உயிலை எழுதினார். அதில் தன்னுடைய நான்கு வீடுகள் மற்றும் வங்கியில் உள்ள பணம் என அனைத்து சொத்துக்களும் நான்கு குழந்தைகளுக்கும் சரிசமமாக பிரித்துக் கொடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
ராஜகுமாரி அம்ரித் கவுர்
ராஜகுமாரி அம்ரித் கவுர்ட்விட்டர்
Published on

ஒரு பணக்கார குடும்பத்தில் எல்லா விவகாரங்களை நிர்வகிக்கும், தொழில்களை கவனித்துக் கொள்ளும் நபர் இறந்துவிட்டால், அடுத்து அந்த சொத்து யாருக்கு கிடைக்கும், யாருக்கு எல்லாம் அதில் பங்கு என்கிற பிரச்னையை உலகம் முழுக்க ஜாதி மத இன பாகுபாடு இன்றி பார்க்க முடியும்.

இந்தியாவின் டாப் பணக்காரர்களில் ஒருவராக இருந்த திருபாய் அம்பானி கூட, தனக்குபின் தன்னுடைய சொத்து பத்துக்கள் யாருக்கு எப்படி சென்று சேரும் என்பது குறித்து எந்த ஒரு உயிலையும் எழுதி வைக்காமல் மரணம் அடைந்தார்.

Ambani
AmbaniNewsSense

திருபாய் அம்பானி உயிர் இழந்த பிறகு முகேஷ் அம்பானி மற்றும் அனில் அம்பானிக்கு இடையில் ஏற்பட்ட சொத்து பிரச்னையை உலகமே வேடிக்கை பார்த்தது இங்கு நினைவு கூறத்தக்கது.

அப்படி இந்தியாவில் மகாராஜாவாக வாழ்ந்த ஹரிந்தர் சிங் பிரார் குடும்பத்திலும் பல ஆண்டுகளாக சொத்து பிரச்னை நிலவி வந்தது. கடந்த 2022 செப்டம்பர் மாதத்தில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு இதற்கு ஒரு முற்றுப்புள்ளி ஆக அமையும் என பல்வேறு ஊடகங்களில் செய்து வெளியாகி உள்ளது.

ஒரு மகாராஜா குடும்பத்தில் என்ன சொத்து பிரச்னை ஏற்பட்டது? யாரெல்லாம் சொத்துக்களுக்காக வழக்கு தொடுத்தனர்? இதன் பின்னணி என்ன என்பதை எல்லாம் இங்கு பார்ப்போம்.

பின்னணியின் சுருக்கம்:

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு 1948 ஆம் ஆண்டு பல்வேறு இந்திய சமஸ்தான மன்னர்கள் இந்திய ஒன்றிய அரசோடு இணைந்து செல்ல தீர்மானித்தனர். அதில் இன்று பஞ்சாப் என்று அழைக்கப்படும் மாநிலத்தில் ஃபரீத் கோட் (Faridkot) என்கிற பகுதியை ஆட்சி செய்து வந்த மன்னர் ஹரிந்தர் சிங் பிரார் என்பவரும் ஒருவர்.

இந்தியாவிலிருந்த அரசர்களில் ஆங்கிலேயர்களோடு ஒரு இணக்கமான போக்கை கடைபிடித்தவர்களும் உண்டு. ஆங்கிலேயர்கள் பார்வையில் இந்தியாவை வளர்த்தெடுக்க வேண்டும் என்கிற கருத்தை கொண்ட மகாராஜாக்களும் இருந்தனர்.

அப்படி ஆங்கிலேயர்களின் அறிவியல் வளர்ச்சியை பார்த்து இந்தியாவில் தன்னுடைய ஆட்சிக்கு உட்பட்ட பல இடங்களில் ரயில்வே தண்டவாளங்கள், ரயில் வண்டிகள், அரசு கட்டிடங்கள், மருத்துவமனைகள் என பலவற்றையும் நிறுவினார் ஹரிந்தர் சிங்.

ஆட்சி அதிகாரங்களை எல்லாம் இந்திய ஒன்றிய அரசுக்கு கொடுத்து விட்டாலும் இந்த மன்னர்களுக்கு தங்கள் பெயரில் இருந்த சொத்துபத்துக்கள், நிலபுலன்கள், வீடுகள், வங்கிகளில் இருந்த பணம் போன்றவைகளை அவர்களே வைத்துக் கொள்ள அனுமதித்தது இந்திய ஒன்றிய அரசு.

ராஜகுமாரி அம்ரித் கவுர்
பிரிட்டிஷ் அரச குடும்பம் எப்படி பணம் சம்பாதிக்கிறது? - வியக்க வைக்கும் தகவல்கள்

இதனால் ஹரிந்தர் சிங் பிராருக்கு நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள், கோட்டைகள், பல கட்டடங்கள், விமானம், பழைய கார்கள், வங்கியில் டெபாசிட் செய்யப்படு இருந்த பெரிய தொகை என பலதும் கிடைத்தது. நில புலன்கள், கோட்டைகள், கட்டிடங்கள் எல்லாம் பஞ்சாப், ஹிமாச்சலப் பிரதேசம், ஹரியானா, டெல்லி... என இன்றைய இந்தியாவின் பல பகுதிகளில் பரவிக் கிடக்கிறது.

சரி குடும்பத்திற்கு வருவோம். மகாராஜா ஹரிந்தர் சிங் பிரார் மற்றும் அவரது மனைவிக்கு நரிந்தர் கவுருக்கு மொத்தம் நான்கு குழந்தைகள். ஒரு மகன், மூன்று மகள்கள். மூத்த மகளின் பெயர் அம்ரித் கவுர். இரண்டாவது மகள் தீபிந்தர் கவுர், மூன்றாவது மகளின் பெயர் மஹிபிந்தர் கவுர். மகனின் பெயர் டிக்கா ஹர்மோஹிந்தர் சிங்.

முதல் உயில்:

1950 ஆம் ஆண்டு ஹரிந்தர் சிங் தன்னுடைய முதல் உயிலை எழுதினார். அதில் தன்னுடைய நான்கு வீடுகள் மற்றும் வங்கியில் உள்ள பணம் என அனைத்து சொத்துக்களும் நான்கு குழந்தைகளுக்கும் சரிசமமாக பிரித்துக் கொடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

முதல் மகளுக்கு சொத்து இல்லை:

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஹரிந்தர் சிங் இரண்டாவது உயிலை எழுதினார். அதில் தன் மூத்த மகள் அம்ரித் கவுருக்கு தன் சொத்தில் எதையும் கொடுக்க விரும்பவில்லை என குறிப்பிடப்பட்டிருந்தது.

மூத்த மகளுக்கு கொடுப்பதற்கு பதிலாக தன்னுடைய மற்ற இரு மகள்களுக்கும் மொத்த சொத்தையும் பிரித்துக் கொடுக்குமாறும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த குடும்ப பிரச்னைகள் எல்லாம் கடந்து ஒரு கட்டத்தில் அப்பாவும் மகளும் சமாதானமாக வாழ்ந்து வந்தபோது 1981 ஆம் ஆண்டு அம்ரித் கவுரின் அம்மா மற்றும் சகோதரன் ஒரு சாலை விபத்தில் இறந்து போயினர். அதாவது மகாராஜ ஹரிந்தர் சிங்கின் மனைவி மற்றும் மகன் காலமாயினர்.

லீகல் டீட்:

இதற்கிடையில் மகாராஜா ஹரிந்தர் சிங் லண்டனுக்கு சென்று சட்டபூர்வமாக லீகல் டீட் என்று அழைக்கப்படும் ஒரு ஒப்பந்தத்தை பதிவு செய்ததாக பிபிசி ஊடகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி மூத்த மகள் அம்ரித் கவுருக்கு சென்று சேர வேண்டிய சொத்துக்கள் எந்த வித தடையும் இன்றி சேரலாம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

மூன்றாவது உயிலால் குழப்பம்:

1982 ஆம் ஆண்டு மகாராஜா ஹரிந்தர் சிங்கும் காலமானார். அவர் காலமான பிறகு, மூன்றாவதாக ஒரு உயிலை எழுதியதாக கூறப்பட்டது. இந்த மூன்றாவது உயில் தான் அரச பரம்பரையை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தது.

இந்த மூன்றாவது உயிலின் படி தன்னுடைய சொத்து பத்துக்கள் அனைத்தும், ஒரு டிரஸ்ட் மூலம் நிர்வாகிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

நீதிமன்றம் படி ஏறிய ராஜ வம்சத்தினர்:

1991 ஆம் ஆண்டு அம்ரித் கவுர் தன் தந்தை எழுதியதாக கூறிய மூன்றாவது உயிலை எதிர்த்து நீதிமன்றப் படி ஏறினார். தன்னுடைய சகோதரன் விபத்தில் உயிரிழந்து விட்டதால் பாக்கியுள்ள தன் தந்தையின் சொத்துக்கள் தன் சகோதரிகள் உட்பட மூன்று பங்காக பிரிக்கப்பட்டு அதில் ஒரு பங்கு தனக்கு வந்து சேர வேண்டும் என வழக்கு தொடுத்தார்.

தன் சகோதரிகள் தீபிந்தர் கவுர், மஹிபிந்தர் கவுர் மற்றும் தன் தந்தையின் சொத்துக்களை நிர்வகிக்கும் டிரஸ்டின் மூத்த நிர்வாகிகளை எதிர் தரப்பினராக வழக்கில் சேர்த்தார்.

ஒரு சகோதரியும் மரணம்:

இதற்கிடையில் 2001 ஆம் ஆண்டு அமிர்த் கவுரின் மற்றொரு சகோதரி மஹிபிந்தர் கவுர் காலமானார்.

மூன்றாவது உயிலை தன்னுடைய தந்தை ஹரிந்தர் சிங் எழுதவில்லை என்பதை நீதிமன்றத்தில் நிரூபிக்க ஜெஸ்ஸி ஆனந்த் என்கிற தடையவியல் நிபுணரை பணியமர்த்தினார் அம்ரித் கவுர்.

மெத்தப் படித்த மகாராஜாவின் கையெழுத்து அத்தனை அற்புதமாக இருக்கும் என்றும், எழுதப்பட்டுள்ள உயிலில் அவருடைய கையெழுத்து இல்லை என்றும், உயிலில் பல்வேறு எழுத்துப் பிழைகள் இருப்பதையும் சுட்டிக்காட்டி வாதிட்டது அம்ரித் கவுர் தரப்பு.

அதுபோக மூன்றாவது உயிலை தட்டச்சு செய்யப் பயன்படுத்திய தட்டச்சு இயந்திரமும் மாறுபட்டதாக இருப்பதையும் நீதிமன்றத்தில் முறையாக சுட்டிக்காட்டியது அம்ரித் கவுர் தரப்பு.

ராஜகுமாரி அம்ரித் கவுர்
டாடா குழுமம் வரலாறு : துரோகிகளை வீழ்த்திய ரத்தன் டாடா | பகுதி 25

இரண்டாவது சகோதரி மரணம்:

கடந்த 2013 ஆம் ஆண்டு விசாரணை நீதிமன்றத்தில் மகாராஜா ஹரிந்தர் சிங் எழுதியதாக கூறப்பட்ட மூன்றாவது உயிலை அவர் எழுதவில்லை என்றும், அம்ரித் கவுரின் தந்தையின் சொத்தில் சரி பாதி அம்ரித் கவுருக்கும், மீதிப் பாதி தீபீந்தர் கவருக்கும் (ஒரு சகோதரி 2011ஆம் ஆண்டிலேயே காலமாகிவிட்டதால்) கொடுக்கப்பட வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது. 2018 ஆம் ஆண்டு திபிந்தர் கவுரும் காலமானார்.

அம்ரித் கவுருக்கு சாதகமாக வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து டிரஸ்ட் உறுப்பினர்கள் மேல்முறையீடு செய்தனர். பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு விசாரணை நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட தீர்ப்பு சரி என உறுதி செய்யப்பட்டது. அதோடு ஹரிந்தர் சிங் எழுதியதாக கூறப்படும் மூன்றாவது உயில் போலியானது என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

கடந்த 2022 செப்டம்பர் மாதத்தில் உச்சநீதிமன்றமும் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை சரி என ஆமோதித்து தீர்ப்பளித்தது. அதோடு மகாராஜா ஹரிந்தர் சிங்கின் சொத்து பத்துக்களை நிர்வகிக்கும் டிரஸ்ட் உடனடியாக கலைக்கப்பட வேண்டும் என்றும், மீதம் இருக்கும் சொத்துபத்துக்கள் அனைத்தும் அம்ரித் கவுர் மற்றும் தீபிந்தர் கவரின் குடும்பங்களுக்கு பிரித்து கொடுக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

பணம் அச்சடித்த ஆயுதம் என்பது எத்தனை சத்திய வாக்கு!

ராஜகுமாரி அம்ரித் கவுர்
துபாயில் அம்பானி வீடு : 600 கோடி மதிப்பு, 10 படுக்கையறைகள் - வேறு என்ன சிறப்பு?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com