விண்வெளியில் பறந்த முதல் மனிதன் யார் என்று கேட்டால், பலரும் உடனடியாக விடை சொல்வார்கள்: “அவரது பெயர் யூரி ககாரின்”.
விண்வெளியில் பறந்த முதல் பெண் யார்? “வாலண்டினா தெரஷ்கோவா”.
நிலவில் கால் பதித்த முதல் மனிதன்? “அதுதான் தெரியுமே... நீல் ஆம்ஸ்டிராங்”.
விண்வெளியில் இருந்து கீழே விழுந்து இறந்த முதல் மனிதன் யார்?
“….”
பதில் அவ்வளவு சீக்கிரம் வராது. காரணம் இதற்கான பதில் அவ்வளவு பிரபலம் அல்ல.
மகிழ்ச்சியையும், வெற்றியையும் பசுமையாக நினைவில் வைத்துக்கொள்ளும் மனித குலம், தோல்வியை அப்படி நினைவில் கொள்வதில்லை. அது மிகவும் முக்கியம் என்றாலும்.
சரி விஷயத்துக்கு வருவோம். விண்வெளியில் இருந்து பூமியில் விழுந்து இறந்த முதல் மனிதன்: கர்னல் விளாதிமிர் கொமரோவ்.
யூரி ககாரின் போலவே இவரும் சோவியத் விண்வெளி வீரர்தான்.
1967 ஏப்ரல் 24ம் தேதி அந்த கெடுவாய்ப்பான சம்பவம் நடந்தது. முந்தைய நாள் விண்ணில் ஏவப்பட்ட சோவியத் விண்கலம் சோயுஸ் 1 விண்வெளியில் 27 மணி நேரம் பறந்து புவியை 18 முறை சுற்றியது. பிறகு, அதன் இறங்கு பொதிகலன் (descent capsule) தரையிறங்கத் தொடங்கியது.
பல தொழில்நுட்பக் கோளாறுகளுக்கு நடுவே இந்த விண்கலனை திறமையாக கையாண்ட கொமரோவ்
இறங்கு பொதிகலனை கைகளாலேயே புவியை நோக்கித் திருப்பிவிட்டார். இறங்கு கலனின் வேகத்தை மட்டுப்படுத்தும் ரெட்ரோ ராக்கெட்டையும் இயக்கிவிட்டார்.
தரைக் கட்டுப்பாட்டு நிலையத்தில் உற்சாகம் தொற்றிக் கொண்டது. அவரது நண்பரும், முதலில் விண்வெளியில் பறந்த மனிதனும், தேசிய நாயகனுமான யூரி ககாரின் தரையில் இருந்து பேசி கொமரோவுக்கு உற்சாகம் ஊட்டிக்கொண்டிருந்தார்.
அவர்களது உரையாடல்:
யூரி: இறுதி செயல்முறைக்குத் தயாராகு. கவனம். அமைதியாக இரு. எல்லாம் நல்லபடியாக இருக்கிறது.
கொமரோவ்: ஆம். நிலவை நோக்கி இயங்கும், தானியங்கி இறங்கு செயல்முறை தொடங்கவிருக்கிறது. நடு நாற்காலியில், அமர்ந்துள்ள நான் அதோடு என்னை கட்டிக் கொண்டேன்.
யூரி: உனக்கு எப்படி இருக்கிறது? நீ எப்படி இருக்கிறாய்?
கொமரோவ்: அட்டகாசமாக இருக்கிறது. எல்லாம் சரியாக உள்ளது.
யூரி: புரிகிறது, இங்கிருக்கும் தோழர்கள், நீ ஆழமாக மூச்சை இழுத்துவிடவேண்டும் என்கிறார்கள். நீ தரையிறங்குவதற்கு காத்திருக்கிறோம்.
கொமரோவ்: நன்றி. தகவலை எல்லோருக்கும் சொல்லுங்கள்.
ஆனால், கெடுவாய்ப்பாக, இறங்கு பொதிகலனின் பாராசூட் திட்டமிட்டபடி திறக்கவில்லை. எனவே, பொதிகலனுடன் புவியில் மோதிய கொமரோவ் உயிரிழந்தார்.
விண்வெளிப் பயணம் முதல் முறையாக ஒரு மனித உயிரைப் பறித்துக்கொண்டது. கொமரோவுக்கு இது இரண்டாவது விண்வெளிப் பயணம். சில ஆண்டுகளுக்கு முன், முதல் விண்வெளிப்பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு திரும்பியவர் அவர்.
இந்த விபத்துக்கு மூன்று மாதம் முன்பாகத்தான் அமெரிக்காவின் அப்பல்லோ1 விண்கலம் விபத்துக்குள்ளாகி அதில் இருந்த மூன்று விண்வெளி வீரர்களும் உயிரிழந்தனர். ஆனால், அந்த விண்கலம் விண்ணில் பறந்தபோது இது நடக்கவில்லை. தரைப் பரிசோதனையில் இருந்தபோதே இந்த விபத்து நடந்துவிட்டது.
அக்டோபர் புரட்சியின் 50வது ஆண்டு விழாவுக்கு முன்பாக இன்னும் ஒரு விண்வெளி சாதனையை நிகழ்த்திவிடவேண்டும் என்று அவசரப்பட்டார்கள் சோவியத் அதிகாரிகள், அதனால்தான் இந்த விபத்து நிகழ்ந்தது என்ற குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.
விண்வெளிக்கு மனிதர்களைக் கொண்டு செல்வதில் இன்று மிகவும் நம்பகமான விண்கலமாக உள்ள சோயுஸ், அப்போது மனிதர்களை ஏற்றிக்கொண்டு பறக்க முழுமையாக தயாராகி இருக்கவில்லை. கொமரோவை ஏற்றிக்கொண்டு சோயுஸ்1 பறப்பதற்கு முன்பாக மூன்று ஆளில்லா விண்கலன்கள் சோதனை முறையில் ஏவப்பட்டன. அந்த மூன்றுமே தோல்வியைத் தழுவியிருந்தன. சோயுஸ் விண்கலனில் 203 டிசைன் குறைபாடுகள் இருப்பதாக பொறியாளர்கள் கண்டுபிடித்துக் கூறியிருந்தனர். இவ்வளவுக்குப் பிறகும் அவசர அவசரமாக மனிதனை சுமந்துகொண்டு சோயுஸ் பறக்கவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
உண்மையில், சோயுஸ் 1 விண்கலனைப் பறக்கவிடுவது மட்டுமே அவர்கள் திட்டமில்லை. அடுத்த நாளே, மூன்று விண்வெளி வீரர்களோடு சோயுஸ் 2A கலனையும் ஏவி இரண்டு விண்கலனும் தங்கள் சுற்றுவட்டப் பாதையில் சந்தித்துக் கொள்ளவேண்டும், அப்போது சோயுஸ் 2A கலத்தில் இருக்கும் சிலர் சோயுஸ் 1க்கு மாறி, இறங்கு கலத்தின் உதவியோடு தரையிறங்கவேண்டும் என்பதே திட்டம். நல்வாய்ப்பாக இரண்டாவது விண்கலனை செலுத்துவது கடைசி நிமிடத்தில் ரத்து செய்யப்பட்டது. இதனால், நிச்சயமாக மேலும் சில விண்வெளி வீரர்களின் உயிர் காப்பாற்றப்பட்டது.
1967 ஏப்ரல் 23ம் தேதி, அப்போதைய சோவியத் ஒன்றியத்தில் இடம் பெற்றிருந்த கஜகஸ்தான் நாட்டின் பைக்கானூர் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து உள்ளூர் நேரம் காலை 3.35க்குப் புறப்பட்டது சோயுஸ்1 விண்கலன். ஏவும்போது எல்லாம் நல்லபடியாக நடந்தது. ஆனால், விண்கலன் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது முதல் சிக்கல் மேல் சிக்கலாக வந்துகொண்டிருந்தது. விண்கலனுக்கு வெளியே பொறுத்தப்பட்டிருந்த சோலார் தகடுகளில் ஒன்று திறக்க மறுத்தது. எனவே, திறந்த இன்னொரு சோலார் தகடு சூரியனை நோக்கி இருக்கும் வகையில், விண்கலனை திருப்ப முயன்றார் கொமரோவ். ஆனால், அவரது முயற்சி வெற்றி பெறவில்லை. மின்சப்ளை இல்லாமல் உயிர்காக்கும் உபகரணங்கள் செயலிழக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. நேவிகேஷன் செயல்படவில்லை. ஆனாலும் எப்படியோ 27 மணி நேரம் விண்ணில் பறந்த கொமரோவ், கடைசியில் பாராசூட் திறப்பதிலும் கோளாறு ஏற்பட்டு உயிரைப் பலிகொடுத்தார்.
மாஸ்கோவில் 1927ம் ஆண்டு பிறந்த கொமரோவ், பள்ளிப் படிப்புக்குப் பிறகு, மாஸ்கோ விமானப் படைப் பள்ளியில் சேர்ந்து பயிற்சி பெற்று பிறகு விமானியானார். பிறகே அவர் சோவியத் விண்வெளித் திட்டத்துக்கு அழைக்கப்பட்டார்.
1964ம் ஆண்டு அக்டோபர் 12ம் தேதி அவர் வாஸ்கோட்1 என்ற விண்கலனில் தனது முதல் விண்வெளிப் பயணத்தை மேற்கொண்டார். அவரது தலைமையில், மூன்று விண்வெளி வீரர்கள் அந்த விண்கலனில் இருந்தனர்.
ஒன்றுக்கு மேற்பட்ட விண்வெளி வீரர்களை ஏற்றிச் சென்ற உலகின் முதல் விண்வெளிப் பயணம் அது. அதைப் போலவே கடைசியில் தமது உயிரைப் பறித்த சோயுஸ் 1 விண்கலனில் அவர் பறந்தபோது, இரண்டு முறை விண்வெளிக்கு சென்ற முதல் சோவியத் விண்வெளி வீரர் என்ற பெருமையும் அவருக்குக் கிடைத்தது.
சோயுஸ் பயணத்துக்கு இரண்டு விண்வெளி வீரர்களைத் தயார் செய்தனர். அவர்களில் கொமரோவ் முதல் தேர்வாகவும், யூரி ககாரின் அவருக்கான மாற்று விண்வெளி வீரராகவும் தயார் செய்யப்பட்டனர்.
இறுதியில் கொமரோவ் தேர்வு செய்யப்பட்டு, மரணத்தையும் தழுவினார். அப்போது ரஷ்யா – அமெரிக்கா இடையே விண்வெளிப் போட்டி நிலவினாலும், கொமரோவ் மரணத்தை ஒட்டி, நாசாவின் 47 விண்வெளி வீரர்கள் தங்கள் இரங்கலைத் தெரிவித்து தந்தி அனுப்பினர். ஆபத்தான விண்வெளிப் பயணத்தில் ஈடுபட்ட சக விண்வெளி வீரர் என்ற முறையில் கொமரோவ் குறித்து தோழமை உணர்வை வெளிப்படுத்துவதாக தெரிவித்த அவர்கள், கொமரோவின் மனைவி, பிள்ளைகள், சக விண்வெளிவீரர்கள் ஆகியோருக்கும் இரங்கலைத் தெரிவித்திருந்தனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust