சிக்கிம் : ஒரு சின்ன மாநிலம் ஒட்டுமொத்த உலகையும் திரும்பிப் பார்க்க வைத்தது எப்படி?

உலகம் முழுவதும் வேதிம உரங்கள், பூச்சிக்கொல்லிகள் இல்லாமல் விவசாயமே இல்லை என்கிற ஒரு நிலைமையில், சிக்கிம் மாநிலம் முழுவதும் செயற்கை உரங்கள் இல்லாமல், முற்றிலும் இயற்கை உரங்களையே பயன்படுத்தி வருகின்றனர்.
Sikkim
SikkimPexels
Published on

இந்தியாவின் ஒரு மாநிலமாக இருக்கும் சிக்கிம் ஒரு காலத்தில் தனி நாடாக இருந்தது எனப் பெருமை பேசுவோரும் உண்டு. அவர்களுக்கு மேலும் பெருமிதப்பட்டுக் கொள்ளும்படி இன்னொரு தகவல் வந்திருக்கிறது.

உலகத்திலேயே முதல் கரிம விவசாயப் பகுதி என்கிற பெயரை வாங்கியிருக்கிறது, சிக்கிம்.

லண்டனைத் தலைமையாகக் கொண்ட - உலக சாதனைப் புத்தக அமைப்புதான் இதை அறிவித்திருக்கிறது. சிக்கிம் அரசாங்கத்தின் 100 சதவீத கரிமக் கொள்கை அதாவது ஆர்கானிக் கொள்கை - செயலாக்கத்துக்காக சிக்கிம் மாநிலத்துக்கு இந்தப் பெயர் கிடைத்துள்ளது.

உலகம் முழுவதும் வேதிம உரங்கள், பூச்சிக்கொல்லிகள் இல்லாமல் விவசாயமே இல்லை என்கிற ஒரு நிலைமையில், சிக்கிம் மாநிலம் முழுவதும் செயற்கை உரங்கள் இல்லாமல், முற்றிலும் இயற்கை உரங்களையே பயன்படுத்தி வருகின்றனர். கரிம இடுபொருள்களைப் பயன்படுத்தி விவசாயம் மேற்கொள்ளப்படுவதால் அவை மண்ணோடு மண்ணாக மட்கி இயற்கைக்கு கேடு விளைவிக்காமலும் இருக்கின்றன. மறுசுழற்சியாகவும் பயன்படுகின்றன.

உலக சாதனைப் புத்தக அமைப்பின் இந்த அறிவிப்பு, சிக்கிம் மாநிலத்துக்குக் கிடைத்துள்ள மிகப் பெரும் அங்கீகாரமாகும்.

அந்த அமைப்பின் பாராட்டுரையில், "சிறந்த கரிமைக் கொள்கைச் செயலாக்கத்துக்காக மட்டுமின்றி, குற்றமில்லாத சிறந்த ஆட்சி நடக்கும் முதல் மாநிலமாகவும் விளங்குகிறது." எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Farming
FarmingCanva

1960-களில் பசுமைப்புரட்சியின் விளைவாக, இந்தியாவில் பயிர் உற்பத்தி பெருகியது. அதனால் போதுமான உணவுதானியங்களை நாட்டு மக்கள் பெற முடிந்தது. அந்த கையோடு, வேதிம உரங்களும் பூச்சிக்கொல்லிகளும் கூட இந்திய விவசாயத்துக்கு அழையா விருந்தாளிகளாக வந்து சேர்ந்தன என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். அவை நாட்டினுடைய நிலம், நீர், காற்று மூன்றையும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாக்கின.

சுற்றுச்சூழலில் மோசமான விளைவுகளை உண்டாக்கியதை அடுத்து, கரிம முறை அதாவது இயற்கை விவசாய முறை மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டது. சிக்கிம் மாநிலமானது அதில் நாடளவில் சாதனை படைத்துள்ளது. இப்போது உலக அளவில் இயற்கை விவசாயத்தைக் கடைப்பிடிக்கும் முதல் அரசாங்கமாக அதற்குப் பெயர் கிடைத்துள்ளது. ஏற்கெனவே, இந்த மாநிலத்துக்குச் சிறந்த அரசுக்கொள்கைக்கான அமெரிக்காவின் ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது நினைவிருக்கலாம்.

கரிம / இயற்கை விவசாயம் என்றால் என்ன? சிக்கிம் மாநிலம் மட்டும் எப்படி 100 % இயற்கை விவசாயத்தைச் சாதித்துக் காட்டியது?

Sikkim
SikkimCanva

இயற்கை விவசாயம் என்றால் என்ன?

இயற்கை விவசாயம் என்பது பழங்கால பசுமையான - வளமையான முறை. இதனால் பயிர்கள் இயற்கைத்தன்மையும் தூய்மையும் கெடாதபடி பேணப்படுகிறது. நிலத்தினுடைய தன்மையும் அப்படியே நீடிக்கும். இயற்கை விவசாய முறையைப் பயன்படுத்துவதால், நிலம் தன்னுடைய மகசூல் தன்மையை இழக்காமல் செய்யப்படுகிறது. வறட்சி போன்ற மோசமான கட்டங்கள் அதிக அளவில் வராதபடி சமாளிக்கவும் முடிகிறது.

இதில், வேதிம உரங்களுக்குப் பதிலாக புதைம உரங்கள் எனப்படும் இயற்கையான உரங்களே பயன்படுத்தப்படுகின்றன. பூச்சிக்கொல்லிகளுக்குப் பதிலாக இயற்கையான இடுபொருட்கள்தான் இடப்படுகின்றன.

இயற்கை விவசாயத்தில், மாட்டுச்சாணம், கோமியம், இயற்கை எரு, மட்கவைக்கப்படும் செடிகொடிகள், மண்புழு உரம், வேப்பம் புண்ணாக்கு, தேசிப்புல் எனப்படும் எலுமிச்சைப் புல், பழங்களின் எச்சம் ஆகியவற்றைப் பயன்படுத்துகின்றனர். இவை, பாக்டீரியா மாற்றத்தை நீடிக்கச் செய்வதன் மூலம் இயற்கைச் சுழற்சி முறையைப் பேணுகிறது.

Sikkim
SikkimCanva

சிக்கிம் எப்படிச் சிறந்த அரசெனப் பெயர்பெற்றது?

இந்தக் கேள்வியையே ஒரு சாதனையாக ஆக்கவேண்டும் என்கிற இலக்கில், முதலில் 75 ஆயிரம் ஹெக்டேர் நிலம் முழுவதும் வேதிம உரங்கள், பூச்சிக்கொல்லி இல்லாத பகுதியாக மாற்றப்பட்டது. வேதிப்பொருள்களைக் கொண்ட உரங்கள், பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்த வேண்டாம்; பதிலாக அவை அல்லாத உரங்களையும் பூச்சிக்கொல்லிகளையும் பயன்படுத்துங்கள் எனப் பெருமளவில் வலியுறுத்தப்பட்டது.

இந்தச் செயல்திட்டத்தின்படி, வேதிம உரங்களைப் பயன்படுத்துவதற்கு ஒரு கட்டத்தில் தடை விதிக்கப்பட்டது. இந்தத் தடையை மீறினால், சம்பந்தப்பட்டவருக்கு மூன்று மாதங்கள் சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபாய் வரை தண்டமும் செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது.

அப்போதைய முதலமைச்சர் பவன் சாம்லிங், சிக்கிம் மாநில வாரியம் எனும் அமைப்பை உருவாக்கினார். அதன் மூலமாக வெளிமாநிலங்கள், சுவிட்சர்லாந்து முதலிய வெளி நாடுகளிலும் உள்ள பல விவசாய மேம்பாட்டு, ஆராய்ச்சி அமைப்புகளுடன் கூட்டுச் செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக, சுவிட்சர்லாந்தில் உயிரியல் ஆராய்ச்சியில் பங்கெடுக்கும் முயற்சி முக்கியமானது.

ஊராட்சி அமைப்புகளை இந்த இயற்கை விவசாய முறையின் கண்ணிக்குள் கொண்டுவருவதில் அரசாங்கம் முனைப்புக் காட்டியது. சிக்கிம் மாநிலத்தில் 8 இலட்சத்து 35 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் இயற்கை விவசாயம் மேற்கொள்ளப்பட்டது. அதன் மூலம் 4 இலட்சம் விவசாயிகள் பயனடைந்தனர். மேற்கொண்டும் 50 ஆயிரம் எக்டேர் பரப்புக்கு இதை விரிவாக்கவும் 2.5 ஆயிரம் விவசாயி ஆர்வலர் வட்டங்களை உருவாக்கவும் அதன் மூலம் 45 ஆயிரம் விவசாயிகள் இந்த இயற்கை விவசாய முறைக்குள் கொண்டுவரவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

Sikkim
பழைய சோறு : ஒன்பது பலன்கள் உங்களுக்குத் தெரியுமா?
Farming
FarmingCanva

உயிர்ம- கிராமம் என்கிற கருத்தாக்கம்

முதலில், இயற்கை விவசாயம் என்கிற கொள்கை முடிவை எடுத்ததை அடுத்து சிக்கிம் மாநிலத்தில் மகசூலும் விவசாய வருவாயும் குறைந்துவிட்டது. ஆனால் மக்களை இயற்கை விவசாயப் பண்ணைகள், பள்ளிகள், ஏன் வீடுகளைக்கூட நேரில் சென்று பார்க்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. அத்துடன் நின்றுவிடாமல் ஊட்டச்சத்து நிர்வாகம், அதற்கான நுட்பங்கள், பூச்சிக்கொல்லிகளைக் கையாள்வது, இயற்கை விவசாய ஆய்வுக்கூடங்கள் ஆகியவையும் மக்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டன.

மேலும், இதைப் பற்றிய விழிப்புணர்வு பரப்புரைகளும் தொடர்ச்சியாக நடத்தப்பட்டன. அதில் நிலத்தின் உவர் தன்மையை மாற்றியமைப்பது, பயிரிடு தன்மைக்கு மாற்றுவது போன்றவை கற்பிக்கப்பட்டன.

மாநிலம் முழுமையும் இயற்கை விவசாயத்துக்கு மாறுவது என்ற பயணம் அவ்வளவு எளிதானதாக இருக்கவில்லை. அரசாங்கம், முதலில் கிராமங்கள் வாரியாக கையகப்படுத்தி அவற்றை இயற்கை முறைக்கு- உயிர்ம கிராமமாக மாற்றியது. செயற்கை உரங்கள் தருவது நிறுத்தப்பட்டு இயற்கையான எரு எல்லாருக்கும் கிடைக்கும்படி செய்யப்பட்டது.

இதைத்தவிர, இயற்கை விவசாயம் செய்யும் தனி நபர்களுக்குச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இப்படி எல்லா நடவடிக்கைகளையும் படிப்படியாக நிறைவேற்றிக்கொண்டு வரவர, சிக்கிமில் மொத்தப் பயிர்செய்கைப் பரப்பும் அதிகரித்தது. ஒரு கட்டத்தில் 22 இலட்சம் ஹெக்டேருக்கும் மேல் அது பதிவானது.

Sikkim
பாரம்பரிய உணவு : ஆரோக்கியத்தில் செலவினங்களை குறைக்கலாம்

இயற்கை விவசாயதின் பலன்கள்?

இப்போது, இயற்கை விவசாய முறையானது அதிகமாகப் பரவிவருகிறது. சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதும் உணவு உற்பத்தியைப் பெருக்கியதும் முக்கிய காரணங்கள்.

இயற்கை விவசாய முறையானது, வேளாண்மைக்கு வேண்டிய உயிரினங்களைப் பாதுகாக்கவும் செய்கிறது. இதன் மூலம் நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்கிறது. விவசாயத்துக்கான செலவினங்களை இது குறைக்கிறது. விளைச்சலின் அளவையும் தரத்தையும் அதிகரிக்கிறது. சுற்றுச்சூழல் இதனால் கெட்டுவிடாதபடி பேணப்படுகிறது.

விளைவிக்கப்படும் பயிர்கள் மீண்டும் நிலத்துக்கே செல்வதால், மண்ணுக்கு உரிய ஊட்டம் கிடைக்கிறது. ஒரு புள்ளிவிவரப்படி, ஒரு விவசாயி விளைவிக்கப்பட்ட பயிரில் 25 முதல் 40 சதவீதத்தை மட்டுமே பயன்படுத்துகிறார் என்பது கணக்கு. அதேவேளை, புதிய பயிர் வகைகளை உற்பத்தி செய்வதற்காக விவசாய எச்சங்கள் 600 பில்லியன் டன் அளவுக்கு எரிக்கப்படுகின்றன என்பதும் அதில் கூறப்படுகிறது.

Sikkim
வீட்டிற்குள்ளேயே 10000 செடிகள்; ஆண்டுக்கு 70 லட்சம் வருமானம் - எப்படி சாத்தியமானது?

ஐ.நா.வின் பாராட்டில் சிக்கிம்

சிக்கிம் மாநில அரசாங்கமானது 2003ஆம் ஆண்டில், இந்த முழுமையான இயற்கை விவசாயக் கொள்கையைக் கையில் எடுப்பதாக உறுதி பூண்டது. அதன் கொள்கைகள், செயலாக்கம் ஆகியவற்றின் பலனாக 2016ஆம் ஆண்டில் உலகத்தின் முதல் இயற்கை விவசாய அரசாங்கம் எனும் பெயரை அது பெற்றுள்ளது.

ஐ.நா. விவசாய- உணவு அமைப்பானது சிக்கிம் மாநிலத்தின் 100% இயற்கை விவசாயத்துக்காக ஆஸ்கர் விருதை அளித்துள்ளது. இதற்காகப் பரிந்துரைக்கப்பட்ட 25 அரசுகளில் சிக்கிம் மட்டுமே இந்தப் பெயரைப் பெறமுடிந்தது. இதை சிக்கிம் மாநிலத்துக்கு வழங்கிப் பாராட்டிய ஐநா அமைப்பானது, பசிக்கொடுமை, வறுமையை ஒழிக்கவும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் இந்த விருது முதல் படியாகும் என்று தெரிவித்துள்ளது.

இயற்கை விவசாயத்தின் மூலம் சிக்கிம் மாநிலத்தின் சுற்றுலா தொழிலும் வளர்ச்சி அடைந்தது. 2014- 2017 காலகட்டத்தில் 66 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைந்துள்ளனர். வளர்ச்சி வீதம் 50 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.

இந்திய அளவில் 2025ஆம் ஆண்டில் இயற்கை விவசாயத்தின் மூலம் 75 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. அப்படி ஒரு சூழலில் நவீன நுட்பங்கள் மூலம் இயற்கை விவசாயம் குறித்து மக்களுக்குப் பயிற்சி அளிப்பதற்கான தேவை ஏற்படும்.

அது நடக்கத் தொடங்கிவிட்டால், அதாவது இயற்கை விவசாயம் பெருமளவில் இருக்கையில், அது தொடர்பான பொருள்களை வாங்குவதும் விற்பதும் கூடும்; அதன் மூலம் இதற்கான சந்தையும் இன்னும் அதிகரிக்கும் என்பது உறுதி.

Sikkim
சென்னை : பழத்தோட்டம் , நெற்பயிர்கள் சூழ்ந்த 13 ஏக்கர் நிலம் - மெட்ராஸில் இப்படி ஒரு இடமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com