மனிதர்களால் மனிதக்கறியை உண்பது நரமாமிசம் அல்லது ஹியுமன் கானிபலிசம் என்று அழைக்கப்படுகிது. ஆங்கிலத்தில் இதை anthropophagy என்று அழைக்கிறார்கள். பொதுவில் கானிபலிசம் என்பதன் பொருள் ஒரு உயிரினம் அல்லது விலங்கு தனது இனத்தின் உடலை சாப்பிடுவதாகும்.
முந்தைய காலத்தில் நரமாமிசத்திற்கு நன்கு அறியப்பட்ட மேற்கிந்தியத் தீவுகளின் பழங்குடியினரான கரிப் எனும் ஸ்பானிஷ் பெயரிலிருந்து கரிபேல்ஸ் அல்லது கேனிபேல்ஸ் எனும் வார்த்தை உருவானது. ஆனால் அது உண்மையில் மேற்கிந்தியத் தீவுகளில் நடந்ததா என்ற சந்தேகம் நவீன கால அறிஞர்களுக்கு உள்ளது. கரீப்கள் பல ஐரோப்பிய சக்திகளுடன் காலனித்துவ எதிர்ப்புப் போரில் ஈடுபட்டதால், பல வரலாற்றாசிரியர்கள் அச்சத்தைத் தூண்டும் ஒரு பிரச்சார தந்திரமாக இத்தகைய நரமாமிச வதந்திகளை ஸ்பானியர்கள் பரப்பியிருக்கலாம் என்கின்றனர்.
மறுபுறம், கரிப்ஸ் மக்கள் உடல் உறுப்புகளை கோப்பைகளாகப் பயன்படுத்தியதற்கான சில சான்றுகள் உள்ளன. எனவே நரமாமிசம் சாத்தியம் என்றே வைத்துக் கொண்டாலும் குறிப்பாக ஒரு மிரட்டல் நடவடிக்கை அல்லது போர் நடவடிக்கையாக மட்டுமே இருந்தது. எவ்வாறாயினும், ஆரம்ப சாட்சியங்களில் பெரும்பாலானவை கொலம்பஸிடமிருந்து வந்தவை. அவர் கரீப்ஸ் மக்களை முடிந்தவரை காட்டுமிராண்டித்தனமாக காட்ட தனிப்பட்ட மற்றும் அரசியல் காரணங்களைக் கொண்டிருந்தார்.
ஆரம்பகால மனித வரலாற்றில் நரமாமிசம் உண்ணும் வழக்கம் பெரும்பாலான கண்டங்களில் உள்ள மக்களிடையே காணப்பட்டது.
நரமாமிசம் குறித்த, வரலாற்றின் முந்தைய கால தகவல்கள் தவறாகவோ, மிகையாகவோ இருந்திருக்கின்றன. இருந்த போதிலும் மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவின் சில பகுதிகள், மெலனேசியா – குறிப்பாக பிஜி, நியு கினியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்தின் மவோரிகள் போன்ற தீவகளில் நவீன காலம் வரை நரமாமிசம் உண்பது நடைமுறையில் இருந்தது. மேலும் பிலினேசியா தீவுகள், சுமத்ராவின் சில பழங்குடியினர் மற்றும் வடக்கு, தெற்கு அமெரிக்காவின் பழங்குடியினர் சிலரிடமும் இந்தப் பழக்கம் வழக்கத்தில் முன்னர் இருந்தது.
சில பிரதேசங்களில் மனிதக் கறி, உணவு வகைகளில் ஒன்றாகப் பார்க்கப்பட்டது. சில இடங்களில் இது விலங்கு கறிகளின் உணவோடு சமமாக கருதப்படுகிறது.
போரில் வெற்றி பெற்ற மவோரிஸ் இனக்குழுவினர் போரில் இறந்த உடல்களின் இறைச்சியை வெட்டி உண்பார்கள். டச்சு நாட்டின் கட்டுப்பாட்டிற்குள் வருவதற்கு முன்பு சுமத்ரா தீவின் படாக் இனக்குழுவினர் மனித இறைச்சியை சந்தைகளில் விற்றதாகக் கூறப்படுகிறது.
சில இடங்களில் சடங்கு, சம்பிரதாயங்களுக்காக இறந்து போன மனித உடலின் பகுதிகளை நுகர்வது இருந்திருக்கிறது. இது பசி அல்லது உணவுப்பழக்கமாக இல்லாமல் சடங்கிற்கானது. இதன் மூலம் உண்ணப்படும் நபரின் சில குணங்களைப் பெறலாம். அல்லது சூனியத்தின் சக்திகள் பயன்படுத்தப்படலாம் என்று அம்மக்கள் நம்பினர்.
கனடாவில் வாழும் இலங்கைத் தமிழ் எழுத்தாளரான அ. முத்துலிங்கம் ஆப்ரிக்காவில் பணியாற்றிய போது இயற்கையாக மரணமடைந்தவர்களின இதயத்தை சுட்டு அதன் துளியை துக்கம் விசாரிக்க வருபவர்கள் நாக்கில் தடவிக் கொள்வார்கள் என்று எழுதியிருக்கிறார். இது இறந்தவர்களுக்கான அஞ்சலியாக பார்க்கப்படுகிறது.
ஆப்ரிக்காவில் சடங்கிற்காக நடத்தப்படும் மனிதக் கொலை மற்றும் நரமாமிசம் பெரும்பாலும் சூனியத்துடன் தொடர்புடையது. மனித வேட்டையாடிகள் மற்றும் பிறர், இறந்த எதிரிகளின உடல்கள் அல்லது தலைகளை உட்கொள்வதற்கு காரணம், அவர்களது பண்புகளை உறிஞ்சி, பழிவாங்கும் சக்தியைக் குறைப்பதற்கான வழிமுறையாகக் கருதுகின்றனர்.
ஆஸ்டெக்குள் நரமாமிசத்தை பெரிய அளவில் கடைபிடித்தனர். மத சடங்கிற்காக போர்க் கைதிகளை கொல்வது, சடங்கு சம்பிரதாயத்திற்காக அவர்களை பலி கொடுப்பது ஆகியவற்றை கடைபிடித்தனர்.
சில இடங்களில் இறந்த நபரின் உடலை அவரது உறவினர்கள் சடங்கு முறையில் சாப்பிட்டனர். இது எண்டோ கானிபலிசம் என்று அழைக்கப்படுகிறது. சில ஆஸ்திரேலேய பழங்குடியினர் இத்தகைய நடைமுறைகளை மரியாதைக்குரிய செயல்களாக செய்தனர்.
சில பகுதிகளில் சடங்கின் பொருட்டு நரம்மாமிசம் உண்பது என்பது இரகசிய சமூகங்களின் வழக்கமாக இருந்தது.
நரமாமிசம் எனப்படும் கானிபலிசம் எப்படி மனித வரலாற்றில் உருவாகி இருந்தது என்பதற்கு ஏற்றுக்கொள்ளும் விதத்திலான விளக்கம் எதுவுமில்லை. வெவ்வேறு காரணங்களுக்காக வெவ்வேறு மக்கள் அதை நடைமுறைப்படுத்தியுள்ளனர்.
ஒரு சூழலில் நரமாமிசத்தை உண்பது இயல்பாகவும் மற்றொரு சூழலில் அதை திகிலோடும் பார்க்கலாம். நவீன வரலாற்றின் பரவலாக்கமானது பொதுவாக இத்தகைய நடைமுறைகளை தடை செய்கிறது. இருப்பினும் நவீன சமூகதாயத்தில் வேறு உண்ணும் வழிவகைகள் இல்லாத போது தனிமைப்படுத்தப்பட்ட சூழலில் உடல் தேவைக்காக நரமாமிசம் உண்பது வேறு வழியின்றி நிகழ்கிறது.
மனிதர்கள் பெரும்பாலும் நரமாமிசத்திற்கு எதிராகத்தான் இருக்கிறார்கள். ஆனால சில சமயம் அதில் விதிவிலக்காகவம் நடந்து கொள்கிறார்கள். சடங்கு, சம்பிரதாயத்தைத் தாண்டி மனித நாகரீகங்களில் நரமாமிசம் தடை செய்யப்படுதற்கு ஒரு நல்ல உயிரியல் காரணம் உள்ளது. மற்ற மனித உடல்களைச் சாப்பிடுவது உங்களை நோய்வாய்ப்படுத்தும்.
குறிப்பாக மற்றொரு மனிதனின் முளையைச் சாப்பிடுவது மாட்டிற்கு ஏற்படும் Mad Cow நோயையைப் போல பாதிப்பு ஏற்படுத்தும். இந்த நோய் நடுக்கத்தில் ஆரம்பித்து மரணத்தில் முடிகிறது. இதுவும் அப்படியே இருக்காது.
பப்புவா நியூ கினியாவில் உள்ள, ஃபோர் மக்கள் நரமாமிசத்திற்கு பெயர் பெற்றவர்கள். 1950-களின் பிற்பகுதி வரை அவர்கள் தங்கள் ஆவிகளை சுத்தப்படுத்த உறவினர்களின் உடல்களை உண்டனர். இதில் மூளையைச் சாப்பிடும் “குரு” எனப்படும் நோய்க்கு ஆயிரக்கணக்கான ஃபோர் மக்கள் இறந்து போயினர். அதே நேரம் அவர்கள் அனைவரும் இந்த நோய்க்கு பலியாகவில்லை. கடந்த 200 ஆண்டுகளில் இந்த நோயிலிருந்து பாதுகாக்கும் ஒரு மரபணு மாற்றத்தையும் அம்மக்கள் தமது உடலில் இயல்பாக உருவாக்கியுள்ளனர்.
நரமாமிசம் குறித்த இன்றைய பார்வையிலிருந்து நாம் வரலாற்றை நோக்கக் கூடாது. நரமாமிசம் பற்றி சில அடிப்படைக் கேள்விகளுக்கு வரலாற்றாசிரியர்கள் பதிலளிப்பது கடினம். எத்தனை குழுக்கள் நரமாமிசத்தை கடைபிடித்தன? இப்பழக்கம் எப்போது ஆரம்பித்தது? இந்தக் கேள்விகள் கடினமானவை. ஏனெனில் நரமாமிசம் என்பது உண்பது மட்டுமல்லாமல் பல்வேறு விசயங்களை விவரிக்கிறது. அதனால்தான் பெரும்பாலான நவீன மானுடவியலாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள், நரமாமிசம் என்பதற்கு பதிலாக மானுடவியல் என்ற சொல்லை பயன்படுத்த விரும்புகிறார்கள்.
பலரும் நரமாமிசம் என்பது முந்தயை வரலாறு மற்றும் வளர்ச்சியடையாத நாடுகளில் இருந்ததாக நினைக்கின்றனர். ஆனால ஆரம்பகால அமெரிக்க வரலாற்றிலும் நரமாமிசம் ஒரு அம்சமாக இருந்தது.
2013-ம் ஆண்டில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் காலனித்துவ ஜேம்ஸ்டவுனில் நரமாமிசத்தின் ஆதாரங்களைக் கண்டு பிடித்ததாகக் கூறினர். ஆரம்பகால காலனித்துவ வாழ்க்கை எவ்வளவு கடுமையாக இருந்த்து என்பதற்கான அறிகுறியாகும இது. குறிப்பா 14 வயது சிறுமியின் மண்டை ஓட்டில் உள்ள அடையாளங்களை அவர்கள் கண்டுபிடித்தனர். அதன்படி 1609-ஆம் ஆண்டின் கடினமாக குளிர்காலத்தில் குடியேறியவர்களால அந்தச் சிறுமி உண்ணப்பட்டது உறுதியாகத் தெரிகிறது.
வரலாறு முழுவதும் ஐரோப்பாவில் நரமாமிசத்தின் பல பயங்கர சான்றுகள் உள்ளன. அதில் வினோதமான ஒன்று ஜெர்மனியில் நடந்திருக்கிறது. கி.பி 1600 முதல் 1800 வரை மரணதண்டனை நிறைவேற்றுபவர்கள் கொல்லப்பட்டவர்களின் உடல்பாகங்களை மருத்தவ காரணத்திற்காகவும், தமது வருமானத்திற்காகவும் விற்றதை வரலாறு பதிவு செய்திருக்கிறது.
இரண்டாம் உலகப் போரின் போது நரமாமிசத்தின் தேவை பசி, பஞ்சம், போர் முற்றுகை காரணமாக இருந்ததைக் காணமுடிகிறது. சான்றாக 872 நாட்கள் ரசியாவின் லெனின் கிராட் முற்றுகையிடப்பட்டபோது அங்கே நரமாமிசம் சாப்பிட்டதிற்கான அறிக்கைகள் இருக்கின்றன. அனைத்து பறவைகள், எலிகள், செல்லப் பிராணிகளை சாப்பிட்ட பிறகு வேறு ஏதுமின்றி மனிதக்கறியை சாப்பிட்டதாக தெரிகிறது. இதன் பொருட்டு நரமாமிசத்தை எதிர்த்துப் போராட லெனின் கிராட் காவல்துறை ஒரு சிறப்புப் பிரிவை உருவாக்கியது.
1941-42 ஆண்டுகளில் சுமார் 28 இலட்சம் சோவியத் போர்க்கைதிகள் ஹிட்லரின் நாஜிக் காவலில் இறந்தனர். 1941 குளிர்காலத்தில் பட்டினி மற்றும் நோயினால் கற்பனை செய்ய முடியாத அளவு மரணம் ஏற்பட்டது. இந்த கொடூரமான பட்டினி, நரமாமிசத்தின் சில சம்பவங்களுக்கு வழி வகுத்த்து. இவை சூழல் நிர்ப்பந்தத்தால் ஏற்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
இதே போன்று இரண்டாம் உலகப் போரில் சில இடங்களில் ஜப்பான் வீர்ர்கள் மனிதக் கறி சாப்பிட்டதும் பதிவு செய்ப்பட்டிருக்கிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஆப்ரிக்காவில் நடந்த பல உள்நாட்டுப் போர்களில் குறிப்பாக இரண்டாம் காங்கோ போர், லைபீரியா, சியாரா லியோனில் நடந்த உள்நாட்டுப் போர்களில் நரமாமிசம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
அகோரிகள் எனப்படும் நமது நாட்டு துறவிகள், மனித சதையை உண்பது வயதானதைத் தடுப்பதோடு ஆன்மீக மற்றும் உடல் நலன்களை வழங்குகிறது என்று நம்புகிறார்கள். அவர்கள் இறந்தவுடன், தங்கள் உடலைத் தானாக முன்வந்து தமது பிரிவைச் சேர்ந்தவர்களை மட்டுமே சாப்பிடுவதாகக் கூறுகின்றனர். இருப்பினும், அகோரிகள் அடிக்கடி தகனம் செய்யும் இடத்தில் (அல்லது இறுதிச் சடங்கு) உடல்களை எடுத்துச் செல்வதாகத் செய்திகள் தெரிவிக்கன்றன. இன்றும் அவ்வப்போது சூனியம், தொழில், கட்டிடம் கட்டுவது போன்றவற்றிகாக தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் நரபலி கொடுப்பது ஊடகங்களில் வெளியாகிறது.
எனவே நரமாமிசம் சாப்பிடாத நாடுகளோ, வரலாறோ கிடையாது. அதேநேரம் அதை இன்றைய நாகரீகப் பார்வையோடு பார்ப்பது தவறு. குறிப்பிட்ட வரலாற்ற்றுச் சூழலில் அவை வேறு வழியின்றி நடந்திருக்கின்றன.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust