மனிதர்கள் இதுவரை இயற்கையிடமிருந்து அடையாளம் கண்டு கொண்ட பொருட்கள் மற்றும் விஷயங்களின் எண்ணிக்கை மிகக் குறைவு என்பதை நம்மால் அனுதினமும் உணர முடிகிறது.
இருப்பினும் மனித இனம் ஒருபோதும் தன் தேடலை நிறுத்திக் கொள்வதில்லை. ஒவ்வொரு நாளும் புதுப்புது விஷயங்கள் வெளிக்கொணரப்பட்டு வருகின்றன.
பூமியில் பூகம்பம் ஏற்பட்டால் எப்படி நிலப்பரப்புகள் பெரும் அதிர்வை உணருமோ, அப்படி விண்வெளியில் நட்சத்திரங்கள் மற்றும் கோள்களில் சுனாமி போன்றதொரு அதிர்வு ஏற்பட்டதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இதை ஸ்டார்குவேக்ஸ் (Starquakes) என்று அழைக்கிறார்கள். இந்த ஸ்டார்குவேக்ஸ்கள் மிகவும் வலிமை வாய்ந்தவை. இதனால் ஒரு நட்சத்திரத்தின் உருவத்தையே மாற்ற முடியும் என ஐரோப்பிய விண்வெளி (ESA) முகமை கூறியுள்ளது.
ஐரோப்பிய விண்வெளி முகமை கயா (Gaia) திட்டத்தின் மூலம் இதைக் கண்டுபிடித்துள்ளது. கயா விண்வெளி கண்காணிப்பு மையம் சேகரித்த சுமார் 200 கோடி நட்சத்திரங்கள் தொடர்பான தரவை வைத்து இந்த நிகழ்வு கண்டுபிடிக்கப்பட்டது.
இதற்கு முன் நட்சத்திரங்கள், தன் வட்ட வடிவத்திலேயே இருந்து கொண்டு ஒரு குறிப்பிட்ட காலத்தில் சுருங்கி விரியும் ரேடியல் ஆசிலேஷனைக் குறித்து முன்பே கண்டுபிடித்திருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.
தற்போது கயா விண்வெளி கண்காணிப்பு மையம் பெரிய பூகம்பத்தால் ஏற்படும் அதிர்வலைகளைப் போல விண்வெளியில் அதிர்வுகள் ஏற்படுவதையும் கண்டுபிடித்துள்ளதாக ஐரோப்பிய விண்வெளி முகமையின் செய்தியறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த குறிப்புகளை வைத்துக் கொண்டு, விண்வெளி விஞ்ஞானிகள் நம் பால்வெளியின் அமைப்பு மற்றும் அது கடந்த லட்சக் கணக்கான ஆண்டுகளில் எப்படி பரிணமித்து வந்தது என்பதைக் கண்டுபிடிக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐரோப்பிய விண்வெளி முகமை, இது தொடர்பாக ஒரு நீண்ட நெடிய பதிவை, தன் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளது. நட்சத்திரங்கள் எதனால் உருவாயின? அவைகள் என்ன நிறத்தில் இருக்கின்றன? நட்சத்திரங்களில் இருக்கும் ரசாயனங்கள் என்ன? அதன் நிறை, வயது குறித்த பல விவரங்கள் இந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளன.
"ஸ்டார்குவேக்ஸ்கள் நமக்கு நட்சத்திரங்களைக் குறித்து பல விஷயங்களை விளக்குகின்றன, குறிப்பாக நட்சத்திரங்களின் உள்ளார்ந்த செயல்பாடுகள் குறித்து நமக்கு அதிகம் விளக்குகின்றன" என்கிறார் கே யூ லெய்வன் (KU Leuven) என்கிற சர்வதேச ஆராய்ச்சி சமூகத்தைச் சேர்ந்த கானி ஆர்டெஸ் (Conny Aerts). இவர் கயா திட்டத்தில் ஒருங்கிணைந்து பணியாற்றும் உறுப்பினராக இருக்கிறார்.
கயா விண்வெளி கண்காணிப்புத் திட்டம் ஆஸ்ட்ரோ செஸ்மாலஜி என்றழைக்கப்படும் நட்சத்திரவியல் துறைக்கான தங்கச் சுரங்கத்தைத் திறந்து கொண்டிருக்கிறது என்றும் கூறினார் கானி ஆர்டெஸ்.
பல லட்சம் நட்சத்திரங்களை ஆய்வு செய்து, ஒரு முப்பரிமாண பால்வெளி வரைபடத்தை உருவாக்கத் தான் கயா விண்வெளி கண்காணிப்புத் திட்டம் தொடங்கப்பட்டது. கயாவில் ஒரு பில்லியன் தெளிவுத் திறன் கொண்ட கேமரா உட்பட நூற்றுக் கணக்கான மின்சார டிடெக்டார்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதுவரை விண்வெளிக்கு அனுப்பப்பட்ட விண்கலங்களில் கயாவில் மட்டுமே ஒரு பில்லியன் பிக்ஸல் கேமரா பொருத்தப்பட்டுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த விண்கலம் கடந்த 2013ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்டது. இது நம் பால்வெளியில் உள்ள பல்வேறு விண்வெளி அதிசயப் பொருட்கள், கோள்கள், பிரவுன் டுவார்ஃப் நட்சத்திரங்கள், ஆயிரக் கணக்கான எரிகற்களை ஆய்வு செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust