திரைக் கலைஞர்கள் அனைவருக்கும் ஆஸ்கர் என்பது மிக முக்கியமான மைல் கல் எனலாம். ஆனால் உலகின் ஆகச் சிறந்த திரைக் கலைஞர்களில் ஒருவரான மார்லன் பிராண்டோ, தி காட்ஃபாதர் படத்துக்காக தனக்கு வழங்கப்பட்ட சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதைப் பெறவில்லை.
அவருக்கு பதிலாக Sacheen Littlefeather என்கிற இளம் பெண்மணி பேசியது அன்றைய தேதியில் பெறும் சலசலப்பை ஏற்படுத்தியது. அப்படி அவர் பேசியதன் சுருக்கம் என்ன? ஏன் மார்லன் பிராண்டோ ஆஸ்கார் விருதை பெற்றுக் கொள்ளவில்லை... வாருங்கள் பார்ப்போம்.
1973ஆம் ஆண்டு ஆஸ்கர் விருதுகள் பட்டியலில் மார்லன் பிராண்டோவுக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்க ஏற்பாடுகள் நடந்து வந்தன. மார்லன் பிராண்டோவுக்கு ஆஸ்கர் அறிவிக்கப்பட்ட போது, அவருக்கு பதிலாக Sacheen Littlefeather என்கிற இளம்பெண் மேடை ஏறினார்.
ஒரு பூர்வீக அமெரிக்கரைப் போலவே ஆடை ஆபரணங்களை அணிந்திருந்தார் சசீன். பூர்வீக அமெரிக்க பெண் ஒருவர், தன் பாரம்பரிய உடைகளோடு ஆஸ்கர் மேடை ஏறியதும் அதுவே முதல் முறை என்கிறது 'தி இந்து' பத்திரிகை.
சசீன் லிட்டல்ஃபெதர் தன்னை முழுமையாக அறிமுகப்படுத்திக் கொண்டு, மார்லன் பிராண்டோ சார்பாக வந்திருப்பதாகவும் கூறினார். "என்னால் இந்த பிரமாண்ட விருதை வருத்தத்தோடு ஏற்றுக் கொள்ள முடியாது" என மார்லன் பிராண்டோவின் கடிதத்தைப் படித்தார்.
மேலும், அமெரிக்க இந்திய பூர்வ குடிகள் ஹாலிவுட் துறையால் நடத்தப்படும் விதமும், அவர்களை திரையில் காட்டும் விதத்தையும் காரணமாகக் காட்டி, ஆஸ்கர் விருதை பெற்றுக் கொள்ள மார்லன் பிராண்டோ மறுப்பதாக சசீன் கூறினார்.
இது ஆஸ்கர் மேடையிலிருந்தவர்கள் உட்பட, அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. வந்திருந்த விருந்தினர்களில் ஒரு சாரார் Sacheen Littlefeather-க்கு ஆதரவாகவும் மற்றொரு தரப்பினர் அவரை விமர்சித்தும் பேசினர்.
சசீன் லிட்டில்ஃபெதர் மேடையிலிருந்து உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டார். அன்று முதல் சசீன் தொடர்ந்து பல கேலி கிண்டல்களை எதிர்கொள்வது தொடங்கி, தனி மனித தாக்குதல்கள், பாகுபாடு... வரை பல பிரச்னைகளை சந்தித்தார்.
கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் கழித்து, அதே ஆஸ்கர் அமைப்பு, Sacheen Littlefeather அவர்களிடம் 1973ஆம் ஆண்டு ஆஸ்கர் விருது நிகழ்ச்சியில் நடந்த விஷயங்களுக்காக மன்னிப்பு கேட்டுள்ளது. வரும் செப்டம்பர் 17ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் அகாடமி இசை நிகழ்ச்சி ஒன்றில் பேசவும் அழைப்பு விடுத்துள்ளது ஆஸ்கர் அமைப்பு.
பூர்வ குடி அமெரிக்க இந்தியர்களுக்கு ஆதரவாக நீங்கள் பேசியதற்கு எதிர் கொண்ட விஷயங்கள் தேவையற்றவை, நியாயப்படுத்த முடியாதவை என ஆஸ்கர் குழுவின் தலைவர் டேவிட் ருபின் சசீனுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
உணர்வு ரீதியாக நீங்கள் சுமந்து வந்த சுமைகளையும், உங்கள் கருத்துக்காக திரைத் துறையில் நீங்கள் இழந்த வாழ்கையையும் சரி செய்ய முடியாதவை. இத்தனை நாட்களாக நீங்கள் காட்டி வந்த துணிவு அங்கீகரிக்கப்படவில்லை. இவை அத்தனைக்கும் எங்கள் ஆழ்ந்த மன்னிப்புகள் என அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
1973ஆம் ஆண்டு ஆஸ்கர் மேடையில் தன் கருத்தை வலுவாக எடுத்துரைத்தது முதல், இன்று வரை தன் நிலைப்பாட்டிலேயே தொடர்கிறார் சசீன் லிட்டில்ஃபெதர். அவருக்கு நம் வாழ்த்துகள்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust