ஆங்கிலேயர்கள் ஆட்சியில் இருந்து இந்தியா சுதந்திரம் பெற போராடியவர்களில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு முக்கிய பங்குண்டு.
மகாத்மா காந்தி ஏற்ற அகிம்சை வழிக்கு மாறாக இவர் வன்முறையை கையாண்டார். கோபமும், ஆத்திரமும் இவரது முழக்கங்களில் அணல் பறக்கும். ஆனால், கல்லுக்குள்ளும் ஈரம் இருக்கும் என்பதுபோல நேதாஜிக்கும் ஒரு மென்மையான பக்கம் இருந்துள்ளது.
பிபிசியின் அறிக்கை படி, இந்த கடுகடுத்த சுதந்திர தாகம் ஊறிய மனதிற்குள், காதல் பூக்களும் மலர்ந்தன என்பது தான் வரலாறு.
ஒத்துழையாமை இயக்கத்தின் போது நேதாஜிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. 1932ல் சசிறையில் இருந்தபோது உடல்நலம் மோசமடையவே, இவரது குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று பிரிட்டிஷ் அரசாங்கம் மேல் சிகிச்சைக்கு ஐரோப்பாவிற்கு அனுப்ப ஒப்புதல் அளித்தது. 1934 ஆம் ஆண்டு ஆஸ்த்ரியாவுக்கு கூட்டிச் செல்லப்பட்டார்.
அங்கும், இந்தியாவின் சுதந்திரத்துக்காக படைதிரட்ட முடிவு செய்தார் போஸ். அந்த சமயத்தில், ஐரோப்பிய பதிவாளர் ஒருவர், 'இந்தியாவின் துயரம்' என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுத போஸை பணித்தார். அதற்கு அவருக்கு உதவி செய்ய, ஆங்கிலத்தில் டைப் செய்ய ஒருவரை நியமிக்க னினைத்தார்.
இந்த பதவிக்கு, நேதாஜியின் நண்பர் இருவரை பரிந்துரைத்தார். முதல் நபரை போஸ் நேர்காணல் செய்தார். ஆனால் திருப்தி இல்லை. இரண்டாவதாக எமிலி சென்கல் என்ற 23 வயது பெண் வந்தார். இவர் தன் பணிக்கு தோதானவர் என்றெண்ணிய போஸ், எமிலியை ஜூன் மாதம் 1934 ஆம் ஆண்டு பணியில் சேர்த்துக்கொண்டார்.
அதுவரை, நாடு, மக்கள், சுதந்திரம் என்றிருந்த நேதாஜியின் கவனம், எமிலி பக்கம் திரும்பியது.
சுபாஷ் சந்திர போஸின் சகோதரரான சரத் சந்திர போஸின் பேரர் சுகித் போஸ்,
'அவரது மாட்சிமை பொருந்திய நியமனம் - சுபாஷ் சந்திர போஸ் மற்றும் பேரரசுக்கு எதிரான இந்தியாவின் போராட்டம்' என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை எழுதினார்.
இதில் நேதாஜியின் காதல் கதை குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன. அப்புத்தகத்தில், "எமிலியை சந்தித்த பிறகு போஸின் வாழ்க்கை தலைகீழாக மாறியது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது
சுபாஷ் சந்திர போஸுக்கு, தன் வாழ்நாளில் பல காதல்கள், திருமணத்திற்கான வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால், அவற்றில் அவர் அவ்வளவாக ஆர்வம் கொள்ளவில்லை. எமிலி அவர் மனதை ஆட்கொண்ட அளவிற்கு, வேறெந்த பெண்ணும் அவரை ஈர்க்கவில்லை என்பது தான் உண்மை.
இதனால் தன் காதலை எமிலியிடம் அவர் நேரடியாக வெளிப்படுத்தினார். எமிலியும் போஸை விரும்பினார். 1934 இடையிலிருந்து 1936 மார்ச் வரை, இரண்டு ஆண்டுகள், ஆஸ்த்ரியா மற்றும் செக்கோஸ்லூவாக்கியாவில் தங்கியிருந்த காலக்கட்டத்தில், இவர்களது காதல் வலுவுற்றது.
கல்வியாளர் ருத்ரநாஷு முகர்ஜி என்பவர் வெளியிட்ட புத்தகம் ஒன்றில், போஸின் மனைவி, அவரது வாழ்வில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தினார் என்பதை அவர் விவரித்திருந்தார்
போஸ் மற்றும் எமிலி தங்கள் காதலை கடிதங்கள் மூலமாக பரஸ்பரம் பரிமாறிக்கொண்டனர். அவர்களது எழுத்துகள், இந்த காதல் உறவு எவ்வளவு கடினங்களை கொண்டது என்பதை குறிப்பிடும்படியாக இருந்தன.
இவர்கள் ஒருவருக்கொருவர், திரு.போஸ் என்றும், திருமதி. சென்கல் என்றுமே அழைத்தனர். போஸ் சமயத்தில் எமிலியை ஷெல்லி என்றும் அழைத்தார்.
