கொரொனா காலப் பேரிடர் உலக அரங்கில் பல்வேறு பக்க விளைவுகளை உருவாக்கியுள்ளன. பொருளாதாரம், உயிரியல், சூழலியல், அரசியல் மாற்றங்களுக்கும் அப்பாற்பட்டு கல்வித்துறையில் பெரும் மாற்றத்தையும் சரிவுகளையும் ஏற்படுத்திவிட்டுச் சென்றுள்ளன. இவைகளை சரிச்செய்ய, மீளமைக்க பல பன்னாட்டு நிறுவனங்களும் பன்னாட்டு அரசுகளும் தீவிர முனைப்பில் இறங்கியுள்ளன. இந்திய அளவிலேயே கூட, தமிழ்நாடு இல்லம் தேடிக் கல்வி திட்டத்தை அறிவித்து, அதற்கென தனி இயக்குநரையும் பதவியில் அமர்த்தியுள்ளனர். அதனை முறைப்படுத்தும் விதிகளில் மாற்றங்கள் தேவைப்படினும், பல்வேறு கலவியாளர்களும் பல்வேறு ஆலோசனைகள் முன் மொழிந்திருப்பினும், அத்தகைய திட்டம் அவசியமெனவே தோன்றுகிறது
மாணவ, மாணவியருக்கான கல்வித் தேக்கம், உளவியல் தாக்கம் இவைகளோடு பள்ளிகளின் உணவு இல்லாத சூழலில் ஏற்பட்டுள்ள உடற்சத்து குறைபாடுகள் என கொரொனா காலம் ஏற்படுத்திய மாறுதல்கள் குறித்து கல்வியியல் சார்ந்த ஆய்வுகளை மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் துணை அமைப்புகள், OECD (Organisation for Economic Co-operation and Development) நிறுவனம், உலக வங்கி, காம்பிரிட்ஜ் பல்கலைக்கழக வெளியீடுகள் பலவற்றைச் சுட்டிக்காட்டியுள்ளன.
அவர்களின் அறிக்கைகளின் கோர்வையில் பார்த்தால், 190 நாடுகளின் ஏறக்குறைய 1.6 பில்லியன் குழந்தைகள் கல்வி பெற முடியாமல், முழுமையாக பெறாமல், மனரீதியாகவோ, உடற்ரீதியாகவோ பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 23.8 மில்லியன் கூடுதலான குழந்தைகள் (மழலையர் வகுப்பில் இருந்து தொடக்க நிலை கல்வி) இனி பள்ளிக்குத் திரும்ப இயலாத சூழலில், அல்லது கல்வியை அடுத்தடுத்த படிநிலைக்கு முன்கொண்டுச் செல்ல முடியாத உளவியல் சூழலில் பாதிக்கப்பட உள்ளனர்.
உலக வங்கியின் அறிக்கையின் படி, பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள நாடுகளில் கற்றல் வறுமை (learning poverty) 53%மாக அதிகரித்துள்ளது, அதிலும் சஹாரா பகுதிகளில் 90% வரை அதிகரித்துள்ளன எனவும் எச்சரித்துள்ளனர். (https://www.worldbank.org/en/news/immersive-story/2021/01/22/urgent-effective-action-required-to-quell-the-impact-of-covid-19-on-education-worldwide)
குறிப்பாக, பொருளாதாரத்தில் பின் தங்கிய, உடற்ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள, இடம்பெயர்ந்து வாழ்வோர், கிராமப்புற, மலைகளில், காடுகளில் வசிக்கும் குழந்தைகள், குறிப்பாக பெண் குழந்தைகளே பெரும்பான்மையானோராக இருக்க வாய்ப்புள்ளது எனவும் பல்வேறு தரப்பு அறிக்கைகளும் அடிகோடிட்டு எச்சரிக்கின்றன.
கொரொனா பேரிடர் காலத்திலும் அதன்பின்பான பள்ளிக்குத் திரும்ப இயலாத சூழலிலும், பெண் குழந்தைகள் உளவியல் ரீதியில் மட்டுமல்ல, பாலியல் வன்முறைகளால் உடற்ரீதியிலும் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் (பாதிக்கப்பட வாய்ப்புள்ள) எனவும் ஐ. நா வின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
ஐரோப்பிய நாடுகளில் கூட, பின்தங்கியுள்ள சமூகப் பொருளாதாரப் பின்னணி கொண்ட குழந்தைகளின் கற்றல் திறன், வீடுகளில் கற்றலுக்கான வசதியின்மை, இணைய வசதி, பல்வேறு காரணங்களால் பெற்றோர்களின் ஆதரவு இல்லாமை போன்ற காரணங்களால் பெரும் சரிவை சந்தித்துள்ளன எனவும் மேற்கூறிய அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
“பலதரப்பட்ட மக்களின் சமூகப் பொருளாதார, சமூகப் பண்பாட்டுப் பின்னணிகளின் வேறுபாடுகளை, பள்ளி வகுப்பறையே சமத்துவப்படுத்தும். பேரிடர் காலத்தில் பலதரப்பட்ட மக்களின் குழந்தைகள் அவரவர் வாழ்விடங்களில், அவரவர் சமூகக் கூட்டுகளில் மட்டும் தேங்கிவிட்டதால், சராசரி கற்றல் திறனில் பாரிய மாறுபாடுகள் தோன்றியுள்ளன” என உலக வங்கியின் அறிக்கை விளக்கியுள்ளது.
இத்தகையச் சூழலில், பள்ளிகள் திறக்கப்பட்டு அனைத்து வகையான சமூகப் பொருளாதாரப் பின்னணி கொண்ட குழந்தைகளும் ஓர் வகுப்பறைக்குள் கல்விக் கற்க தயாரானாலும், இதுவரை இல்லாத கற்றல் திறன் வேற்றுமையை நாம் எதிர்கொள்ள நேரிடும். எல்லோரையும் சமத்துவப் படுத்த ஆட்சியாளர்களுக்கு தொலைநோக்குச் சிந்தனையும் கல்வியாளர்களுக்கு சமூகநீதி சார்ந்த புரிதலும் அவசியம்.
இவைகளை சரிவர கையாள, கொரொனா காலப் பேரிடர் உருவாக்கியுள்ள உடல் நிலை மாற்றங்கள், குழந்தைகளின் உளவியல் குறித்தப் புரிதல், சமூக வேற்றுமைகள், பொருளாதராப் பின்னணி, வயது உள்ளிட்டக் காரணங்களால் உருவாகும் பாலியல் சிந்தனைகள், அதன் உளவியல் குறித்த திறனை ஆசிரியர், ஆசிரியைகளுக்கு வழங்க வேண்டியுள்ளது.
குழந்தை நேய அமைப்புகளும், உளவியல் நிபுணர்களும், கல்வியாளர்களும், கொள்கை வகுப்பாளர்களும் இணைந்த தொலைநோக்குப் பாதை உருவாக்க வேண்டியுள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
வளர்ந்த நாடுகள், வளர்ந்து வரும் நாடுகளில் அந்தந்த நாட்டு அரசுகளின் கொள்கைகள் மற்றும் நிதியுதவிகளிலும், பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள நாடுகளில் ஐ.நா. அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு பன்னாட்டு அமைப்புகளினாலும் பள்ளிக் குழந்தைகளுக்கான மதிய உணவு உறுதிசெய்யப்பட்டு வருகின்றன. சில நாடுகள் இரு வேளை முழு உணவுகளும், இடைப்பட்ட நேரத்தில் உடல் வலிமைக்காக பழங்கள், பழச்சாறுகளை வழங்கி குழந்தைகளை பராமரித்து வருகின்றன.
இந்திய ஒன்றிய அளவிலேயே கூட, மதிய உணவளிப்பதில், தமிழ்நாடு இதில் 100 ஆண்டுகள் முன்னோடி எனலாம். 1920களில் சென்னையின் பள்ளிகளில் நீதிக்கட்சி ஆட்சியில் உணவு வழங்கப்பட்டன.
குழந்தைகளின் உடல் வலிமை, அதனால் உருவாகும் மன வலிமை, கற்றல் திறன் அதிகரிப்பு என்பதோடு, கற்றல் இடை நிற்றலை குறைக்கவுமே இத்திட்டங்களை அனைத்து நாடுகளும் பின்பற்றி வருகின்றன. கொரொனா காலப் பேரிடர் ஏற்படுத்திய கல்வியியல் தாக்கங்களில், உணவளிக்க இயலாத சூழல் பெரும் எதிர்விளைவினை ஏற்படுத்தியுள்ளன என்கிறது பல்வேறு உலக கல்வி அமைப்புகள்.
கிட்டத்தட்ட 195 நாடுகளில் கடந்த ஆண்டின் முற்பகுதியில் மட்டுமே 370 மில்லியன் குழந்தைகள் பள்ளி உணவில்லாமல் தவித்திருக்கின்றனர். அதனால், 30ற்கும் மேற்பட்ட பசி மற்றும் உடற்சத்து குறைபாடுகளாலான நோய்கள் குழந்தைகளை பாதித்துள்ளன.
பள்ளிகள் தொடங்கப்படும் பொழுது, கடந்த இரு ஆண்டுகளாக குழந்தைகள் உணவு உட்கொண்டவைகள், உடலியல் மாற்றங்கள், பசி மற்றும் பொருளாதார வறுமையினால் உண்டான உடற்சத்து கோளாறுகள் மற்றும் அதனால் விளைந்த உளவியல் மாற்றங்கள் குறித்த புரிதலும் அவைகள் குறித்த தரவுகளும் திரட்டப்பட வேண்டும் என உலக வங்கி மற்றும் ஐ.நா அமைப்புகள் பல்வேறு நாடுகளுக்கும் கோரிக்கை விடுத்துள்ளன.
கற்றல் திறன் மாறுபாடுகள் போலவே, உணவின்மையினாலான உளவியல் மற்றும் உடலியல் சார்ந்த பிரச்சனைகள் கிராமப்புற, எளிய, மாணவ, மாணவிகளுக்கும், அதிலும் குறிப்பாக பெண் குழந்தைகளே பெரிதும் பாதிப்படைந்து இருக்க வாய்ப்புண்டு என்பதனையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
இதுவரை, UNICEF, University of Harvard, University of Oxford, John Hopkins University, OECD, UNESCO மற்றும் உலக வங்கி, 16 மில்லியன் ஆசிரிய, ஆசிரியைகளுக்கும் 400 மில்லியன் மாணவ, மாணவியருக்கும் கொரொனா காலப் பேரிடருக்கு பின்னரான பள்ளித் திறப்பின் பொழுது ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள், கவனிக்கப்பட வேண்டியப் புள்ளிகள், மாணவ, மாணவியரின் வயது, பால், சமூகப் பின்னணியினால் உருவான மாறுபாடுகள் இவைகளை கையாளும் நடைமுறைகள் குறித்தெல்லாம் விளக்கி வருகின்றனர்.
நம் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, பள்ளிக் கல்வி, மாணவ, மாணவியரின் நலன் எல்லா அரசியல் கட்சிகளுக்கும் தமிழ்நாட்டு ஆட்சியாளர்களுக்கும் முதன்மையான செயற்பாடுகளில் ஒன்றாகவே இருந்து வந்துள்ளது.
நமது மாநில அளவுகோலி அடிப்படையிலும், உலக நடைமுறைகள், உலக அமைப்புகளின் துணை, பல்வேறு கல்வியாளர்கள், உளவியல், மற்றும் உடலியல் மருத்து ஆலோசகர்களை உள்ளடக்கி நம் குழந்தைகளுக்கான வருங்காலத்தை இனிமையாகவும் வளமானதாகவும் மாற்றிட களம் அமைப்போம்!