மே தினம் : சிகாகோ முதல் சென்னை வரை; உலக தொழிலாளிகளின் வாழ்வை மாற்றிய வரலாறு

மே தினத்தின் வேர் என்பது 19 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பகுதியில் நடந்த புரட்சிகள் மற்றும் தொழிற்துறைத் தொழிலாளர்கள் அணிதிரண்ட தொழிற்சங்கங்களுக்குப் பின்னால் காணப்படுகிறது.
Communism
CommunismNews Sense
Published on

பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பியத் தொழிலாளர்கள் 15 மணி நேரத்திற்கும் அதிகமாக வேலை செய்தார்கள். அவர்களுக்கான கூலி குறைவு. அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. இந்தக் கொடூரமான நிலையை மாற்றி அமைத்த தினம்தான் மே 1. அந்த தினத்தின் பின்னே தொழிலாளிகளின் போராட்ட வரலாறு பின்னிப் பிணைந்திருக்கிறது. அதன் பக்கங்கள் எல்லாம் போராளிகள் சிந்திய இரத்தத்தின் பிசுபிசுப்பால் நிறைந்திருக்கிறது.

அந்த வகையில் மே 1 என்பது தொழிலாளி வர்க்கம் உலகம் முழுவதும் கொண்டாடும் சர்வதேச தொழிலாளர் தினமாகும். அதன் பின்னால் ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு முந்தைய வரலாறு உள்ளது.

மே தினத்தின் வேர் என்பது 19 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பகுதியில் நடந்த புரட்சிகள் மற்றும் தொழிற்துறைத் தொழிலாளர்கள் அணிதிரண்ட தொழிற்சங்கங்களுக்குப் பின்னால் காணப்படுகிறது.

அந்த தொழிற்சங்கங்களின் மூலம் ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தொழிலாளிகள் வேலை நேரத்தை, ஒரு நாளைக்கு 12-15 மணி நேரத்திலிருந்து 8 மணி நேரமாகக் குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

கார்ல் மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ்
கார்ல் மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ்Pixabay

1848 இல் கார்ல் மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் எழுதிய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை தொழில் மயமாக்கலின் பாதிப்பையும் சுரண்டலையும் உணர்த்தி, பல்வேறு நாடுகளின் தொழிலாளர்கள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

1840களில் ஏற்பட்ட விவசாய பாதிப்பு, '1848ல் புரட்சிகள்' என்று அழைக்கப்படும் நிலப்பிரபுத்துவ எதிர்ப்புக் கிளர்ச்சிகளுக்கு வழிவகுத்தன. இதன் விளைவாக, முதல் அகிலம் என்று அழைக்கப்படும் சர்வதேச தொழிலாளர் சங்கம், 1864 ல் லண்டனில் உள்ள தொழிலாளர் சபையில் அனைத்து சோசலிச மற்றும் கம்யூனிஸ்ட் அமைப்புகளின் கூட்டணி சங்கமாகப் பிறந்தது.

முதல் அகிலம் 1876 இல் ஒரு கருத்து வேறுபாடு காரணமாகப் பிளவுண்டு கலைக்கப்பட்ட பிறகு, இரண்டாம் அகிலம் 1889ல் சோசலிச மற்றும் தொழிலாளர் கட்சிகளின் ஐக்கிய அமைப்பாக உருவானது. இந்த அமைப்புதான் மே 1ஐ சர்வதேச தொழிலாளர் தினமாகவும், மார்ச் 8ஐ சர்வதேச மகளிர் தினமாகவும் அறிவித்தது.

ஹேமார்க்கெட் படுகொலை போராட்டம்
ஹேமார்க்கெட் படுகொலை போராட்டம்

வரலாற்று ரீதியாக, ஒரு நிகழ்வு மே 1 ஆம் தேதி தொழிலாளர் தினம் எனக் குறிப்பிடப்படுகிறது. அது ஹேமார்க்கெட் பிரச்சினை அல்லது ஹேமார்க்கெட் படுகொலை என்று வரலாற்றில் அழைக்கப்படுகிறது. மே 4, 1886 இல் அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள ஹேமார்க்கெட் சதுக்கத்தில் தொழிலாளர்கள் ஒன்று கூடி எட்டு மணி நேர வேலை நாளுக்காகப் பேரணியை நடத்தினர். ​பேரணி நடத்திய தொழிலாளிகள் மீது குண்டுவீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது. கலவரத்தில் முடிவடைந்த பேரணியில் காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் மட்டும் 11 தொழிலாளிகள் கொல்லப்பட்டார்கள்.

ஹேமார்க்கெட் விவகாரம் பற்றி தொழிலாளர் ஆய்வுத்துறை அறிஞர் வில்லியம் ஜே. அடெல்மேன் கூறுகிறார்: “சிகாகோ ஹேமார்க்கெட் விவகாரத்தை விட, எந்த ஒரு நிகழ்வும் தொழிலாளர் வரலாற்றில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இது மே 4, 1886 அன்று ஒரு பேரணியுடன் தொடங்கியது. ஆனால் அதன் விளைவுகள் இன்றும் உணரப்படுகின்றன. இந்த பேரணி அமெரிக்க வரலாற்று பாடப்புத்தகங்களில் சேர்க்கப்பட்டுள்ளது என்றாலும், மிகச் சிலரே இந்த நிகழ்வைத் துல்லியமாக முன்வைப்பதோடு அதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக் காட்டுகிறார்கள்.

கம்யூனிசம்
கம்யூனிசம்Twitter

இந்தியாவில் மே தினத்தைப் பொறுத்தவரை, நாடு 1923 இல் முதல் தொழிலாளர் தினத்தை அப்போதைய மெட்ராஸில் (இன்றைய சென்னை) கொண்டாடியது. இந்துஸ்தானின் தொழிலாளர் மற்றும் விவசாயிகள் கட்சியின் (லேபர் கிசான் பார்ட்டி ஆஃப் ஹிந்துஸ்தான்) தலைவர் சிங்காரவேலர் தலைமையில் திருவல்லிக்கேணி கடற்கரையிலும், சென்னை உயர்நீதிமன்றம் அருகிலும் இரண்டு கூட்டங்கள் நடைபெற்றன. இந்தக் கூட்டங்களில்தான் மே 1ஆம் தேதியைத் தொழிலாளர் தினமாகவும், அரசு விடுமுறையாகவும் அறிவிக்க வேண்டும் என்று பிரிட்டிஷ் அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தியாவில் சிவப்புக் கொடி பயன்படுத்தப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

மே தினம் என்ற பிரபலமான சொற்றொடருக்கு மற்றொரு அம்சம் உள்ளது. இது பல நாடுகளில் பண்டைய வேர்களைக் கொண்டுள்ளது. பழைய ரோமில் உள்ள ஃப்ளோராவின் திருவிழா மே கொண்டாட்டம் என்று அழைக்கப்பட்டது. ஃப்ளோரா என்பது பூக்களின் தெய்வம், மற்றும் திருவிழா பாடல், நடனம் மற்றும் நாடக நிகழ்ச்சிகளால் குறிக்கப்பட்டது.

மற்றொரு மே தினக் கொண்டாட்டம் முறையே திராட்சை அறுவடை மற்றும் அன்பின் கிரேக்கக் கடவுள்களான டியோனிசஸ் மற்றும் அப்ரோடைட் ஆகியோரைப் புகழ்ந்து கொண்டாடப்பட்டது.

தொழிலாளர்கள்
தொழிலாளர்கள்News Sense

கப்பல்கள் மற்றும் விமானங்கள் ஆபத்தில் மாட்டிக் கொண்டால் விமானிகளும் மாலுமிகளும் தமது வயர்லெஸ் மற்றும் வாக்கிடாக்கி இதர தொலைத்தொடர்பு சாதனங்களில் மே டே, மே டே (Mayday) என்றுதான் அழைப்பார்கள். அதன் பொருள் குறிப்பிட்ட கப்பலோ, விமானமோ பெரும் ஆபத்தில் மாட்டிக் கொண்டு விட்டது.

Communism
வட கொரியா : கிம் வம்சத்தின் வரலாறு | Part 1

மே டேவிற்கும் மே தினத்திற்கும் என்ன தொடர்பு? ஒன்றுமில்லை. ஏனெனில், மேடே என்பது பிரெஞ்சு மொழியான 'மைடெஸ்' என்பதன் ஆங்கிலப் பதிப்பாகும், அதாவது "எனக்கு உதவுங்கள்".

ஆனால் இந்த உலகத்தின் அன்றாட இயக்கம் கோடிக்கணக்கான தொழிலாளிகளின் உழைப்பால் நடைபெறுகிறது. நிலக்கரி, இரும்பு, தங்கம், வைரம் போன்ற சுரங்கங்களில் உயிரைப் பணையம் வைத்து வேலை பார்ப்பதாக இருக்கட்டும், பாதாளச் சாக்கடைகளில் உயிரையே இழக்கும் தொழிலாளிகளின் பணியாக இருக்கட்டும், இந்த உலகம் உழைப்பாளிகள் இல்லாமல் இல்லை.

Communism
Che Life History : சேகுவேரா - வாழ்வை மாற்றிய அந்த ஒரு சந்திப்பு |பகுதி 1

அந்த வகையில் இரத்தம் சிந்திய மே தினம் என்பது உலகில் பல பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது. ரசியா, சீனாவில் தொழிலாளிகளின் ஆட்சியைக் கொண்டு வந்திருக்கிறது.

இன்றைக்குத் தொழிலாளிகளுக்கு இருக்கும் உரிமைகளான எட்டுமணி நேர வேலை, விடுமுறை, குறைந்தபட்ச ஊதியம், ஓய்வூதியம், மருத்துவ உதவி, காப்பீடு இன்னபிற உரிமைகள் அனைத்தும் கிடைப்பதற்குக் காரணம் மே தினம் எனும் போராட்ட வரலாறாகும்.

ஒரு தொழிலாளிக்கு நீங்கள் மே தின வாழ்த்து சொல்வது ஒரு பிறந்தநாள் வாழ்த்து சொல்வது போல அல்ல. இந்த உலகம் இயங்குவதற்கு காரணமான தொழிலாளியாகிய உங்களுக்கு எனது நன்றி என்பதே அந்த வாழ்த்தின் உண்மையான பொருள்.

மே தினம் வாழ்க! தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக!

Communism
கியூபா Vs அமெரிக்கா : உலகின் பெரியண்ணனை வீழ்த்திய தீவு தேசத்தின் வரலாறு

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Communism
காலநிலை மாற்றம்: உக்ரைன் ரஷ்யா போரால் என்ன நிகழ்ந்து இருக்கிறது தெரியுமா?

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com