ரயில்வே தேர்வுகளை இரண்டு கட்டங்களாக நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களில் கடந்த இரண்டு நாள்களாகப் போராட்டங்கள் நடந்துவருகின்றன. இந்திய ரயில்வே கடந்த ஜனவரி 15-ம் தேதி RRB NTPC தேர்வு முடிவுகளை வெளியிட்டததைத் தொடர்ந்து இந்த போராட்டங்கள் நடைபெறுகின்றன. போராட்டக்காரர்கள் வன்முறையை கையில் எடுத்ததால் நேற்று பீகாரில் ஒரு ரயிலுக்கு தீ வைத்தனர்
இதையடுத்து NTPC தேர்வுகள் மொத்தமாக ரத்து செய்யப்படுவதாகவும், போராட்டக்காரர்களின் குறைகளைக் கேட்டு, அதன்படி நடவடிக்கை எடுக்க ஒரு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது
இந்திய ரயில்வேயில் உள்ள 35,281 காலிப் பணியிடங்களுக்கு (ஜூனியர் கிளர்க், ஸ்டேஷன் மாஸ்டர், டைம்கீப்பர் போன்றவை) 2020-ம் ஆண்டு முதல்கட்ட கணினித்தேர்வு நடத்தப்பட்டது. இதில் சுமார் 11,000 பணியிடங்களுக்கு 10 / +2 பாஸ் செய்திருந்தாலே போதும். மீதமுள்ள பணிகளுக்குப் பட்டப்படிப்பு தேவை.
சுமார் 1.25 கோடி பேர் விண்ணப்பித்த இந்தப் பணிகளுக்கு, முதல்கட்டத் தேர்வில் தேர்ச்சிபெறும் சுமார் 7 லட்சம் பேர் அடுத்த கட்ட தேர்வுக்கு அழைக்கப்படுவர். ஆனால், 7 லட்சத்திற்கு பதில் மொத்தம் 3.84 லட்சம் பேர் மட்டுமே அடுத்தகட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
இதற்கு காரணம், பட்டப்படிப்பு பெற்ற ஒருவர், அனைத்துப் பணிகளுக்கும் விண்ணப்பித்து முதல்கட்டத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால், அவர் இரண்டாவது கட்டத்திலும் அனைத்து தேர்வுகளையும் எழுதலாம் (ஜூனியர் கிளர்க், ஸ்டேஷன் மாஸ்டர் என எல்லா பணிகளுக்கும்). இறுதியாக ஒரு பணியைத் தேர்வு செய்துகொள்ளலாம். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துப் போராடுகின்றனர் தேர்வு எழுதியவர்கள்.
ஆனால், ``பட்டப்படிப்பு முடித்தவர்கள் ஆரம்ப நிலைப் பணிகளுக்கு விண்ணப்பிப்பதை சட்டப்படி தடுக்கமுடியாது” என்கிறது ரயில்வே.
``இப்படி பட்டப்படிப்பு படித்தவர்கள், 10 /+2 படித்தவர்களின் பணிக்கும் விண்ணப்பித்தால் எங்களுக்கு வேலை கிடைக்காது” என்கின்றனர் போராட்டக்காரர்கள்.
இதற்கு முன்பு 2016-ம் ஆண்டு இதேபோல தேர்வு நடத்தப்பட்டது. அப்போதைய காலிப்பணியிடங்களுக்கு, குறைந்தபட்ச தகுதி பட்டப்படிப்பு என்பதாக மட்டுமே இருந்ததால் இப்படி பிரச்னை எழவில்லை.
சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டபோது சில அதிகாரிகள் எழுந்து நிற்காதது நேற்று சர்ச்சையாகியிருக்கிறது.
மேலும், அதுகுறித்து அதிகாரிகளிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, ``தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது எழுந்துநிற்க வேண்டியது அவசியமில்லை என உயர்நீதிமன்ற தீர்ப்பு உள்ளது” எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த 2018-ம் ஆண்டு சென்னை மியூசிக் அகாடமியில் ஆளுநர் கலந்துகொண்ட ஒரு விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அப்போது காஞ்சி மடத்தின் பீடாதிபதி விஜயேந்திரர் எழுந்து நிற்காதது பெரிய சர்ச்சையானது. அதுதொடர்பான ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ``1970-ம் ஆண்டு தமிழக அரசு வெளியிட்ட அரசாணையின்படி, தமிழ்த்தாய் வாழ்த்து, வாழ்த்துப்பாடல்தானே (Prayer Song) தவிர, அது தேசிய / மாநில கீதம் (Anthem) அல்ல. எனவே அதற்குக் கட்டாயம் எழுந்துநிற்க வேண்டும் எனச் சொல்ல எந்த சட்டமோ, விதிமுறையோ இல்லை. அதேசமயம் அதற்கு உச்சபட்ச மரியாதை அளிக்கவேண்டியது அவசியம். மேலும், பலவகைப்பட்ட கலாச்சாரங்கள் கொண்ட நம் நாட்டில் ஒருவர் எழுந்துநின்று மட்டும்தான் மரியாதை செலுத்தவேண்டும் என்பது சரியல்ல; ஒரு சந்நியாசியாக அவர் (விஜயேந்திரர்) தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது அமர்ந்து தியான நிலையில் மரியாதை செலுத்தியிருக்கிறார்” எனக் குறிப்பிட்டனர்
இந்த வழக்கில் நீதிபதி தெரிவித்த கருத்திற்குப் பிறகு, தமிழக அரசு சார்பில் புதிய அரசாணை ஒன்று பிறப்பிக்கப்பட்டது. அது தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக அறிவித்தது. கூடவே, மாற்றுத்திறனாளிகள் தவிர அனைவரும் எழுந்துநிற்க வேண்டும் எனவும் குறிப்பிட்டது. இதன்படி, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்பது இப்போது கட்டாயமே.
அருணாசலப் பிரதேசம் மாநிலத்தில் சீனாவின் டிசங்போ ஆறு பாயும் பகுதியில் எல்லையைக் கடந்ததாக மிரம் தரன் என்ற 17 வயது சிறுவனை சீன இராணுவத்தினர் பிடித்துள்ளனர்.
அதன் பிறகு சிறுவன் குறித்து மத்திய அரசுக்குத் தகவல் அளித்துள்ளனர். சிறுவனை மீட்பதற்கான நடவடிக்கைகளில் இந்திய அரசு இறங்கியது. குடியரசு தினத்தன்று சீன ராணுவத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி சிறுவனை மீட்பதனை உறுதிபடுத்தியது.
இது குறித்து மத்திய சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, “குடியரசு தினத்தன்று ஹாட்லைன் வாயிலாக சீன ராணுவத்துடன், இந்திய ராணுவத்தினர் பேசினர். அப்போது மோசமான வானிலை காரணமாகச் சிறுவனை ஒப்படைப்பதில் தாமதம் ஏற்பட்டு உள்ளதாக, சீன ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.விரைவில் சிறுவனை ஒப்படைக்கும் நாள், இடம் ஆகிய விபரங்களைத் தெரிவிப்பதாக சீன ராணுவத்தினர் கூறியுள்ளனர்” என்று அவர் கூறினார்.
தமிழகத்தின் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதியை நேற்று அறிவித்திருக்கிறது மாநில தேர்தல் ஆணையம். இதன்படி, பிப்ரவரி 19-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது.
வேட்புமனு தாக்கல், வரும் ஜனவரி 28 முதல் பிப்ரவரி 04 வரை நடைபெறும். வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22 அன்று நடைபெறும்.
அஜித் மீண்டும் இயக்குநர் ஹெச்.வினோத்துடன் புதிய படத்தைத் தொடங்க உள்ளார். இதை தயாரிப்பாளர் போனி கபூரே தயாரிக்கவிருக்கிறார். அஜித் - வினோத் - போனி கபூர் இணையும் மூன்றாவது படமாக இது உருவாகவிருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் பூஜையுடன் தொடங்க உள்ளது. இந்நிலையில் அஜித்தின் 61-வது படத்தில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு, தபு மீண்டும் அஜித்துடன் இணையவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு முன் சில தமிழ்ப்படங்களில் நடித்த தபு, இதன் மூலம் 9 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தமிழுக்கு வரவுள்ளார். ராஜீவ் மேனன் இயக்கிய ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படத்தில் தபுவும், அஜித்தும் ஜோடியாக நடித்தனர். ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்த இந்த ஜோடி 22 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையவுள்ளது படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.