ஸ்ரீ ராம நவமி 2022 : 108 முறை ’ஸ்ரீராம ஜெயம்’ சொல்வதால் என்னென்ன பலன்கள்?

பாவங்களைப் போக்கும் அக்கினி பீஜமாகிய ‘ர’, ஞானம் தரும் சூரிய பீஜமாகிய ‘அ’, செல்வத்தை அள்ளித்தரும் சந்திர பீஜமாகிய ‘ம’ – ஆகிய மூன்றெழுத்துகள் கொண்ட ஸ்ரீ ராம நாம மந்திரத்தை தினமும் ஓதுவதால், நம் பாவங்கள் யாவும் நீங்கி, கல்வி, செல்வம், வீரம் ஆகிய யாவும் பெற்றுச் சிறப்படையலாம்.
இராம பிரான்
இராம பிரான்twitter

“நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே

தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே

சன்மமும் மரணமு மின்றித் தீருமே

இன்மையே ராமவென் றிரன் டெழுத்தினால்” என்பது கம்பரின் வாக்கு. 

ஸ்ரீராமசந்த்ர க்ருபாலு பஜமன ஹரண பவ பய தாருணம்

நவகஞ்ஜலோசன கஞ்ஜமுக கரகஞ்ஜ பத கஞ்ஜாருணம் ந

பிறப்பு இறப்பு என்ற மிக பயங்கரமான பயத்திலிருந்து நம்மைக் காப்பவனும், அன்றலர்ந்த தாமரை போன்ற கண்கள், வதனம், கைகள் மற்றும் பாதங்களைக் கொண்டு விளங்குபவனுமான கருணாமூர்த்தி ஸ்ரீராமனை மனமே துதிப்பாயாக!

பாவங்களைப் போக்கும் அக்கினி பீஜமாகிய ‘ர’, ஞானம் தரும் சூரிய பீஜமாகிய ‘அ’, செல்வத்தை அள்ளித்தரும் சந்திர பீஜமாகிய ‘ம’ – ஆகிய மூன்றெழுத்துகள் கொண்ட ஸ்ரீ ராம நாம மந்திரத்தை தினமும் ஓதுவதால், நம் பாவங்கள் யாவும் நீங்கி, கல்வி, செல்வம், வீரம் ஆகிய யாவும் பெற்றுச் சிறப்படையலாம்.

பிறப்பும் சிறப்பும் :

பங்குனி மாதம், புனர்பூச நட்சத்திரமும், சுக்லபட்ச நவமி திதியும் கூடிய திருநாளையே, ஸ்ரீ ராமனின் பிறந்த நாளாக, ஸ்ரீராம நவமி என கொண்டாடுகிறோம். இந்த வருடம் 2022ல் ஏப்ரல் 10 அன்று ராம நவமி கொண்டாடப்படுகிறது.

தென்னக அயோத்தி என்று போற்றப்படும் கும்பகோணத்தில் உள்ள ராமஸ்வாமி திருக்கோவிலில் ராமர், சீதாதேவியுடன் பட்டாபிஷேக திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறார். தமிழ்நாட்டில் உள்ள இராமேஸ்வரம் , உத்திரப் பிரதேசத்தில் உள்ள அயோத்தி, ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள பத்ராச்சலம் போன்ற இடங்களில் கொண்டாட்டங்கள் மிக சிறப்பாக நடைபெறும்.

ஆயிரக்கணக்கான பக்த கோடிகளால் கூட்டம் நிரம்பும். மேலும் இராமர், சீதா, தம்பி லட்சுமணன், ஹனுமான் ஆகியோரின் தேர் ஊர்வலங்கள் ரதயாத்திரைகள், என பல்வேறு இடங்களில் நடைபெறும். அயோத்தியில் ஆயிரக்கணக்கான மக்கள் புனித சராயு நதியில் நீராடுகிறார்கள்.

இராமர், சீதா, லட்சுமணன்
இராமர், சீதா, லட்சுமணன்twitter

எப்படி வாழ வேண்டும் ?

திருமாலின் அவதாரங்களில் மனிதன் நீதிமுறைகள், இப்படித்தான் வாழ வேண்டும் என்ற ஒழுக்க நியதிகளோடு, உறுதியான கொள்கையுடன் எப்படி விளங்க வேண்டும், ஆன்மீக நெறிமுறைகளோடு எவ்வாறு விளங்க வேண்டும் என்பதை மக்களணைவருக்கும் எடுத்தருள, இம்மண்ணில் அவதரித்தார் ஸ்ரீராமர்.

அயோத்தியை ஆட்சி செய்து வந்த தசரத சக்கரவர்த்திக்கு கோசலை, சுமித்ரை, கைகேயி என மூன்று மனைவிகள். புத்திரப்பேறு வேண்டி தனது குல குருவான வசிஷ்டரிடம் தரசதர் ஆலோசனை கேட்டார்.

வசிஷ்டரின் ஆலோசனைப்படி புத்திர பாக்கியத்திற்கான யாகத்தை நடத்தினார். அந்த யாகத்தில் தோன்றிய யட்சன், பிரசாதம் நிறைந்த ஒரு கிண்ணத்தை தசரதனிடம் கொடுத்தான். அதனை தன்னுடைய மூன்று மனைவிகளுக்கும் கொடுத்தார் தசரதன். அதன் பயனாக அவர்கள் மூவரும் கர்ப்பம் தரித்தனர்.

கோசலை, பங்குனி மாதம் நவமி திதியில் ஒரு ஆண் மகவைப் பெற்றெடுத்தாள். அந்தக் குழந்தையே ராமபிரான். கைகேயிக்கு பரதனும், சுமித்ரைக்கு லட்சுமணன், சத்ருகனன் ஆகியோரும் பிறந்தனர். தெய்வாம்சமுள்ள குழந்தையாக அவதரித்தார் ராமர். பல கலைகளையும் கற்றார். வளர்ந்த காலத்திலேயே ராமன் பல அற்புதங்களை நிகழ்த்தினார். விசுவாமித்திரருடன் காட்டிற்குச் சென்று தாடகை என்ற அரக்கியை வதம் செய்தார்.

பெற்ற தாய் தந்தையிடம், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற தத்துவத்தை வாழ்ந்துகாட்டியே விளக்கினார்  ராமபிரான்  எப்படி அன்பும் பிரியமுமாக இருக்கவேண்டும் என்பதை வாழ்ந்து உணர்த்தினார்.

ஒரு அரசன் என்பவன், ஆளுமை மிக்கவன் எப்படி இருக்கவேண்டும் என்று முன்னுதாரணமாக திகழ்ந்தார். மனைவியானவள் கணவரிடமும் கணவன் என்பவன் மனைவியிடமும் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு சீதையும் ராமனுமே சாட்சி.

நண்பர்களிடம் எப்படிப் பழக வேண்டும், நண்பர்கள் எப்படி இருக்க வேண்டும் என்ற அனைத்தும் சொல்லால், வாழ்வால் செயலால் காட்டப்பட்டது ஸ்ரீராமருடைய வாழ்வில். கைகேயியின் வரத்தால் காட்டிற்குச் செல்ல வேண்டிய நிலை ராமனுக்கு உண்டானது.

கூடவே அவருடன் சீதையும், லட்சுமணனும் சென்றனர். காட்டில் ஸ்ரீராம்பிரான் சென்றபோது, அவரது பாதம் பட்டு, பல ஆண்டுகளாக கல்லாகக் கிடந்த அகலிகை பெண்ணாக உருமாறினாள் என்பதும் அனைவரும் அறிந்ததே. சீதையை ராவணன் கவர்ந்து சென்றான்.

அவனைத் தேடுவதற்காக சுக்ரீவன், அனுமன் ஆகியோரின் உதவியோடு முயன்றார் ராமபிரான். கடலில் நடுவில் பாலம் அமைத்து இலங்கைச் சென்று ராவணனுடன் போரிட்டு ராவணனை அழித்து, சீதையையும் மீட்டார். பின்னர் 14 ஆண்டுகள் வனவாசம் முடிந்து, அயோத்தி திரும்பி அரச பட்டத்தை ஏற்றார் ராமபிரான்.

ராமனைக் காட்டிலும் ராம நாமமே உயர்ந்தது என்பார்கள் ஆன்மிகப் பெரியோர். ராம நாமத்தை உச்சரித்தால் ராமனின் ஆசியோடு, அவரது பக்தனான அனுமனின் ஆசியையும் பெறலாம்.

இராமர பிரான்
இராமர பிரான்twitter

வழிபடும் முறை :

மகிமை தரும் ராம நவமி அன்று அதிகாலை எழுந்து நீராடி, பூஜை அறையைச் சுத்தம் செய்து, அலங்கரித்து, பட்டாபிஷேக ராமர் படத்துக்குப் பூக்களை சூட்டி, நைவேத்தியங்களைப் படைத்து, ஸ்ரீ ராம நாமம் சொல்லிப் பூஜிக்க வேண்டும். இயன்றோருக்கு உதவிகள் செய்து, அன்னம், வஸ்திரம், அரிசி போன்று அவரவர்களால் இயன்றைதை செய்து ராம நாமம் சொல்லி வழிபட, உடனடி நற்பலனைக் காண்பீர்கள்.

ராம நவமியில் ராமனுக்கு நைவேத்தியமாக நீர்மோர் படைப்பது மிக முக்கியமாகும். வனவாசத்தின் போதும், ராஜரிஷி விசுவாமித்திரருடன் இருந்த போதும், ஸ்ரீராமர் பருகியது நீர்மோரே. அதனாலேயே ஸ்ரீராம நவமி அன்று நீர் மோர் வழங்குதல் முக்கியமான ஒன்றாக படைப்பகட்டுகிறது. மேலும் நீர்மோர், பானகம் வழங்குவதையும், விசிறி தானம் செய்வதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

ராம நவமியன்று விரதம் இருந்து ராமருக்கு துளசி மாலை அணிவித்து சுந்தரகாண்டம் படித்து வந்தால் வாழ்வில் அமைதி பெறலாம். ராமனுடன் மறுபடியும் வாழ முடியும் என்ற நம்பிக்கையை சீதைக்கு கொடுத்து சுந்தரகாண்டம்தான். எனவேதான் கருவுற்ற தாய்மார்கள் சுந்தரகாண்டம் படிக்க வேண்டும் என்கிறார்கள். ஏழரை சனி, அஷ்டமத்து சனி திசை நடப்பவர்கள் தினமும் சுந்தரகாண்டம் படித்து வந்தால் துன்பங்களில் இருந்து விடுபடலாம்.

இராம பிரான்
சித்திரை திருவிழா : 'அந்த மனசு தான் சார் கடவுள்' - பிரசாதம் வழங்க சொன்ன நித்தியானந்தா

ராமநவமி விரதம் இருக்கும் போது ” ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராமா” என்று 108 முறை சொல்லி வழிபடுவது சிறப்பு. ராமநாமம் எல்லையற்ற ஆன்ம சக்கி தரக்கூடியது.

ரா” என வாய் திறந்து உச்சரிக்கும்போது நமது பாவங்கள் எல்லாம் வெளியேறிவிடுகின்றன என்றும்,

“ம” என உச்சரிக்க நம் உதடுகள் மூடும்போது அந்தப்பாவங்கள் மீண்டும் வராமல் தடுக்கப் படுவதாகவும் ஐதீகம்.

இன்றைய நாளில் ராம வழிபாடு செய்வதும், ராம நாமத்தை108முறை, 1008 முறை என பலமுறை ஜெபிப்பதும், எழுதுவதும் பல மடங்கு பலனை அளிக்க வல்லது. மன அமைதியும் தெளிவும் கிடைக்கும்.குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள். லட்சுமி கடாட்சம் கிடைக்கும். பகைவர்கள் நண்பர்களாக மாறி வருவார்கள். நிம்மதி பெருகும். வியாதிகள் நீங்கும். தொலைந்து போன பொருட்கள் கிடைக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும். குடும்பநலம் பெருகி வறுமையும், பிணியும் அகலும். நாடிய பொருட்கள் கைகூடும்.

அனைவருக்கும் ஸ்ரீராமரின் அருள் பரிபூரணமாக கிடைக்கட்டும்.

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com