அதிமுக ரெட்டை தலைமை: இது முதல் முறையல்ல - ஜானகி, ஜெயலலிதா அணிகளின் சண்டை தெரியுமா?

அ.தி.மு.க.வின் இந்தப் பதவிச்சண்டைக்கான மோதல் வெறி, இப்போதுதான் முதல்முறையாக நடப்பது அல்ல. அந்தக் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ராமச்சந்திரன் 1987 டிசம்பர் 24இல் இறந்த பிறகு அடிதடி ஆரம்பித்தது.
Jayalalitha
JayalalithaTwitter
Published on

அ.தி.மு.க.வின் இப்போதைய அவரா, இவரா என்கிற தலைமை விவகாரத்தில், கட்சித் தலைமையகத்துக்குள் தடையை உடைத்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளே நுழைந்திருக்கிறார். அவர் வருவதற்கு முன்னர் தலைமையகம் அமைந்திருக்கும் சென்னை, ராயப்பேட்டையில் பன்னீர் - பழனிசாமி தரப்பினர் நேரடியாக மோதலில் ஈடுபட்டனர். அந்தப் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார்களை இரு கும்பல்களைச் சேர்ந்தவர்கள் வெறிகொண்டதைப் போல அடித்து உடைத்தனர்.

என்னவாக இருக்கும் என எதிர்பார்ப்பை உண்டாக்கிய உத்தரவுக்கு இணங்க, காவல்துறையினர் இரண்டு தரப்பினரின் வன்முறையையும் வேடிக்கை பார்த்தபடி இருந்தனர்.

அ.தி.மு.க.வின் இந்தப் பதவிச்சண்டைக்கான மோதல் வெறி, இப்போதுதான் முதல்முறையாக நடப்பது அல்ல. அந்தக் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ராமச்சந்திரன் 1987 டிசம்பர் 24இல் இறந்த பிறகு அடிதடி ஆரம்பித்தது. எம்ஜிஆரின் சவ ஊர்வலத்தில் அவரின் உடலருகே இருந்த ஜெயலலிதாவை வாகனத்தைவிட்டு கீழே தள்ளிவிட்டதும் நடந்தது.

அதே ஜெயலலிதா பின்னால் தமிழ்நாட்டின் ஆட்சியைப் பிடித்து மூன்று முறை ஆண்டதெல்லாம் வரலாறாகிப் போனது.

எம்.ஜி.ஆர். எனப்படுகின்ற எம்.ஜி.ராமச்சந்திரன் தன்னுடைய அரசியல் வாரிசு என அறிவிக்காதபோதும், அப்படியொரு கோதாவில்தான் அதிமுகவில் வலம்வந்தார், ஜெயலலிதா. அவரது வருகையை விரும்பாத இரண்டாம் கட்டத் தலைவர்கள் எம்ஜிஆரின் மறைவுக்குப் பிறகு, அவருடைய மனைவி ஜானகியை தலைமைக்குக் கொண்டுவந்தார்கள்.

ஜெயலலிதா தலைமையில் இன்னொரு அணி உருவானது.

ஜானகிக்கு முதலமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்துவைக்கப்பட்டது. அடுத்த 21 நாள்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என கெடு விதித்தார், ஆளுநர் குரானா.

அது ஒரு பக்கம் இருக்க, கட்சிக்குள் ஆதரவை உறுதிப்படுத்திக்கொள்ளப் பொதுக்குழுக் கூட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டது. இல்லையில்லை, ஜானகி, ஜெயலலிதா அணி என இரண்டு பொதுக்குழுக் கூட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

ஆனால், இரண்டு தரப்பினரும் பொதுக்குழுக் கூட்டத்தை நடத்தமுடியாதபடி ஆனது. ஜானகி அணி அவர்களாகவே நடத்தவில்லை. ஜெயலலிதா தரப்பிலோ கூட்டம் நடத்தமுயன்றும் காவல்துறையால் தடுக்கப்பட்டது எனத் தகவல் வெளியானது. ஜெயலலிதா உள்பட அவருடைய தரப்பு தலைவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

ஜானகி அரசாங்கத்துக்குப் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் விதித்த கெடு, 1988 ஜனவரி 28.

சட்டப்பேரவையில் 97 எம்.எல்.ஏ.கள் ஆதரவுடன் இருந்த ஜானகி, வேறுபாடுகளை மறந்து அதிமுகவுக்காக எனக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

பேரவைக் கூட்டம் தொடங்கியதும் ஜெயலலிதா தரப்பு எம்.எல்.ஏக்களை பதவிநீக்கம் செய்வதாக அறிவித்தார், அவைத்தலைவர் பி.எச்.பாண்டியன். அதாவது, நீக்கப்பட்ட எம்.எல்.ஏ.கள் போக மீதமிருந்த 110 எம்.எல்.ஏக்களில் 99 பேர் ஆதரவுடன் ஜானகி அரசாங்கம் வெற்றிபெற்றது.

பேரவைத்தலைவரின் இந்தத் தீர்ப்பை அடுத்து, இரண்டு அணி உறுப்பினர்களும் எதிர்த்தரப்பினர் மீது தாக்குதலில் இறங்கினர். தமிழ்நாட்டுச் சட்டப்பேரவை வரலாற்றிலேயே முதல் முறையாக, காவல்துறையினரைக் கொண்டுவந்து அவையைக் கட்டுப்படுத்த உத்தரவிடப்பட்டது.

அப்போதைய சென்னை காவல்துறை ஆணையர் தேவாரம் தலைமையிலான ஆயுதம் தாங்கிய காவலர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மீது தடியடி நடத்தினர்.

தடியடியிலும், வன்முறையிலும் காயமடைந்த எம்.எல்.ஏக்கள், அவையில் பிடுங்கப்பட்ட மைக்குகள் மற்றும் பிற ஆயுதங்களுடன் அவையிலிருந்து வெளியேறிய காட்சியை, இணையம் மற்றும் தனியார் தொலைக்காட்சிகள் இல்லாத அந்தக் காலகட்டத்தில், அரச தொலைக்காட்சியான தூர்தர்ஷனும், பத்திரிகைகளும் காட்டின.

பேரவையில் நடைபெற்ற இந்த அமளியை அடுத்து, சட்டப்பேரவையைக் கலைக்க உத்தரவிட்டார்,குடியரசுத்தலைவர் ஆர்.வெங்கட்ராமன்.

1989ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டு, ஜானகி அணிக்கு இரட்டைப் புறாவும், ஜெயலலிதா அணிக்குச் சேவல் சின்னமும் ஒதுக்கப்பட்டது.

காங்கிரசுடன் ஜெயலலிதா அணியும், நடிகர் சிவாஜி கணேசன் அப்போது உருவாக்கிய தமிழக முன்னேற்ற முன்னணி என்கிற கட்சியுடன் ஜானகி அம்மையாரின் அணியும் கூட்டணி வைத்துப் போட்டியிட்டன.

ஆட்சியை இழந்துநின்றது, அ.தி.மு.க.

தன்னைவிட தன் கணவர் உருவாக்கிய கட்சியே முக்கியம் எனக் கட்சியிலிருந்தும் அரசியலிலிருந்தும் விலகுவதாக அறிவித்தார், ஜானகி.

அ.தி.மு.க.வின் ஒற்றைத்தலைமையாக அமர்ந்த ஜெயலலிதா, தன் உயிருள்ளவரை அந்தப் பதவியிலேயே இருந்து மறைந்தார்.

Jayalalitha
அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் : மக்கள் மனதில் யார் எதிர்கட்சி தலைவர்? | Vox pop
OPS - EPS
OPS - EPSTwitter

அவர் காலத்தில் அ.தி.மு.க. தலைமைக்கழகத்தைக் கைப்பற்றுவதற்காக உடனிருந்து உறுதுணை செய்த திருநாவுக்கரசர் இன்று காங்கிரஸ் எம்.பி.யாக இருக்கிறார். இன்னொரு முக்கிய தளபதியாக இருந்த கட்டை மீசை சாத்தூர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பின்னர் தி.முக.வில் சேர்ந்து கருணாநிதி அமைச்சரவையிலும் இப்போது ஸ்டாலின் அமைச்சரவையிலும் தொடர்ந்துவருகிறார். ஜானகி அணியின் முக்கிய தலைவராக இருந்த ஈரோடு முத்துசாமிகூட எப்போதோ திமுகவில் சேர்ந்து இப்போது மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சராக இருக்கிறார். ஜெயலலிதாவுக்கு எதிராக ஜானகியைக் கொண்டுவந்து பின்னணி இயக்குநராக இருந்த எம்ஜிஆரின் கணக்குப்பிள்ளை ஆர்.எம்.வீரப்பன், எம்ஜிஆர் கழகம் என்கிற பெயரில் தனியாக இருந்துவருகிறார்.

இப்போதைய அ.தி.மு.க. சண்டைக்காரர்கள் இனி என்ன ஆவார்கள் என்பதைக் காலம்தான் சொல்லவேண்டும்!

Jayalalitha
கலக பூமியான ADMK அலுவலகம் : அதிமுக பொதுக்குழுவுக்கு தடை இல்லை - உயர் நீதிமன்றம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com