உலகம் தோன்றியதிலிருந்து, மனிதனால் கைவிட முடியாத சில விஷயங்களில் உணவும் ஒன்று. என்னதான் மனித இனம் பல மடங்கு வளர்ச்சி கண்டாலும் உணவு உண்ணாமல் வாழும் அளவுக்கு அறிவியலோ தொழில்நுட்பமோ இதுவரை வளரவில்லை.
அப்படியே வளர்ந்தாலும், மனிதர்களால் தங்கள் நாவுக்கு சுவைகாட்டாமல் இருக்க முடியுமா என்று தெரியவில்லை.
உணவு என்றவுடன் நம் நினைவுக்கு முதலில் வருவது பிரியாணி தான். முக்கியமாக இந்தியாவில் பிரியாணி என்கிற சொல்லை நீக்கிவிட்டுப் பேச முடியாது.
இந்த பிரியாணி உணவுக்கான முன்னோடியே அரபு உலகத்தில் இருந்து தான் வந்தது. அவர்கள் இந்தியாவுக்கு பிரியாணியைத் தவிர பல உணவுகளையும் கொடுத்திருக்கிறார்கள்.
அப்படி அவர்கள் நமக்குக் கொடுத்த உணவுகள் என்ன? இந்தியா மத்தியக் கிழக்குக்கு உணவு தொடர்பாக என்ன கொடுத்தது? வாருங்கள் ருசிப்போம்.
அரேபிய தீபகற்பத்திலிருந்து வர்த்தகர்கள் இந்திய துணை கண்டத்திற்கு வரும்போது, அவர்கள் வெறுமனே பொருட்கள் மற்றும் தகவல்களை மட்டும் பரிமாறி கொள்ளவில்லை.
சுவைகளையும் பரிமாறிக் கொண்டனர். அப்படித்தான் பல நூற்றாண்டுகளாக நம் உணவுப் பாரம்பரியம் வளர்த்தெடுக்கப்பட்டிருக்கிறது.
பொதுவாக இந்தியாவின் பெரும்பாலான வடமாநிலங்களில் "நான்" (Naan) என்று அழைக்கப்படும் ரொட்டி இல்லாமல் அவர்களின் உணவு நிறைவடையாது.
நான் உணவின் தாயகம் மத்திய கிழக்கு பகுதியில் உள்ள அரபு நாடுகள் தான்.
அதேபோல பெரும்பாலான அரபுலக உணவுகளை இந்தியாவின் மசாலா பொருட்கள் இல்லாமல் தயாரிக்கவே முடியாது எனும் அளவுக்கு பல உணவு வகைகளை பட்டியலிட்டுக் குறிப்பிடலாம்.
கிறிஸ்து பிறப்பதற்கு கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தொடங்கிய கதை இது.
தெற்கு மற்றும் கிழக்கு ஆசியாவில் இருந்து பல மசாலா பொருட்கள் பட்டுப்பாதை வழியாக மத்திய கிழக்கு பகுதியில் உள்ள பல அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாக, அராப் நியூஸ் வலைதள கட்டுரை ஒன்றில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அங்கிருந்துதான் மசாலா பொருட்கள் ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவியது என்கிறார்கள்.
மசாலா பொருட்கள் வெறுமனே சமைப்பதற்கு, சுவையான உணவுகளைத் தயாரிப்பதற்கு மட்டுமே பயன்படுத்தப்படவில்லை.
பல்வேறு மதச் சடங்குகள் முதல் மருத்துவ குண நலன்களுக்கும் பயன்படுத்தப்பட்டதாகச் சில வலைதளங்களில் பார்க்க முடிகிறது.
spices என்கிற சொல்லுக்கு baharat என்கிற சொல் மாற்றாகப் பயன்படுத்தப்பட்டது என்றும் கூறப்படுகிறது. அது ஒரு காலத்தில் இந்தியாவைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட "பாரத்" என்கிற சொல்லை ஒத்தது என்கிறார் முதாசீர் கமர் (Muddassir Quamar) டெல்லியைச் சேர்ந்த மத்திய கிழக்கு விவகார நிபுணர்.
மத்திய கிழக்கைச் சேர்ந்த பல வியாபாரிகள் அரபிக் கடல் வழியாக இந்தியாவின் தென்மேற்கு கடற்கரை பகுதிகளுக்கு வந்து பல வியாபாரங்களை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இவை அனைத்தும் இஸ்லாத் என்கிற மதம் உலகத்தின் பல பகுதிகளில் செழித்தோங்கி வளர்வதற்கு முன்பே (ஏழாம் நூற்றாண்டில்) நடந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
தெற்காசியாவின் வடமேற்கு பகுதியில் இருந்த இண்டஸ் பள்ளத்தாக்கு நாகரீகத்திற்கும் மேசொபடோமியா என்று அழைக்கப்பட்ட நிலப்பகுதிக்கும் பல்வேறு வர்த்தக ரீதியிலான பரிமாற்றங்கள் தொடங்கி கலாச்சார பரிமாற்றங்கள் வரை வலுவாக இருந்ததற்கு பல்வேறு அகழ்வாராய்ச்சி கண்டுபிடிப்புகள் சுட்டிக்காட்டப்படுகின்றன.
ஹரப்பா அல்லது இண்டஸ் பள்ளத்தாக்கு நாகரீகம் மற்றும் அரேபிய கடலை ஒட்டியிருந்த வளைகுடா நாடுகளுக்கு மிக நெருக்கமான வர்த்தக உறவுகள் மற்றும் கலாச்சார பரிமாற்றங்கள் இருந்ததாக A history of food in India என்கிற புகழ்பெற்ற புத்தகத்தை எழுதிய காலின் டெய்லர் சென் (Colleen Taylor Sen) என்பவர் குறிப்பிடுகிறார்.
இன்று அரேபியர்களின் பல உணவு முறைகளில் இந்தியாவின் பல மசாலா பொருட்கள் மிகப்பெரிய அளவில் பயன்படுத்தப்படுகின்றன.
இதற்கு அரிசிச் சோறில் தயாரிக்கப்படும் சவுதி சிக்கன் கப்ஸா உணவை ஓர் உதாரணமாகச் சொல்லலாம்.
அதேபோல அரேபிய தீபகற்பத்தில் உள்ள பல நாடுகளின் உணவில் இந்தியாவின் தாக்கம் இருப்பதை பார்க்க முடிகிறது. உதாரணமாக ஏமன் நாட்டை எடுத்துக் கொண்டால் இந்தியாவின் முக்கிய மசாலா பொருட்களான சீரகம், மிளகாய், கொத்தமல்லி விதை, மஞ்சள், போன்ற பல பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இந்தியாவும் அரபு நாடுகளும் பல உணவுகளை பரிமாறிக் கொண்டிருக்கின்றன. இதற்கு உதாரணமாக ஹலீம், சமோசா, ஜிலேபி போன்ற உணவுகளைக் குறிப்பிடலாம்.
அரபுலகத்தில் ஹரிசா (Harissa) என்று அழைக்கப்பட்ட உணவு இந்தியாவில் சில பல மாறுதல்களோடு ஹலீம் என்கிற பெயரில் சமைக்கப்படுகிறது.
இன்று வட இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் பெரிய அளவில் நொறுக்கு தீனியாக உட்கொள்ளப்படும் சமோசா மற்றும் ஜிலேபி போன்ற உணவுகள் மத்திய கிழக்கில் உருவானவை என்கிறார் சென்.
இந்தியாவில் பல உணவுத்துறை கலைஞர்கள் மற்றும் நிபுணர்களால் கொண்டாடப்படும் மிக முக்கியமான இந்திய உணவுக் கட்டுரையாளர் மற்றும் ஆசிரியர் வீர் சிங்க்வி சில உதாரணங்களை முன்வைக்கிறார்.
இன்று மத்திய கிழக்கு உணவு வகைகளில் கோழி இறைச்சி ஒரு தவிர்க்க முடியாத இடத்தில் இருக்கிறது. ஆனால் அதனுடைய துவக்கம் இந்திய துணை கண்டத்தில் இருக்கிறது என்கிறார் சிங்க்வி
கி.மு. 2,000 - 1,500 காலகட்டத்திலேயே கோழி வளர்ப்பதை இண்டஸ் பள்ளத்தாக்கு நாகரீகம் கையில் எடுத்துக் கொண்டது.
இண்டஸ் பள்ளத்தாக்கு நாகரீகத்திற்கும் மேசொபடேமியா (இன்றைய இராக்) என்று அழைக்கப்பட்ட நிலப்பகுதிக்கும் பல வர்த்தக உறவுகள் இருந்ததற்கு பல்வேறு ஆதாரங்கள் இருக்கின்றன.
எனவே கோழி இறைச்சி இண்டஸ் பள்ளத்தாக்கு நாகரீகத்தில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்றதாகவும், அங்கிருந்து மற்ற பல நாடுகளுக்கு கோழி இறைச்சி சென்றதாகவும் அரப் நியூஸ் வலைதள கட்டுரையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
இன்று இந்தியாவில் பரவலாக பயன்படுத்தப்படும் மைதா மாவு, பல நூற்றாண்டுகளுக்கு முன் மத்தியக் கிழக்குப் பகுதியில் இருந்து, இந்தியா இறக்குமதி செய்த ஒன்று.
மைதா மாவு அரேபியர்கள் இந்தியாவுக்கு கொடுத்த பொருட்களில் மிக முக்கியமானது.
மைதா வந்த பிறகுதான் பேக்கிங் என்கிற ஒரு கலையையே இந்தியா பார்க்கத் தொடங்குகிறது. எனவே ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பேக்கிங் சார்ந்த உணவுகளை அரபுலகம் தான் கொடுத்தது எனலாம்.
இந்தியா தான் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அரிசியை அறிமுகப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதில் இரு வேறு கருத்துக்கள் கூறப்படுகின்றன.
கி.மு. 326 வது ஆண்டு, இந்தியா வந்த மாவீரன் அலெக்சாண்டரின் படைகள் அரிசியை அப்போது வரை பார்த்திருக்கவில்லை. அவர்கள் அரிசியை கிரீஸ் நாட்டிற்கு எடுத்துச் சென்றனர்.
அப்படி எடுத்துச் செல்லும்போது தான் மத்திய கிழக்கு நாடுகளில் அரிசி என்கிற ஒன்று பரவத் தொடங்கியதென கூறுகிறார்கள். இது முதல் கருத்து.
ஒன்பதாவது நூற்றாண்டு வாக்கில் அரேபியர்கள் சிந்து பகுதியை வெற்றி கொண்ட போது அரிசியை எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இது இரண்டாவது கருத்து.
சில பல நூற்றாண்டுகளுக்கு பிறகு எந்த மத்திய கிழக்கு நாடுகள் இந்தியாவில் இருந்து அரிசியை எடுத்துக் கொண்டு சென்றார்களோ, அதை மத்திய கிழக்கு நாடுகள் மந்தி ரைஸ் அல்லது அரேபிய புலாவை இந்தியாவுக்கு கொண்டு வந்தனர்.
17-வது நூற்றாண்டில் முகலாயர்கள் ஆட்சி காலத்தில் இந்தியாவில் பிரியாணி தயாரிக்கப்பட்டதாக வீர் சிங்க்வி கூறுகிறார். இன்று அதே பிரியாணியை இந்தியா மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust