வர்கீஸ் குரியன் : வெண்மை புரட்சிக்கு வித்திட்ட இந்தியரின் கதை இது

பால் வணிகம் செய்யும் போல்சன் டெய்ரி எனப்படும் தனியார் நிறுவனத்தின் போட்டியையும் பிரச்னையையும் சந்தித்த அமுல், இந்தியாவின் மிகப்பெரிய பால் பொருட்கள் தயாரிக்கும் பிராண்டாக குரியனின் முயற்சிகளால் மாறியது
Vaghese Kurian
Vaghese Kurian Twitter
Published on

அமுல்

அமுல் என்றாலே அதன் பால் பொருட்களும் ஐஸ்கிரீமும் சாக்லேட் வகைகளும் நினைவுக்கு வரும். குழந்தைகள் முதல் பெரியவர் வரை விரும்பும் ஒரு நிறுவனம் என்றால் அது அமுல்தான். மற்ற தனியார் நிறுவனங்களின் பால் பொருட்களை விட அமுலின் விலை குறைவு. தற்போது இந்தியா முழுவதும் ஒரு வெற்றிகரமான பிராண்டாக அமுல் நிலைநாட்டப் பட்டிருக்கிறது. ஆனால் இது தனியார் நிறுவனம் அல்ல. கூட்டுறவுத் துறை நடத்தும் நிறுவனம்.

வெண்மை புரட்சி

ஒரு கூட்டுறவுத் துறை நிறுவனம் ஆசியாவிலேயே கொடி கட்டிப் பறக்கிறது என்றால் அது அமுல்தான். அந்த அமுல் நிறுவனத்தின் வெற்றிக்கு சொந்தக்காரர் வர்கீஸ் குரியன். இவர்தான் இந்தியாவில் வெண்மைப் புரட்சிக்கு வித்திட்டவர். நமது ஊர் ஆவின் கூட அந்த வெண்மைப் புரட்சியின் வழித்தோன்றல்தான். 2012 இல் அவர் இறந்த போது பால் பாக்கெட்டில் அவரது படத்தை அச்சிட்டு மரியாதை செலுத்தியது ஆவின்.

இந்தியாவின் வெண்மைப் புரட்சியை இப்படி தொலைநோக்கோடு வடிவமைத்த குரியனை இந்தியாவின் பால்காரர் என்று அழைக்கிறார்கள். குஜராத்தில் பால் கூட்டுறவு நிறுவனமான அமுலின் வெற்றிக்கு வித்திட்டவரும் குரியன்தான்.

1965 ஆம் ஆண்டு நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கூட்டுறவுத் திட்டத்தை விரிவுபடுத்துவதற்காகத் தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தை (NDDB) நிறுவ அப்போதைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியைத் தூண்டினார் வர்கீஸ் குரியன்.

பிறப்பும் படிப்பும்

நவம்பர் 26, 1921 இல் கேரளாவின் கோழிக்கோட்டில் ஒரு அறுவை சிகிச்சை மருத்துவருக்கு மகனாகப் பிறந்தார் குரியன். சென்னை லயோலா கல்லூரியில் பயின்றவர் 1940 ஆம் ஆண்டில் இயற்பியலில் பட்டம் பெற்றார். பின்னர் கிண்டியில் உள்ள பொறியியல் கல்லூரியில் சேர்ந்தார். அந்த படிப்பை முடித்து விட்டு ஜாம்ஷெட்பூரில் உள்ள டாடா ஸ்டீல் தொழில் நுட்ப நிறுவனத்தில் சேர்ந்தார்.

இறுதியாக அரசு உதவித் தொகையில் அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் மாநில பல்கலைக்கழகத்தில் படிக்கச் சென்றார். 1948 இல், இயந்திரப் பொறியியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். இன்று, உயர் படிப்பு முடித்து விட்டு அமெரிக்கா சென்று அங்கேயே குடிமகன் உரிமை பெற்று பலரும் அமெரிக்க இந்தியர்களாக இருக்கிறார்கள். ஆனால் குரியனோ அமெரிக்காவில் உயர் படிப்பு முடித்து விட்டு இந்தியாவில் பணியாற்றுவதற்காக நாடு திரும்பினார்.

பால் நிறுவனத்தில் வேலை

அவர் நினைத்திருந்தால் அமெரிக்காவில் மிகப்பெரிய வேலையில் சேர்ந்திருக்க முடியும். கூட்டுறவு பால் தொழிலில் நுழைந்த குரியன் 1949 ஆம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து திரும்பியதும், மத்திய அரசு அவரை குஜராத்தில் உள்ள ஆனந்த் என்ற இடத்தில் உள்ள ஒரு பால் பொருள் தயாரிக்கும் நிறுவனத்திற்கு அனுப்பியது. அங்கு அவர் பால் துறையில் அதிகாரியாக ஐந்து ஆண்டுகள் பணியாற்றினார். இந்த அனுபவத்தில் அவர் கால்நடை வளர்ப்பு, பால் தொழில், அதன் பிரச்னைகள் அனைத்தையும் அறிந்து கொண்டார்.

அங்கு அவர் திரிபுவன்தாஸ் பட்டேலை சந்தித்தார். பட்டேல் உள்ளூர் விவசாயிகளை ஒன்றிணைத்து கூட்டுறவு இயக்கத்தை உருவாக்கவும், விவசாயிகள் மீதான சுரண்டலுக்கு எதிராகப் போராடவும் முயன்றார். அந்த நபரால் ஈர்க்கப்பட்ட குரியன் அவருடன் சேர முடிவு செய்தார். படேல் கைரா மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் லிமிடெட் என்ற பெயரில் ஒரு கூட்டுறவுச் சங்கத்தை உருவாக்கினார். இப்படித்தான் பால் தொடர்பான கூட்டுறவுத் துறையில் குரியன் நுழைந்தார்.

உதயமானது அமுல்

ஆனால் ஆரம்பத்தில் அவர்கள், பால் வணிகம் செய்யும் போல்சன் டெய்ரி எனப்படும் தனியார் நிறுவனத்தின் போட்டியையும் பிரச்னையையும் சந்தித்தார்கள். ஆனாலும் படேலின் முயற்சிகளுக்குத் தொடர்ந்து ஆதரவளிக்க குரியன் முடிவு செய்தார். 1946 ஆம் ஆண்டு கைரா மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் லிமிடெட் (KDCMPUL) உருவாக்கப்பட்டது. இந்த சங்கத்திலிருந்துதான் விரைவில் அமுல் டெய்ரி என்று பிரபலமாக அறியப்பட்ட வணிகப் பெயர் உதயமானது.

இப்படித்தான் இந்தியாவின் வெண்மைப் புரட்சி துவங்கியது. அதன் பிறகு இந்தியா உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தியாளராக மாறியது.

Vaghese Kurian
செளதி அரேபியா: பாலைவனத்தில் உருவாக்கப்படும் ஒரு பசுமை நகரம் - என்ன நடக்கிறது அங்கே ?

எருமைப் பாலில் தொழில் நுட்ப கண்டுபிடிப்பு

குரியனின் நண்பரும் பால் உற்பத்தி நிபுணருமான எச்.எம். தலயா, எருமைப் பாலிலிருந்து பால் பவுடர் மற்றும் கெட்டியாக்கப்பட்ட (condensed) பால் தயாரிக்கும் முறையைக் கண்டுபிடித்தார். கன்டென்ஸ்டு பால் என்பது அதிலிருக்கும் நீரைச் சிறிதளவு குறைத்து பாலை கெட்டியாக்குவது ஆகும்.

அதுவரை பதப்படுத்தப்பட்ட பால் பொருட்களை பசும்பாலில் மட்டுமே செய்ய முடியும் என்பதால், மேற்கண்ட கண்டுபிடிப்பு இந்திய பால் தொழிலில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. அமுல் பால் பண்ணை மிகவும் வெற்றிகரமாக வளர்ந்தது. விரைவிலேயே அமுலின் வெற்றி குஜராத்தின் அண்டை மாவட்டங்களில் பலவற்றில் பிரதிபலித்தது.

தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் உதயம்

1965 ஆம் ஆண்டு தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தை (NDDB) நிறுவி, நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கூட்டுறவுத் திட்டத்தை விரிவுபடுத்த அப்போதைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி முடிவெடுத்தார். சாஸ்திரிக்கு இதைச் செய்யுமாறு தூண்டிய சாதனையாளர் குரியன்தான்.

மேற்கண்ட அமைப்பின் தலைவராக குரியனே நியமிக்கப்பட்டார். 1979 ஆம் ஆண்டில், கூட்டுறவு நிறுவனங்களின் மேலாளர்களை உருவாக்கவும் பயிற்சி கொடுக்கவும் ஆனந்த் நகரில் ரூரல் மேனேஜ்மென்ட் நிறுவனத்தை Institute of Rural Management குரியன் நிறுவினார். 2006 ஆம் ஆண்டில், அவர் குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பின் (GCMMF) தலைவர் பதவியிலிருந்து விலகினார்.

இந்த பதவி விலகலுக்கு காரணம் அரசியல்தான். கூட்டுறவுத்துறையை நிர்வகிக்கும் குழுவில் புதிய உறுப்பினர்களின் ஆதரவு குரியனுக்கு குறைந்து வந்தது. சிலர் அவரது பணி பாணியை சர்வாதிகாரம் என்று கூறினர். உண்மையில் இந்த நடவடிக்கைகள் உள்ளூர் மற்றும் மாநில அரசியல் தலைவர்கள் சிலரால் ஆதரிக்கப்பட்டன. இந்த அரசியல் தலைவர்கள் மற்றும் கட்சிகள் கூட்டுறவு பால்பண்ணையின் மாவட்ட ஒன்றியங்களுக்குள் நுழைந்து கட்டுப்படுத்த முயன்றனர். இதனால்தான் குரியன் பதவி விலகினார். இல்லையேல் நாடு முழுவதும் பல அமுல் நிறுவனங்கள் உருவாகியிருக்கும்.

குரியனின் தனிப்பட்ட வாழ்க்கை

குரியன் மோலியை மணந்தார். அவர்களுக்கு நிர்மலா என்ற மகள் இருந்தார். தனது வாழ்நாளில் மாபெரும் சாதனையை நிகழ்த்திக் காட்டிய குரியன் தனது 90 வயது வயதில் நோய்வாய்ப்பட்டு 2012 ஆம் ஆண்டு இறந்து போனார். நாடு முழுவதும் உள்ள பால் விவசாயிகள், கூட்டுறவு அமைப்புகள், அரசியல் கட்சிகள் அவருக்கு அஞ்சலி செலுத்தின.

விருதுகள் மற்றும் சாதனைகள்

வாழ்நாள் முழுவதும் கற்றுக் கொண்டும் கல்வியை முடிவில்லாத செயல்முறையாகவும் கருதியவர் குரியன். அவருக்கு மிச்சிகன் மாநிலப் பல்கலைக்கழகம் மற்றும் ஸ்வீடிஷ் வேளாண் அறிவியல் பல்கலைக்கழகம் ஆகியவற்றால் கௌரவப் பட்டங்கள் வழங்கப் பட்டது.

பால்வளம் மற்றும் விவசாய சமூகங்களுக்கான அவரது இடைவிடாத சேவையை அங்கீகரிக்கும் வகையில், குரியன் பத்மஸ்ரீ (1965), பத்ம பூஷன் (1966) மற்றும் பத்ம விபூஷன் (1999), ராமன் மகசேசே விருது (1963) மற்றும் உலக உணவுப் பரிசு (1989) உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றார். இப்படி இந்தியாவிலும் உலக அளவிலும் விருதகளைப் பெற்ற சாதனையாளர்கள் இந்தியாவில் அரிது.

Vaghese Kurian
Mao History : சீன பழமை வாதத்தை எதிர்த்து கம்யூனிச புரட்சி ! மா சே துங் வரலாறு

அமுல் நிறுவனம் குறித்து சில சுவாரஸ்யமான தகவல்கள்

1. குரியனின் ஆதரவால் ‘அமுல் கேரள’ விளம்பரப் பிரச்சாரம் நீண்ட காலம் ஓடியது. நீங்களும் அந்த அமுல் சிறுமியை பார்த்திருக்கலாம். மற்றும் அமுல் நிறுவனம் ஸ்பான்சர் செய்து தயாரித்த சுரபி என்ற இந்திய கலாச்சாரம் பற்றிய தொலைக்காட்சித் தொடரானது, பார்வையாளர்களிடமிருந்து மில்லியன் கணக்கான அஞ்சல் அட்டைகளைப் பெற்று தேசியத் தொலைக்காட்சியில் பெரும் சாதனை படைத்த தொடராகும்.

2. அவர் I Too Had A Dream எனும் நூலை எழுதி வெளியிட்டார். அதில் விவசாயிகளுக்கு அதிகாரமளித்தல் மற்றும் இந்தியாவின் பால் கூட்டுறவுகளின் மேம்பாடு பற்றிய எழுச்சியூட்டும் கதையை விரிவாக எழுதியுள்ளார். புத்தகத்தின் ஆடியோ பதிப்பை அதுல் பிடே தயாரித்து வெளியிட்டார்.

3. இந்தியாவின் பிரபல திரைப்பட இயக்குநர் ஷியாம் பெனகல். இவர் இந்தியாவின் பால் தொழில் மற்றும் அதன் பின்னணியிலிருந்த வர்கீஸ் குரியன் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட மந்தன் என்ற திரைப்படத்தை உருவாக்கினார். இது 500,000 விவசாயிகள் தலா 2 ரூபாய் கொடுக்கப்பட்டுத் தயாரிக்கப்பட்ட திரைப்படமாகும். இப்படி அமுல் வெற்றி குறித்த படம் கூட கூட்டுறவு சிந்தனையால் தயாரிக்கப்பட்டது.

4. குரியன் தலைமையில், பல நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. அதில் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி அமுலின் பணி மாதிரி மற்றும் வடிவத்தின் அடிப்படையில் தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தை (NDDB) உருவாக்கியது முக்கியமானது.

5. 2013 ஆம் ஆண்டில், அமர் சித்ர கதா ஒரு காமிக் புத்தகத்தை வெளியிட்டது — வர்கீஸ் குரியன்: தி மேன் வித் தி பில்லியின் லிட்டர் ஐடியா (.Verghese Kurien: The Man with the Billion Litre Idea). இந்தப் புத்தகத்தின் சுருக்கம் என்ன தெரியுமா? டாக்டர் குரியனின் கதைதான் அமுலின் கதை.

அமுல் வேறு குரியன் வேறு அல்ல. 75 வது சுதந்திர தினத்தில் இந்தியாவை உருவாக்கிய சிற்பிகளில் குரியனும் முக்கியமானவர். அவர் நினைவைப் போற்றுவோம்.

Vaghese Kurian
பால் தினமும் குடிப்பது நல்லதா? கெட்டதா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com