ஜெயிக்கறமோ தோக்குறமோ சண்டை செய்யணும். இப்படி ஒரு உத்தியுடன் தான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இந்த சீசனில் விளையாடியுள்ளது.
முதல் நான்கு போட்டிகளில் மூன்றில் வெற்றி, கடைசி நான்கு போட்டிகளில் மூன்றில் வெற்றி, இடையில் ஐந்து தோல்விகள். இப்படியொரு வரலாற்றுடன் தான் இந்த சீசனில் லீக் சுற்றில் தான் விளையாடும் கடைசி போட்டியில் லக்நௌ அணியுடன் மோதியது.
இந்த போட்டியில் வென்றால் பிளே ஆஃப் ரேஸில் நீடிக்க முடியும் என்பதால் முழு உத்வேகத்துடன் களமிறங்கியது. டாஸ் வென்ற லக்நௌ முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. கே.எல்.ராகுலும் குயின்டன் டீ காக்கும் களமிறங்கினர்.
20 ஓவர்கள் பந்துவீசியும் ஆறு பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்திப் பார்த்தும் இந்த இணையைக் கடைசி வரை பிரிக்க முடியவில்லை. அப்படியொரு அசுர ஆட்டம் ஆடியது டீ காக் - ராகுல் ஜோடி.
குறிப்பாக டீ காக் யாரு சாமி இவன் என எதிரணி கதறும் அளவுக்கு பௌண்டரி சிக்ஸர்களால் பின்னியெடுத்தார். ஐபிஎல் வரலாற்றிலேயே தனிநபர் ஒருவர் எடுத்த அதிகபட்ச ரன்கள் பட்டியலில் நேற்றைய ஆட்டம் மூலம் மூன்றாமிடத்தைப் பிடித்தார்.
ஆம். நேற்று மட்டும் ராகுல் அடித்த ரன்கள் 140. அதற்கு அவர் எடுத்துக் கொண்ட பந்துகள் 70 தான். அதாவது 11.4 ஓவர்கள் மட்டுமே.
தான் சந்தித்த 70 பந்துகளில் 10 பந்துகளை பௌண்டரிக்கு விரட்டியவர், பத்து பந்துகளை ஆடியன்ஸுக்கு கேட்ச் கொடுத்தார்.
டீ காக் அடித்த அடியில் கொல்கத்தா கதி கலங்கினாலும் ராகுலின் மந்தமான ஆட்டத்தால் லக்நௌ மாபெரும் ஸ்கோர் குவிப்பதை தவிர்த்தது. 20 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 210 ரன்கள் எடுத்து மிரட்டியது லக்நௌ அணி.
கே எல் ராகுல் 51 பந்துகளில் 68 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமலிருந்தார்.
சோகம் என்னவெனில் நேற்றைய தினம் கொல்கத்தா பந்துவீச்சாளர்கள் வைடு, நோபால் என எக்ஸ்டரா ரன்கள் பெரியளவில் கொடுக்கவில்லை. 20 ஓவர்களில் எக்ஸ்டரா ரன்கள் வெறும் இரண்டு ரன்கள் தான். அப்படியும் டீ காக் அதிரடியால் 210 ரன்கள் குவித்தது சூப்பர் ஜெயன்ட்ஸ்.
ஆனால் ஆட்டத்தின் முடிவில் வெறும் இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது கொல்கத்தா அணி.
டீ காக் அதிரடியில் மிரண்டு போய் மிகப்பெரிய இலக்கை துரத்தமுடியாமல் கொல்கத்தா சரணடையக் கூடும் என எதிர்பார்த்தவர்களுக்கு 'நாங்க வேற மாறி' என நிரூபித்தனர் கொல்கத்தா பேட்ஸ்மேன்கள்.
முதல் ஓவரில் வெங்கடேஷ் அய்யரையும் மூன்றாவது ஓவரில் அபிஜித் தோமரையும் இழந்தபோது ஒன்பது ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்திருந்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.
ஆனால் நான்காவது ஓவரை எதிர்கொண்ட நிதிஷ் ராணா ஐந்து பௌண்டரிகளை விளாசி மிரட்டினார். அடுத்த ஓவரிலேயே ஷ்ரேயாஸ் அய்யர் இரண்டு பௌண்டரிகள் ஒரு சிக்ஸர் அடித்து பார்ட்டியில் இணைந்தார். பவர்பிளேவின் கடைசி ஓவரில் ஜாலியாக மூன்று பௌண்டரிகள் விளாசி கொல்கத்தாவின் ஸ்கோர் 60ஐ தொட உதவினார் ராணா.
நிதிஷ் ராணா அவுட் ஆனதும் கொஞ்சமும் நிலைகுலையாமல் அதிரடியை தொடர்ந்தார் ஷ்ரேயாஸ் அய்யர். அவருடன் இணைந்த சாம் பில்லிங்ஸ் தனது பாணியில் சிக்ஸர்கள் வைத்தார். 10 ஓவர்கள் முடிவில் 99 ரன்கள் எடுத்து கொல்கத்தா. இதனால் இலக்கு தொட்டுவிடும் தூரத்திலிருந்தது.
ஷ்ரேயாஸ் அய்யர் 50 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். 13,14,15 என மிடில் ஓவர்களில் அசத்தலாகப் பந்து வீசியது லக்நௌ. இந்த மூன்று ஓவர்களில் வெறும் 9 ரன்கள் மட்டுமே எடுத்து ஷ்ரேயாஸ் விக்கெட்டையும் இழந்து திடீரென தடுமாறியது கொல்கத்தா.
இதனால் ரன்ரேட்டை உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்டு சாம் பில்லங்ஸ் ஆட்டமிழந்தார். தடுமாறிய ரஸ்ஸல் 11 பந்துகளைச் சந்தித்து வெறும் ஐந்து ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
அதன் பிறகு ஜோடி சேர்ந்த சுனில் நரேன் மற்றும் ரிங்கு சிங் ஜோடி லக்நௌ கண்களில் விரலை விட்டு ஆட்டியது.
இருவரும் சிக்ஸர்களில் டீலிங் செய்தனர். கடைசி ஓவரில் வெற்றிக்கு 21 ரன்கள் தேவைப்பட்டது. முதல் மூன்று பந்துகளிலேயே ஒரு பௌண்டரி, இரண்டு சிக்ஸர்கள் என 16 ரன்கள் விளாசினார் ரிங்கு சிங்.
அவர் ஆடிய ஆட்டம் லக்நௌ பந்துவீச்சளர்கள் வயிற்றில் புளியைக் கரைத்தது. கடைசி மூன்று பந்துகளில் வெற்றிக்கு ஐந்து ரன்கள் தேவைப்பட்டது. ஆட்டத்தின் கடைசி ஓவரின் நான்காவது பந்தில் இரண்டு ரன்கள் எடுத்தார் ரிங்கு.
இப்போது வெற்றிக்குத் தேவை 2 பந்துகளில் மூன்று ரன்கள். இரண்டு ரன்கள் எடுத்தால் கூட ஆட்டம் சூப்பர் ஓவருக்குச் சென்றுவிடும்.
இந்த சூழலில் ஸ்டாய்னிஸ் வீசிய பந்தில் ரிங்கு சிங் அடித்த பந்தை அட்டகாசமாக கேட்ச் பிடித்தார் லெவிஸ்.
15 பந்துகளில் 40 ரன்கள் அடித்து மிரட்டல் ஆட்டம் ஆடிய ரிங்கு சோகமாக பெவிலியன் திரும்பினார்.
கடைசி பந்தில் உமேஷ் யாதவை போல்டாக்கி கொல்கத்தா கனவை சிதறடித்தார் ஸ்டாய்னிஸ். 211 ரன்கள் எனும் இலக்கை துரத்தி வெறும் இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது கொல்கத்தா.
200-க்கு மேற்பட்ட ரன்களை துரத்தி இவ்வளவு அருகில் வந்து ஒரு அணி தோல்வியடைவது இதுவே முதல் முறையாகும்.
இந்த வெற்றியின் மூலம் லக்நௌ 18 புள்ளிகளுடன் பாயின்டஸ் இரண்டாமிடத்தை பிடித்தது. பிளே ஆஃப் சுற்றுக்கு அதிகாரபூர்வமாக தகுதி பெற்றது. கொல்கத்தா பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தாலும் ஆறாமிடத்தில் நீடிக்கிறது.
இப்போதைய சூழலில் மும்பை, சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மட்டுமே பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துள்ளன. இந்த மூன்று அணிகள் தான் ஐபிஎல் வரலாற்றில் அதிக கோப்பையை வென்ற அணிகளாகும்.
இந்த ஐபிஎல் சீசனில் அறிமுகமான குஜராத் மற்றும் லக்நௌ அணிகள் பிளே ஆஃபுக்கு தகுதிபெற்றுவிட்டன.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust