குஜராத் மண்ணில் அதன் தலைநகர் அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முதல் சத்குரு ஜாக்கி வாசுதேவ் வரையிலான பிரபலங்கள் முன்னிலையில் அரியணை ஏறியது குஜராத் டைட்டன்ஸ்.
பெரிதாக எந்தவொரு சிக்கலையும் ஏற்படுத்தாமல் குஜராத்தின் வெற்றியை எளிதாக்கியது எதிரில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ்.
ஆம். இந்த ஐபிஎல் சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணி சேஸிங்கில் எளிதில் அசைக்கமுடியாத அணியாக விளங்கியது. பல்வேறு போட்டிகளில் இறுதி ஓவரில் எளிதில் நம்ப முடியாத வகையில் அசாத்திய வெற்றி பெற்றது. குவாலிபயர் 1 சுற்றில் கூட இறுதி ஓவரில் 16 ரன்கள் எனும் இலக்கை மூன்றே பந்துகளில் சேஸிங் செய்து இறுதிப்போட்டியில் நுழைந்தது.
மறுபுறம் இதே நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் குவாலிபயர் 2 சுற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் சேஸிங்கில் சிறப்பாக விளையாடி பெங்களூருவை வென்று இறுதி போட்டிக்குத் தகுதி பெற்றது.
இந்நிலையில் நேற்று இரவு நடந்த போட்டியில் டாஸ் வென்றது ராஜஸ்தான் ராயல்ஸ். ஆனால், சேசிங்கை தேர்ந்தெடுத்து ஆச்சர்யப்படுத்தினார் அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன். அப்போதே ராஜஸ்தான் அணியின் வெற்றி வாய்ப்பு சிக்கல் என ரசிகர்கள் ஸ்டேட்ட்ஸ் தட்ட தொடங்கினர். ஹர்டிக் பாண்டியாவிடம் டாஸ் குறித்து கேட்டபோது நாங்கள் வென்றிருந்தால் பந்துவீச்சையே தேர்ந்தெடுத்திருப்போம் என்றார்.
ராஜஸ்தான் அணி பேட்டிங்கில் களமிறங்கியபோது பவர்பிளே வரை ஓரளவு நிதானமாகவே விளையாடியது. ஜெயிஷ்வால் விக்கெட்டை மட்டும் இழந்து 44 ரன்கள் எடுத்தது. ஆனால் அதன்பின்னர் ராஜஸ்தான் ஆடிய ஆட்டம் அந்த அணியின் ரசிகர்களுக்கு ஒரு துன்பியல் சம்பவம்.
ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் சற்றே சிறப்பாக விளையாட துவங்கியபோது பௌலிங்கில் களமிறங்கிய குஜராத் கேப்டன் ஹர்டிக் பாண்டியா சஞ்சுவின் விக்கெட்டை வீழ்த்தினார்.
10 ஓவர்கள் முடிவில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 71 ரன்கள் எடுத்தது ராஜஸ்தான். சரி, இரண்டாவது பாதியில் குறைந்தபட்சம் 70-80 ரன்கள் முதல் 100 ரன்கள் வரை அடிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அப்போது மைண்ட் கேம் விளையாடத் தொடங்கினார் ஹர்டிக் பாண்டியா. ஜாஸ் பட்லர் ரஷீத் கானிடம் திணறியதுதான் வரலாறு. இதனால் ரஷீத் கானை தொடர்ச்சியாக பந்து வீச அழைத்தார் பாண்ட்யா. பட்லர் அவரது ஓவரில் ரிஸ்க் எடுக்க வேண்டாமென தூக்கி அடிக்காமல் சிங்கிள் எடுத்துக் கொண்டிருந்தார். இதனால் ரன்ரேட் சறுக்கிக் கொண்டிருந்தது.
இந்த சூழலில் படிக்கல் விக்கெட்டை ரஷீத் வீழ்த்த, ஹர்டிக் பாண்டியா பட்லர் விக்கெட்டை தூக்கினார். அப்போது ஸ்கோர் 79/4. அதன்பின்னர் ராஜஸ்தான் அணியின் ரன்ரேட் மேலும் சரிந்தது.
ஹெட்மேயர் - அஷ்வின் கூட்டணி திணறியது. ரஷீத் கான் 4 ஓவர்கள் வீசி 18 ரன்கள் முடித்து தனது கோட்டாவை முடித்தார், ஹர்டிக் பாண்டியா தனது கடைசி ஓவரின் கடைசி பந்தில் ஹெட்மேயரை வீழ்த்தினார்.
15 ஓவர்கள் முடிவில் 94 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்திருந்தது ராஜஸ்தான். பின்னர் சாய் கிஷோர் பந்தில் அஷ்வின் அவுட் ஆக, போல்ட்டும் ஒரு சிக்ஸர் மட்டும் வைத்து சாய் கிஷோரிடம் வீழ்ந்தார்.
கடைசி இரண்டு ஓவர்களில் கூட ராஜஸ்தான் சொதப்பியது. வெறும் 10 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் 130 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
131 ரன்கள் எடுத்தால் தனது கன்னி சீசனிலேயே கோப்பையை வெல்லும் வாய்ப்புடன் களமிறங்கியது குஜராத் அணி.
போல்ட் வீசிய முதல் ஓவரில் தான் சந்தித்த முதல் பந்திலேயே சுப்மன் கில் அவுட் ஆகி இருக்கவேண்டும். அவர் கொடுத்த கேட்சை சாஹல் தவறவிட்டார்.
எனினும் பிரசித் கிருஷ்ணாவின் அனல் பறந்த பந்துவீச்சில் விருத்திமன் சாஹா விக்கெட் தெறித்தது. மூன்றாவது ஓவரை போல்ட் மெய்டனாக வீசி அசத்தினார். அப்போது மூன்று ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 11 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது குஜராத் அணி.
தொடர்ந்து தனது ஸ்பெல்லில் மூன்றாவது ஓவரை வீசிய போல்ட் வேடு விக்கெட்டை வீழ்த்தினார். அப்போது ஸ்கோர் 23 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகள்.
சாஹல் மட்டும் முதல் ஓவரில் அந்த கேட்சை பிடித்திருந்தால் 23 ரன்களுக்கே மூன்று விக்கெட்டுகளை இழந்திருக்கும் குஜராத் அணி. இதனால் அந்த அணியின் இடது கை பேட்ஸ்மேன் களமிறங்க வேண்டியதிருந்திருக்கும். அஷ்வினை பயன்படுத்தி ராஜஸ்தான் அவர்களுக்கு அதிக சிக்கலை கொடுத்திருக்க முடியும்.
ஆனால், அந்த பேச்சுக்கு எல்லாம் இப்போது இடம் இல்லை. வேடு விக்கெட்டை இழந்ததும் பாண்டியா மற்றும் சுப்மன் கில் கூட்டணி விக்கெட்டை உடும்புப்பிடியாய் பாதுகாத்தது.
பெரிதாக பௌண்டரி சிக்ஸர்கள் அடிக்காவிட்டாலும் விக்கெட்டை இழந்துவிடக் கூடாது என கவனமாய் விளையாடியது. இந்த சமயத்தில் அஷ்வினை பந்துவீச அழைக்காமல் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு வீச வேண்டும் என அவருக்கு ஓவர் கொடுக்காமல் இருந்தார் ராஜஸ்தான் கேப்டன்.
11 ஓவர்கள் முடிவில் 62 ரன்கள் எடுத்திருந்தது குஜராத். அதன் பின்னர் வேறு வழியே இல்லாமல் அஷ்வினை அழைத்தார் சஞ்சு சாம்சன்.
அஷ்வினுக்கு ஓவர் கொடுக்காமல் தள்ளிப்போட்டது அஷ்வினுக்கும் அழுத்தம் ஏற்படுத்தியது. இந்த சூழலில் அவர் வீசிய 12வது ஓவரில் ஒரு சிக்ஸர், ஒரு போன்ற விளாசி 15 ரன்கள் அடித்தார் ஹர்டிக். ஒரே ஓவரில் ஆட்டம் குஜராத்துக்கு சாதகமாய் மாறியது.
மைண்ட் கேமில் ஹர்டிக் பாண்டியா மீண்டும் வென்றார். சஞ்சு துருப்புச்சீட்டு என கருதிய அஷ்வினை மன ரீதியாக உடைத்தார் ஹர்டிக்.
அங்கிருந்து எந்த வித சிக்கலும் இல்லாமல் வெற்றியை நோக்கி பயணித்தது குஜராத். 15வது ஓவருக்கு பிறகு தனது இரு ஓவர்களை வீசினார் அஷ்வின், அவர் நான்காவது ஓவர் வீச வேண்டிய நிலைமை ஏற்படவில்லை.
ஹர்டிக் பாண்டியா விக்கெட் வீழ்ந்ததும் களமிறங்கிய மில்லர் அதிரடியாய் ஆடினார். நேற்றைய ஆட்டத்தில் எந்த வித சிக்கலும் இல்லாமல் மிகவும் லாவகமாக பந்துகளை விளாசிய வீரர் மில்லர் தான்.
19வது ஓவரின் முதல் பந்தை சுப்மன் கில் வின்னிங் ஷாட்டாக சிக்ஸர் வைக்க குஜராத் தனது முதல் சீசனியிலேயே சாம்பியன் ஆனது.
டக் அவுட் ஆகியிருக்க வேண்டிய சுப்மன் கில் இறுதியில் வின்னிங் ஷாட் அடித்து 43 பந்துகளில் 45 ரன்கள் விளாசி கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ஏழு விக்கெட் வித்தியாசத்தில் தோற்று 14 ஆண்டுகளுக்கு பிறகு கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவறிவிட்டது ராஜஸ்தான்.
மேன் ஆஃப் தி மேட்ச் விருதை ஹர்டிக் பாண்டியா வென்றார். தொடர் நாயகன் விருதை ஜாஸ் பட்லர் வென்றார்.
ஏலத்தின் போது மிக மிக சுமாரான அணி என மதிப்பிடப்பட்ட குஜராத் அணி தனது முதல் போட்டியை லக்நௌ அணிக்கு எதிராக விளையாடியது. முதல் ஓவரின் முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தினார் ஷமி.
தனது முதல் சீசனை விக்கெட் எடுத்து துவங்கிய குஜராத் அணி வின்னிங் ஷாட்டாக சிக்ஸர் வைத்து சீசனை முடித்திருக்கிறது.
உண்மையில் குஜராத் ஆடிய ஆட்டம் சினிமா பாணியில் ஒரு அசாத்தியமான ஆட்டம் தான்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust