சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் மிகவும் முக்கியமான போர் என்றால் கார்கில் போர்தான் நமக்கு நினைவுக்கு வரும்.
கார்கில் போர் வெற்றியில் இராணுவ பலம் மட்டுமல்லாமல் அரசியல் சூழ்நிலைகளும் முக்கிய பங்கு வகித்தது.
இந்தியாவின் உளவு அமைப்பான ரா கார்கில் போர் வெற்றியில் எப்படி பங்காற்றியது எனத் தெரியுமா? ரா பாகிஸ்தான் இராணுவத்தின் சதி திட்டத்தை முறியடித்த கதை தான் இது.
1999ம் ஆண்டு மே மாத தொடக்கத்தில் கார்கில் போர் தொடங்கியது. இந்திய எல்லையில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறியதை உலகுக்கு வெளிக்காட்டவும் அவர்களது திட்டங்களை முறியடிக்கவும் இந்திய இராணுவம் பாடுபட்டுக்கொண்டிருந்தது.
மே 26ம் தேதி ரா அமைப்பில் இருந்து இராணுவ தலைவர் ஜெனரல் வேத் பிரகாஷ் மாலிக்குக்கு அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் இரண்டு பாகிஸ்தான் உயர் இராணுவ அதிகாரிகள் பேசிக்கொள்ளும் டேப் குறித்து ரா அமைப்பின் செயலாளரான அரவிந்த் தவே கூறியிருக்கிறார்.
அரவிந்த் தவே இந்திய இராணுவ உளவுத்துறை தலைமை இயக்குநருக்கு தான் இந்த தகவலை கூற நினைத்திருக்கிறார். ஆனால் தவேவின் உதவியாளர் தவறுதலாக வேத் பிரகாஷ் மாலிக்கிற்கு அழைப்பை மேற்கொண்டுவிட்டார்.
டேப்பின் ட்ரான்ஸ்கிரிப்டை மாலிக்குக்கு ரா அனுப்பியுள்ளது. அவர் முழு ட்ரான்ஸ்கிரிப்டையும் படித்துவிட்டு இந்த எண்ணை தொடர்ந்து கண்காணிக்க ராவிடம் வலியுறுத்தியிருக்கிறார்.
அந்த டேப்பில் பேசியது பாகிஸ்தான் உயரதிகாரி ஜெனரல் முஷரஃப். அப்போது பெய்ஜிங்கில் இருந்த அவர் மற்றொரு இராணுவ உயரதிகாரியுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்.
மே 29ம் தேதி ரா அமைப்பு அதேப் போன்று மற்றொரு உரையாடலை பதிவு செய்தது. ஆனால் இந்த முறை நேரடியாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிரஜேஷ் மிஸ்ரா மற்றும் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயி ஆகியோரிடம் மட்டுமே விஷயத்தை சொல்லியிருக்கின்றனர்.
இந்த உரையாடலின் ட்ரான்ஸ்கிரிப்ட் இராணுவ தலைமை ஜெனரல் மாலிக் கைகளுக்கு பின்னால் வந்து சேர்ந்தது.
இந்த சம்பவத்தில் இருந்து நம்மால் புரிந்துகொள்ளக் கூடிய விஷயம், ரா அமைப்பு எல்லா தகவல்களையும் எல்லாரிடமும் தெரிவிப்பதில்லை. குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே ரா அமைப்பு இருப்பது குறித்தே தெரியும்.
இஸ்லாமா பாத்துக்கு ரகசிய பயணம்
காரில் போரைப் பொறுத்தவரை பிரதமர் நவாஸ் ஷெரிஃபுக்கு முழுவிவரங்கள் தெரியாது. இந்திய பிரதமரான அடல் பிகாரி வாஜ்பாயி மூலமாகதான் தானே தெரிந்துகொண்டதாக கூறியிருந்தார்.
பாகிஸ்தானின் இராணுவ தளபதியான முஷரஃப் மற்றும் உயரதிகரிகள் சிலருக்கு மட்டுமே கார்கில் திட்டங்கள் தெரிந்திருந்தது.
இதனால் இந்த டேப்பை நவாஸ் ஷெரிபை கேட்க வைக்க இந்தியா முடிவு செய்தது. முஷாரஃபின் உரையாடலை ஒளிப்பதிவு செய்த இந்தியாவுக்கு நவாஸ் ஷெரிஃபைக் கேட்கவைப்பது எளிதான காரியம் தான்.
இதற்காக இஸ்லாமாபாத்துக்கு ரகசிய பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது. முக்கிய பத்திரிகையாளரான பத்திரிகையாளர் ஆர்.கே.மிஸ்ரா இதற்காக தேர்வு செய்யப்பட்டார்.
ஆர்.கே.மிஸ்ராவுக்கு தூதரக அதிகாரி என்ற அந்தஸ்து கொடுக்கப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டார். அவருடன் வெளியுறவுத்துறை இணைச் செயலாளர் விவேக் கட்ஜுவும் சென்றார்.
ஜூன் 6ம் தேதி காலை 8 மணிக்கு இஸ்லாமாபாத்தில் நவாஸ் ஷெரிஃபை சந்தித்தார் மிஸ்ரா. அவரிடம் டேப் மற்றும் ட்ரான்ஸ்கிரிப்டை ஒப்படைத்து திரும்பினார்.
இதுபோன்ற டேப்கள் இந்தியாவிடம் இருப்பது பாகிஸ்தானுக்கு தெரியவந்ததால் கார்கில் மீதான ஆசை மங்கத் தொடங்கியது. பாகிஸ்தானுக்கு அழுத்தத்தை இன்னும் அதிகரிக்கும் விதமாக இந்த பதிவு நாடா* பகிரங்கமாக வெளியிடப்பட்டது.
*டேப் என்பதன் தமிழாக்கம் தான் பதிவு நாடா
பலன்கள்
இதன் பிறகு பாகிஸ்தான் ஜெனரல் முஷரஃப் கவனக் குறைவாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. அப்போது எதுவும் தெரிவிக்காத முஷரஃப் பாகிஸ்தான் அதிபராக பதவியேற்ற பிறகு இந்த டேப்பில் பேசியது அவர்தான் என்பதை ஒப்புக்கொண்டார்.
இந்த டேப் விவகாரம் நடைபெற்ற ஒரு வாரத்தில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் சர்தாஜ் அஜீஸ் டெல்லிக்கு வந்திருந்தார். அதன் பிறகு கார்கில் விவகாரத்தில் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் சம்பந்தபடவில்லை என்பதும், இராணுவம் சுயாதீனமாக செயல்பட்டது என்பதும் வெளியுலகுக்கு தெளிவானது.
இந்த டேப் வெளியானதால், அமெரிக்கா, பாகிஸ்தான் இந்தியாவில் அத்து மீறியது குறித்து உறுதியான முடிவை எடுக்க முடிந்தது. பாகிஸ்தான் மக்களிடையே, பாகிஸ்தான் ராணுவம் மற்றும் முஷரஃப் மீதான நம்பகத்தன்மை மீதும் இந்த தகவல்கள் குழப்பத்தை ஏற்படுத்தியது.
சர்வதேச அளவில் பாகிஸ்தானுக்கு அழுத்தம் அதிகரித்தது. உளவியல் ரீதியாகவும் இந்தியாவுக்கு பலன்கள் கிடைத்தன. ஆனாலும் இந்த டேப்பை பகிரங்கப்படுத்தியது தவறான நடவடிக்கை என்கிறார் ராவின் கூடுதல் செயலாளராக இருந்த மேஜர் ஜெனரல் வி.கே.சிங்.
விமர்சனம்
பிபிசி தளத்தில் பேசியுள்ள அவர், "இந்த நாடாக்களை மறைவாக வைத்திருந்தால் ரா அமைப்பு மற்றும் இடைமறிப்பு செயற்கை கோள் பற்றி யாருக்கும் தெரிந்திருக்காது. எங்களால் இன்னும் அதிக தகவல்களைப் பெற்றிருக்க முடியும்." எனக் கூறியுள்ளார்.
இராணுவம் எப்படி ரகசியங்களைப் பாதுக்காக்க வேண்டும் என்பது குறித்து இரண்டாம் உலகப் போரை ஒரு உதாரணத்தைக் குறிப்பிடலாம்.
ஜெர்மனியின் Enigma என்ற குறியீட்டை பிரிட்டன் கண்டுபிடித்தது. ஆனால் அதனை ரகசியமாக வைத்து ஜெர்மனியின் நடவடிக்கைகளை அறிந்து வந்தது.
அப்படி கோவென்ட்ரி என்ற நகரின் மீது ஜெர்மனி குண்டுவீசப் போவதை இங்கிலாந்து அறிந்தது. அந்த நகர மக்களை பாதுகாப்பான இடத்துக்கு கூட்டிச் சென்றிருக்க முடியும். ஆனால் வேண்டாம் என முடிவு செய்தார் சர்ச்சில். ஒருவேளை அப்படி செய்து ஜெர்மனி சந்தேகத்தில் குறியீட்டை மாற்றிவிடக் கூடாது என அவர் நினைத்தார்.
இராணுவ ரகசியங்களைப் பொருத்தவரை சிறு துரும்பும் பல்குத்த உதவும். ஆனால் அதற்காக பெரிய விலைகொடுக்க வேண்டியதும் இருக்கும்!
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust