எண்ணங்கள் போலவே மனிதர்களின் உள்ளங்களும் வண்ணமயாய் திகழ்ந்திடும் திருநாள் ஹோலிப்பண்டிகை ஆகும். வண்ணப்பொடி தூவி அனைவரையும் வானவில்லாய் காணும் ஓர் நாள். நிறபாகுபாடு, தகுதி, உயர்ந்தோர் தாழ்ந்தோர், ஆண், பெண் என்ற எந்த பிரிவினையும் இல்லாமல், மகிழ்வித்து மகிழும் ஹோலிப்பண்டிகை வட இந்தியாவின் முக்கியமான இந்துப்பண்டிகை ஆகும். பகவான் கிருஷ்ணா் மற்றும் ராதை ஆகியோரின் அன்பை, துலண்டி/ ஹோலி என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். இந்த ஹோலி பண்டிகையின்போது ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு மறைந்து அனைவரும் ஒன்று என்ற மகத்துவம் ஓங்கி நிற்பது விழாவின் சிறப்பாகும். இந்தியாவின் ஒரு சில பகுதிகளில் ஹோலி பண்டிகையானது தல் ஜத்ரா அல்லது தல் பூா்ணிமா என்றும் அழைக்கப்படுகிறது. வசந்த காலத்தில் வரும் முழு பௌர்ணமி நிலவில் இந்த ஹோலிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்தியா, நேபாளம் மற்றும் வங்கதேசம் போன்ற ஆசிய நாடுகளிலும், ஹிந்துகள் வாழும் ஒரு சில மேற்கத்திய நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகின்றது.
அகநானூற்றில் “பங்குனி முயக்கம்”, “கொங்கர் மணி அரையாத்து மறுகின் ஆடும் உள்ளிவிழவு” (பா 368) என்றும், கலித்தொகையில் ”மல்கிய துருத்தியுள் மகிழ் துணைப் புணர்ந்து… விளையாடும் வில்லவன் விழவு” (35:13-14) என்றும் தமிழின் காமன் பண்டிகையைப் பற்றிக் ஹோலியைப்போன்று குறிப்பிடப்படுகிறது. அதுவே வட மாநிலத்தின் இருப்பதாகவும் ஒரு ஒப்பீடு உண்டு.
ஹர்ஷவர்த்தனர் ஏழாம் நூற்றாண்டில் இன்றைய உத்தரப்பிரதேசத்தில் கன்னௌஜ் நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு, பாரதத்தின் வடபகுதி முழுவதையும் ஆண்ட மன்னர் ஆவார். வடமொழி இலக்கியங்களில் மாமன்னன் என்று போற்றப்படுகிறார். கவிதை இயற்றுவதிலும் சிறந்த தேர்ச்சி பெற்றவர். ரத்னாவளி, நாகனந்தா, ப்ரியதர்சிகா ஆகிய நாடகங்களை இயற்றியவர். ஹர்ஷவர்தனரின் “ரத்னாவளி” என்ற நாடகம் ஹோலி பண்டிகை காட்சிகளை கொண்டதாக அமைந்திருக்கிறது என்பது சிறப்பான ஒன்றாகும்.
ஹோலிக்கு முதல் நாள் இரவு ஹோலி தகனா என்று அழைக்கப்படும் ஒரு விழா நடத்தப்படுகிறது. இரவு எட்டு மணிக்கு மேல், மரக்கட்டைகளை எரியூட்டி, அக்னிக்கு தேங்காய் தாம்பூலம் வைத்து, இனிப்புகளுடன் பூஜை செய்யப்படுகிறது. இரணிய கசிபுக்கு ஹோலிகா என்ற சகோதரி உண்டு. ஹோலிகா, நெருப்பினால் எரியாத தன்மை கொண்டவள். தன் மகன் பிரகலாதனை அழிப்பதற்கு இரணியன் இதை பயன்படுத்திக்கொள்ள நினைத்தான். பிரகலாதனை தன் மடியில் அமர்த்திக் கொண்டு ஹோலிகாவை நெருப்பின் நடுவில் அமரும்படி கூறினான். ஒரு பெரிய தீ மூட்டி, அதில் பிரகலாதனுடன் அமர்ந்தாள். அப்போது பிரகலாதன் மகாவிஷ்ணுவை வேண்டியதும் அந்த மாயப்போர்வை, பறந்து சென்று, பிரகலாதனை மூடிக்கொண்டது. ஹோலிகா நெருப்பில் எரிந்து உயிர்விட்டாள்.
தீயிலும் பிரகலாதன் சாகாமல் இருப்பதைப் பார்த்த மக்கள் பிரகலாதனைப் போற்றி வணங்கினார்கள். தீங்கிழைக்க நினைத்த ஹோலிகா தீயில் பலியானதை ஹோலியாக கொண்டாடப்படுகிறது என்றும் சொல்வதுண்டு.
திருமணத்திற்கு முன்பாக கிருஷ்ணர் ராதையைப் பார்க்க வந்தார். அந்த நேரத்தில் ராதையையும் அவரின் தோழிகளையும் கிருஷ்ணர் கொஞ்சம் அதிகமாகவே கிண்டல் செய்திருக்கிறார். இதனால் அவருக்குப் பாடம் புகட்ட நினைத்த ராதையும் , ராதையின் தோழிகளும், பெரிய மூங்கில் லத்திகள் கொண்டு விளையாட்டாக விரட்டியிருக்கின்றனர். இந்த நிகழ்வைக் குறிக்கும் விதமாக பிருந்தாவனுக்கு அருகில் இருக்கும் நந்தகோன் கிராமத்திலிருந்து, ஆண்கள் ராதையின் கிராமமான பிரசன்னாவிற்குச் சென்று, பெண்களிடம் லத்தியால் அடிவாங்கும் வித்தியாசமான சடங்கு நடக்கிறது. வலிக்கும் அளவிற்கு அடிப்பதில்லை என்றாலும், செல்லமாக அடிப்பது, துரத்துவது போன்ற கலகலப்பான நிகழ்ச்சிகள் செய்வார்கள். உத்தரப் பிரதேச மாநிலத்தில் ‘லத்மார் ஹோலி’ என இது அழைக்கப்படுகிறது.
இந்தப் பண்டிகையில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது, 'பிச்கரிஸ்' என்னும் வண்ண நீரைப் பீய்ச்சி அடிக்கும் குழாயில், 'குலால்' என்னும் பல வண்ண நிறங்களில் இருக்கும் சிறுசிறு துகள்களைக் கலந்து ஒருவர் மீது ஒருவர் தெளித்து விளையாடி மகிழ்வர்.
ஹோலி அன்று மக்கள் ஒருவருக்கு ஒருவர் கலர் பொடிகளைத் தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர். இந்த வண்ணப்பொடியானது, பொடி காற்றில் உயரப் பறந்து சென்று, தேவர்களையும் மகிழ்விப்பதாக ஐதீகம்.
ஆரம்பக் காலத்தில் இந்த வண்ணப்பொடிகள், ஆயுர்வேத மூலிகைகளாலும், குங்குமம், மஞ்சள், வேப்பிலை, வில்வம், போன்றவற்றால் செய்யப்படுவதால் மருத்துவ நன்மைகள் கிடைக்கிறது. ஆனால், நாளடைவில் பல மாற்றங்கள் வந்தன. தற்போது தாவரங்களின் மூலம் தயாரிக்கப்பட்ட நிறங்கள் கொண்ட பொடிகளை விட, ஆசிட், மைகா, கண்ணாடி துகள்கள் போன்றவற்றின் மூலம் தயாரிக்கப்பட்ட பொடிகள்தான் அதிகம் விற்கப்படுகின்றன.
வியாபாரம் நோக்கத்திற்காக வணிகர்கள் சாயம் கலந்த செயற்கை வண்ணங்களை அதிகமாக விற்று வருகின்றனர்.
இதனால் சுற்றுச்சுழல், உடல்நலத்திற்கு கேடு போன்றவை ஏற்படுகிறது.
சருமம் மற்றும் கூந்தலுக்குப் பாதிப்பு ஏற்படா வண்ணம், மாய்ஸ்சரைசர்களை போட்டுக்கொள்ளலாம். சன்ஸ்க்ரீன் பயன்படுத்துதல், அல்லது முன்னதாகவே எண்ணைத் தடவிக்கொள்ளுதல் போன்றவற்றால் கேசத்திற்கும் உடலுக்கும் பாதிப்புகள் வராமல் தவிர்க்கலாம்.
முற்காலத்தில் இந்த ஹோலிப் பண்டிகை ‘வசந்த உத்ஸவம்’ என்ற பெயரில் கொண்டாடப்பட்டது. விஜயநகர இராச்சியத்தின் தலைநகரான ஹம்பியில், இந்த விழாவின் 16 ஆம் நூற்றாண்டின் கேலிச்சித்திரம் கண்டுபிடிக்கப்பட்டது. இதேபோல், ஹோந்தியை விவரிக்கும் கிமு 300 கல்வெட்டு விந்திய மலைக்கு அருகிலுள்ள ராம்கரில் காணப்பட்டது.
இந்துப் பண்டிகையான ஹோலி, வட இந்தியாவில் குறிப்பாக உத்தரப் பிரதேசம், ஜெய்ப்பூர், குஜராத் போன்ற இடங்களிலும் நேபாளம், வங்கதேசம், மேற்கிந்தியத் தீவுகள், தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து போன்ற இந்துக்கள் அதிகம் வசிக்கும் வெளிநாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. பஞ்சாபில் ‘ஹோலா மொஹல்லா’ என்ற பெயரில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. இதை மாவீரர்களின் ஹோலி என்றும் கூறப்படுவதுண்டு. இந்த விழாவின் போது, தற்காப்புக் கலைகளைச் செய்துகாட்டுவது, பாடுவது, அதை மக்கள் ஒன்றுசேர்ந்து கண்டுகளிப்பது என்று களை கட்டுகிறது ஹோலி. ‘ஷிக்மோ’ என்ற பெயரில் கோவாவில் கொண்டாடப்படும் இப்பண்டிகை வசந்தகாலத்தைக் குறிப்பதாக அமைந்துள்ளது. பண்டிகையின்போது விவசாயிகள் பாரம்பரிய தெரு நடனத்தை ஆர்வத்துடன் ஆடுவார்கள். இசையும் நடனமும் கூட நிறைந்திருக்கும்.
நம்மூர்களில் விழாக்காலங்களில் பாணகம், மோர், கூழ் போன்றவை கொடுப்பது போன்று, வட மாநிலங்களில் பாங் தண்டை என்னும் ஒரு பானம் தயாரித்து ஒருவருக்கொருவர் கொடுத்து மகிழ்வர். சிவராத்திரி, ஹோலி முதலிய விழாக்காலங்களில் பாங் பாணம் வட மாநிலங்களில் களைக்கட்டும்.
மேலும், சேமியா, மைதாவால் மொறுமொறுப்பாகத் தயாரிக்கப்பட்ட, குஜியா என்ற சிறப்பு உணவும் செய்து, வழங்கி மகிழ்வர். மைதா மாவு, கோதுமை மாவு, கோயா போன்றவற்றால் செய்யப்பட்ட குஜியாவில் இனிப்பு, உப்பு, கார வகைகளும் செய்வார்கள். பூரன் போலி, மாத்ரி காஞ்சி, தஹி பல்லா, அப்பளம், மால்புவாஸ், போன்ற பலகாரங்களை மக்கள் தங்கள் வீடுகளில் தயார் செய்து, நண்பர்களுக்கு, சொந்தபண்ட்தங்களுக்கு எனச் சேர்ந்து பகிர்ந்து உண்ணுவது வழக்கம்.