இலங்கை நெருக்கடி இந்தியாவிற்கும் வருமா? எச்சரிக்கும் ஒரு ஆய்வு

மாநில அரசுகள் சமூக நலத்திட்டங்களுக்குச் செலவிட்டாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் போது அவற்றின் வரி வருவாய் குறைந்து, ஒன்றிய அரசின் வரி பாக்கி அதிகரித்து வருகிறது. இந்நிலைமை தொடருமானால் இலங்கை போன்றதொரு நிலை இங்கு வராது என்பதற்கு உத்தரவாதம் இல்லை.
Modi - Rajapaksa
Modi - RajapaksaTwitter
Published on

நீண்ட கால நோக்கில், பொறுப்பற்ற ஜனரஞ்சக நடவடிக்கைகள் காரணமாக சில இந்திய மாநிலங்கள் இலங்கையின் பாதையில் சென்று கொண்டிருக்கின்றன. இலங்கை தற்போது மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நாடாகும்.

1991 ஆம் ஆண்டில், பொறுப்பற்ற நிதிக் கொள்கை, வெளிநாட்டுக் கடனை அடைக்க வேண்டிய பணம் இல்லாமை, மற்றும் இறக்குமதிகளை அதிகமாகச் சார்ந்திருத்தல் இவை அனைத்தும் இந்தியாவை நெருக்கடியில் தள்ளின. இதற்கு முக்கியமான காரணம் அப்போது அமெரிக்க நாடு ஈராக் மீது நடத்திய முதல் வளைகுடாப் போர்.

இப்போது இலங்கையின் முறை

முதலில் உயர்-நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளின் பட்டியில்தான் இலங்கை இருந்தது. ஆனால் பல ஆண்டுகளாக, அதிக வெளிநாட்டு நேரடி முதலீட்டை ஈர்க்கவோ அல்லது தன்னுடைய ஏற்றுமதிகளைப் பல்வகைகளில் பெருக்கவோ இலங்கை தவறிவிட்டது.

இதனால் சர்வதேச இறையாண்மைப் பத்திரங்கள் மற்றும் விலையுயர்ந்த குறுகிய கால வெளிநாட்டுக் கடன்கள் மூலம் இலங்கை தனது வளர்ச்சியைத் தொடர்ந்தது. இந்த நிதியானது கல்வி, உள்கட்டமைப்பு மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு ஆகியவற்றிற்கு மாற்றி விடப்பட்டது. மாறாக நிதி பணப்புழக்கத்தை பராமரிப்பது மற்றும் சிறந்த நாடு தழுவிய பொருளாதாரக் கொள்கையை மேம்படுத்துதல் போன்றவற்றை இலங்கை செய்யவில்லை.

இந்நிலையில் ஏப்ரல் 2021 க்குள், இலங்கையின் வெளிநாட்டுக் கடன் 35 டாலர் பில்லியனைத் தொட்டது.

இலங்கையில் மக்கள் போராட்டம்
இலங்கையில் மக்கள் போராட்டம்NewsSense

ஆடம்பரமான வரி குறைப்பு இலங்கை அரசின் வருமானத்தை வெகுவாக குறைத்தது. இயற்கை வேளாண்மைக்கு வலுக்கட்டாயமாக மாறியது உணவுப் பொருட்களின் விலையை உயர்த்தியது. கோவிட்-19 தொற்று தாக்கிய நேரத்தில், விநியோகச் சங்கிலி சீர்குலைவுகள் போன்ற கூடுதலான பிரச்சனைகளைத் தொடர்ந்து, இலங்கையின் பொருளாதார நிலை குறைந்தபட்சம் ஆபத்தானதாக மாறியது.

2015 ஆம் அண்டு முதல் இதுவரை இல்லாத அளவில் கடந்த மார்ச் மாதத்தில், பணவீக்கம் 17.5% ஆக உயர்ந்தது. மேலும் இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு 1.9 பில்லியன் டாலராக குறைந்தது. இந்த தொகை ஒரு மாத இறக்குமதிக்கு மட்டுமே போதுமானதாகும்.

இலங்கை அரசின் கடன் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தோடு ஒப்பிடும்போது 120%- என்ற ஆபத்தான நிலையில் உள்ளது . ஒரு நாட்டின் கடன் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 59.42% க்கு மேல் இருந்தால் ஆரோக்கியமற்றதாகக் கருதப்படுகிறது. ஏப்ரல் 12 அன்று, அரசாங்கம் அதன் அனைத்து வெளிநாட்டு நிலுவைத் தொகைகளையும் செலுத்தத் தவறியதில் ஆச்சரியமில்லை.

ராஜபக்சே
ராஜபக்சே NewsSense

இந்த ஆண்டு மட்டும் 4 பில்லியன் டாலர் கடனை இலங்கை செலுத்த வேண்டியுள்ளது. அதன் சர்வதேச இறையாண்மைப் பத்திரங்கள் இப்போது 2030 வரை ஒவ்வொரு ஆண்டும் முதிர்ச்சியடையும் அளவுக்கு இருக்கிறது. இந்த ஆண்டு, ஜூலை வரை மட்டும், 1 பில்லியன் டாலர் மதிப்பிலான இறையாண்மைப் பத்திரங்களைத் திருப்பி செலுத்த வேண்டியிருக்கும், இது தற்போதுள்ள அந்நியச் செலாவணி இருப்புகளில் பாதியைக் குறைக்கும்.

இறையாண்மை பத்திரங்கள் என்பது அரசின் திட்டங்களுக்கு நிதியளிப்பது, பழைய கடனை செலுத்துவது, நடப்பு கடனுக்கு வட்டி செலுத்துவது மற்றும் பிற அரசு செலவினங்களின் பொருட்டு பணம் திரட்டுவதற்காக ஒரு அரசால் வழங்கப்படும் கடன் பாதுகாப்பு ஏற்பாடு ஆகும். இறையாண்மை பத்திரங்கள் அந்நிய செலவாணியிலோ உள்நாட்டு செலவாணியிலோ இருக்கலாம்.

உணவு மற்றும் எரிபொருளை இறக்குமதி செய்யப் பணம் இல்லாததால் ஆழ்ந்த அரசியல் மற்றும் பொருளாதார குழப்பம் இலங்கையில் நிலவுகிறது. நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. வாழவழியற்ற இலங்கை தமிழ் மக்கள் சிலர் இந்தியாவிற்கு அகதிகளாக வந்திறங்கினர். காரணம் இந்தியாவில் பொருளாதார நிலமை சீராக இருக்கிறது.

இருப்பினும், இந்தியாவின் சில மாநிலங்கள் இலங்கை போன்றதொரு ஒரு நெருக்கடியைச் சந்திக்கலாம்.

Modi
ModiTwitter

இந்திய மாநிலங்களில் ஆதிக்கம் செலுத்தும் ஜனரஞ்சக திட்டங்கள்

ஏப்ரல் 3 அன்று, பிரதமர் நரேந்திர மோடியுடன் நான்கு மணிநேரம் நீடித்த சந்திப்பின் போது, ​​பஞ்சாப், ஆந்திரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் உள்ள ஜனரஞ்சகத் திட்டங்கள் இலங்கையில் நடந்தது போல் நமது பொருளாதாரத்தையும் சிதைத்துவிடும் என்று சில அதிகாரிகள் கவலை தெரிவித்தனர். இதை டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தியாக வெளியிட்டுள்ளது.

முடிவில்லாத இலவசங்கள் அல்லது நலத்திட்டங்கள் இந்த மாநிலங்களின் நிதியைக் கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாக்கியிருக்கிறது. 2017 ஆம் ஆண்டில், மத்திய அரசின் நிதிப் பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மைக் குழு, 2022-2023க்குள் மொத்த அரசாங்கக் கடனை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 60% ஆகக் கொண்டுவர பரிந்துரைத்தது. அதில் ஒன்றிய அரசிற்கு 40% மற்றும் மாநிலங்களுக்கு 20% என உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டது.

இருப்பினும், குஜராத் (21.4%) மற்றும் மகாராஷ்டிரா (20.4%) ஒருபுறம் இருக்க, பெரும்பாலான மாநிலங்களின் புள்ளிவிவரங்கள் 20 விழுக்காட்டிற்கும் அதிகமாக உள்ளன. அந்த மாநிலங்களில் சில முழுமையான நெருக்கடிக்கு அருகில் உள்ளன.

அரவிந்த் கெஜ்ரிவால், பகவத் மான்
அரவிந்த் கெஜ்ரிவால், பகவத் மான்Twitter

நிதி நெருக்கடியில் பஞ்சாப்

உதாரணமாக, அதிக கடன்பட்ட மாநிலமான பஞ்சாபின் சில நிதி அளவுருக்கள், இலங்கையின் நிதி அளவுருக்களைப் போலவே உள்ளன. அதன் கடன் தொகை மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி விகிதத்தில் 20% எனும் உச்சவரம்பிற்கு மாறாக, 53.3% ஆக இப்போது நாட்டிலேயே மிக அதிகமாக உள்ளது.

எவ்வாறாயினும், புதிய பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், இந்த ஆண்டின் தொடக்கத்தில் தனது கட்சி ஆட்சிக்கு வரும் தேர்தலுக்கு முன்னதாக இலவச திட்டங்கள் சிலவற்றுக்கு வாக்குறுதி அளித்திருந்தார். இதில் 18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதம் ரூ.1,000 உதவித் தொகை, மற்றும் வீடுகளுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் ஆகியவை அடக்கம். இவற்றின் செலவு ஆண்டுக்கு சுமார் 17,000 கோடி ரூபாய்.

இதற்கு முரண்பாடாக, ஆட்சிக்கு வந்த பிறகு, ஆம் ஆத்மியின் முதலமைச்சர் மான் மத்திய அரசிடம் ரூ.1 லட்சம் கோடி நிவாரண நிதியை கோரினார்.

Modi - Rajapaksa
இலங்கை : இன்றைய நெருக்கடிக்கு 5 முக்கிய காரணங்கள்

இதேபோல், மேற்கு வங்கத்தில் விவசாயம் தொடர்பான திட்டங்கள் மற்றும் பல்வேறு இலவசங்கள் அரசாங்கத்தின் நிதியை பெருமளவு குறைத்து வருகின்றன. அதன் கடன் அதன் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கிற்கு மேல் உள்ளது. அதே சமயம் அதன் வரி வருவாய் சமீபத்திய ஆண்டுகளில் அதன் மொத்த ஆண்டு வரவில் மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவாகவே உள்ளது.

அதேபோல், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் ஏற்கனவே நிராகரிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டங்களை மீண்டும் நடைமுறைப்படுத்தியுள்ளன. அதற்காக சில புதிய வருமான ஆதாரங்களை உருவாக்கி உள்ளன.

ஜம்மு காஷ்மீர், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் இமாச்சலப் பிரதேசம் போன்ற பிற மாநிலங்கள் 2021-22 இல் ஒப்பீட்டளவில் அதிக நிதிப் பற்றாக்குறையைக் கொண்டிருந்தன. இது அவர்களின் ஒட்டுமொத்த வருடாந்திர கடன் தேவைகள் அதிகரித்து வருவதைக் குறிக்கிறது.

GST
GSTTwitter

மாநிலங்களின் குறைந்த வருவாய் பிரச்சனை

மாநிலங்களுக்கு ஒன்றிய அரசின் வருவாய், சரக்கு மற்றும் சேவை வரியின் ஒரு பகுதி மீது உரிமை உண்டு. என்றாலும், அவற்றின் சுயமான வருமான ஆதாரங்கள் மது மீதான கலால் வரி, பெட்ரோல் மீதான மதிப்பு கூட்டப்பட்ட வரி, சொத்து-விற்பனை மற்றும் மோட்டார் வாகனப் பதிவு ஆகியவற்றில் மட்டுமே அடங்கியிருக்கிறது.

ஆயினும் கூட, அவர்கள் சுகாதாரம், சமூக நலன் மற்றும் பிற முக்கியமான பகுதிகளுக்குச் செலவிட வேண்டும். சமீப ஆண்டுகளில், குறிப்பாக கோவிட் தொற்றுநோயின் போது இந்தப் பிரிவுகளுக்கான செலவுகள் அதிகரித்துள்ளன. இதனால், பல மாநிலங்கள், தங்கள் ஒட்டுமொத்த கடன் சுமையை 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்த்தும் நிலைமைக்குத் தள்ளப்பட்டு உள்ளன.

ஜிஎஸ்டி வருவாயை மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒன்றிய அரசே தவறி விட்டதால், 2020ல் முதல் மாநிலங்களின் நிலைமை மோசமாகி வருகிறது. 2017 இல் ஜிஎஸ்டி வரி தொடங்கப்பட்டதிலிருந்து இந்த மாநிலங்களுக்கான வரி பாக்கி என்பது இதுவே முதன்முறையாகும். மேலும் இந்த வரி பாக்கியைத் தொற்று நோய் பிரச்சினைகளும் அதிகரிக்க வைக்கின்றன.

Modi - Rajapaksa
இலங்கை : ‘வழி நடத்துங்கள் அல்லது வழி விடுங்கள்' - ராஜபக்சேவுக்கு எதிராக வலுக்கும் குரல்

அரசாங்கத்தின் பல்வேறு மட்டங்களில் இந்தப் பிரச்சினைகளுக்கு அறிவார்ந்த தீர்வுகள் கண்டுபிடிக்கப் படவேண்டும். ஏனெனில் மாநிலங்கள் என்பது தனித்து இல்லை. எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம்.

இவ்வாறாக மாநில அரசுகள் சமூக நலத்திட்டங்களுக்குச் செலவிட்டாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் போது அவற்றின் வரி வருவாய் குறைந்து, ஒன்றிய அரசின் வரி பாக்கி அதிகரித்து வருகிறது. இந்நிலைமை தொடருமானால் இலங்கை போன்றதொரு நிலை இங்கு வராது என்பதற்கு உத்தரவாதம் இல்லை.

Modi - Rajapaksa
சீன கடன் வலையில் சிக்கிய பாகிஸ்தான், இலங்கை - எப்படி நடந்தது?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com