IPL 2022 : திக் திக் கடைசி ஓவர் - பிரித்து மேய்ந்த குஜராத்; அதிர்ச்சியில் SRH

இதன்பின்னர் சேஸிங்கை தொடங்கியது குஜராத். ஓபனிங் பேட்ஸ்மேன் எடுத்த விருத்திமன் சாஹா எடுத்த எடுப்பிலேயே சரவெடியாய் வெடித்தார். பவர்பிளேவில் விக்கெட் இழப்பின்றி 59 ரன்கள் எடுத்து அசத்தியது குஜராத்.
GT
GTIPL 2022
Published on

நேற்று இரவு நடந்த ஐபிஎல் லீக் சுற்றுப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் 20வது ஓவரில் ஒரு மேஜிக் நிகழ்த்தின.

குஜராத் அணி சேஸிங்கில் கடைசி ஓவரின் கடைசி பந்தில் வென்றது. இந்த ஐபிஎல் சீசனில் மிகவும் சுவாரஸ்யமான ஆட்டங்களில் ஒன்றாக இந்த ஆட்டம் அமைந்தது. அப்படி என்னதான் நடந்தது,

ஹைதரபாத் சறுக்கிய இடமும் குஜராத் முன்னேறிய புள்ளியும் எது?

நேற்றைய மேட்சில் டாஸ் ஜெயித்த குஜராத் கேப்டன் நான் சேசிங் செய்யுறேன் சார் என்றார்,

அபிஷேக் ஷர்மாவும், கேன் வில்லியம்சனும் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்க முகமது ஷமி பந்து வீச வந்தார். முதல் ஓவரிலேயே இரு முறை பந்துகள் வைடாக சென்று விக்கெட் கீப்பரை ஏமாற்றி பௌண்டரியை தொட்டன. 10 ரன்கள் எக்ஸ்டரா வகையில் ஹைதராபாத்துக்கு கிடைத்தது.

Shami
ShamiTwitter

ஷமி தான் வீசிய இரண்டாவது ஓவரில் கேப்டன் வில்லியம்சனை தூக்கினார். பவர்பிளேவிலேயே ஷமிக்கு மூன்றாவது ஓவரையும் கொடுத்தார் ஹார்திக் பாண்ட்யா.

ஆட்டத்தின் ஐந்தாவது ஓவரை ஷமி வீசினார், ராகுல் திரிபாதி ஒரு சிக்ஸர், இரண்டு பௌண்டரி என அடுத்தடுத்து மூன்று பந்துகளில் 14 ரன்கள் குவித்தாலும் அதே ஓவரின் கடைசி பந்தில் ஷமியிடம் வீழ்ந்தார். அப்போது ஐந்து ஓவர்கள் முடிவில் 44 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்திருந்தது ஹைதரபாத்.

அத்தபிறகு ஜோடி சேர்ந்த மர்க்ரம் அபிஷேக் ஷர்மா இணை சிறப்பாக விளையாடியது. 10 ஓவர்கள் முடிவில் ஸ்கோர் 84 ஆக இருந்தது. 12வது ஓவரில் 100 ரன்களை தொட்டது. ரஷித்கான் வீசிய அந்த ஓவரில் இரண்டு சிக்ஸர்களை விளாசினார் அபிஷேக் ஷர்மா.

42 பந்துகளில் ஆறு பௌண்டரிகள், மூன்று சிக்ஸர்கள் வைத்து 65 ரன்கள் எடுத்த நிலையில் அபிஷேக் 16வது ஓவரில் அவுட் ஆனார்.

தனது கடைசி ஓவரிலும் ஒரு விக்கெட் எடுத்தார் ஷமி. இந்த முறை அவருக்கு இரையானவர் நிக்கோலஸ் பூரன்.

GT
GT Twitter

மறுமுனையில் மர்க்கரம் சிக்ஸர் வைத்து அரைசதம் விளாசினார். 18வது ஓவரை வீசிய குஜராத்தின் இளம் பௌலர் யாஷ் தல் வெறும் ஆறு ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து மர்க்கரம் விக்கெட்டை வீழ்த்தினார். அதற்கடுத்த ஓவரை அல்ஜாரி ஜோஸப் வீசினார். முதல் பந்திலேயே வாஷிங்டன் சுந்தரை பெவிலியனுக்கு போ என அனுப்பி வைத்தார்.

10 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட்டுகள் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்திருந்தது ஹைதரபாத். கடைசி ஓவரை சர்வதேச அளவில் சிறப்பான பௌலர் என பெயரெடுத்த லாக்கி ஃபெர்குசன் வீசினார். மார்கோ ஜென்சன் முதல் பந்தை சிக்சருக்கு விரட்டினார். இரண்டாவது பந்தில் ரன்கள் ஏதும் இல்லை. மூன்றாவது பந்தில் ஒரு ரன் எடுத்தார்.

இப்போது ஃபெர்குசன் பந்தை எதிர்கொள்ள தயார் நிலையில் இருந்தவர் இந்தியாவின் இளம் வீரர் ஷஷாங் சிங்.

GT
IPL 2022 : ஒத்த ஓவரில் மாறிய மேட்ச்; சென்னைக்கு சாவு மணி அடித்த மில்லர் 'தி கில்லர்'

அவர் நான்காவது பந்தை சிக்சருக்கு அனுப்பினர். ரசிகர்கள் ஆச்சர்யமடைந்தனர்.

ஐந்தாவது பந்தை லோ ஃபுல் டாஸாக வீசினார். மீண்டும் ஒரு சிக்ஸர் வைத்தார் ஷஷாங்க். மைதானம் அதிர்ந்தது.

கடைசி பந்தையும் சிக்சருக்கு விரட்டினார். இப்போது ஒட்டுமொத்த மைதானமும் ஆர்ப்பரித்தது.

ஷஷாங்க் அடித்த ஹாட்ரிக் சிக்ஸர்களால் கடைசி ஓவர்களில் மட்டும் 25 ரன்கள் குவித்தது ஹைதரபாத். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 195 ரன்கள் எடுத்தது.

இதன்பின்னர் சேஸிங்கை தொடங்கியது குஜராத். ஓபனிங் பேட்ஸ்மேன் எடுத்த விருத்திமன் சாஹா எடுத்த எடுப்பிலேயே சரவெடியாய் வெடித்தார். பவர்பிளேவில் விக்கெட் இழப்பின்றி 59 ரன்கள் எடுத்து அசத்தியது குஜராத்.

சாஹா
சாஹாTwitter

ஆட்டத்தின் எட்டாவது ஓவரை வீச உம்ரான் மாலிக் வந்தார். தனது முதல் ஓவரில் சுப்மன் கில் விக்கெட்டை வீழ்த்தினார்.

இரண்டாவது ஓவரில் ஹர்டிக் பாண்டியா விக்கெட்டை வீழ்த்தினார். எனினும் சாஹாவின் அதிரடியால் 10 ஓவர்கள் முடிவில் இரண்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 92 ரன்கள் எடுத்திருந்தது குஜராத்.

புவனேஷ்வர் குமார், நடராஜன், மார்கோ ஜென்சன், வாஷிங்டன் சுந்தர் என ஹைதரபாத் பௌலர்களை பிரித்து மேய்ந்த குஜராத் பேட்ஸ்மேன்கள் உம்ரான் மாலிக் பந்தில் மட்டும் அடக்கி வாசித்தனர்.

54 பந்துகளில் 100 ரன்கள் அடிக்க வேண்டும் எனும் இலக்கை எதிர்கொண்டது குஜராத், அப்போது மார்கோ ஜென்சன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் வீசிய அடுத்தடுத்த இரு ஓவர்களில் 25 ரன்கள் குவித்தது குஜராத். இப்போது ஆட்டம் குஜராத்துக்கு சாதகமாக மாறியது.

அந்த சூழலில் 14வது ஓவரை வீசிய உம்ரான் ஆறு ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து அதிரடியாய் ஆடிக் கொண்டிருந்த சாஹா விக்கெட்டை தூக்கினார். அவர் 38 பந்துகளில் 11 பௌண்டரி, ஒரு சிக்ஸர் வைத்து 68 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கிளம்பினார்.

உம்ரான் மாலிக்
உம்ரான் மாலிக்Twitter

அடுத்த ஓவரை வீசிய புவனேஷ்வர் குமார் எட்டு ரன்கள் மட்டும் கொடுத்தார். கடைசி ஐந்து ஓவர்களில் வெற்றிக்கு 61 ரன்கள் தேவைப்பட்டது.

அப்போது உம்ரான் மாலிக்கை அழைத்து அவரது நான்காவது ஓவரை வீசச் சொன்னார் ஹைதரபாத் கேப்டன் கேன் வில்லியம்சன்.

ஐந்து ரன்கள் மட்டும் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார். மில்லர் மற்றும் அபினவ் மனோஹர் என இரு பேட்ஸ்மேன்களை போல்டாக்கினார். துல்லியமான வேகமான அவரது பந்துகள் ஸ்டம்புகளை தகர்த்தெறிந்தன.

நேற்றைய ஆட்டத்தில் குஜராத் ஐந்து விக்கெட்டுகளைய் இழந்திருந்தது. அந்த ஐந்து விக்கெட்டுகளையும் தனி ஆளாக கைபற்றியது உம்ரான் மாலிக் தான்.

கடைசி ஓவரில் குஜராத் வெற்றிக்கு 22 ரன்கள் தேவைப்பட்டது. தென்னாபிரிக்க பௌலர் மார்கோ ஜென்சன் வீசினார்.

GT
IPL 2022 SRH vs KKR : ருத்ரதாண்டவம் ஆடிய நடராஜன், திரிபாதி - ஹாட்ரிக் அடித்தது ஹைதரபாத்

முதல் பந்தில் ராகுல் தீவாத்யா ஒரு சிக்ஸர் வைத்தார், இரண்டாவது பந்தில் ஒரு ரன் எடுத்தார். மூன்றாவது பந்தை எதிர்கொண்ட ரஷீத் கான் ஒரு அட்டகாசமான சிக்ஸர் அடித்தார் . நான்காவது பந்தில் ரன்கள் ஏதும் இல்லை.

அப்போது கடைசி இரு பந்துகளில் ஒன்பது ரன்கள் அடிக்க வேண்டும் எனும் நிலை. ஜென்சன் ஒரு பந்தை உருப்படியாக வீசினால் கூட ஹைதராபாத் ஜெயித்துவிடும் சூழல் இருந்தது.

லோ வைடு ஃபுல்டாஸ் வீசினார் ஜென்சன், ரஷீத் கான் அலேக்காக சிக்சருக்கு தூக்கினார். அந்த ஒரு பந்தில் ஆட்டம் மாறியது, கடைசி பந்தில் குஜராத் வெற்றிக்கு மூன்று ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால் கடைசி பந்தையும் சிக்சருக்கு விளாசினார் ரஷீத் கான்.

கடைசி ஓவரில் மட்டும் நான்கு சிக்ஸர்கள் வைத்து 25 ரன்கள் எடுத்தது குஜராத் அணி. நான்கு ஓவர்கள் பந்துவீசி 63 ரன்கள் கொடுத்து தனது மோசமான பந்துவீச்சை பதிவு செய்தார் மார்கோ ஜென்சன்.

GT
பிரேசில் : 84 ஆண்டுகள் ஒரே நிறுவனத்தில் பணியாற்றிய நபர் - 100 வயதில் கின்னஸ் சாதனை

ஐபிஎல் வரலாற்றிலேயே கடைசி ஓவரில் இரண்டாவது மிகப்பெரிய வெற்றிகரமான சேஸிங் இதுதான்.

11 பந்துகளில் 31 ரன்கள் குவித்து ரஷீத் கான் மற்றும் 21 பந்துகளில் 40 ரன்கள் குவித்து ராகுல் தீவாத்யா ஆகியோர் குஜராத்தை கடைசி ஓவர்களில் வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

எனினும் ஆட்டநாயகன் விருது 4 ஓவர்கள் பந்து வீசி 25 ரன்கள் விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றிய உம்ரான் மாலிக்குக்கு வழங்கப்பட்டது.

அதிரடியான இந்த வெற்றி மூலம் குஜராத் பாயின்டஸ் டேபிளில் முதலிடத்துக்குச் சென்றது.

ஹைதரபாத் அணி தனது அடுத்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com