விக்னங்களை, அதாவது கஷ்டங்களைத் தீர்க்கும் நாயகர் என்பதாலே இவர் விநாயகர் என்று போற்றப்படுகிறார்.
பலருக்கும் இவர் இஷ்ட தெய்வம் என்பதை விட செல்லப்பிள்ளை என்றே சொல்லலாம். ஒவ்வொரு வருடமும் விதவிதமாக விநாயகரை அலங்கரித்து, வடிவமைத்து விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி வருவது வழக்கம். அதிலும் தற்போது என்ன ட்ரெண்டாக உள்ளதோ, அந்த வடிவிலும் விநாயகரை உருவாக்கி வணங்கி, வழிபட்டு கொண்டாடி மகிழ்வார்கள். நர்த்தன விநாயகர், வீணை மீட்டும் விநாயகர், இருமுக விநாயகர் இப்படித்தான் கல்வெட்டுக்களிலும் சிற்பங்களிலும் புராணங்களிலும் நாம் பார்த்து வந்தோம்.
ஆனால் காலம் மாற மாற கணபதியையும் தம்மோடு மாற்றி அழகு பார்த்து கொண்டாடி வருகின்றனர். பிகில் விநாயகர், கிரிக்கெட் விநாயகர் என்றெல்லாம் நாம் சமீபத்தில் பார்த்ததுண்டு. அநேகமாக இந்த வருடம் செஸ் ஒலிம்பியாட்-டை முன்னிட்டு “செஸ் விநாயகர்” வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
ஒருவரை நாம் வீட்டு விசேஷத்திற்கு அழைப்பதென்றால் நேரில் சென்றோ, போனிலோ, “ அவசியம் வந்து விடுங்கள். உங்கள் வருகையை எதிர் பார்த்து காத்திருக்கிறோம்.” என்றெல்லாம் சொல்லி.. மாலை மரியாதை பூ பழம் என சகலமும் வைத்து கும்பிட்டு வரவேற்போம். ஆனால் விநாயகருக்கோ அப்படி எந்த பார்மாலிடீஸும் தேவை இல்லை. ஒரு மஞ்சளை பிடித்து வைத்து “ இதுதான் புள்ளையார்.. நீ இதுலவர்ற.. உன்ன கும்பிடறேன். ஆமா சொல்லிட்டேன்” என்று உரிமையாக வணங்கிடும் போது, மனம் மகிழ்ந்து அருளை வழங்கும் கணபதி, அனைவருக்கும் ஓர் உற்ற நண்பன் என்றே சொல்லலாம்.
வழக்கமாக இறைவனின் திருவுருவங்களை, கல், மண், மரம், செம்பு முதலியவற்றால் செய்ய வேண்டும் என ஆகமங்கள் கூறுகின்றன. ஆனால் விநாயகருக்கு அப்படி இல்லை.
மண், பசுஞ்சாணம், மஞ்சள், வெள்ளெருக்கு வேர், அத்திமரம், பசு வெண்ணெய், அரைத்த சந்தனம், திருநீறு, ஆகியவற்றால் கூட விநாயகர் வடிவத்தை அமைத்து, ஆவாஹனம் செய்து வழிபட்டாலே அங்கும் வந்து அருளை வாரி வழங்கிடுவார் விநாயகர்
விநாயகர் வடிவம் மட்டுமல்ல, விநாயகி வடிவமும் வழிபாட்டில் இருப்பது பலருக்கும் தெரியாத ஒன்று. விநாயகி, கணேஷினி, பிள்ளையாரினி என்று அழைக்கப்படும் பெண் வடிவ பிள்ளையார் சிலைகளும் உண்டு. இந்த பெண் விநாயக சிலைகள் இந்தியா முழுக்க பல்வேறு மாநிலங்களில் பார்க்க முடிகிறது. பெண் வடிவத் தோற்ற விநாயக உருவமே விநாயகி எனப்படுகிறார். மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், ஒடிஷா ஆகிய மாநிலங்களில் இந்த விநாயகி சிற்பங்களைக் காணலாம்
மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் போகும் வழியில் உள்ளது பூந்தோட்டம் என்னும் ஊர். அதன் அருகில் உள்ள ஊர் "திலதர்ப்பணபுரி”. இங்கு சென்றால் ஆதிவிநாயகர் தும்பிக்கை இல்லாமல் இருப்பதை காணலாம்.
சென்னையின் மீஞ்சூருக்கு அருகில் உள்ளது செட்டிப்பாளையம் என்ற ஊர். இங்குள்ள விநாயகர் கோயிலில், வலப்புறம் சாய்ந்த நிலையில் அருளும் பிள்ளையாரை நாம் பார்க்கலாம். இவரை "வலஞ்சை விநாயகர்' என்றழைக்கின்றனர்.
திருவலஞ்சுழி என்ற ஊர் கும்பகோணம்-சுவாமிமலைக்கு அருகில் உள்ளது. இங்கு உள்ள விநாயகர் கடல் நுரையிலிருந்து வந்ததால் வெள்ளை பிள்ளையார் என்று அழைக்கப்படுகிறார். சோழ நாட்டின் சிறப்பு வாய்ந்த கோவில் கொண்ட அந்த ஊரே திருவலஞ்சுழி என்று அழைக்கப்படுகிறது.
திருவையாற்றில் ஒரு சமையம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதை மக்களுக்கு உணர்த்த, விநாயகர் நள்ளிரவில் ஓலமிட்டு, ஊர்மக்களைக் காப்பாற்றினார். அதனால் இவருக்கு ஓலமிட்ட விநாயகர் என்ற பெயர் ஏற்பட்டது.
சீர்காழியில் தேர் கீழ வீதியில் தனி ஆலயத்தில் மூலவராக அருள்கிறார் காளி விநாயகர்
சிதம்பரத்திலிருந்து சுமார் 17 கி.மீ. தொலைவில் உள்ளது திருநாரையூர். இங்கு அருள் புரிகிறார் பொள்ளாப் பிள்ளையார். பொள்ளா என்றால் உளியால் செதுக்கப்படாத என்ற பொருள். சுயம்புவாக அருளும் பொள்ளாப்பிள்ளையார் காட்டுமன்னார் கோவிலிலிருந்து 8 கிமீ தொலைவில் உள்ளார்.
ஆடுதுறைக்கு அருகேயுள்ள ஊர் மருத்துவக் குடி. இங்கு உள்ள ஆலயத்தில் தேள் போன்ற வடிவமைப்பில் விநாயகர் விருச்சிகப் பிள்ளையாராக அருள்கிறார்.
திருச்சானூர் என்னும் ஊரில், பெருமாளும் தாயாரும் திருமணம் செய்து கொள்வதற்கு சாட்சியாக இருந்த விநாயகர் "சாட்சி விநாயகர்' ஆவர். பெருமாள் மற்றும் தாயாருடன் சேர்ந்திருக்கும் விநாயகரை இங்குதான் தரிசிக்க முடியும்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகிலுள்ள கேரள புரத்தில் சிவபெருமானுக்குக் கோயில் உள்ளது. இங்கு அரச மரத்தடியில் நிறம் மாறும் அதிசயமான விநாயகர் இருக்கிறார். ஆவணி மாதத்திலிருந்து ஆறு மாதங்கள் வெள்ளை நிறமாகவும், மாசி மாதத்திலிருந்து ஆறு மாதங்கள் கறுப்பாகவும் மாறி விடுகிறார். சந்திர காந்தக் கல்லால் உருவாக்கப்பட்ட இந்தச் சிலைக்கு இப்படி ஒரு சக்தி இருக்கிறது.
கும்பகோணம் கும்பேஸ்வரர் கோவில் அருகில் உள்ளது கரும்பாயிரம் கொண்ட விநாயகர் கோவில். கரும்பு கட்டு ஏற்றி வந்த ஒருவரிடம், சிறுவனாக வந்த விநாயகர் கரும்பு கேட்க, அந்த வணிகர் மறுத்துவிட்டார்.கரும்புகளையெல்லாம் நாணலாக மாற்றி விளையாடினார் விநாயகர். தர்மசிந்தனை பற்றி அந்த வணிகனுக்கு அறிவுறுத்தி, பிறகு நாணலை கரும்பாக மாற்றினார். இதனால் இவர் கரும்பாயிரம் கொண்ட விநாயகர் என்று போற்றப்படுகிறார்.
கோயம்புத்தூர் மத்தம்பாளையத்தில் காரண விநாயகரை தரிசிக்கலாம்.
சித்தி புத்தி அம்மைகளாக மணக்குள விநாயகர் அருள்கிறார். மூலவரான மணக்குள விநாயகரின் பீடம் கிணற்றின் மீது அமைந்திருப்பதாக சொல்கிறார்கள். அரை அடி விட்டத்தில் குழி செல்வதாகவும், அதில் வற்றாத தீர்த்தம் உள்ளதாகவும் சொல்லப்படுகிறது
தேவ மூலிகை எனப்படுகிறது சிவனின் அம்சம் கொண்ட வெள்ளெருக்கு. துஷ்ட சக்திகளை நீக்கி, தீய மாந்திரீக சக்திகள் நுழையாதவாறு தடுக்கும் ஆற்றல் கொண்டது வெள்ளெருக்கு. வெள்ளெருக்கினால் செய்த விநாகயரை வழிபட கண் திருஷ்டி படாமல் இருக்க, நல்ல வேலை கிடைக்க, தொழில் முடக்கம் நீங்க, வெள்ளெருக்கு விநாயகரை வணங்குவார்கள்
மூன்று கரத்தோனாக எழுந்தருளும் தலம் பிள்ளையார்பட்டி. இங்கே, விநாயகருக்கு வெள்ளை ஆடை மட்டுமே அணிவிக்கின்றனர்.
திருச்சி உச்சிப்பிள்ளையாரை வழிபட்டு வலம் வரும் போது, ஏழாவதாக இருக்கும் பிள்ளையார், ஏழாப்பிள்ளையார் என அழைத்து காலப்போக்கில் மருவி ஏழைப்பிள்ளையார் என்றானது. இவர் சன்னதியில் இசைக்கலைஞர்கள் வணங்கினால் குரல் வளம் நீடித்திருக்கும் என்பது ஐதீகம்.
திருவள்ளூர் மாவட்டம் திருப்பாசூர் வாசீஸ்வரர் கோவிலில், ஒரே இடத்தில் 11 விநாயகர்கள் அருள் பாலிக்கின்றனர். காசியை சுற்றி ஏழு பிரகாரத்தில் 56 கணபதிகள் உள்ளனர்.
விநாயகருக்கு மோதக கொழுக்கட்டை, கரும்பு, அவல், பொரி, ஆகியவை பிடித்தமானவை. அவ்வை பாட்டியிடம் சுட்டபழம் வேண்டுமா சுடாத பழம் வேண்டுமா என கேட்டு விளையாடிய விநாயகருக்கு நாவல் பழமும் பிடித்த ஒன்றே.
மோதக கொழுக்கட்டை படைப்பதில் ஒரு தத்துவம் உள்ளது. இதன் வெளிப்பகுதி வெள்ளையாகவும், உள்ளே மஞ்சள் நிற இனிப்பு பூரணமும் கொண்டதாக உள்ளது. மனதை வெள்ளையாக வைத்துக் கொண்டால், கண்ணுக்குத் தெரியாத இறைவனை இனிமையாக அடையலாம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் படைக்கப்படுகிறது மோதக கொழுக்கட்டை.
கரும்பு கடிப்பதற்கு கடினமாக இருந்தாலும், இனிப்புச்சுவைத்தரக்கூடியது. வாழ்க்கையிலும் கரும்பை கடிப்பதை போல கஷ்டப்பட்டாலும், வாழ்க்கை இனிமையானதாகவே இருக்கும் என்ற தத்துவத்தின் படி படைக்கப்படுகிறது கொழுக்கட்டை.
அடுத்ததாக அவல், பொரி:
ஊதினாலே பறக்கக்கூடியவை. வாழ்க்கையில் நாம் சந்திக்கின்ற துன்பங்களை ஊதித்தள்ளி விட வேண்டும் அல்லது எங்களின் தோழனான விநாயகப்பெருமானே விக்னங்களை ஊதி தள்ளிவிடுவாயப்பா என வேண்டியே அவல் பொரி படைக்கப்படுகிறது.
"வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனிகிடங்காது பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு" (ஒளவையார்_மூதுரை)
"பாலும்_தெளித்தேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்து உனக்கு நான் தருவேன் - கோலஞ்செய்
துங்கக் கரி முகத்துத் தூமணியே நீ எனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா." (ஒளவையார்_நல்வழி)
"அல்லல்போம் வல்வினைபோம் அன்னை வயிற்றில்
பிறந்த தொல்லைபோம் போகாத் துயரம்போம்
நல்ல குணமதிகமாம் அருணைக் கோபுரத்தில்
மேவும் கணபதியைக் கைதொழுதக்கால்".
குழந்தைகளுக்கு ஆங்கில ரைம்ஸ்களை சொல்ல வைத்து, பெருமை பட்டுக்கொள்வதை விட, இது போன்ற எளிய பாடல்களை சொல்லிக்கொடுத்து வளர்க்க, மழலை முதலே மகத்தான அருளை வழங்கிடுவார் மகத்தான விநாயகர்.
உற்ற நண்பனான விநாயகப்பெருமானை ஆர்ப்பாட்டம் இல்லாமல், இயற்கை சூழலை மாசுபடுத்தாமல், அன்போடு வணங்கி, இயன்ற அறங்களைச் செய்து, அவர் அருளைப்பெற்று வளமோடும் வாழ்ந்திடுவோம்!
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust