காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பாக்ஸ்கான் செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்யும் பெண்கள் தங்கவைக்கப்பட்டிருக்கும் விடுதிகளில் வழங்கிய உணவு தரமற்று இருந்ததால் 100க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வாந்தி பேதி ஏற்பட்டதாக கூறப்பட்டது.
அப்போது, அங்கு 9 பெண்கள் இறந்துவிட்டதாகச் சமூகவலைத்தளங்களில் அவதூறு பரப்பிய யூடியூபர் சட்டை துரைமுருகன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு திருவள்ளூர் சிறையில் அடைக்கப்பட்டார் துரைமுருகன்.
சாட்டை துரைமுருகனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீசுக்கு, மாவட்ட எஸ்.பி டாக்டர் வருண்குமார் பரிந்துரை செய்தார்.
அதை தொடர்ந்து குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட துரைமுருகன் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வரும் சூழலில் 15 முதல் 18 வயது வரை உள்ள சிறார்களுக்கு தடுப்பூசி போடும் பனி நாடு முழுவதும் நேற்று தொடங்கியது. இதில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட 40 லட்சம் சிறார்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
தமிழகத்தில் சிறார்களுக்குத் தடுப்பூசி போடும் பணியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர் நுகக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் மற்றும் தடுப்பூசியின் பலன்கள் குறித்துப் பேசினார். தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 3.3 லட்சம் சிறார்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகில் பசுமலைப்பட்டியில் உள்ள துப்பாக்கிச் சூடு பயிற்சி மைதானத்தில் கடந்த டிசம்பர் மாதம் 30-ம் தேதி சி.ஐ.எஸ்.எஃப் மற்றும் தமிழக காவல்துறையினர் தனித்தனியாகப் பயிற்சி எடுத்தனர். அப்போது அங்கிருந்து 2கிலோமீட்டர் தொலைவில் தன பாட்டி வீட்டில் விளையாட்டுக்கொண்டிருந்த புகழேந்தி என்ற 11 வயது சிறுவன் புகழேந்தியின் தலையில் துப்பாக்கிக் குண்டு தாக்கியது.
அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த புகழேந்தி நேற்று மாலை உயிரிழந்தார்.
புகழேந்தியின் இறப்புக்கு இரங்கல் கூறிய முதலமைச்சர் அவரது குடும்பத்துக்கு ரூபாய் 10 லட்சம் நிவாரணம் வழங்க ஆணையிட்டுள்ளார்.
சென்னை திருவான்மியூர் மெட்ரோ நிலையத்தில் டிக்கெட் வழங்கும் பணியில் இருந்தவரை கட்டிவைத்துவிட்டு 1.32 லட்சம் ரூபாய் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இது குறித்து டிக்கெட் வழங்கும் பணியில் இருந்த வடநாட்டுக்காரர் போலீசாரிடம், அவர் 3:50க்கு வழக்கம் போல பணியை தொடங்க டிக்கெட் கவுண்டர் நுழையும் போதும் பின்னால் வந்த 3 முகமூடி அணிந்த நபர்கள் அவரை கட்டிவைத்துவிட்டு அங்கிருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றனர் எனக் கூறியிருக்கிறார்.
சம்பவம் நடந்த இடத்தில் சிசிடிவி கேமராக்கள் கூட இல்லாததால், வெளியில் இருக்கும் கேமராக்களை ஆராய்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி ஜோகன்னஸ்பெர்க்கில் உள்ள வான்டரெர்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. கோலி காயம் காரணமாக ஓய்வெடுத்து வருவதால் கே.எல் ராகுல் அணியை வழிநடத்தினார்.
டாஸ் வென்ற இந்திய அணி முதல் போட்டியை போன்றே பேடிங்கை தேர்வு செய்தது. உணவு இடைவேளை வரை இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 53 ரன்கள் எடுத்தது. மயங்க் அகர்வால் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். புஜாரா 3 ரன்களில் ஆட்டமிழந்தார். ரகானே டக்-அவுட்(0) ஆனார். கேப்டன் கே எல் ராகுல் மட்டும் காலத்தில் நிலைத்திருக்க ஹனுமா விஹாரி உடன் இணைந்தார். விஹாரி 20 ரன்களில் ஆட்டமிழக்க, கே.எல் ராகுலும் அரை சத்தத்துடன் பெவிலியன் திரும்பினார்.
அதன் பின் களமிறங்கிய அஸ்வின் அணியை ஓரளவு மீட்டுக்கொடுக்க, அவரும் 46 ரன்களில் ஆட்டமிழந்தார். மொத்தம் 202 ரன்கள் மட்டும் எடுத்து முதல் நாளிலேயே சுருண்டது இந்திய அணி!