கொரோனா பெருந்தொற்று மீண்டும் அதிகரிப்பது தொடர்பாக, மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நேற்று காணொலிக்காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார். அப்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்துப் பேசிய அவர்,"கடந்த நவம்பர் மாதம் மத்திய அரசு பெட்ரோல், டீசலுக்கான உற்பத்தி வரியைக் குறைத்தது. இதேபோன்று, மாநிலங்களும் உள்ளூர் வரியைக் குறைத்து மக்களுக்கு அந்தப் பலன் போய்ச்சேர உதவுங்கள் என மத்திய அரசு கேட்டுக்கொண்டது. மஹாராஷ்டிரா, மேற்கு வங்கம், தெலங்கானா, ஆந்திரா, கேரளா, ஜார்கண்ட், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் மத்திய அரசு சொன்னதைக் கேட்கவில்லை. எனவே, அந்த மாநிலங்களின் மக்கள் தொடர்ந்து சுமையை அனுபவித்து வருகின்றனர். இது அந்த மாநிலங்களின் மக்களுக்குச் செய்கிற அநீதி மட்டுமல்ல, இது மற்ற மாநிலங்களிலும் தீங்கு ஏற்படுத்துகிறது.
சட்டமன்றத்தில் நேற்று நேரமில்லா நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர்கள், தஞ்சையில் கோயில் தேர் இழுக்கும்போது மின்சாரம் தாக்கி 11 பேர் இறந்த சம்பவம் குறித்த சிறப்புக் கவன ஈர்ப்பு தீர்மானத்தின்கீழ் பேசினர். இந்த சம்பவத்தில் அரசு உரிய பாதுகாப்பு வழங்காததைக் கண்டித்து அதிமுக சார்பில் வெளிநடப்பு செய்தனர். அப்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை மகாமகம் சம்பவம் தொடர்பாகப் பேசினார், உடனே வெளியேறிக் கொண்டிருந்த அதிமுக உறுப்பினர்கள், செல்வப்பெருந்தகை பேசியதை அக்குறிப்பிலிருந்து நீக்கவேண்டுமென சபாநாயகரிடம் பேசினார். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகர் இருக்கை முன்பு வந்து கோஷம் போட்டனர். கடும் அமளியிலும் ஈடுபட்டனர். பதிலுக்கு தி.மு.க. தரப்பிலும் குரல் எழுப்பப்பட்டதால் கூச்சல், குழப்பம் நிலவியது. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி திடீரென்று தனது இருக்கையைவிட்டு எழுந்து சபாநாயகர் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
அசாம் மாநிலம், கர்பி ஆங்லாங் மாவட்டத்தில் நடைபெறுகின்ற அமைதி, ஒற்றுமை மற்றும் வளர்ச்சிப் பேரணியில் கலந்துகொள்ள பிரதமர் மோடி அசாம் செல்கிறார். அதன்பிறகு, ரூ. 500 கோடி மதிப்பிலான கால்நடை மருத்துவக் கல்லூரி, மற்றும் விவசாயக் கல்லூரி ஆகியவற்றுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். கானிக்கர் திடலில் நடைபெறும் மற்றொரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பிரதமர், 6 புற்றுநோய் மருத்துவமனைகளை நாட்டுக்கு அர்ப்பணித்து, 7 புதிய புற்றுநோய் மருத்துவமனைகளுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.
பிரான்சில் இம்மாத தொடக்கத்தில் 12-வது அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடந்தது. 12 வேட்பாளர்கள் போட்டியிட்ட தேர்தலில் முதல் சுற்றில் யாரும் பெரும்பான்மை பெறாத நிலையில், 2-ம் சுற்று தேர்தல் நடந்தது. இதில் 58 சதவிகித வாக்குகள் பெற்று இம்மானுவேல் மேக்ரான் அதிபராகத் தேர்வானார். இந்நிலையில், வெற்றி பெற்ற அதிபர் மேக்ரான் பாரிசின் வடமேற்கில் உள்ள செர்ஜி பகுதியில் பொதுமக்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தார். அப்போது கூட்டத்திலிருந்த மர்ம நபர் ஒருவர் அதிபர்மீது தக்காளியை வீசினார். இதைக் கண்ட பாதுகாவலர்கள் குடையை விரித்து இம்மானுவேல் மேக்ரானை அங்கிருந்து பத்திரமாக அழைத்துச் சென்றனர். சென்ற முறை அதிபராக இருந்தபோது, வணிக சார்பு சீர்திருத்தங்களில் அவர் அழுத்தம் காட்டுவதாகக்கூறி தெருப் போராட்டங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ராஜபக்சே குடும்பத்தினரை ராஜினாமா செய்ய வலியுறுத்தி போராட்டங்கள் வலுத்து வருகின்றன. ஆனால் அதை ஏற்க மறுத்து, அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே இருவரும் ஆட்சியில் தொடர்ந்து நீடித்து வருகின்றனர். அதேநேரம் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண உலக வங்கி மற்றும் சர்வதேச நாடுகளிடமிருந்து கடன்பெறும் முயற்சிகளை முடுக்கிவிட்டுள்ளனர். இந்நிலையில், இலங்கையில் அனைத்துக்கட்சிகளும் இணைந்த இடைக்கால அரசு அமைக்க அதிபர் கோத்தபய ராஜபக்சே திட்டமிட்டுள்ளார். இதுதொடர்பாக அனைத்துக் கட்சிகளுக்கும், சுயேச்சை எம்.பி.க்களுக்கும் கடிதம் எழுதியுள்ள அவர், அனைத்துக்கட்சி அரசு அமைக்கத் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியில், குஜராத் டைட்டன்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இன்று நடைபெறும் போட்டியில், டெல்லி கேப்பிட்டல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com