மீண்டும் இந்தி திணிப்பு - வலுக்கும் எதிர்ப்பு; நாடாளுமன்ற குழு சொல்வது என்ன?

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான அலுவல் மொழிக்குழுவின் அறிக்கை தீவிரமாக எதிர்க்கப்படுவது ஏன்? எதிர்ப்பவர்கள் யார் யார்? என்ன சொல்கிறார்கள்?
மீண்டும் இந்தி திணிப்பா? நாடாளுமன்ற குழு சொல்வது என்ன? எதிர்ப்புகள் என்ன?
மீண்டும் இந்தி திணிப்பா? நாடாளுமன்ற குழு சொல்வது என்ன? எதிர்ப்புகள் என்ன?Twitter

இந்தியாவில் தேசிய மொழிக் குறித்த பிரச்னைகள் எப்போதும் ஓய்ந்ததில்லை. 22 அங்கீகாரம் பெற்ற மொழிகள் இருக்கும் இந்தியாவில் இந்தியை மட்டும் நாடு முழுவதும் பேசும் ஒரே மொழியாக ஆக்க வேண்டும் என்பதற்கான முயற்சிகள் மத்திய அரசால் கட்சி பேதமின்றி நடைபெற்று வருகிறது. கடந்த 2014ம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் இது குறித்த பதற்றம் அதிகரித்திருக்கிறது.

சில மாதங்களுக்கு முன்னர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாட்டின் ஒருமைப்பாட்டுக்கான மொழியாக இந்தி இருக்க வேண்டும் எனப் பேசியிருந்தார். அது பல எதிர்மறையான விளைவுகளைப் பெற்றது. இப்போது அதே கருத்து அலுவல் மொழிக்கான நாடாளுமன்ற தேசிய மொழிக்குழுவால் பேசப்பட்டிருக்கிறது. தற்போதும் இதற்கு எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

நாடாளுமன்ற குழு

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக் குழு குடியரசு தலைவருக்கு அளித்துள்ள 11வது அறிக்கை இந்தி பேசாத மாநிலங்கள் குறிப்பாக தென் மாநிலங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

அலுவல் மொழிச் சட்டம் 1963-ன் படி 1979ம் ஆண்டு உருவாக்கப்பட்டது இந்த நாடாளுமன்ற அலுவல் மொழிகளுக்கான குழு. இதில் 20 மக்களவை உறுப்பினர்கள், 10 மாநிலங்களவை உறுப்பினர்கள் என 30 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பார்கள்.

நாடு முழுவதும் இந்தியை அலுவல் மொழியாக பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து குடியரசுத் தலைவரிடம் அறிக்கையை சமர்பிப்பது இந்த குழுவின் வேலை.

அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கும் ஆலோசனைகளை ஏற்பதா மறுப்பதா என்பதை குடியரசுத் தலைவர் முடிவு செய்வார்.

வழக்கமாக ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தாக்கல் செய்யப்படும் இந்த அறிக்கை இந்த முறை 3 ஆண்டுகளில் 2வது முறையாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

"இது வழக்கமான நாடாளுமன்ற மொழிக்குழு அல்ல. மாறாக நாடாளுமன்றத்தின் குழு. இதன் அறிக்கை மீது எந்தவித விவாதமும் நாடாளுமன்றத்தில் நடைபெறாமல் நேரடியாக குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும்" என இதன் அபாயத்தைக் கூறுகிறார் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்.

தமிழகத்துக்கு இது பொருந்தாது!

இந்தி பயன்பாட்டின் அடிப்படையில் மாநிலங்களை A,B,C என மூன்று பிரிவாக பிரித்து அதில் A பிரிவு மாநிலங்கள் முழுவதுமாக இந்தியைப் பயன்படுத்த அறிவுறுத்த வேண்டுமணென அறிக்கை கூறுகிறது.

A பிரிவு மாநிலங்கள்

உத்தர பிரதேசம், பிஹார், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், உத்தராகண்ட், ஜார்க்கண்ட், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, அந்தமான் நிகோபார்

B பிரிவு மாநிலங்கள்

குஜராத் மகாராஷ்டிரா, பஞ்சாப், சண்டீகர், டாமன், டையூ, தாத்ரா, நாகர் ஹவேலி

மற்ற மாநிலங்கள் C பிரிவு எனக் கூறப்பட்டுள்ளன.

மொழிவழியாக இந்திய மாநிலங்களைப் பிரிக்கும் இந்த முறை தமிழகத்துக்கு செல்லாது என வாதிடுகிறார் சு.வெங்கடேசன். இது தமிழ்நாடு உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்களை மூன்றாம்தர குடிமக்களாக ஆக்கும் நடவடிக்கை என்று முரசொலி பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது.

1976 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்திய அரசின் அலுவல் மொழிகளுக்கான விதி ( 1976 Official Language Rules) பிரிவு 1ன் முதல் இரு பகுதிகள் பின்வருமாறு கூறுகிறது…

அ.) இந்த விதிகள் அலுவல் மொழிகள் (ஒன்றிய அரசின் அலுவல் பயன்பாட்டுக்கானது) விதிகள், 1976 என்று அழைக்கப்படலாம்.


ஆ.) இவை இந்தியா முழுமைக்கும் நீட்டிக்கப்பட வேண்டும். தமிழ்நாடு மாநிலம் நீங்கலாக என்று கூறுகிறது.


( i. These rules may be called official Languages (Use for Official Purposes of the Union) Rule, 1976

(ii They shall extend to the Whole of india, except the state of Tamilnadu)

மத்திய அரசின் அறிக்கை பிற மாநிலங்கள் அனைத்தும் C பிரிவு எனக் கூறுவது அவர்கள் அரசியலமைப்பு விதிகளை மதிக்க தயாராக இல்லை என்பதைக் காட்டுகிறது என்கிறார் சு.வெங்கடேசன்.

மேலும் அவர் இதன்படி, தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசின் அலுவலகங்களில் இருக்கும் இந்தி ஆட்சிமொழி செல்கள் உடனடியாக களைக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.

தமிழகத்தில் நடைபெற்ற இரண்டு மொழிப் போர்கள் மற்றும் தியாகங்களை கருத்தில் கொண்டு இந்த விலக்கு தமிழகத்துக்கு அளிக்கப்பட்டுள்ளது.

என்ன சொல்கிறது இந்த அறிக்கை?

இந்த நாடாளுமன்ற அலுவல்மொழிக் குழுவின் 11வது அறிக்கையில் 100ம் மேற்பட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அதிகாரப்பூர்வமாக இந்த அறிக்கை வெளியிடப்படவில்லை. முக்கியமாக பேசப்படும் விஷயங்களை மட்டும் இங்குப் பார்க்கலாம்...

அரசுப் பணிகளுக்கான தேர்வுகளில் ஆங்கிலப் பாடம் கட்டாயம் என்பதை நீக்க வேண்டும்.

இந்தி பேசும் மாநிலங்களில் உயர் நீதிமன்ற தீர்ப்புகளின் இந்தி மொழிபெயர்ப்பை வழங்க போதுமான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

இந்தி பேசும் மாநிலங்களில் பணியாற்றும் அதிகாரிகள் வேண்டுமென்றே இந்தியில் பணியாற்றவில்லையென்றால் முதலில் எச்சரிக்க வேண்டுமென்றும் அந்த எச்சரிக்கையை மீறி நடந்தால், அவர்களது வருடாந்திர பணிக்குறிப்பேட்டில் இது பற்றிக் குறிப்பிட வேண்டும்.

மத்திய அரசின் அலுவலகங்கள், அமைச்சகங்கள், துறைகளில் இந்தியிலோ அல்லது உள்ளூர் மொழியிலோதான் பேச வேண்டும்.

மத்திய அரசு ஒருங்கிணைக்கும் எல்லா நிகழ்வுகளிலும் இந்தியிலோ அல்லது உள்ளூர் மொழியிலோதான் அழைப்பிதழ்கள், பேச்சுகள், நிகழ்ச்சித் தொகுப்பு ஆகியவை இருக்க வேண்டுமென்றும் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.

ஐ.நா.வின் அலுவல் மொழிகளில் ஒன்றாக இந்தி இருக்க வேண்டும்.

இந்தி பேசும் மாநிலங்களில் ஐஐடி, எய்ம்ஸ், ஐஐஎம் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் இந்தி பயிற்று மொழியாகவும், பிற மாநிலங்களில் பிராந்திய மொழிகள் பயிற்று மொழியாகவும் இருக்க வேண்டும். விரும்பினால் ஆங்கிலம் பயிற்று மொழியாக இருக்கலாம்.

"மீண்டும் ஒரு மொழிப் போரை திணிக்காதீர்கள்" - மு.க.ஸ்டாலின்

"இந்திக்குத் தாய்ப்பாலும், இந்தியாவின் மற்ற மொழிகளுக்குக் கள்ளிப் பாலும் புகட்ட நினைப்பது, இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது. இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்குப் பேராபத்தை விளைவிக்கக் கூடியது." என மேற்கண்ட ஆலோசனைகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.

மேலும், "இந்திய ஒன்றியத்தில் இந்தி பேசுகிற மக்களின் எண்ணிக்கையைவிட, மற்ற மொழிகளைப் பேசுகிற மக்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை அதிகம். ஒவ்வொரு மொழிக்கும் அதற்குரிய சிறப்பு இருக்கிறது. தனித்துவம் இருக்கிறது. மொழிவழிப் பண்பாடு இருக்கிறது. அந்தத் தனித்துவமான பண்பாட்டுச் சிறப்பைப் பாதுகாக்கவும், இந்தி ஆதிக்கத்திலிருந்து இந்திய மொழிகளைக் காப்பதற்குமான வேலியாகத்தான் ஆங்கிலம் என்ற இணைப்பு மொழி, ஒன்றிய அரசின் இணை அலுவல் மொழியாக நீடிக்கிறது." எனவும் மு.க.ஸ்டாலினின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

"நடைமுறைக்குச் சாத்தியமில்லாத ஒன்றைக் கட்டாயமாக்க முயல்வது, இந்திக்காரர்கள் மட்டுமே இந்தியக் குடிமக்கள் என்பது போலவும், இந்தியாவின் மற்ற மொழிகளைப் பேசுவோர் இரண்டாந்தர குடிமக்கள் என்பது போலவும் பிரித்தாளுகின்ற தன்மையைக் கொண்டது. இந்தியைக் கட்டாயமாக்க முயன்று, இன்னொரு மொழிப்போரை எங்கள் மீது திணித்திட வேண்டாம்." என்று கூறியிருக்கிறார் முதல்வர்.

பிற மாநிலங்களில் எதிர்ப்பு

"இந்தியாவில் பல மொழிகள் இருக்கின்றன. எந்த ஒரு மொழியையும் இதுதான் நாட்டின் மொழி என்று கூற முடியாது.

அரசுத் துறையில் நம்முடைய இளைஞர்களுககு மிகக் குறைவான வேலைவாய்ப்புகளே இருக்கின்றன. அதிலும் ஒரு பிரிவினரை மொழி காரணமாக தள்ளிவைப்பது இந்த சமூகத்திற்கு நன்மை பயக்காது" என்று கூறியுள்ளார் கேரள முதல்வர் பினராயி விஜயன்.

"இந்தியாவிற்கு தேசிய மொழி இல்லை மற்றும் இந்தி இங்குள்ள பல அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒன்று தான்.

ஐஐடிகள் மற்றும் மத்திய அரசு ஆட்சேர்ப்புகளில் கட்டாயப்படுத்துவதன் மூலம் இந்தியைத் திணிப்பதன் மூலம், மத்திய அரசு கூட்டாட்சி உணர்வை மீறுகிறது.

இந்தியர்களுக்கு மொழி தேர்வாக இருக்க வேண்டும் & இந்தி திணிப்பு இருக்கக் கூடாது" எனக் கூறியுள்ளார் தெலுங்கானா அமைச்சர் கே.டி.ராமராவ்.

கடந்த மாதம் இந்தி தினத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசுவாமி, "மத்திய பாஜக அரசின் இந்தி திணிப்புத் தொல்லை ஓய்ந்தபாடில்லை. மறைமுகமான திட்டங்களின் மூலம் வஞ்சமாக இந்தியாவைப் பறிக்க நினைக்கின்றனர். அமித்ஷா தலைமையில் உருவான குழு அளித்துள்ள அறிக்கை இந்தி திணிப்பில் மூர்கமாக இந்திய ஒன்றியத்தை உடைக்கும் வகையில் இருக்கிறது." எனக் கூறியுள்ளார்.இந்தியை முழுமையாகப் பயன்படுத்தப்படும் A பிரிவு மாநிலங்களில் உள்ள உயர் கல்வி நிலையங்களில் மட்டும்தான் இந்தி வழி கல்வி இருக்கும். மற்ற மாநிலங்களில் உள்ள உயர் கல்வி நிலையங்களில் அந்தந்த மாநில மொழிகளில்தான் பாடங்கள் கற்பிக்கப்படும். ஆகவே இந்த எதிர்ப்பு தேவையற்றது என்கிறார்கள் அவர்கள்.

மீண்டும் இந்தி திணிப்பா? நாடாளுமன்ற குழு சொல்வது என்ன? எதிர்ப்புகள் என்ன?
ஒரே நாடு, ஒரேமொழி - பாசிச போக்கை திணிக்க முயற்சி - அமித் ஷாவுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

பாஜக ஆதரவாளர்கள் கூறுவதென்ன?

முதல்வர் மு.க.ஸ்டாலினின் குற்றச்சாட்டுகளுக்கு எதிர்வினையாற்றும் பாஜக ஆதரவாளர்கள், இந்தியை முழுமையாகப் பயன்படுத்தப்படும் A பிரிவு மாநிலங்களில் உள்ள உயர் கல்வி நிலையங்களில் மட்டும்தான் இந்தி வழி கல்வி இருக்கும். மற்ற மாநிலங்களில் உள்ள உயர் கல்வி நிலையங்களில் அந்தந்த மாநில மொழிகளில்தான் பாடங்கள் கற்பிக்கப்படும். ஆகவே இந்த எதிர்ப்பு தேவையற்றது என்கிறார்கள்.

இந்த அறிக்கையின் தாய்மொழி, பிராந்திய மொழி ஆதரவு என்பது வெறும் முகமூடி என விமர்சித்திருக்கிறார் குமாரசுவாமி.

ஆனால் இதனை ஏமாற்றக்கூடிய வாதம் என்கிறார் சு.வெங்கடேசன். மத்திய அரசின் கேந்திரய வித்யாலயா முதல் ஐஐடி வரை இந்தியில் பாடம் நடத்தப்படுவது முறையல்ல. மத்திய அரசு பலகலைக்கழகங்களில் ஆட்சேர்ப்பு தேசிய அளவில் தான் நடக்கும். இங்கிருந்து பிற மாநிலங்களுக்கு சென்று நம் மாணவர்கள் படிக்கும் போது, அங்கு இந்தியில் பாடம் நடத்துவது சரியானதல்ல என்கிறார் அவர்.

"மருத்துவக் கல்வியை இந்தியில் பயில்வதற்கு, தேர்வுகளை எழுதுவதற்கு இரு மாதங்களுக்கு முன்பு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், பொறியியல் மற்றும் மருத்துவப் பாடங்களை தமிழில் பயிலவும் தேர்வு எழுதவும் அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறதா?" எனக் கேள்வி எழுப்புகிறார் சு.வெ.

மத்திய அரசின் வேலை வாய்ப்பு மற்றும் கல்வியில் ஆங்கிலத்தை ஒடுக்குவது இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியைத் திணிப்பது தான் என்கின்றனர் இந்தி எதிர்பாளர்கள்.

மீண்டும் இந்தி திணிப்பா? நாடாளுமன்ற குழு சொல்வது என்ன? எதிர்ப்புகள் என்ன?
"தமிழ் தான் இணைப்பு மொழி" அமித் ஷாவுக்கு பதிலடி கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மான்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com