இந்த கடிதங்கள் சரத் சந்திர போஸின் மகன் ஷிஷிர் போஸின் மனைவியான கிருஷ்ணா போஸிடம் எமிலியே நேரடியாக அளித்தவையாகும்.
இவர்களுக்குள் இருந்த தூரம், இவர்களது காதலை இன்னும் அதிகரிக்கத்தான் செய்தது. 1936ல் போஸ் எழுதிய கடிதம் ஒன்றில், "நான் உன்னை எவ்வளவு விரும்புகிறேன் என்பதை இந்த கடிதத்தில் எழுதாமல் இருக்க என்னால் இயலவில்லை" என்று அவர் கூறியிருந்தார்.
"என் இதயத்தின் ராணி நீ தான். ஆனால், நீ என்னை விரும்புகிறாயா?" என்றும் அதில் இருந்திருக்கிறது.
"எதிர்காலம் எனக்காக என்ன வைத்திருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை. நான் கொல்லப்படலாம், என்னால் மீண்டும் உன்னை சந்திக்க முடியாமல் போகலாம், உனக்கு கடிதம் எழுத முடியாமல் போகலாம். நாம் இந்த ஜென்மத்தில் சேரவும் முடியாமல் போகலாம், ஆனால் அடுத்த ஜென்மத்தில் உன்னுடன் தான் இருப்பேன்" என்று மனமுருக எழுதியிருந்தார் போஸ்.
இந்த கடிதத்தை படித்தவுடன் அழித்துவிடுமாறு போஸ் கேட்டுக்கொண்டதாக பிபிசி தளம் கூறுகிறது. ஆனால் எமிலியோ இந்த கடிதத்தை தன் காதலின் பொக்கிஷமாக பத்திரப்படுத்தி வைத்து கொண்டார்
சுகித்திடம் பேசிய போஸின் நண்பர் கூறியது, எமிலி மீது அவர் வைத்திருந்த காதலின் ஆழத்தை நமக்கு சொல்லும்படியாக இருக்கிறது.
"இந்தியா சுதந்திரமடைய வேண்டும் என்பதில் மட்டுமே போஸின் கவனம் இருந்தது. அது திசை திரும்ப இருந்த ஒரே காரணி, எமிலி மீது கொண்டிருந்த காதல்” என்று அவர் குறிப்பிடுகிறார்.
விதி வலியது தான். பிரிந்து வாடிய காதல் புறாக்களை ஒன்றிணைத்தது. கடிதங்களில் மட்டுமே காதலித்துக்கொண்டிருந்த போஸ் எமிலி மீண்டும் சந்தித்துக்கொண்டனர்.
டிசம்பர் 27, 1937 ஆம் ஆண்டு இவர்களது திருமணம் ஆஸ்த்ரியாவில், அவர்களுக்கு விருப்பமான இடத்தில் நடந்தது.
திருமணம் குறித்து எமிலி, கிருஷ்ணா போஸிடம் கூறியிந்தார். ஆனால் அதை தவிர வேறு எதையும் எமிலி பகிர்ந்துகொள்ளவில்லை. வேறு நாட்டு பெண்ணை திருமணம் செய்துகொண்டது போஸ் மீதான மற்றவரின் பார்வையை பாதிக்கலாம் என்று இவர்கள் எண்ணியிருக்கக்கூடும் .
ஆஸ்த்ரியாவில் இருந்துகொண்டே இந்திய பத்திரிகைகளுக்கு எமிலி எழுதவேண்டும் என்று போஸ் விருப்பப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், தி இந்து, மாடர்ன் ரிவ்யூ ஆகிய பத்திரிகைகளுக்கு எமிலி எழுதினார். ஆனால், எமிலியின் எழுத்துகளில் போஸிற்கு திருப்தி இல்லை. எமிலி இந்தியாவை பற்றி இன்னும் நிறைய தெரிந்துகொள்ளவேண்டும் என்று போஸ் நினைத்தார்.
"நீ தீவிரமாக இருக்காத வரை, வாசிப்பதில் ஆர்வம் வராது. உன்னிடம் பல தலைப்புகளில் நூல்கள் புத்தகங்கள் இருக்கின்றன. அதை நீ கவனிப்பதுகூட இல்லை என்பதை நான் அறிவேன்” என்று போஸ் ஒரு முறை கடிந்துகொண்டது உண்டு.
1942 ஆம் ஆண்டு இவர்களுக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்தது. இத்தாலிய புரட்சி தலைவர் கேரிபால்டியின் மனைவி அனிதாவின் நினைவாக அந்த குழந்தைக்கு அனிதா என்று பெயர் சூட்டப்பட்டது.
1942 ஆம் டிசம்பர் மாதம் போஸ் ஒரு முறை வியன்னா சென்றார். அதுவே இவர் தன் காதல் மனைவி எமிலியையும், அவரது மகள் அனிதாவையும் கடைசியாக சந்தித்தார். அதன் பிறகு இவர்கள் பிரிந்தனர்.
பிரிவுக்கு பிறகு ஒரு முறைக் கூட தன் கணவரை சந்திக்க எமிலி முயற்சிக்கவில்லை. மகளுக்கும் தந்தையிடம் உரிமைக்கோரி இந்தியா வரவில்லை.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust