சில தினங்களுக்கு முன்பு, குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் 2022 டிசம்பர் 24 ஆம் தேதி துனிஷா ஷர்மா என்கிற இளம் இந்தி நடிகை, "அலிபாபா - தஸ்தான் இ காபூல்" என்கிற தொலைக்காட்சி தொடர் படமாக்கப்பட்டு கொண்டிருந்த படப்பிடிப்பு தளத்தில் கழிவறை ஒன்றில் இறந்து கிடந்தார்.
அடுத்த நாள் அவரோடு இணைந்து நடித்துக் கொண்டிருந்த சீஷன் கான் (Sheezan Khan) என்பவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். சீஷன் கான் துனிஷா ஷர்மாவின் நண்பர் என்பதும், அவர்தான் துனிஷா ஷர்மாவை தற்கொலை செய்ய தூண்டியதாக நடிகையின் தாயார் புகார் கொடுத்ததின் அடிப்படையில் சீஷன் கான் கைது செய்யப்பட்டார்.
துனிஷா ஷர்மாவின் மரணத்திற்கும் தனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என தன் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறார் சீசன் கான்.என்ன காரணத்திற்காக துனிஷா தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருவதாக காவல்துறை அதிகாரி சந்திரகாந்த் யாதவ் பத்திரிகையாளர்களிடம் கூறினார்.
சுமார் 20 வயதான இளம் நடிகை துனிஷா ஷர்மா தற்கொலை செய்து கொண்டது, ஒட்டுமொத்த இந்தி திரைத்துறையையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவர் ஒரு வளரும் நட்சத்திரமாகவும் அதிக அளவில் ரசிகர்கள் பின் தொடரும் சமூக வலைதள பிரபலங்களில் ஒருவராகவும் இருந்தார் என்கிறது பிபிசி வலைத்தளம்.
துனிஷா ஷர்மா உயிரிழப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "யார் ஒருவர் தன்னுடைய ஆர்வத்தினால் உந்தப்படுகிறாரோ அவர் எங்கும் நிற்பதில்லை" என நேர்மறையாகவே பதிவிட்டு இருந்தார்.
துனிஷா ஷர்மாவின் அப்பதிவுக்கு சுமார் 8 லட்சம் பேர் லைக் செய்து இருந்தனர், பல ஆயிரக்கணக்கான கமெண்ட்டுகள் கொட்டிக் கிடந்தன. இத்தனை நேர்மறை சிந்தனையோடு இருந்த ஒருவர் எப்படி திடீரென அவ்வளவு பெரிய முடிவை எடுக்க முடியும் என அவரது ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து பல்வேறு இந்திய ஊடகங்களால் தொடர்ந்து செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றன. துனிஷா ஷர்மா மற்றும் சீஷன் கான் ஆகிய இருவருக்கும் இடையிலான உறவு குறித்தும் ஆராயப்பட்டு வருகிறது.
ஏதோ இந்திய அரசியலில் மிக முக்கியமான நிகழ்வு நடப்பது போல, சில செய்தி வலைதளங்களில் லைவ் பேஜ் கவரேஜ்கள் எல்லாம் மேற்கொள்ளப்படுகின்றன. துனிஷா ஷர்மாவின் மரணம் குறித்த செய்திகள் நிமிடத்திற்கு நிமிடம் அப்டேட் செய்யப்பட்டு வருகின்றன.
வழக்கம் போல, துனிஷா ஷர்மாவோடு பணியாற்றியவர்கள், அவருடன் பயணித்தவர்கள், நண்பர்கள், அவருடைய குடும்பத்திற்கு நெருக்கமானவர்கள்... என யாரையெல்லாம் அடித்து பிடித்து பேட்டி எடுக்க முடியுமா அவர்களை எல்லாம் வைத்து செய்திகளையும் கட்டுரைகளையும் காணொளிகளையும் வெளியிட்டு வருகிறார்கள் பல்வேறு இந்திய ஊடகங்கள். இதனால் பல வதந்திகள் மற்றும் சரிபார்க்கப்படாத விஷயங்கள் பொதுவெளியில் பரவிக் கொண்டிருக்கின்றன என்கிறது பிபிசி வலைதளம்.
சண்டிகரில் பிறந்த துனிஷா ஷர்மா, சிறு வயதிலிருந்தே நடிகையாக வேண்டும் என்கிற கனவுகளோடு வளர்ந்தார். அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடிக்கத் தொடங்கிய போது அவருக்கு வயது 13 மட்டுமே. ஒரு பதின்பருவ குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியவர், மெல்ல படிப்படியாக பெரிய திரைக்கு வந்து சேர்ந்தார்.
கத்ரீனா கைஃப், வித்யா பாலன் போன்ற முன்னணி பிரபல பாலிவுட் நடிகர்கள் நடித்த படங்களில் சிறு வேடங்களை ஏற்று நடித்தார்.சிலர், சில திரைகளில் தான் புகழ்பெறுவர். அப்படி, பெரிய திரையில் பெரிதாக ஜொலிக்காத துனிஷா, மிக இளம் வயதிலேயே சின்னத்திரையில் பெறு வெற்றி பெற்றார். அப்படித் தான் துனிஷா இன்றைய புகழின் உச்சத்தைச் சென்றடைந்தார்.
பலதரப்பட்ட பாத்திரங்களில் நடித்த துனிஷாவுக்கு, அலி பாபாவும் நாற்பது திருடர்களும் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட "அலிபாபா - தஸ்தான் இ காபூல்" தொலைக்காட்சித் தொடரில் ஒரு இளவரசியாக நடித்தது வெகுஜன மக்கள் மத்தியில் அவரைப் பெரிய அளவில் கொண்டு சேர்த்தது.
திரையில் பார்க்க, எப்போதும் சிரித்த முகத்தோடு வலம் வந்த துனிஷா, தன் சொந்த வாழ்கையில் மனச்சோர்வு, மன அழுத்தம், சமூக வலைதளப் பிரச்னைகளை எதிர்த்துப் போராடி வந்தார். பல்வேறு ஊடகங்களுக்கு கொடுத்த முந்தைய நேர்காணல்களில் கூட, இது குறித்துப் பேசியுள்ளார் துனிஷா.
துனிஷா ஷர்மாவின் துணை நடிகர் மற்றும் நண்பர் சீஷன் கானுக்கு எதிராக, துனிஷா ஷர்மாவின் குடும்பத்தினர் புகாரளித்த பிறகு, கடந்த டிசம்பர் 25ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைத்திருக்கிறார்கள். பல்வேறு இந்திய ஊடகங்கள், சீஷன் கானின் வாழ்கையையும், அவர் காவலில் இருப்பதைக் குறித்தும் படம் போட்டு விளக்கத் தொடங்கியுள்ளன.
துனிஷா ஷர்மாவின் வழக்கையைக் குறித்து இத்தனை அதிகமாக ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிடுவது வழக்கின் போக்கை பாதிக்கலாம், அது குற்றம்சாட்டப்பட்டவரை முன் முடிவோடு அணுகுவது மற்றும் உயிரிழந்த துனிஷாவை கொச்சைப்படுத்துவது போலாகிவிடும் என பல்வேறு சட்ட நிபுணர்கள் எச்சரித்த பின்பும் நிலைமை மாறியதாகத் தெரியவில்லை.
துனிஷா ஷர்மா மற்றும் சீஷன் கான் கடந்த சில மாதங்களாக டேட் செய்து வந்ததாக ஊடகச் செய்திகள் சொல்கின்றன. ஆனால், துனிஷா உயிரிழப்பதற்கு சுமார் 15 நாட்களுக்கு முன்பே, இருவரும் தங்களுக்கு இடையிலான உறவை முறித்துக் கொண்டதாகக் காவல் துறை விசாரணையில் கண்டுபிடித்ததாகச் சொல்லப்படுகிறது.
இந்தப் பிரிவு, அவரை கடும் மன அழுத்தத்துக்கு ஆளாக்கி இருக்கலாம், அது அவரை தற்கொலை முயற்சிக்கு உந்தித் தள்ளி இருக்கலாம் என்றும் காவல் துறையினர் சொல்கிறார்கள்.
துனிஷாவின் மரணத்துக்கு சீஷன் கான் தான் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டு இருப்பதால், இருவருக்கும் இடையிலான வாட்ஸ் ஆப் சாட்டுகள் எல்லாம் காவல் துறை பரிசோதித்தது.
மேலும் சீஷன் கான் காவல்துறையினரோடு ஒத்துழைக்கவில்லை என்றும் குற்றம்சாட்டுகள் எழுந்தன. ஆனால், சீஷன் கானின் வழக்குரைஞர் அதை மறுத்திருக்கிறார். அதோடு, சீஷன் கானின் ஜாமீன் மனு, நாளை ஜனவரி 7ஆம் தேதி விசாரிக்கப்பட இருக்கிறது. சீஷன் கான் எந்த தவறையும் செய்யவில்லை, அவர் ஒரு அப்பாவி என்றே அவர் தரப்பு வழக்குரைஞர் கூறி வருகிறார்.
மறுபக்கம், சீஷன் கான் மற்றும் துனிஷா ஷர்மாவின் குடும்பத்தினர் இருவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றனர். துனிஷா ஷர்மாவின் தாய் வனிதா, சீஷன் கான் தன் மகளை ஏமாற்றியதாகவும், படப்பிடிப்புத் தளங்களில், தன் மகளை அடித்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளார் வனிதா.
மேலும், தன் மகள் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் சந்தேகத்தைக் கிளப்பி உள்ளார் வனிதா. துனிஷாவின் உடலைப் பார்த்த சீஷன் கான், உடனடியாக ஆம்புலன்ஸ் வாகனத்தை அழைக்காதது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
திங்கட்கிழமை, சீஷன் கானின் சகோதரிகள், கானின் தாய், அவரது தரப்பு வழக்குரைஞர் என எல்லோரும் சேர்ந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். அப்போது சீஷன் கான் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுத்தனர். இதில் சீஷன் கான் போதைப் பொருட்களை பயன்படுத்தக் கூடியவர், அவருக்கு பல்வேறு தொடர்புகள் இருக்கிறது, துனிஷா ஷர்மாவை கொடுமைப்படுத்தியது... போன்ற பல குற்றச்சாட்டுகள் அடக்கம்.
மாறாக, துனிஷா ஷர்மாவின் தாய் வனிதா ஷர்மா தான், அவருடைய மகளின் நிதி விவகாரங்கள் முதல் அவரது வாழ்கை வரை எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டார், ஆகையால் மகளுக்கும் தாய்க்கும் இடையிலான உறவு சுமூகமாக இல்லை என குற்றம்சாட்டினர்.
இதை துனிஷா ஷர்மாவின் குடும்பத்தினர் முழுமையாக மறுத்துள்ளனர். விரைவில் இது குறித்து விரிவாக பதிலளிக்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.
மேலும், துனிஷா ஷர்மாவுக்கு சிறு வயதில் இருந்தே மன அழுத்தப் பிரச்சனைகள் இருந்ததாகவும், சீஷன் கான் & துனிஷாவுக்கு இடையிலான உறவு முறிவுக்கும், துனிஷா மரணத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என, சீஷன் கானின் சகோதரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
அதோடு துனிஷா ஷர்மாவே, சீஷன் கானோடும், கானின் குடும்பத்தினரோடும் நல்ல நட்பில் இருந்ததற்கு ஆதாரமாக, துனிஷா ஷர்மா தன் சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்திருந்த புகைப்படங்களைப் பார்க்க முடிகிறது.
துனிஷாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அவர் உயிரிழப்பதற்கு ஒரு மாத காலத்துக்கு முன் "என் வாழ்வின் மிக அழகான ஆண்மகன்" என துனிஷாவும் சீஷன் கானும் சேர்ந்து இருக்கும் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்திருந்தார்.
கடந்த டிசம்பர் மாதம், சீஷன் கானின் சகோதரிகளில் ஒருவரோடு துனிஷா ஷர்மா ஒரு படத்தைப் பகிர்ந்திருந்தார். அதில் "எனக்கு மிகவும் பிடித்த மனிதர்" என்கிற கேப்ஷனோடு அப்புகைப்படம் பகிரப்பட்டு இருந்தது.
துனிஷா ஷர்மாவின் விவகாரம் இத்தனை பெரிதாக வெடிக்க, துனிஷா ஷர்மா ஓர் இந்து, சீஷன் கான் ஓர் இஸ்லாமியர் என்பதும் ஒரு முக்கிய காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. துனிஷா ஷர்மா மற்றும் சீஷன் கான் விவகாரத்தில் மத ரீதியிலான பிரச்னைகள் ஏதும் தெரிய வரவில்லை என்று, அவ்வழக்கை விசாரிக்கும் காவல் துறை உயர் அதிகாரி ஜாதவ் ஏ என் ஐ செய்தி முகமையிடம் கூறியுள்ளார்.
ஆனால், இந்த விவகாரத்தில் மதம் ஒரு முக்கிய பங்கு வகித்திருக்கலாம் என வலது சாரி இந்துக்கள் ஒரு உள்ளீட்டைக் கிளப்பி இருக்கிறார்கள்.இதில் இந்திய அரசின் ஆட்சிப் பீடத்தில் இருக்கும் பாஜக கூட, துனிஷா ஷர்மா - சீஷன் கான் விவகாரத்தில் லவ் ஜிஹாத் பிரச்னை இருக்கலாம் என குற்றம்சாட்டியுள்ளனர்.
சீஷன் கானோடு நெருங்கிப் பழகத் தொடங்கிய பின், துனிஷா ஹிஜாப் அணியத் தொடங்கியதாகவும், அவருடைய வாழ்கை முறையில் சில மாற்றங்களைப் பார்க்க முடிந்ததாகவும், துனிஷாவின் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இது வலது சாரி அமைப்பினர் கூறும் லவ் ஜிஹாத் வாதத்துக்கு வலு சேர்க்கும் வகையில், அமைகிறது.துனிஷா ஷர்மா உயிரிழந்த பின், அவர் ஹிஜாப் அணிந்திருப்பது போன்ற ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகம் பரவி வருகிறது. இது கடும்போக்கு இந்துத்துவவாதிகளை கடும் அதிருப்தியில் ஆழ்த்தி இருக்கிறது.
சீஷன் கானின் சகோதரிகளோ, துனிஷாவைக் கட்டாயப்படுத்தி ஹிஜாப் அணியச் செய்ததாக ஷர்மா குடும்பத்தினர் வைக்கும் குற்றச்சாட்டுகளை முற்றிலும் தவறானது என மறுத்துள்ளனர். அதோடு அப்புகைப்படம் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்டதாகவும் விளக்கம் கொடுத்தனர்.
இது போன்ற வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன, இப்பிரச்னையைக் கட்டுப்படுத்த ஒரு கடுமையான சட்டத்தைக் கொண்டு வருவது குறித்து ஆலோசித்து வருவதாக, மகாராஷ்டிர மாநிலத்தில் அமைச்சராக இருக்கும் கிரீஷ் மஹஜன் ஏ என் ஐ முகமையிடம் கூறியுள்ளார். இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் இந்தியாவில் இந்து - முஸ்லிம் விளையாட்டை அரசியல்வாதிகள் அரங்கேற்றுவார்கள் என்று தெரியவில்லை.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust