மகாராஷ்டிரா : அதிருப்தி தலைவர்களை அலறவைத்த சிவசேனா தொண்டர்கள்- மலரும் நினைவுகளான வரலாறு!

அப்போது ஆளும் கட்சியாக காங்கிரஸ் இருந்தபோதும், புஜ்பலைத் தாக்குவோம் என பகிரங்க மிரட்டல் விடுத்தனர், சிவசேனா கட்சியினர். போகுமிடம் எல்லாம் அவர் மீது தாக்குதல் நடத்துவதற்காக அவரை விடாமல் துரத்தினர்
Bal Thackarey
Bal ThackareyTwitter
Published on

மகாராஷ்டிர மாநில ஆட்சிக்கவிழ்ப்பில் எல்லா தரப்பினராலும் குறிப்பிடப்படுவது, சிவசேனாவின் பால் தாக்கரே காலத்து போர்க் குணம் என்ன ஆனது என்பது பற்றித்தான். காரணம், அந்தக் காலகட்டத்து சிவசேனாவின் முரட்டு பக்தர் கூட்டத்தின் பராக்கிரமங்கள். குறிப்பாக கட்சியிலிருந்து அதிருப்தியாக வெளியேறும் தலைவர்களிடம் அவர்கள் நடந்துகொண்டது அவ்வளவு பயங்கர ரகம்!

சிவசேனா கட்சியானது 1966 அக்டோபர் 30 அன்று தொடங்கப்பட்டபோது, அதன் நிறுவனர் பால் தாக்கரேவுடன் சரிக்குச்சமமாக மேடையில் வீற்றிருந்த இன்னொரு தலைவர் வழக்குரைஞர் பல்வந்த் மந்திரி. ஓராண்டுக்குள் கட்சிக்குள் உட்கட்சி ஜனநாயகம் இல்லை எனக் குற்றம்சாட்டி அவர் கட்சியைவிட்டு விலகினார். அப்போது அதற்காக பல்வந்த் மந்திரியை வெறிகொண்ட சிவசேனா தொண்டர்கள் தாதர் பகுதியில் வைத்து கடுமையாகத் தாக்கினர். மகாராஷ்டிர அரசியலில் புதியதாகவும் முதல் முறையாகவும் அப்படியொரு சம்பவத்தைப் பார்த்தவர்கள் அதிர்ச்சிக்கு ஆளானார்கள்.

Bal Thackarey
Bal ThackareyTwitter

அடுத்த ஓராண்டில் கட்சியின் இன்னொரு முக்கிய புள்ளியான பந்து சிங்கிரே விலகினார். நேரடியாக அவருக்கும் பால்தாக்கரேவுக்கும் பிரச்னை ஏற்பட்டது. பரேல்- லால்பாக் பகுதியின் செல்வாக்கான ஆளாக இருந்த சிங்கிரேவை விட்டுவிட்டு, மக்களவை இடைத்தேர்தலில் காங்கிரசின் ராம்ராவ் ஆதிக் என்பவரை தாக்கரே ஆதரித்ததுதான், அவரின் விலகலுக்குக் காரணம். கட்சியிலிருந்து வெளியேறிய அவர், பிரதி சிவசேனா அல்லது பதிலி சிவசேனா என்கிற கட்சியைத் தொடங்கினார்.

மற்றவர்களைவிட இவருக்குள்ள பெரிய வித்தியாசம், சிவசேனா கட்சியின் தலைமையகமான சேனா பவன் கட்டடம் இன்றைக்கும் மும்பையில் எத்தனையோ பேருக்கு உணர்ச்சிப்பூர்வமான இடம்; கிட்டத்தட்ட 45 ஆண்டுகளுக்கு முன்னர் கட்சி உணர்வூட்டப்பட்ட ஏராளமான தொண்டர்களின் மதிப்பிற்குரிய இடத்தில் கல்வீசியவர் பந்து சிங்கிரே!

Sena Bhavan
Sena BhavanTwitter

கடந்த வாரம்வரை உத்தவ் தாக்கரே அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த சகன் புஜ்பால், 1985இல் சிவசேனாவின் தனித்த எம்.எல்.ஏ.வாக இருந்தார். மும்பை மாநகராட்சியில் வலுவாக இருந்த சேனாவை, ஊரகப் பகுதிகளில் காலூன்றச் செய்ததில் புஜ்பலுக்கு பெரும் பங்கு உண்டு. கட்சியில் இரண்டாம் நிலையிலிருந்த அவர் இருக்கையில், 1991இல் நாக்பூரில் நடைபெற்ற சட்டப்பேரவைக் குளிர்காலக் கூட்டத்தின்போது, மனோகர் ஜோசிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி அளிக்கப்பட்டது. அந்தப் பதவி கிடைக்காத அதிருப்தியில் புஜ்பல் 17 எம்.எல்.ஏ.களுடன் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.

அப்போது ஆளும் கட்சியாக காங்கிரஸ் இருந்தபோதும், புஜ்பலைத் தாக்குவோம் என பகிரங்க மிரட்டல் விடுத்தனர், சிவசேனா கட்சியினர். போகுமிடம் எல்லாம் அவர் மீது தாக்குதல் நடத்துவதற்காக அவரை விடாமல் துரத்தினர். வேறு வழியில்லாமல் அப்போதைய உள்துறை அமைச்சரும் முன்னாள் குத்துச்சண்டை வீரருமான டாக்டர் பத்மசிங் பாட்டிலின் உதவியை அவர் நாடினார். புஜ்பல் மீதான தாக்குதல் முயற்சிகளிலிருந்து அவர்தான் காப்பாற்றினார்.

Bal Thackarey
மகாராஷ்டிரா சிவசேனா : பதவியேற்புக்கு முன்பு அடுத்தடுத்து அரங்கேறிய அதிரடி காட்சிகள்

அதே காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சராக புஜ்பல் ஆகியும் முரட்டு சிவசேனாகாரர்களின் அடாவடி நிற்கவில்லை. மும்பையில் எந்தப் பொதுநிகழ்ச்சியில் புஜ்பல் கலந்துகொண்டாலும் அவருக்கு இடையூறு செய்துகொண்டே இருந்தனர். இப்போது தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருக்கிறார் என்றாலும் இடையில் சிவசேனாவைச் சேர்ந்த பாலா நந்த்கோங்கார் என்பவரால் சட்டப்பேரவைத் தேர்தலில் புஜ்பல் தோற்கடிக்கப்பட்டார்.

2005ஆம் ஆண்டில் சிவசேனாவின் சார்பில் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக இருந்த நாராயண் ரானே புஜ்பலைப்போல காங்கிரசில் சேர்ந்தார். அதே ஆண்டில் பால் தாக்கரேவின் அரசியல் வாரிசாகக் கருதப்பட்ட அவரின் தம்பி மகன் ராஜ் தாக்கரேவும் விலகி, அவருடைய தலைமையிலான பாரதிய வித்தியார்த்தி சேனாவுடன் நமாராஷ்டிர நவநிர்மாண் சேனாவைத் தொடங்கினார். இருவரின் விலகலால் கட்சிக்குள் கடும் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க, பால் தாக்கரேவே நேரடியாகக் களமிறங்கினார்.

Chhagan bujbal
Chhagan bujbalTwitter

மும்பை மாநகராட்சி கவுன்சிலர்கள் ஒவ்வொருவரிடமும் அவரே பேசி, ராஜ் தாக்கரே பக்கம் போகவிடாமல் தடுத்துநிறுத்தினார். அப்போது குடும்ப அரசியல் வளர்ப்பாக இருந்த உத்தவ் தாக்கரேவை வைத்து நேரடியாகவும் பேசவைத்தார். இப்போதைய முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவின் அரசியல் குருவான தானே மாவட்ட சிவசேனா தலைவர் ஆனந்த் தீகே, அப்போது பால்தாக்கரேவுக்கு முக்கியமான பக்கபலமானவராக இருந்தார். எல்லாவற்றையும் மீறி, நேரடியாகவே தங்களிடம் பேசிய பால் தாக்கரேவின் வார்த்தைகளை மீற கட்சியினர் யாரும் அப்போது தயாராக இல்லை என்பதே அப்போதைய யதார்த்தம்!

அதனால் பெரும் தலைவர்கள் வெளியேறியபோதும் சிவசேனாவுக்கு உடனடி பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. ஆனால் இப்போது தனியான தலைவராகக்கூட இல்லாத ஏக்நாத் ஷிண்டே அதிருப்தி அணியுடன் பிளவுபடுத்தியுள்ள நிலையில், உத்தவ் தாக்கரேவால் கட்சியைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. அவருடைய மகனும் மனைவியும் செண்டிமெண்டாகப் பேசியபோதும் அது எடுபடவில்லை.

Raj and Uddhavu Thackarey
Raj and Uddhavu ThackareyTwitter

ஆயிரக்கணக்கான தொண்டர்கள் சேனா பவனுக்கு வந்துபோனதைத் தவிர, செங்குத்தான பிளவை எதிர்த்தோ வெளியேறிய அதிருப்தியாளர்களைக் கண்டித்தோ சிவசேனா தலைமை தரப்பில் சொல்லும்படியான எதிர்வினை ஏதும் இல்லை.

உச்சநீதிமன்றத் தீர்ப்பை அடுத்து கவுகாத்தியிலிருந்து அதிருப்தி எம்.எல்.ஏ.கள் மும்பை திரும்புவார்கள் எனக் கூறப்பட்ட நிலையில், அசம்பாவிதங்கள் நடந்துவிடுமோ என நகரில் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டது. ஆனால் பால் தாக்கரே காலத்தைப்போல களமிறங்கி வன்முறையில் ஈடுபட்டு இயல்பு வாழ்க்கையைக் குலைக்கும் அளவுக்கு- சிவசேனா தலைமை தரப்பில் இந்தமுறை எந்த அறிகுறியும் காணப்படவில்லை.

”முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் சகன் புஜ்பலை மும்பைக்குள் பகிரங்கமாக நடமாடவிடாமல் செய்தோம்” எனப் பெருமை பேசியது, சிவசேனாவில் பழங்கதை ஆகிவிட்டது. தாக்கரேக்களின் மாதோசிறீ இல்லத்து விசுவாசிகளின் இப்போதைய கனத்த அமைதி, மாநில அரசியலில் முதலில் அதிர்ச்சியையும் பிறகு மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

காட்சிகள் மாறியதற்கான காரணங்களில், பல தரப்பினராலும் முக்கியமாகக் குறிப்பிடப்படுவது இரண்டுதான்:

ஒன்று, களத்திலிறங்கி நிலைமையை நேரடியாகச் சமாளித்த பால்தாக்கரேவோ அல்லது அவருடைய பாணியோ இப்போது சிவசேனாவில் இல்லை.

அடுத்து, அவருடைய வாழ்நாள்வரை அவரை எதிர்த்தோ விலகியோ போவதை கற்பனை செய்துகூடப் பார்க்கமுடியாத தொண்டர்களும் நிர்வாகிகளும்தான் கட்சியின் இருந்தனர். இப்போதோ, அதிருப்தியாளர்களை மிரட்டவும் உருட்டவும் பயன்படுத்தப்பட்டவர்களே மேலிருந்து கீழ்மட்டம்வரை நிர்வாகிகளாக நிரம்பியுள்ள நிலையில், யாரை எதிர்த்து யாரும் பால் தாக்கரே காலத்துப் பாணியைக் கையிலெடுப்பதை சிந்திக்கவே தயாராக இல்லை, உத்தவ் தாக்கரே உள்பட!

அதையும் மீறு உத்தவ் தாக்கரேவோ ஒரு வாரத்துக்கும் மேல் அதிருப்தியாளர்களுக்கு சாபம் விட்டபடி இருக்கும் அவருடைய மகன் ஆதித்ய தாக்கரேவோ விரும்பினால்கூட அப்படி தியாகம் செய்யும்படியாக, அடுத்த தலைமுறைத் தலைமை கட்சியமைப்பை வைத்திருக்கவில்லை என்கின்றனர் சிவசேனாவின் வளர்ச்சியை தொடர்ந்து உற்றுநோக்கிவரும் ஆய்வாளர்கள்.

Bal Thackarey
சிவசேனா ஏக்நாத் ஷிண்டே - பட்னாவிஸ்: கடந்த கால பகையும், நட்பும் - விரிவான தகவல்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com