Morning News Today: சென்னை அயோத்தியா மண்டப விவகாரம் - வானதி சீனிவாசனுக்கு முதல்வர் பதில்

அயோத்தி மண்டபம் விவகாரத்தில் அரசியலைப் புகுத்தி, அதன்மூலமாக கட்சியைப் பலப்படுத்த வேண்டும் என நினைத்தால் அது நடக்கவே நடக்காது - ஸ்டாலின் பதில். இன்றைய முக்கிய செய்திகளை இங்கு தெரிந்துகொள்ளுங்கள்
CM Stalin
CM StalinTwitter
Published on

சட்டசபை: சென்னை அயோத்தியா மண்டப விவகாரம் - வானதி சீனிவாசனுக்கு முதல்வர் பதில்!

தமிழக சட்டசபையில் நேற்று பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பேசியபோது, சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள அயோத்தியா மண்டபத்தை இந்து சமய அறநிலையத்துறை சட்ட விதிகளை முறையாகப் பின்பற்றாமல் கையகப்படுத்தியிருக்கிறது என்றார். அதையொட்டி அவர் பேசிய சில கருத்துகள் அக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. பின்னர், இதற்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பதிலளித்துப்பேசினார். பின்னர், முதல்வர் ஸ்டாலின் இதுகுறித்துப் பேசுகையில், " உறுப்பினருக்கு அன்பான வேண்டுகோள். ஏழை மக்களைப் பாதிக்கக்கூடிய பிரச்சினைகளில் நீங்கள் கொஞ்சம் அதிகம் கவனம் செலுத்துங்கள். இந்த விவகாரத்தில் அரசியலைப் புகுத்தி, அதன்மூலமாக கட்சியைப் பலப்படுத்த வேண்டும் என நினைத்தால் அது நடக்கவே நடக்காது" என்றார்.

டோர்னியர் 228
டோர்னியர் 228Twitter

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் விமானம் இயக்கம்!

`மேக் இன் இந்தியா’ திட்டத்தின்கீழ் இந்தியாவில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் இலகுரக விமானம் ‘டோர்னியர் 228’. இந்த விமானம் 17 இருக்கைகள் மட்டுமே கொண்ட சிறிய விமானம். பொதுத்துறை விமான நிறுவனமான அல்லயன்ஸ் ஏர் நிறுவனத்துக்குச் சொந்தமான இந்த விமானம், நேற்று முதல் முறையாகத் தனது வர்த்தக போக்குவரத்தைத் தொடங்கியது. அசாம் மாநிலம் திருப்ருகரில் புறப்பட்ட இந்த விமானம் அருணாசலப்பிரதேச மாநிலம் பாசிகாட் விமான நிலையத்தில் தரை இறங்கியது.மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்யா அதில் பயணம் செய்தனர்.

நிதிஷ் குமார்
நிதிஷ் குமார்Twitter

பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் நிகழ்ச்சியில் வெடிவிபத்து!

பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார், மாநிலத்தில் பொதுமக்களைச் சந்தித்து உரையாடும் நிகழ்ச்சியில் தொடர்ச்சியாகப் பங்கேற்றுவருகிறார். ‘ஜன் சம்வத்’ என்று அழைக்கப்படும் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கத் தனது சொந்த மாவட்டமான நாளந்தாவுக்குச் சென்றார். அங்குள்ள சிலாவ் பகுதியில், காந்தி உயர்நிலைப்பள்ளியில் ‘ஜன் சம்வத்’ நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நிதிஷ் குமார் அங்கு வந்தவுடன் அவர் இருந்த இடத்துக்கு சில மீட்டர் தூரத்தில் வெடிவிபத்து ஏற்பட்டது. அதில் அவருக்குப் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. அதையொட்டி பரபரப்பு ஏற்பட்டது. பிறகு காவல்துறை ஒருவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல, கடந்த மாதம், தலைநகர் பாட்னா அருகே உள்ள பக்தியார்பூருக்கு நிதிஷ்குமார் சென்றார். அப்போது, மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர், நிதிஷ்குமார் கன்னத்தில் அறைந்தார். அதன்பிறகு தற்போது இந்த சம்பவம் நடந்துள்ளதால் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

India - China
India - ChinaTwitter

சீனாவின் ஷாங்காய் நகரில் ஊரடங்கு - இந்தியத் தூதரக சேவைகள் நிறுத்தம்!

சீனாவில் கடந்த சில மாதங்களாகக் கட்டுப்பாட்டிலிருந்த கொரோனா தற்போது பல மடங்கு வேகமாகப் பரவி வருகிறது. இதனால்,

ஷாங்காய் நகரில் கடும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் வீடுகளை விட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 3 வாரங்கள் இந்த கடுமையான ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அங்குச் செயல்பட்டு வரும் இந்தியத் துணைத் தூதரகம், தற்காலிகமாகத் தனது சேவைகளை நிறுத்திக்கொள்வதாகத் தெரிவித்திருக்கிறது. தூதரக அதிகாரிகள் அலுவலகத்திலிருந்தே சேவைகளைத் தொடர்வார்கள் என்றும், சேவைக்கான எண்களையும் (+86 189 3031 4575/ 183 1716 0736). பகிர்ந்துள்ளனர்.இந்தியக் குடிமக்கள் அவசர தூதரக சேவைகளைப் பெற பீஜிங்கில் உள்ள இந்திய தூதரகத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போரிஸ் ஜான்சன்
போரிஸ் ஜான்சன்Twitter

கொரோனா விதிமுறையை மீறி விருந்து நிகழ்ச்சி: இங்கிலாந்து பிரதமருக்கு அபராதம்!

இங்கிலாந்தில் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா ஊரடங்கு அமலிலிருந்தபோது விதிமுறைகளை மீறி பிரதமர் இல்லம் மற்றும் அலுவலகத்தில் விருந்து நிகழ்ச்சிகள் நடைபெற்றாக குற்றச்சாட்டு எழுந்தது. பிரதமர் அலுவலகத்தில் அதிக அளவில் அரசு ஊழியர்கள் திரண்டு, பிரதமர் போரிஸ் ஜான்சனின் பிறந்தநாள் விருந்து நிகழ்ச்சி நடத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்துக்காக, நாடாளுமன்றத்தில் பிரதமர் போரிஸ் ஜான்சன் பகிரங்க மன்னிப்பு கோரினார். இந்த சம்பவத்துக்காக, அவர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், கொரோனா விதிமுறையை மீறி நடந்த விருந்து நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டதற்காகப் பிரதமர் போரிஸ் ஜான்சன், நிதியமைச்சர் ரிஷி சுனக் இருவருக்கும் காவல்துறை அபராதம் விதிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

CM Stalin
IPL 2022 : இது Beast Mode ! RCB-ஐ அடித்து நொறுக்கி என்ட்ரி கொடுத்த CSK
ஜடேஜா, மகேஷ் தீக்‌ஷனா
ஜடேஜா, மகேஷ் தீக்‌ஷனாTwitter

ஐபிஎல் போட்டிகள் நிலவரம்:

நேற்று நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 23 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இன்று நடைபெறும் போட்டியில், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

CM Stalin
Beast FDFS Review: பீஸ்ட் படம் தளபதிக்கு துப்பாக்கி 2

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com