செஸ் வரலாறு: சதுரங்க் - செஸ் ஆனது எப்படி? சாகும்வரை உலக செஸ் சாம்பியனாக வாழ்ந்தவர் யார்?

பதினாறாம் நூற்றாண்டிலிருந்து தற்போதைய காலகட்டம் வரை செஸ் போட்டியில் பயன்படுத்தப்படும் காய்கள் தொடங்கி, மணி கடிகாரம் பயன்படுத்துவது வரை பல மாற்றங்களைக் கண்டிருக்கிறது.
Chess
Chess Pexels

செஸ் ஒலிம்பியாட்

வரும் ஜூலை 28ஆம் தேதி வியாழக்கிழமை தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்கப்பட உள்ளது.

கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட உலக நாடுகள் இப்போட்டியில் கலந்து கொள்ள இருக்கின்றன. இதில் யார் வெற்றி பெறுவார் யாருக்கு என்ன பதக்கங்கள் கிடைக்கும் என்கிற பரபரப்பு எல்லாம் ஒரு பக்கம் இருக்க, பலரும் சதுரங்க ஆட்டத்தை கொஞ்சம் பின்னோக்கி பார்க்கத் தொடங்கியுள்ளனர்.

செஸ் விளையாட்டின் வரலாறு என்ன? உலக செஸ் சாம்பியன்கள் யார்? இன்று தொழில்முறையில் சதுரங்கம் விளையாடுபவர்கள் எப்படி பயிற்சி பெறுகின்றனர் என்பது வரை சுருக்கமாக பார்ப்போம்.

விளையாட்டு உலகில் சதுரங்கத்திற்கென்று பிரத்தியேகமாக நீண்ட நெடிய வரலாறு இருக்கிறது. தொடக்கத்தில் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட சதுரங்க் (Chaturang) விளையாட்டுக்கும் இன்று நாம் விளையாடிக் கொண்டிருக்கும் சதுரங்கத்திற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன.

சதுரங்க்

சுமார் கிபி 600 ஆம் ஆண்டில் சதுரங்க் என்கிற பெயரில் இந்தியாவில் விளையாடப்பட்ட அந்த விளையாட்டு, பதினாறாம் நூற்றாண்டு வரை கிட்டத்தட்ட ஒரே போல இருந்தது அல்லது மிகச் சிறிய மாற்றங்களைக் காணவில்லை.

பதினாறாம் நூற்றாண்டிலிருந்து தற்போதைய காலகட்டம் வரை செஸ் போட்டியில் பயன்படுத்தப்படும் காய்கள் தொடங்கி, மணி கடிகாரம் பயன்படுத்துவது வரை பல மாற்றங்களைக் கண்டிருக்கிறது.

19ஆம் நூற்றாண்டின் மத்தியில் தான் சதுரங்க விளையாட்டில் பல விஷயங்கள் முறைப்படுத்தப்பட்டன. அதுவரை ஒவ்வொரு நபரும் தங்கள் இஷ்டத்திற்குப் பலவகையான செஸ் போர்டு மற்றும் காய்களை வைத்து விளையாடி வந்தனர்.

காய்களின் வடிவம் மற்றும் அளவு

இன்று நாம் செஸ் விளையாட பயன்படுத்தும் காய்களுக்கு ஒரு வடிவமைப்பு இருக்கிறது அல்லவா... ராஜா என்றால் உச்சிப் பகுதியில் ஒரு சிலுவை போன்ற குறியீடு இருக்கும், ராணி என்றால் உச்சியில் ஒரு மகுடம் தரித்தது போல் இருக்கும்... இது போன்ற உருவங்களை 1849 ஆம் ஆண்டு ஜெக்ஸ் ஆஃப் லண்டன் (Jaques of London) என்கிற பொம்மை தயாரிப்பு நிறுவனத்தால் Nathaniel Cooke என்பவரால் வடிவமைக்கப்பட்டது.

புதிய ரக காய்களை Howard Staunton என்கிற அந்த காலத்து பெரிய செஸ் வீரர் அங்கீகரித்தார். மெல்ல ஹாவர்ட் பயன்படுத்திய காய்கள் உள்ளூர் போட்டிகள் தொடங்கி உலகப் போட்டிகள் வரை பயன்படுத்த தொடங்கப்பட்டன. பிறகு ஒரு காலத்தில் காய்களுக்கு ஸ்டான்டன் பேட்டர்ன் என்றே பெயர் வைத்துவிட்டனர். இன்று வரை உலக அளவில் நடக்கும் எல்லா முக்கிய போட்டிகளில் ஸ்டான்டன் பேட்டர்ன் காய்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.


அதேபோல ராஜா என்றால் 9.5 செ.மீ உயரமும் ராணி என்றால் 8.5 செ.மீ உயரமும் மந்திரி 7 செ.மீ குதிரை 6 செ.மீ யானை 5.5 செ.மீ சிப்பாய்கள் 5 செ.மீ உயரத்தில் இருக்க வேண்டும், உயரத்தில் 40 முதல் 50% அளவுக்குத்தான் அதன் அடிப்பகுதி விட்டமிருக்க வேண்டும் போன்ற விதிகள் எல்லாம் கொண்டுவரப்பட்டன.

நேரம் கணக்கிடுதல், சாம்பியன்ஷிப்

19ஆம் நூற்றாண்டில் தான் செஸ் போட்டிக்கென கடிகாரம் வைத்து விளையாடத் தொடங்கினர். அதற்கு முன் ஆட்டத்தின் தீவிரத்தில் 14 மணிநேரம் வரை எல்லாம் விளையாடியுள்ளதாக செஸ்.காம் வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

19ஆம் நூற்றாண்டின் கடைசி காலகட்டத்தில் தான் செஸ் உலக சாம்பியன்ஷிப் பட்டம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படத் தொடங்கியது.

1800களில் ரத்தம் தெறிக்க தெறிக்க இரு தரப்பிலும் பலி கொடுக்கப்பட்டு செக்மேட் வைப்பது தான் முக்கிய இலக்காகக் கொண்டு ஆடினர். தங்கள் தரப்பில் உள்ள காய்களை பாதுகாத்து பொறுமையாக ஏறி அடிக்கும் தத்துவம் கோட்பாடெல்லாம் அப்போது அதிகம் கடைப்பிடிக்கப்படவில்லை. அப்போதுதான் பால் மர்ஃபி (Paul Morphy) என்கிற அறிஞர் உலக சதுரங்கத்தின் மையத்திற்கு வந்தார்.

சற்றே நிதானத்தோடும் ஒரு அழகியலோடும் அதிரடியாக தாக்குதல் நடத்தும் முறையை செஸ் உலக ரசிகர்கள் மனதில் விதைத்தார். ஐரோப்பிய கண்டத்தில் பல முன்னணிச் செஸ் வீரர்களோடு மோதி வெற்றி வாகை சூடினார். இதில் அடால்ஃப் ஆண்டர்சன், லூயிஸ் பால்சன், டேனியில் ஹார்விட்ஸ் ஆகியோர் அடக்கம்.

தோற்க்கடிக்கப்படாத சாம்பியன்

1858 ஆம் ஆண்டு பால் மர்ஃபி, இரண்டாம் கால் மற்றும் கவுன்ட் இசார்ட் ஆகியோரோடு மோதிய விளையாட்டு இன்றுவரை சதுரங்க வரலாற்றில் மிக முக்கியமான போட்டிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. பால் மர்ஃபியின் தரப்பில் சடசடவென எல்லா காய்களும் விழ திடீரென 16வது நகர்வில் எதிர்தரப்புக்கு செக் வைத்து ஆட்டத்தை முடித்து அனைவரையும் மிரளச் செய்தார் பால் மர்ஃபி.

வில்ஹெம் ஸ்டெய்னிட்ஸ் (Wilhelm Steinitz) என்கிற அமெரிக்க ஆஸ்த்ரியர்தான் உலகின் முதல் அதிகாரப்பூர்வ செஸ் சாம்பியன். 1886ஆம் ஆண்டு முதல் 1894ஆம் ஆண்டு வரை இவரை எவராலும் வீழ்த்த முடியவில்லை. அதிரடி ஆட்டத்தை எல்லாம் கொஞ்சம் ஒதுக்கிவிட்டு, திட்டமிட்டு ஆடும் முறையைப் பிரபலப்படுத்தினார். கேம்பிட் பான் (Gambit Pawn) முறையை இவர் ஏற்று விளையாடி, மெல்ல காய்களை வெட்டிச் சாய்த்து வெற்றியை உறுதி செய்யும் முறையைக் கையாண்டார். செஸ்ஸில் பொசிஷன் எடுத்து விளையாடுவதைப் பிரபலப்படுத்தியதும் இவரே.

சாம்பியனை வீழ்த்திய சாம்பியன்

இவரை வெல்ல எவன் இருக்கிறான் எனும் போது, ஜெர்மனியிலிருந்து வந்த இமானுவல் லஸ்கர் (Emanuel Lasker) என்கிற சதுரங்கப் புயல் செஸ் உலகில் மையம் கொண்டது. இமானுவல் லஸ்கர், வில்ஹெம்மை வீழ்த்தினார். உலக செஸ் வரலாற்றிலேயே அதிக காலம் (27 ஆண்டுகள்) உலக சாம்பியனாக வாழ்ந்தவர் இமானுவல் லஸ்கர் தான் என்கிறது செஸ்.காம் வலைத்தளம். இவரும் வில்ஹெம்மைப் போல பொசிஷன் எடுத்து விளையாடுவதில் வல்லவர்.


1921ஆம் ஆண்டு இமானுவலை வீழ்த்திய ஜோஸ் ரால் காபாபிளாங்கா (Jose Raul Capablanca) உலகின் 3ஆவது செஸ் சாம்பியன் ஆனார். எளிதாக திட்டமிட்டு ஒவ்வொரு சதுரத்தையும் பயன்படுத்தி நகர்த்துவது, கிடைக்கும் ஒரு சிறிய கேப்பையும் தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி, ஆட்டத்தின் இறுதியில் எதிரியை காலி செய்வது இவரது ஸ்டைல். இன்றுவரை இவரது எண்ட் கேம் டெக்னிக்கை எந்த செஸ் இன்ஜின்களால் பெரிதாக குறை சொல்ல முடியவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். ஆனால் இந்த மாமேதை உலக செஸ் சாம்பியனாக அதிக காலம் தொடரவில்லை. ஆறே ஆண்டுகளில் தன் இடத்தை விட்டு விலகினார்.

ஹைப்பர் மாடர்னிஸம்

1920களில் செஸ் விளையாட்டில் ஹைபர் மாடர்னிசம் தலைதூக்கியது. களத்தின் மையத்தில் உள்ள சதுரங்களை வெறுமனே காய்களைக் கொண்டு பிடித்துவைத்திருப்பதற்குப் பதிலாக, சதுரங்களின் மீது ஆதிக்கம் செலுத்தும் பழக்கம் தொடங்கியது. ஆரோன் நிம்சோவிச் (Aron Nimzovich), எஃபிம் பொகொல்யுபோவ் (Efim Bogolyubov), ரிச்சர்ட் ரெடி (Richard Reti) எர்ன்ஸ்ட் க்ரன்ஃபெல்ட் (Ernst Grunfeld) என பல திறமையான வீரர்கள் களத்திலிருந்தனர்.

இந்த காலகட்டத்தில் தான் புதிய ஓப்பனிங்குகள், அடுத்தடுத்த காய்களை நகர்த்தும் திட்டங்கள் எல்லாம் மேம்பட்டன. இந்தியன் டிஃபென்ஸ், தி க்ரன்ஃபெல்ட் டிஃபென்ஸ், தி பெனானி டிஃபென்ஸ் ஆகிய டெக்னிக்குகள் பரவலாகத் தொடங்கின.

உலகின் நான்காவது செஸ் சாம்பியனான அலெக்சாண்டர் அல்கெயின் (Alexander Alekhine) விளையாடிய அல்கெயின் டிஃபென்ஸ் (Alekhine's Defense) உலகப் புகழ்பெற்றது. இதுவரையான உலக சாம்பியன்கள் ஒரே வகையான ஆட்டமுறையை ஆடினர். ஆனால் இந்த நபர் முற்றிலும் புது ரகத்தில் விளையாடினார். எதிராளியின் ஆட்டத்தைப் பொறுத்து அதிரடியாக தாக்குவது அல்லது பதுங்கிப் பாய்வது அல்லது நிதானமாக திட்டமிட்டு ஆடுவது அல்லது சத்தமின்றி பதுசாக ஆடுவது என ஒரு தினுசாக விளையாடினார். 1927 முதல் 1946ஆம் ஆண்டு வரை உலக சாம்பியனாக வலம் வந்தார்அல்கெயின் . மரணம் அவரைக் கட்டியணைக்கும் வரை செஸ் சாம்பியனாக இருந்த ஒரே மனிதர் அலெக்சாண்டர் அல்கெயின் தான்.

உலக சாம்பியன்கள்

1948ஆம் ஆண்டிலிருந்து உலக செஸ் சம்மேளனத்தின் (FIDE - Fédération Internationale des Échecs) மேற்பார்வையில் உலக செஸ் சாம்பியன்ஷிப் நடத்தப்பட்டு வருகிறது. அதில் ரஷ்யாவின் மிகெல் பொட்வின்னிக் வென்று செஸ் உலக ராஜாவானார். எதிரணிக்குத் தகுந்தாற் போல ஆட்டத்துக்கு ஆட்டம் தன் காய் நகர்த்தல் முறைகளை மாற்றிக் கொள்வது மிகெல் பொட்வின்னிக்கின் முக்கிய பலமாக இருந்தது.

1927 காலகட்டத்திலிருந்து சுமார் 2006 வரை ரஷ்யர்கள் தனியொரு நாடாக உலக சதுரங்கத்தை கட்டியாண்டார்கள் என்றால் அது மிகையில்லை.


மிகெல் பொட்வின்னிக் (Mikhail Botvinnik),

வசில் ஸ்மைலோவ் (Vassily Smyslov),

மிகெல் டால் (Mikhail Tal),

டிக்ரன் பெட்ரோசியன் (Tigran Petrosian),

போரிஸ் ஸ்பாஸ்கி (Boris Spassky),

அனடொலெ கார்போவ் (Anatoly Karpov),

கேரி கேஸ்பரோவ் (Garry Kasparov),

விளாதிமிர் க்ராம்னிக் (Vladimir Kramnik) என பல உலக செஸ் சாம்பியன்களின் தாயகமாகத் திகழ்ந்தது ரஷ்யா.

Chess
MS Dhoni : ரன் அவுட்டில் தொடங்கிய பயணம் டிராஃபி கலெக்ஷனாக மாறிய கதை

மீண்டும் சதுரங்க வரலாற்றுக்கு வருவோம். இதே மிகெல் பொட்வின்னிக்தான் பிற்காலத்தில் உலக செஸ் சாம்பியன்களாக உருவெடுத்த அனடொலெ கார்போவ், கேரி கேஸ்பரோவ், விளாதிமிர் கிராம்னிக் ஆகியோருக்கு சதுரங்கம் பயிற்றுவித்த ஆசிரியர்.
பொட்வின்னிக்கைத் தோற்கடித்து 1963ஆம் ஆண்டு உலக சாம்பியனானார் டிக்ரன் பெட்ரோசியன். ஒரு காயைக் கொடுத்து எதிராலியின் காய்களை வெட்டுவது இவரது ஸ்ட்ரேட்டஜி. இவரை போரிஸ் ஸ்பாஸ்கி வென்றார், 1966ஆம் ஆண்டு மீண்டும் போரிஸ் ஸ்பாஸ்கியை வென்று உலக சாம்பியனானார் டிக்ரன். மீண்டும் 1969ஆம் ஆண்டு டிக்ரன் பெட்ரோசியனை வென்றார் உலக சாம்பியன் பட்டத்தை பிடித்தார் போரிஸ் ஸ்பாஸ்கி.

10ஆவது சாம்பியனான ஸ்பாஸ்கி 1972ஆம் ஆண்டு செஸ் உலகின் புதுமைக் கலைஞர் பாபி ஃபிஸ்ஸரிடம் தோற்றார். செஸ் போர்டில் ரஷ்யாவின் வலுவான தடுப்பரண்களை உடைத்த அமெரிக்கர் என்கிற பெருமை இன்றுவரை அவருக்கு உண்டு. ஸ்பாஸ்கியும், பாபி ஃபிஷ்ஷரும் மோதிய ஆறாம் சுற்றுப் போட்டிக்கு ஸ்பாஷ்கியே எழுந்து நின்று பாபி ஃபிஷ்ஷருக்கு கைதட்டியது செஸ் உலகையே பிரமிக்க வைத்தது. 11ஆவது உலக செஸ் சாம்பியனான பாபி ஃபிஷ்ஷர் திடீரென செஸ் உலகிலிருந்து மாயமானார். பெரியளவில் அவர் பெயர் செஸ் உலகத்தில் மிளிரவில்லை.

1975ஆம் ஆண்டு அனடொலெ கர்போவ் 12ஆவது உலக செஸ் சாம்பியனானார். ஸ்ட்ராட்டஜி, பொசிஷன் எடுத்து ஆடுவதில் புதிய பாணியைக் கையாண்டார் இவர். எதிரிகளின் திட்டத்தை முறியடிப்பதையே ஒரு பாணியாகக் கையாள்வார் என விஸ்வநாதன் ஆனந்த் ஒரு ஊடகத்திடம் குறிப்பிட்டிருந்தது இங்கு நினைவுகூரத்தக்கது. அவரைத் தொடர்ந்து கேரி கேஸ்பரோவ் உலக சாம்பியனானார்.

கணினியில் செஸ்

செஸ் போட்டிகளுக்குத் தன்னைத் தயார்படுத்திக் கொள்ள கணினியை அதிகம் பயன்படுத்தியவர் கேரி கேஸ்பரோவ்தான். 1980 மற்றும் 1990களில் பல சூப்பர் கம்ப்யூட்டர்களை தோற்கடித்தவர், 1997ஆம் ஆண்டு டீப் ப்ளூ என்கிற கணினியிடம் தோற்றுப் போனார்.

இந்தியாவைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் 2000 ஆண்டு வாக்கில் உலக செஸ் சாம்பியனானார். அவரைத் தொடர்ந்து, ரஸ்லன் பொனொமரியோவ், ரஸ்டம் கசிம்சனவ், வசிலின் தொபலோவ், விளாதிமிர் க்ராம்னிக், மேக்னஸ் கார்ல்சன் ஆகியோர் உலக செஸ் சாம்பியன்களாயினர்.

2005ஆம் ஆண்டுவாக்கில் கணினிகள் மனிதர்களை விட பல மடங்கு வேகமாகவும், பல கோணங்களிலும் சிந்திக்கத் தொடங்கிவிட்டன. ஸ்டாக்ஃபிஷ் என்கிற கணினி இன்ஜின் செஸ் விளையாட்டில் ஒரு புதுமையைக் கொண்டு வந்ததோடு ஒரு பெரிய உச்சத்தைத் தொட்டது. கடந்த 2018ஆம் ஆண்டு ஆல்ஃபா ஜீரோ என்கிற இன்ஜின் ஸ்டாக்ஃபிஷ்ஷை தோற்கடித்தது. இன்று பயிற்சிக்கு கணினியைப் பயன்படுத்தாத செஸ் வீரர்களே இல்லை எனலாம்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த், ப்ரக்னானந்தா என பலரும் இப்போதும் இந்தியாவுக்காகக் களத்தில் நிற்கின்றனர். சென்னையில் நடக்கவிருக்கும் 44ஆவது செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியாவுக்கு எத்தனை பதக்கங்கள் கிடைக்கும் என பொறுத்திருந்து பார்ப்போம்.

Chess
Chess Olympiad : செஸ் போர்ட்டாக மாறிய நேப்பியர் பிரிட்ஜ் - டிவிட்டர்வாசிகள் கமெண்ட் என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com