அட்சய திருதியை நாள் நல்ல பலன்களையும் வெற்றியையும் தரும் என்று நம்பப்படுகிறது. மங்களகரமான நீண்டகால சொத்துகள், தங்கம், வெள்ளி போன்றவை வாங்க உகந்த நாளாகவும் கருதப்படுகிறது. இதையொட்டி தங்க நகைக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. இதையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதியது. இதனால் நேற்றைய தினம் மட்டும் 18 டன் நகைகள் விற்பனையாகி இருப்பதாகத் தெரிகிறது. இது கடந்த ஆண்டைவிட 30 சதவிகிதம் தங்கம் விற்பனை அதிகரித்திருக்கிறது.
பிரதமர் மோடி, அரசு முறைப்பயணமாக ஐரோப்பிய நாடுகளான ஜெர்மன், டென்மார்க், பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்குச் சென்றுள்ளார். நேற்று முன்தினம் ஜெர்மனி தலைநகர் பெர்லின் சென்றார். அங்கு அவர் அந்த நாட்டின் பிரதமர் ஒலாப் ஸ்கோல்ஸை சந்தித்துக் பேச்சுவார்த்தை நடத்தினார். அதையொட்டி ஜெர்மன்- இந்தியா இடையே 9 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. ஜெர்மனி பயணத்தைத் தொடர்ந்து பிரதமர் மோடி டென்மார்க் சென்றார். கோபன்ஹேகன் நகரில் பிரதமர் மோடியும், டென்மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்சனும் நேற்று சந்தித்துக் கொண்டனர். அதைத் தொடர்ந்து டென்மார்க் மற்றும் இந்தியா இடையே 9 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
தமிழக சட்டமன்றத்தில், கடந்த மார்ச் 18-ல் பொது பட்ஜெட், மறுநாள் வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. அதையொட்டிய விவாதங்கள் முடிந்த பிறகு, ஏப்ரல் 6-ம் தேதி தொடங்கி துறை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 39 துறைகள் மீதான கோரிக்கை விவாதங்கள் நடந்து முடிந்திருக்கின்றன. இந்நிலையில், சனி, ஞாயிறு, ரம்ஜான் விடுமுறைகள் எனத் தொடர்ந்து 4 நாள் விடுமுறைக்குப் பிறகு தமிழக சட்டமன்றம் இன்று மீண்டும் கூடுகிறது. இந்து சமய அறநிலையத்துறை, தகவல் தொழில்நுட்பவியல் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடக்கிறது.
சென்னை புரசைவாக்கம் கெல்லீஸ் சந்திப்பில் போலீஸார் வாகன சோதனையின்போது கஞ்சா மற்றும் கத்தியுடன் கைதான விக்னேஷ் போலீஸ் காவலில் விசாரணையில் இருந்தபோது திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார். இதேபோல, திருவண்ணாமலை மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்ட தங்கமணி என்ற விசாரணைக் கைதியும் உயிரிழந்தார். அடுத்தடுத்து நடந்த இந்த 2 சம்பவங்களும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இந்த இருவரையும் விசாரித்த போலீஸார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணையில் உள்ளது. இந்நிலையில், தமிழக டிஜிபி சைலேந்திர பாபு வெளியிட்டுள்ள உத்தரவில், "விசாரணை கைதிகளை இரவு நேரங்களில் போலீஸ் நிலையங்களில் வைத்து விசாரணை நடத்தக்கூடாது. கைது செய்யப்பட்டவர்களை மாலை 6 மணிக்குள் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க வேண்டும் என்றும் அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கும் வாய்மொழி உத்தரவு விடப்பட்டுள்ளது."
கடந்த மார்ச் மாதம் 9-ந் தேதி, இந்தியாவில் 12 முதல் 17 வயது வரையிலான குழந்தைகளுக்கான கோவோவேக்ஸ் தடுப்பூசிக்கு, அவசர பயன்பாட்டு அனுமதியை இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு வழங்கியது. இந்தத் தடுப்பூசி தனியார் தடுப்பூசி மையங்களில் கிடைக்கும் எனவும் இதன் விலை ரூ.900 மற்றும் ஜி.எஸ்.டி.யுடன் சேவை கட்டணம் ரூ.150 செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள, புனே இந்திய சீரம் நிறுவனத்தின் தலைவர் ஆதர் பூனவாலா, "நோவோவாக்ஸ் நிறுவனத்தார் உருவாக்கிய கோவோவாக்ஸ் தடுப்பூசி, இந்தியாவில் இப்போது குழந்தைகளுக்கு கிடைக்கிறது.இது இந்தியாவில் தயாரிக்கப்படுகிற ஒரே தடுப்பூசி. இது ஐரோப்பாவிலும் விற்கப்படுகிறது. இந்தத் தடுப்பூசி 90 சதவிகிதத்துக்கும் அதிகமான செயல்திறன் கொண்டது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இன்று நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn: https://www.newssensetn.com/
Nalam360 : https://www.newssensetn.com/health
Newsnow: https://www.newssensetn.com/wow-news
Tamilflashnewsapp: https://www.newssensetn.com/tamilnadu