எம்ஜிஆர் முதல் எடப்பாடி வரை: பிளவால் உருவான அதிமுக கட்சியின் வரலாறு - விரிவான தகவல்

அதிமுக என்ற பெயரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று எம்ஜிஆர் மாற்றினார். இதை கட்சிக்குள் சிலர் ஏற்கவில்லை. பின்னர் பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுவதாக அறிவித்த பின் எல்லோரும் ஏற்றுக் கொண்டனர்.
எம்ஜிஆர் - எடப்பாடி பழனிசாமி
எம்ஜிஆர் - எடப்பாடி பழனிசாமிCanva

அஇஅதிமுக என்றழைக்கப்படும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பது தமிழகம் மற்றும் புதுச்சேரி யூனியனில் செல்வாக்கு கொண்ட ஒரு பிராந்திய கட்சியாகும். பெயரில் இந்தியா இருந்தாலும் இது தமிழ்நாட்டில் மட்டுமே செல்வாக்கு பெற்ற கட்சி.

அறிஞர் அண்ணா புற்றுநோயால் இறந்ததற்கு பிறகு கலைஞர் மு.கருணாநிதி திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் முதலமைச்சரானார். அப்போது திமுகவில் பொருளாளராக இருந்த எம்ஜிஆர் கட்சி கணக்கு கேட்டற்காக கலைஞர் அவரை கட்சியிலிருந்து நீக்கினார். அதன் பிறகு 17 அக்டோபர் 1972 அன்று மதுரையில் எம்ஜிஆரால் அதிமுக துவங்கப்பட்டது. இக்கட்சி தமிழகத்தில் ஏழு முறை பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்திருக்கிறது. தற்போது தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாகவும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அங்கமாகவும் இக்கட்சி இருக்கிறது.

வரலாறு:

அனகாபுத்தூர் இராமலிங்கம் என்பவர் அ.தி.மு.க. என்ற பெயரில் ஒரு கட்சியை பதிவு செய்திருந்தார். அந்தக் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு எம்ஜிஆர் அதிமுகவிற்கு தலைமை தாங்கினார். கட்சிப் பதிவை விட்டுக் கொடுத்ததற்காக அனகாபுத்தூர் இராமலிங்கத்திற்கு மேல்சபை உறுப்பினர் (எம்.எல்.சி) பதவியும் அளித்தார். பின்னர் இக்கட்சி அ.இ.அ.தி.மு.க எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

கட்சிக்கொடியை நடிகர் பாண்டு எம்ஜிஆரின் வழிகாட்டுதலோடு உருவாக்கினார். அதிமுக என்ற பெயரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று எம்ஜிஆர் மாற்றினார். இதை கட்சிக்குள் சிலர் ஏற்கவில்லை. பின்னர் பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுவதாக அறிவித்த பின் எல்லோரும் ஏற்றுக் கொண்டனர்.

எம்.ஜி.ஆர். காலம்:

21.10.1972ம் ஆண்டு திமுகவை சேர்ந்த எம்.எல்.ஏக்கள் பலர் அதிமுகவில் தங்களை ஐக்கியப் படுத்திக் கொண்டனர். அதில் முக்கியத்துவம் வாய்ந்தவர் திருவள்ளூர் தொகுதி எம்.எல்.ஏ துரைராஜ். தீவிர எம்.ஜி.ஆர் ரசிகனான அவர் தொகுதி மக்களுடன் இதுபற்றி ஆலோசனை நடத்தியதற்கு பின்பு அதிமுகவில் தன்னை இணைத்துக்கொள்ள தயாரானார். இந்த சூழலில் திமுகவினர் கட்சி தாவுவதை எதிர்த்து திமுகவினரே பேருந்துக்களை கொளுத்தி, தகராறில் ஈடுபட்டனர்.

அதன் பிறகு சென்னை கடற்கரையில் நடந்த பிரமாண்டமான கூட்டத்தில் அதிமுகவின் தொடக்கம் பற்றியும், அதிமுகவின் வருங்காலம் பற்றியும் எம்.ஜி.ஆர் பேசினார். ஆரம்பம் முதலே எம்.ஜி.ஆருக்கு உறுதுணையாக இருந்து வந்த ஜேப்பிஆரும், முசிறி புத்தனும் இக்கூட்டத்துக்கான ஏற்பாடுகளை சிறப்பாகச் செய்திருந்தனர். இக்கூட்டத்தில் திமுகவிலிருந்து விலகி, காளிமுத்து, முனு ஆதி, துரைராஜ், எட்மண்ட் ஆகியோர் எம்.ஜி.ஆர். முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.

மெல்ல மெல்ல அதிமுக வளர்ச்சியை பெற்றுக் கொண்டிருந்தது. 1973ம் ஆண்டு திண்டுக்கல் தொகுதி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜாங்கம் மரணமடைந்தார். அதன் பிறகு அத்தொகுதிக்கு மே 20ம் தேதி தேர்தல் என்று அறிவிக்கப்பட்டது. அந்த சமயத்தில் தான் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படம் வெளியாக காத்திருந்தது. திமுகவுக்கு எதிராகக் களம் இறங்கியதால் ’உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தை வெளியிட திமுக அரசு தடையாக இருந்தது.

ஆனால் எம்.ஜி.ஆரோ அதை பற்றியெல்லாம் கவலைப்படாமல், தேர்தல் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அதிமுக காணும் முதல் தேர்தல் அது தான்.

அதிமுக சார்பில், தொகுதி வேட்பாளராக வழக்கறிஞர் மாயத்தேவர் அவர்கள் நிறுத்தப்பட்டார். மே 11ம் தேதி, உலகம் சுற்றும் வாலிபனை வெளியிட எம்.ஜி.ஆர் முடிவு செய்து போஸ்டர்களை ஒட்ட உத்தரவிட்டார்.

ஆனால் அப்போது அப்படத்திற்கு மட்டும் போஸ்டர்கள் மீதான வரியை சென்னை மாநகராட்சி மூலம் திமுக அரசு உயர்த்த, சென்னையைத் தவிர்த்து இதர நகரங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. திண்டுக்கல் தேர்தலோ மே 20, படம் வெளியீடு மே 11. இரண்டுக்கும் 9 நாட்கள் தான் வித்தியாசம். 5.2 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட அத்திரைப்படத்தை எம்.ஜி.ஆரே இயக்கியும், தயாரித்தும் வெளியிட்டார்.

இது எல்லாம் ஒரு பக்கம் நடக்க, திண்டுக்கல் தொகுதி தேர்தலில் திமுக வெற்றி பெற அமைச்சர்கள் அனைவரும் களமிறக்கப்பட்டனர். முதலமைச்சர் கருணாநிதி கிராமம் கிராமமாக சென்று பிரச்சாரம் செய்தார். எம்.ஜி.ஆரோ அனல் பறக்கும் பிரச்சாரத்தை மேற்கொண்டார். தேர்தலில் அதிமுகவே வென்றது!

இதன்பிறகு இந்திராகாந்தியால் கொண்டு வரப்பட்ட எமர்ஜென்சி காலத்தில் திமுக ஆட்சி சட்டவிரோதமாகக் கலைக்கப்பட்டது. 1977இல் நடைபெற்ற தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் மார்க்சிஸ்டு கட்சி, ஃபார்வார்டு பிளாக், முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட அதிமுக பெரும்பாலான இடங்களில் வெற்றி கண்டது. நான்குமுனைப் போட்டியில் திமுக மொத்தம் 234 இடங்களில் வெறும் 48 இடங்களை மட்டும் பெற்றது.

எம்ஜிஆர் - எடப்பாடி பழனிசாமி
அதிமுக ஒற்றை தலைமை: இது முதல் முறையல்ல - ஜானகி, ஜெயலலிதா அணிகளின் சண்டை தெரியுமா?

ஜெயலலிதா காலம்:

தமிழக முதல்வராக இருந்த எம்ஜிஆர் டிசம்பர் 24, 1987இல் மரணமடைந்தார். அவருக்கு பின் யார் தலைமை தாங்குவது என்ற கோஷ்டிச் சண்டை நடந்தது. ஆர்.எம்.வீரப்பனின் ஆதரவுடன் எம்ஜிஆரின் மனைவி வி.என்.ஜானகி தலைவராகவும் முதல்வராகவம் ஆனார். அதை ஜெயலலிதா ஏற்கவில்லை. 132 சட்டமன்ற உறுப்பினர்களில் 33 பேர் ஜெயலலிதாவை ஆதரித்தனர். மற்றவர்கள் ஜானகியை ஆதரித்தனர். சட்டமன்ற பேரவைத் தலைவர் பி.எச்.பாண்டியனும் ஜானகியை ஆதரித்தார்.

பிறகு ஜனவரி 26, 1988 இல் சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. இதில் ஜெயா கோஷ்டியும், ஜானகி கோஷ்டியும் மோதிக் கொண்டனர். 111 உறுப்பினர்களுடன் ஜானகி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் சட்டமன்றத்தில் கலவரம் நடைபெற்றதால் ஒன்றிய அரசு ஜானகி ஆட்சியைக் கலைத்தது.

ஜனவரி 21, 1989 இல் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக வென்றது. அதன்பின் திமுக அரசும் பிரதமர் சந்திரசேகர் ஆட்சியால் சட்டவிரோதமாகக் கலைக்கப்பட்டது. 1991 இல் அடுத்த சட்ட மன்றத் தேர்தல் நடைபெற்றது. தேர்தலுக்கு முன்பாக சென்னை பூந்தமல்லியில் ராஜிவ் காந்தி விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டதால் எழுந்த அனுதாபத்தை வைத்து அதிமுக ஜெயலலிதா தலைமையில் வென்றது. அதன் பிறகு அவரது தலைமையில் 2001, 2011, 2016 ஆகிய தேர்தல்களில் அதிமுக வென்றது. ஜெயலலிதா முதலமைச்சர் ஆனார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகுஅவரது இறுதிக் காலத்தில் சொத்துக்குவிப்பு வழக்கில் அவர் குற்றம் சாட்டப்பட்டார். அந்த வழக்கில் 20 ஆண்டுகளாக வாய்தா வாங்கி தப்பி வந்த ஜெயலலிதா 5 டிசம்பர் 2016 இல் மறைந்த பிறகு குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். இரண்டாவது குற்றவாளியாக சசிகலா அறிவிக்கப்பட்டார்.

ஜெயாவின் மறைவுக்குப் பிறகு கட்சி பாஜகவின் கட்டுப்பாட்டில் வந்தது. 6 டிசம்பர் 2016 அன்று அதிகாலை 1 மணிவாக்கில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றது. அதற்குப் பின்னர் 29 டிசம்பர் 2016 அன்று அதிமுகவின் பொதுக்குழு உறுப்பினர்கள் ஒன்றுகூடி அதிமுகவின் பொதுச்செயலாளராக வி.கே.சசிகலாவை ஒருமனதாக தேர்ந்தெடுத்தனர்.

7 பிப்ரவரி 2017 அன்று செய்தியாளர்களை சந்தித்த பொறுப்பு முதல்வர் பன்னீர்செல்வம் தன்னைக் கட்டாயப்படுத்தியதால் பதவி விலகல் கடிதத்தை அளித்ததாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அவரை கட்சியின் பொருளாளர் பதவியிலிருந்து நீக்குவதாக சசிகலா அறிவித்தார். மேலும் ஓபிஎஸ்இன் ஆதரவாளர்கள் அனைவரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்.

பிறகு சசிகலா தன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் அணி மாறாமல் இருப்பதற்காக அவர்களை கூவத்தூர் சொகுசு விடுதியில் தங்க வைத்தார். அதை வைத்து ஆட்சி அமைக்கவும் உரிமை கோரினார். ஆளுநரோ பாஜக திட்டப்படி அமைதி காத்து வந்தார். அந்நேரத்தில் சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா இரண்டாவது குற்றவாளி என தீர்ப்பு உச்சநீதிமன்றத்தில் அளிக்கப்பட்டு 4 ஆண்டு சிறை தண்டனை அளிக்கப்பட்டது.

அவர் சிறை செல்லும் முன்பு எடப்பாடி பழனிச்சாமியைச் சட்டமன்றக் குழுத் தலைவராகவும், டி.டி.வி. தினகரனை துணைப் பொதுச்செயலாளராகவும் நியமித்தார். பிறகு 124 எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் எடப்பாடி முதல்வராக பதவியேற்றார்.

எடப்பாடி பழனிசாமி முதல்வராய் பதவியேற்று 6 மாதங்களில் ஓ.பன்னீர் செல்வம் அணி மீண்டும் எடப்பாடி தலைமையிலான கட்சியில் இணைந்தது. இந்த இணைப்பை தமிழக ஆளுநர் புரோகித் செய்து வைத்தார். ஓபிஎஸ் துணை முதல்வராகவும், கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும் ஆக்கப்பட்டார். சசிகலாவால் நீக்கப்பட்ட அனைவரும் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டனர். மேலும் சிறையிலிருந்த சசிகலா மற்றும் அவரது ஆதரவாளர்கள் அனைவரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்.

தற்போது கட்சி மூன்று அணிகளாக இருக்கிறது. எடப்பாடி அணி, ஓபிஎஸ் அணி, சசிகலா - தினகரன் அணி என மூன்றாக பிரிந்திருக்கிறது. தற்போது கட்சிக்கு ஒன்றைத்தலைமை வேண்டுமென எடப்பாடி தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்ள ஓபிஎஸ் அதை மறுத்து சட்டப் போராட்டம் செய்து கொண்டிருக்கிறார். சசிகலாவா தனியாய் பிரச்சாரம் செய்து வருகிறார். இப்போதைக்கு எடப்பாடி அணி கை ஓங்கி இருந்தாலும் எதிர்காலத்தில் என்ன நடக்கும், பாஜகவின் திட்டம் என்ன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

எம்ஜிஆர் - எடப்பாடி பழனிசாமி
அதிமுக பொதுக்குழு வரலாறு: அன்று முடிக்க சொன்னார்,இன்று வெடிக்க சென்றார் - OPS vs EPS அலசல்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com