செயற்கை நுண்ணறிவு என்றழைக்கப்படும் Artificial Intelligence, ஒவ்வொரு நொடியும் மனிதர்களையும், மனித அறிவையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறது அல்லது அதிர்ச்சிக்கு உள்ளாக்கிக் கொண்டிருக்கிறது.
இதற்கு சாட் ஜிபிடியை ஒரு நல்ல உதாரணமாகச் சொல்லலாம். கூகுள் நிறுவனத்தையே இது காலி செய்துவிடுமோ என பல்வேறு கட்டுரைகள் மற்றும் கருத்துக்களைத் தொடர்ந்து பல்வேறு சமூக வலைதளங்களில் பார்க்க முடிகிறது.
ஏ ஐ முழுவீச்சில் களமிறங்கினால் உலகில் கோடிக் கணக்கான மக்களுக்கு வேலை பறிபோகும் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருப்பதற்கு இடையில், இந்த ஏ ஐ ரோபாட்களால் மனிதர்களுக்கு பணிச் சுமை குறையுமா என்கிற கேள்வியும் எழுந்து கொண்டிருக்கின்றன.
அப்படி ஒரு கேள்விக்கு பிரிட்டன் & ஜப்பானைச் சேர்ந்த 65 ஏ ஐ நிபுணர்களிடம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், சில ஆச்சரிய தகவல்களைக் குறிப்பிட்டிருக்கிறார்கள். இந்த ஆய்வு தொடர்பான முழு அறிக்கை PLOS ONE என்கிற சஞ்சிகையில் (Magazine) பிரசுரமாகியுள்ளது.
பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் மற்றும் ஜப்பானில் உள்ள ஒசனொமிசு (Ochanomizu) பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், வீட்டு வேலைகளில் அதிநவீன தொழில்நுட்ப ரோபாட்களின் பங்கு எப்படி இருக்கும் என தெரிந்து கொள்ள விரும்பினர்.
அந்தக் கேள்விக்கு விடை காணத் தான் பிரிட்டன் தரப்பிலிருந்து 29 ஏ ஐ நிபுணர்களிடமும், ஜப்பான் தரப்பிலிருந்து 36 ஏ ஐ நிபுணர்களிடமும் இந்த ஆராய்ச்சியாளர்கள் பல கேள்விகளை எழுப்பினர்.
அதில் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புப் பணிகளை ஏ ஐ தொழில்நுட்பம் குறைவாகவே தன் வசமாக்கிக் கொள்ளும் என ஆக்ஸ்ஃபோர்ட் இண்டர்நெட் இன்ஸ்டிட்டியூட்டைச் சேர்ந்த முனைவர் லுலு ஷி கூறியுள்ளார்.
இதில் குழந்தைகளுக்கு பாடங்களைச் சொல்லிக் கொடுப்பது, குழந்தைகளோடு இருப்பது, வயது முதிர்ந்தவர்களை கவனித்துக் கொள்வது போன்ற பராமரிப்பு பணிகளில் 28% மட்டுமே தொழில்நுட்ப ஆட்டோமேஷன் ரோபாட்கள் செய்யலாம் என கணித்திருக்கிறார்கள்.
அதே நேரத்தில் மளிகைப் பொருட்களை வாங்குவது போன்ற பணிகளில் 60% பணிகளை தொழில்நுட்பம் எடுத்துக் கொள்ளலாம் என நிபுணர்கள் கணித்திருக்கிறார்கள்.
தன்னிச்சையாக இயங்கும் கார்கள் குறித்து நாம் பல ஆண்டுகளாகப், சொல்லப் போனால் சில தசாப்தங்களாகப் பேசி வருகிறோம். அது டேக்ஸிகளுக்கு மாற்றாக அமையும் என்றும் கூறி வந்தனர்.
ஆனால் எதார்த்தத்தில் சாலையில் அப்படிப்பட்ட கார்களை அத்தனை அதிக எண்ணிக்கையில் காண முடியவில்லை. அதே போலத் தான் வீட்டு வேலைகளை தொழில்நுட்பம் கவனித்துக் கொள்ளும் என்பதும் என ஒரு நல்ல ஒப்பீட்டை நம் முன் வைக்கிறார் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஏ ஐ துணைப் பேராசிரியர் எகடெரினா ஹெர்டோக் (Ekaterina Hertog).
சிங்கிளாக இருப்பதே மேல்! திருமணம் பற்றி இளம் பெண்கள் கருத்து என்ன? ஆய்வில் புதிய தகவல்
பல வேலைகளைச் செய்யும் ஒரு ரோபாட்டை உருவாக்குவது மிகவும் செலவு பிடித்த விஷயம். எனவே அதற்கு பதிலாக, மனிதர்களின் வேலைகளை எளிமைப்படுத்தும் தொழில்நுட்பத்தை உருவாக்கலாம்.
அது மனிதர்களை பணியில் இருந்து வெளியேற்றப்படுவதற்கு பதிலாக, மனித இனத்துக்கு உதவியாக இருக்கும் என்கிறார் லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியைச் சேர்ந்த முனைவர் கேட் டெவ்லின்.
பிரிட்டனைப் பொருத்தவரை வேலைக்குச் செல்லும் ஆண்கள், வேலைக்குச் செல்லும் பெண்கள் செய்யும் வேலையில் பாதியைத் தான் செய்கிறார்கள்.
ஆனால் ஜப்பானிலோ வேலைக்குச் செல்லும் பெண்கள் செய்யும் வேலையில் ஐந்தில் ஒரு பங்கு வீட்டு வேலைகளைத் தான் வேலைக்குச் செல்லும் ஆண்கள் செய்கிறார்கள் என்கிறது பிபிசி வலைதளக் கட்டுரை ஒன்று.
இப்படி வீட்டு வேலைப் பளு காரணமாக மட்டும், பெண்களின் சம்பாத்தியம், சேமிப்பு, ஓய்வு ஊதியம் போன்ற பல விஷயங்களில் எதிர்மறையான தாக்கங்கள் ஏற்படுவதாக பேராசிரியர் ஹெர்டாக் வாதிடுகிறார்.
அதே நேரத்தில் இது போன்ற தொழில்நுட்பங்கள் சமூகத்தில் உயர் அந்தஸ்தில் இருப்பவர்களால் மட்டுமே வாங்கிப் பயன்படுத்த முடியும் என்பதால், மனிதர்களுக்கு கிடைக்கும் ஓய்வு நேரத்தில் ஒரு பெரிய சமமற்ற தன்மை நிலவலாம் என்றும் கூறுகிறார் ஹெர்டாக்.
மறுபக்கம், வீட்டு வேலைகளை ஆட்டோமேஷன் செய்வதன் மூலம், பாலின பாகுபாடு குறைந்து பெரிய அளவில் சமத்துவம் ஏற்படலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தங்கள் வாதங்களை முன் வைக்கிறார்கள். மலிவு விலையில் நல்ல தொழில்நுட்பங்கள் கிடைத்தால் அனைத்து தரப்பினருக்கும் மகிழ்ச்சி தானே?
கிடைக்கும் என நம்புவோம்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust