சீனாவில் மா என்பவர் கைது செய்யப்பட்டதால் அலிபாபாவின் ஜாக் மா பல பில்லியன்கள் இழந்தார்!
அலிபாபா குரூப் ஹோல்டிங் லிமிடெட், அலிபாபா என்றும் அழைக்கப்படுகிறது. இது ஈ-காமர்ஸ், சில்லறை விற்பனை, இணையம் மற்றும் தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்ற ஒரு சீன பன்னாட்டுத் தொழில்நுட்ப நிறுவனமாகும். இந்நிறுவனம் 28 ஜூன் 1999 இல் ஹாங்ஜோ, ஜெஜியாங்கில் நிறுவப்பட்டது. இந்நிறுவனம் நுகர்வோர் முதல் நுகர்வோர் (C2C), வணிகத்திலிருந்து நுகர்வோர் (B2C) மற்றும் வணிகத்திலிருந்து வணிகம் (B2B) முதலான விற்பனை சேவைகளை இணையதளங்கள் வழியாக வழங்குகிறது.
மின்னணு கட்டண சேவைகள், ஷாப்பிங் தேடுபொறிகள் மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங் சேவைகள் போன்றவற்றையும் செய்கிறது. இது உலகெங்கிலும் உள்ள பல வணிகத் துறைகளில் பல்வேறு நிறுவனங்களின் போர்ட்ஃபோலியோவை சொந்தமாக வைத்திருந்து இயக்குகிறது.
அலிபாபா நிறுவனத்தின் உரிமையாளர் ஜாக் மா யுன் 10 செப்டம்பர் 1964 பிறந்தார். ஒரு சீன வணிக அதிபர், முதலீட்டாளர் மற்றும் வள்ளல் என்று இவருக்குப் பல முகங்கள் உள்ளன.அவர் அலிபாபா குழுமத்தின் இணை நிறுவனர் மற்றும் முன்னாள் நிர்வாகத் தலைவர் ஆவார். கூடுதலாக, அவர் யுன்ஃபெங் கேபிட்டல் என்ற தனியார் பங்கு நிறுவனத்தை நிறுவினார். திறந்த மற்றும் சந்தை சார்ந்த பொருளாதாரத்தின் வலுவான ஆதரவாளராக ஜாக் மா திகழ்கிறார்.
ஆனால் ஒரு பெயர்க் காரண குழப்பத்தால் கடந்த செவ்வாயன்று ஜாக் மாவின் அலிபாபா நிறுவனத்தின் சந்தை மதிப்பில் சுமார் 26 டாலர் பில்லியன் இழப்பு ஏற்பட்டது.
'மா' என்ற குடும்பப்பெயர் கொண்ட ஒருவரைச் சீனாவில் கைது செய்ததன் மூலம் ஜாக் மாவின் அலிபாபாவுக்கு சில நிமிடங்களில் பில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டது.
சீனாவின் ஹாங்சோ நகரில் அலிபாபாவின் தலைமையகம் இருக்கிறது. இங்கே 'மா' என்ற குடும்பப்பெயர் கொண்ட ஒருவர், "வெளிநாட்டுச் சக்திகளுடன் கூட்டுச் சேர்ந்து, அரசைக் கவிழ்த்து நாட்டைப் பிளவுபடுத்த முயன்றார் என்ற சந்தேகத்தின் பேரில்" காவலில் வைக்கப்பட்டார் என்று சீன அரசின் குளோபல் டைம்ஸ் செவ்வாய்க்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சந்தேக நபர் ஏப்ரல் 25 அன்று "கட்டாய நடவடிக்கைகளின்" கீழ் கைது செய்யப்பட்டார் என்று சீனாவின் அரசு தொலைக்காட்சி மேற்கோள் காட்டியது.
கைது செய்யப்பட்ட அந்த நபரை, அலிபாபாவின் ஜாக் மா என்று நெட்டிசன்கள் கருதினர். இதன் விளைவாக, ஜாக் மாவால் நிறுவப்பட்ட அலிபாபாவின் பங்குகள் செவ்வாய்க்கிழமை ஹாங்காங்கில் 9.4 சதவீதம் வரை சரிந்தன. இ-காமர்ஸ் நிறுவனமானது சில நிமிடங்களில் சந்தை மதிப்பில் சுமார் 26 பில்லியன் டாலர்கள் இழப்பை சந்தித்தது.
பின்னர், அந்த நபர் ஜாக் மா அல்ல என்பதை குளோபல் டைம்ஸ் தெளிவுபடுத்தியது. குற்றம் சாட்டப்பட்டவர், உண்மையில், 1985 இல் பிறந்த ஒரு தகவல் தொழில்நுட்பத் துறை இயக்குநர். அவருடைய பெயரில் மூன்று சீன எழுத்துக்கள் உள்ளன. அதே சமயம், ஜாக் மாவின் சீனப் பெயர், மா யுன், இரண்டு எழுத்துக்களை மட்டுமே கொண்டுள்ளது மற்றும் அவர் 1960களில் பிறந்தார்.
இதைத் தொடர்ந்து, அலிபாபாவின் பங்குகள் மீண்டும் உயர்ந்தது. "ஹாங்காங் பங்குச் சந்தையின் முடிவில் அலிபாபாவின் பங்கு மதிப்பு 0.83 சதவீதம் அளவுக்கு தான் குறைந்தன" என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் பெயர் குழப்பத்தால் ஏற்பட்ட பாதிப்பைப் பின்னர் உண்மை என்ன என்று தெளிவுபடுத்தியதன் மூலமாக அலிபாபா அதன் பெரும்பாலான இழப்புகளை நாள் முடிவில் மீட்டெடுத்தது என்று அமெரிக் சிஎன்என் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
சீன தொழில்நுட்ப கோடீஸ்வரர் ஜாக் மா, 2020ன் பிற்பகுதியிலிருந்து சீன அரசால் அவரது நிறுவனங்களை ஒடுக்கியதிலிருந்து பெரும்பாலும் பொது பார்வையிலிருந்து விலகி இருக்கிறார்.
ஜாக் மா இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சர்ச்சைக்குரிய உரையை நிகழ்த்திய பிறகு சீன அரசால் அவரது வணிகப் பேரரசு கண்காணிக்கப்பட்டது.
சீன கட்டுப்பாட்டாளர்கள் அலிபாபாவின் நடைமுறைகள் குறித்து விசாரணையைத் தொடங்கியதாகவும், சந்தை ஆதிக்கத்தைக் காரணம் காட்டி ஏப்ரல் மாதத்தில் சீன அரசு அலிபாபா நிறுவனத்திற்கு 2.8 பில்லியன் டாலர் அபராதம் விதித்ததாகவும் கூறப்படுகிறது.
ஒரு புறம் சீன அரசின் சந்தேகப் பார்வையில் இருக்கும் ஜாக் மா, இந்தப் பெயக் குழப்பத்தால் ஒரே நாளில் பல பில்லியன் டாலர்களை இழந்து பின்னர் அதை மீட்டெடுத்தார். ஒரு வேளை இந்தியாவில் அம்பானி என்ற பெயர் கொண்ட ஒருவர் கைது செய்யப்பட்டு அது செய்தியாக வெளியானால் அந்த நபர் முகேஷ் அம்பானி என்ற நினைத்து ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு குறைந்தால் எப்படி இருக்கும்? அது போலத்தான் ஜாக் மாவிற்கும் நடந்திருக்கிறது.
உங்களின் பெயர் உங்களது வாழ்க்கையையே புரட்டிப் போடலாம் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn: https://www.newssensetn.com/
Nalam360 : https://www.newssensetn.com/health
Newsnow: https://www.newssensetn.com/wow-news
Tamilflashnewsapp: https://www.newssensetn.com/tamilnadu