திருச்சி சிவா சொன்ன உப்புமா கதை - ஒரு அடடே சம்பவம்

மாணவர்கள் அனைவரும் ஒற்றுமையாக இல்லாத காரணத்தினால் மீண்டும் உணவகத்தில் 23 சதவீத பெரும்பான்மை வாக்கோடு உப்புமா நுழைந்துவிட்டது.
திருச்சி சிவா
திருச்சி சிவாட்விட்டர்
Published on

இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவையில், குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தில், பிப்ரவரி 8ஆம் தேதி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான திருச்சி சிவா பல காத்திரமான கருத்துக்களையும், கடைசியில் ஒரு நகைச்சுவையான கதையையும் சொல்லி நிறைவு செய்தார். இனி அவர் பேசிய உரையில் இருந்து...

"இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களின் உரை, இந்த அரசின் எதிர்காலக் கொள்கைகளை விவரிப்பதாக அமைந்திருந்தன. ஒரு விஷயத்துக்காக குடியரசுத் தலைவரை நான் பாராட்ட விரும்புகிறேன். அவர் அரசாங்கம் கொடுத்த உரையில் எந்த ஒரு மாற்றத்தையும் மேற்கொள்ளாமல், எந்த ஒரு பத்தியையும் ஒதுக்கி விடாமல், தனக்கு விருப்பமானதைச் சேர்த்துப் பேசாமல் அப்படியே வாசித்தார்.

அவர் ஒரு முன்மாதிரியை உருவாக்கி இருக்கிறார். தமிழ்நாடு மாநிலத்தின் ஆளுநர் செய்ததைப் போல இவர் எதையும் செய்யவில்லை. எனவே அவர் ஒரு நல்ல முன்மாதிரியை உருவாக்கி இருக்கிறார் என என் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த அரசு ஆட்சிப் பொறுப்பிற்கு வந்து கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் நிறைவடைய வருகின்றன. ஆளும் தரப்பினரும் சரி, எதிர்தரப்பினரும் சரி கடந்த ஆண்டுகளில் என்ன நடந்திருக்கின்றன என்பதை திரும்பிப் பார்க்க வேண்டும்.

இதற்கு முன் இந்த நாடு எப்படி இருந்தது, இன்று இந்த நாடு எப்படி இருக்கிறது? என்பதைப் பார்க்க வேண்டும். முன்பு இந்த நாட்டில் பன்முகத்தன்மை மற்றும் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய ஒருமைப்பாடு இருந்தது. தற்போது இந்த நாட்டில் துன்ப நிலையும், மனிதர்களை ஒதுக்கும் நிலையும் நிலவுகிறது.

முன்பு இந்த நாட்டில் ஒற்றுமை நிலவியது, இன்று இந்த நாட்டில் எல்லாமே ஒன்றுதான் என்கிற யுனிஃபார்மிட்டி நிலவுகிறது. கூட்டாட்சித் தத்துவம் மற்றும் மதச்சார்பின்மை கரைந்துவிட்டது. ஆட்சிக்கு எதிரான, ஆட்சியாளர் மீதான எதிர்ப்புகள் குற்றமாக்கப்பட்டிருக்கிறது.

ஜனநாயக தத்துவத்தில், எதிர்ப்பு என்பது ஒரு மிக முக்கியமான அங்கம். ஜனநாயகம் என்பது பெரும்பான்மையான மக்களின் சட்டம் அல்ல, அது மைனாரிட்டி சமூகத்தினருக்கான பாதுகாப்பு என பிரெஞ்ச் அறிஞர் ஒருவர் கூறினார். இந்த நாட்டில் மொழி ரீதியாகவும், மதரீதியாகவும் மைனாரிட்டிகளாக இருக்கும் மக்களை ஒரு வித பயம் சூழ்ந்திருக்கிறது.

திருச்சி சிவா
கனிமொழி : பாஜக அரசு இல்லாத மாநிலங்கள், ஆளுநரோடு போராடி வருகின்றன

இந்த அரசு பணக்காரர்களுக்கு சாதகமான கொள்கைகளையும், ஏழைகளுக்கு எதிரான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் அமைப்பின் உருவமாகத் திகழ்கிறது.

2047 ஆம் ஆண்டுக்குள் சுய சார்பு நிலையையும், மனிதாபிமான கடமைகளையும் நிறைவேற்றும் அளவுக்கு இந்தியாவை கட்டமைக்க வேண்டும். ஏழ்மை இல்லாத, நடுத்தர மக்களும் வளர்ந்து செழிக்கும் வகையிலான பாரதத்தை உருவாக்க வேண்டும் என குடியரசுத் தலைவர் தன் உரையில் குறிப்பிட்டு இருந்தார்.

உலக அரங்கில் இந்தியா 5ஆவது மிகப்பெரிய பொருளாதாரம் என்று மார்தட்டிக் கொள்கிறோம். ஆனால் இந்தியாவில் இன்னமும் ஏழ்மை இருக்கிறது, நடுத்தர மக்கள் இன்னும் வளர்ந்து செழிப்படைய வேண்டும் என குடியரசுத் தலைவரே தன் உரையில் குறிப்பிடுகிறார்.

பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியில் பெட்ரோல் & டீசல் எரிபொருட்களின் விலை கடந்த காலங்களில் 78 முறை உயர்த்தப்பட்டிருக்கிறது. கடந்த 2018 முதல் 2021 ஆம் ஆண்டு வரையான காலத்தில் மட்டும் சுமார் 8 லட்சம் கோடி ரூபாயை பெட்ரோல் டீசல் மீதான விலை ஏற்றம் மூலமாக மட்டும் வருமானம் ஈட்டி இருக்கிறது இந்த அரசு.

சரி அடிப்படை எரிபொருள் மீதான வரி ஏற்றத்தின் மூலம் இத்தனை லட்சம் கோடிகளை ஈட்டிய அரசு அதை எப்படி செலவழித்தது? இதற்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட சில தரவுகள் பதில்களாக வந்தமைகின்றன. 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் இரண்டு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான மோசமான கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கின்றன.

இந்தியா விவசாயத்தை சார்ந்து வாழும் மக்கள் அதிக அளவில் இருக்கும் நாடு. இந்த அரசு விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் என்று கூறியது. அப்படி எதுவும் நடக்கவில்லை, மாறாக உரங்களின் விலை அதிகரித்திருக்கின்றன. யூரியாவின் விலை அதிகரிக்கவில்லையே ஒழிய ஐம்பது கிலோ கொடுக்கப்பட வேண்டிய இடத்தில் 45 கிலோ மட்டுமே கொடுக்கப்படுகின்றன.

சில தினங்களுக்கு முன் துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக சுமார் 4,500 பேர் உயிரிழந்தனர். அதற்கு நம் அவை உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் வருத்தத்தை பதிவு செய்தனர். இதே இந்தியாவில் 2020 ஆம் ஆண்டில் மட்டும் 5,579 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். நாளொன்றுக்கு 15 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்பதை இந்த தரவு நமக்கு உணர்த்தும் உண்மை. ஆனால் நாம் நம்மை ஒரு விவசாய நாடு என்று அழைத்துக் கொள்கிறோம்.

இந்த நாடு, இப்போதும் சரி இதற்கு முன்பும் சரி பல்வேறு பொருளாதார நெருக்கடிகள் ஏற்படும் போதெல்லாம் விவசாயத் துறை மற்றும் பொதுத் துறை நிறுவனங்களால் தான் இந்த நாட்டின் பிரச்சனைகளை சமாளித்த கடந்து வர முடிந்திருக்கிறது. ஆனால் இன்று இந்த இரண்டு துறைகளுமே இலக்கு வைக்கப்பட்டு இருக்கின்றன.

இந்த அரசு கொண்டுவரும் எல்லா கொள்கைகளும் பணக்காரர்கள் மற்றும் கார்ப்பரேட்டர்களுக்கு சாதகமானவைகளாகவே இருக்கின்றன. இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு சுமார் 633 பில்லியன் அமெரிக்க டாலரில் இருந்து, சுமார் 545 பில்லியன் அமெரிக்க டாலராக சரிந்திருக்கிறது. இது கடந்த 2022 செப்டம்பர் 16ஆம் தேதி நிலவரப்படியான தரவுகள்.

கடந்த 2022 மே மாத காலத்தில், இந்திய நிதி அமைச்சகத்தின் அறிக்கை ஒன்று வெளியானது. அதில் பணவீக்கப் பிரச்சனை நடுத்தர மக்கள் மீது ஏற்படுத்தும் தாக்கத்தை விட, கீழ் தட்டு மற்றும் அடித்தட்டு மக்கள் மீது குறைவான தாக்கமே இருப்பதாகக் கூறுகிறது. ஆனால் அந்த காலகட்டத்தில் தான் இந்தியாவின் பண வீக்கம் 7.95 சதவீதமாக இருந்தது. இது கடந்த 95 மாதங்களில் இல்லாத அளவுக்கு புதிய உச்சம் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு, நேரடியாக பணவீக்கப் பிரச்னைகள் எதிரொலிக்கும், இப் பிரச்சனைகளை ஏழை மக்களே எதிர்கொள்வர் என்பதை பொருளாதாரம் குறித்து அதிகம் படிக்காத நபர்கள் கூட எளிதாகப் புரிந்து கொள்ள முடியும்.

இந்தியாவின் ஜிடிபி உயர்கிறது பொருளாதாரம் வளர்கிறது என ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் கூறுகிறார்கள். ஆனால் ஒட்டுமொத்த இந்தியாவின் செல்வத்தில் சுமார் 40% செல்வம் இந்த நாட்டைச் சேர்ந்த ஒரு சதவீத மக்கள் மட்டுமே ஈட்டி இருக்கிறார்கள்.

திருச்சி சிவா
திருச்சி சிவா உருக்கம் : சிறுபான்மையினர் மனதில் பயத்தை விதைக்கக்கூடாது

கடந்த 3 - 4 நாட்களாக இந்திய நாடாளுமன்றம் செயல்படவில்லை. இதை நாங்கள் வேண்டும் என்று செய்யவில்லை. அது எங்கள் நோக்கமும் இல்லை. இந்திய நாடாளுமன்ற அவைகள் நல்ல விதத்தில் செயல்பட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கான பொறுப்பு வெறுமனே எதிர்க்கட்சிகளின் கைகளில் மட்டும் இல்லை, ஆளும் கட்சி தரப்பினர்களின் கைகளிலும் இருக்கிறது.

இந்தியாவில் உள்ள பல்வேறு ஊடகங்கள் உட்பட பல தரப்பினரும் அதானி விவகாரத்தை தொடர்ந்து விவாதித்து வருகிறார்கள். அது குறித்து அரசு தறப்பு ஏன் இதுவரை வாய் திறக்கவில்லை. அந்த விவகாரத்தை விசாரிக்க ஒரு ஜே பி சி-யைக் (நாடாளுமன்ற கூட்டுக் குழு) கேட்டோம். அது ஜனநாயகத்தில் இருக்கும் ஒரு நடைமுறை தானே? ஆளும் அரசு ஏன் அதைச் செய்ய மறுக்கிறது?

அதையெல்லாம் செய்வதை விட்டுவிட்டு, எதிர்க்கட்சியினர் நாடாளுமன்ற அவைகளை நடத்த விடாமல் தொந்தரவு செய்கிறார்கள், மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கிறார்கள் என குற்றம் சுமத்துவதில் என்ன பயன்? அவர்கள் இந்த பிரச்னைக்கு ஒரு தீர்வை அல்லவா காண வேண்டும்?

இந்த நாடு ஒரு தனியார் நிறுவனத்தினால் ஏற்பட்ட பிரச்சனைகளைப் பார்த்து கவலையில் இருக்கிறது.

இந்திய அரசு கடந்த 3 ஆண்டுகளில் பொதுத் துறை நிறுவனங்களை விற்று சுமார் 4.86 லட்சம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டி இருக்கிறது. சி இ எல் என்று அழைக்கப்படும் சென்ட்ரல் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனம் ஆண்டுக்கு சுமார் 750 கோடி ரூபாய் லாபம் ஈட்டி வந்தது. அவர்களிடம் சுமார் 1500 கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்டர்கள் கைவசம் இருந்தன. இப்பேற்பட்ட லாபமீட்டக் கூடிய நல்ல அரசு நிறுவனத்தை, இந்திய அரசு வெறும் 250 கோடி ரூபாய்க்கு ஒரு தனியார் நிறுவனத்திற்கு விற்று விட்டது. இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு வேடிக்கையான விஷயம் என்னவென்றால், சி இ எல் நிறுவனத்தை வாங்கிய தனியார் நிறுவனத்திற்கும் எலக்ட்ரானிக்ஸ் துறைக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.

திருச்சி சிவா
அதானி : தனி ஒரு மனிதனின் வளர்ச்சி தான் இந்தியாவின் கௌரவமா? - வறுத்தெடுத்த மஹுவா மொய்த்ரா

ஒரு கல்லூரியின் உணவகத்தில், தினமும் உப்புமா உணவு பரிமாறப்பட்டது. இந்த உணவு எங்களுக்கு வேண்டாம் வேறு உணவு வேண்டும் என மாணவர்கள் அனைவரும் கொந்தளித்து விடுதி காப்பாளரிடம் கூறிய போது, யாருக்கு என்ன உணவு வேண்டும் என ஒரு வாக்கெடுப்பு நடத்தலாம் என்று கூறினர்.

அதன்படி வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போது…

7% மாணவர்கள் பிரட் ஆம்லெட் வேண்டும் என்றனர்,

13% மாணவர்கள் பூரி,

18% மாணவர்கள் உருளைக்கிழங்கு பரோட்டா,

19% மாணவர்கள் மசால் தோசை வேண்டுமெ,

20% மாணவர்கள் இட்லி வேண்டும் என்றும் வாக்களித்தனர்.

23% மாணவர்கள் உப்புமா வேண்டும் என்று வாக்களித்தனர்.

இதுதான் 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் நடந்தது. மாணவர்கள் அனைவரும் ஒற்றுமையாக இல்லாத காரணத்தினால் மீண்டும் உணவகத்தில் 23 சதவீத பெரும்பான்மை வாக்கோடு உப்புமா நுழைந்துவிட்டது. வரும் தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்து உப்மாவை வெளியேற்றுவோம். நாம் ஒருங்கிணைய வேண்டும், ஒருங்கிணைவோம் என நகைச்சுவையாக தன் உரையை நிறைவு செய்தார் திருச்சி சிவா.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com