ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் கடமைகளும் பொறுப்புகளும் நிறைந்தது. அதைச் சரிவரச் செய்தாலே வாழ்வு நிம்மதியும் நிறைவும் அடையும். மேன்மையும் உயர்வும் அடையத் தெளிவான சிந்தனை, நல்ல அமைதி, நல்ல எண்ணம், சரியான வழிகாட்டி ஆகியவை வேண்டும். இவை எல்லாம் கைகூட ஒரு மனிதன் வெற்றி பெற்ற மனிதனாகிறான். ஆணோ பெண்ணோ, யாராகினாலும் அவர்களுடைய தலையாய கடமை தான் பெற்ற பிள்ளைகளை நல்லொழுக்கத்துடன் கல்வி கொடுத்து வளர்ப்பது. தன்னை இந்த அளவுக்கு வளர்த்த பெற்றோர்களுக்கு அன்புடனும் நன்றியுடன் இருப்பது. எந்த வித குறைவுமின்றி இயன்றவரை இறுதிவரை பக்கபலமாக அரவணைப்புடன் இருப்பது. மூன்றாவது தலையாய கடமை நமது முன்னோர்களுக்கு நன்றி செலுத்துதலும் வழிபாடு செய்வதும் ஆகும். முன்னோர் வழிபாடுகளைச் செய்ய நமது சந்ததிகள் சிறப்புற வாழும். கஷ்டங்களிலிருந்து மீளும். மிகவும் சிரத்தையோடு ஆத்மார்த்தமாக, முன்னோர்களை நினைத்து, தான, தர்மங்கள், வழிபாடுகள் தர்ப்பணம் செய்திட வேண்டும். முன்னோர்களை வழிபட்டு அவர்களின் ஆசிகளைப் பெற உன்னதமான நாள்.. இந்த ஆடி அமாவாசை.
இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய, அவர்களுக்கு மறக்காமல் தர்ப்பண காரியங்களை நிறைவேற்ற வேண்டும். இதனால் அவர்கள் மகிழ்ச்சியுடன் சந்ததியினரை ஆசீர்வாதம் செய்வார்கள். அவர்கள் தங்களுடைய சந்ததியருக்குத் தேவையான உதவிகளைச் செய்வதுடன், ஆசீர்வதித்து, அவர்களுக்கு வரும் கெடுதல்களைத் தடுத்து நிறுத்துவார்கள் என்பது நம்பிக்கை.
ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசைகளில் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்வது வழக்கம். அதே போலத் தாய் தந்தை தாத்தா பாட்டி என முன்னோர்கள் இறந்த திதி தெரிந்தவர்கள் சரியாக அந்த தினத்தில் ஒவ்வொரு வருடமும் தர்ப்பணம் செய்து முன்னோர்களுக்கு நன்றி கூறி வழிபடுதல் உண்டு. பலருக்குக் கால சூழல் காரணமாக மறதியும் தொடர்ந்து செய்யாமல் விட்டுப்போவதும் உண்டு. இவற்றிற்கெல்லாம் ஈடு செய்யும் விதமாக, முன்னோர்கள் இறந்த திதி தெரியாதவர்கள், ஆடி அமாவாசை அன்றோ அல்லது தை அமாவாசை அன்றோ முன்னோர் வழிபாடு செய்தல் சிறப்பாகும்.
மேலும் யாராவது உறவினர்களில் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தாலோ, அல்லது வாரிசு இல்லாமல் இறந்தவர்களோ இருப்பார்கள். அவர்களின் ஆன்மா திருப்தியடையவும், அவர்களுக்கு ஏதேனும் நாம் பாவ செய்திருந்தால் மன்னிப்பு வேண்டும், நம் குலம் தழைக்க அவர்கள் ஆசிகள் வேண்டியும் இந்த ஆடி அமாவாசை நாட்களில் வழிபாடு செய்வது சிறந்தது.
செய்யலாம் என்று கூறுகிறார்கள். இதற்கு காருண்ய பித்ரு தர்ப்பணம் என்று பெயர். அதாவது ஆண் துணையற்ற ஒரு பெண், தனக்கு உதவியாக இருந்து, தன்னை காப்பாற்றி, ஆதரவளித்து பிறகு இறந்துபோனவர்களுக்கு, அது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி, அந்த ஆன்மாவிற்கு நன்றி செலுத்தும் வகையில் தர்ப்பணம் செய்யலாம். குற்றாலம் அருவிக்கரை, பாபநாசம் போன்ற பகுதிகளில் கடைபிடிக்கப்பட்டுவருகிறது. கேரளத்திலும் பெண்கள் தர்ப்பணம் கொடுக்கும் வழக்கம் உள்ளது.
ஆடி அமாவாசை அன்று கடல், ஆறு, குளம் போன்ற நீர் நிலைகளில் நீராடினால் தீவினைகள் தீரும். தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்களுக்கு மன்னிப்பு கோரும் நாள் இது. இறந்தவர்களுக்கு எள்ளும் நீரும் இறைத்து, பிண்டம் வைத்து வழிபடுவது வழக்கமான ஒன்றாகும். நோயின்று சுகமான வாழ்வும், செல்வ வளங்களும் முன்னோர்கள் ஆசிகளும் பெற்றுத்தரக்கூடியது முன்னோர்கள் வழிபாடு. ராமேஸ்வரம், வேதாரண்யம், கோடியக்கரை, திருவையாறு, கும்பகோணம் போன்ற இடங்களில் வழிபடுவது கூடுதல் சிறப்பு.
திருநாவுக்கரசர் சிவபெருமானைத் தரிசிக்கக் கயிலை நோக்கிச் செல்லும் போது, வயோதிகம் காரணமாக முடியாமல் கீழே விழுந்தார். சிவபெருமானே அந்தணர் வடிவில் வந்து, இந்த குளத்தில் மூழிகி திருவையாற்றில் எழுவாய் என்று கூறி அருளினார். அது போலவே திருவையாற்றில் எழுந்த திருநாவுக்கரச பெருமானுக்கு, உமாதேவியுடன் காளை வாகனத்தில் அமர்ந்து கயிலாயக்காட்சியை காட்டி அருளினார் சிவபெருமான். இந்த நிகழ்வு நடந்தது ஆடி அமாவாசை அன்று. இதைப் போற்றும் வகையில் திருவையாறு ஐயாறப்பர் சன்னதியில் இந்த கயிலாயக்காட்சி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த வருடம் 28 -ஆம் தேதி வியாழக்கிழமை அன்று, ஆடி அமாவாசை அன்றைய தினத்தில், காலை 5.00 மணி முதல் 9.00 மணி வரை பட்டினப்பாக்கம் கடற்கரையில் தர்ப்பணம் செய்ய வருவோருக்கு, பூஜைக்கு வேண்டிய அனைத்து பொருட்களும் மற்றும் மந்திரத்தை உச்சரிக்க புரோகிதரும் இலவசமாகக் கோயிலின் சார்பில் செய்யப்பட்டுள்ளது.
ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமி கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு ஜூலை 26 முதல் 29 ஆம் தேதி வரை நான்கு நாள்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் பல பகுதிகளில் மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களிலும் ஆடி அமாவாசை முன்னிட்டு சிறப்புப் பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெறுகின்றன.
சூரியனும், சந்திரனும் ஒரே ராசியில் இணைவது அமாவாசை திதியாகும். அமாவாசை தோறும் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுப்பவர்களின் குடும்பம் அமைதி பெற்று, மேன்மேலும் சிறந்து விளங்கும் என்று சாஸ்திரம் கூறுகிறது. பொருளாதார சிக்கலால், சந்தர்ப்ப சூழ்நிலைகளால், உற்றார் உறவினர்களைப் பெற்றோர்களைத் தவிக்க விடுதல் பெருகி வரும் இன்றைய சூழலில் அதிகமாகவே காணப்படுகிறது. அந்த பாவங்களிலிருந்து விடுபட, மனதார மன்னிப்பு கேட்டும், இன்று வாழும் இயலாதோருக்கு உதவிகள் செய்தும், இயன்றோருக்குத் தான் அதர்மங்கள் செய்தும், அருகில் இருப்போரை அன்போடு அரவணைத்தும் செல்வோம். அனைவருக்கும் வாழ்வும் வளமும் செழிக்கட்டும்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust