மனித நாகரிகம் தோன்றியதில் இருந்து அல்லது குறைந்தபட்சம் மனிதர்கள் குகைகளில் வாழ்ந்து கொண்டிருந்த காலத்திலிருந்தே, சக மனிதனின் உடைகளை, பொருட்களை திருடினான் மோசடி செய்தான். இப்படி பல்லாயிரம் முறை மனிதன் இந்த மோசடித் திட்டங்களால் பாதிக்கப்பட்ட பிறகும் திருந்தியதாகத் தெரியவில்லை. மனித இனத்தின் இந்த ஏமாற்றும் குணமும் மாறியதாகத் தெரியவில்லை.
இந்த நேரத்தில், உலக அளவில் நடைபெற்ற மிகப்பெரிய பண மோசடித் திட்டங்களைக் குறித்து இங்கே பார்க்கலாமா? ஆம்… என்றால் நாம் முதலில் சார்லஸ் பொன்சி என்பவரிடமிருந்து தான் தொடங்க வேண்டும்.
காரணம், மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் திட்டங்கள் அனைத்தையும் பொன்சி திட்டம் என்றழைக்கிறோமே, அப்பெயர், சார்லஸ் பொன்சி என்பவரின் பெயரில் இருந்து தான் வந்தது.
திருமங்களம் ஃபார்முலா என்றால் எப்படி தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் பணம் கொடுப்பது நினைவுக்கு வருகிறதோ, அப்படி இன்று பண மோசடித் திட்டங்கள் என்றாலே பொன்சி திட்டம் என்று பெயர் சொல்லும் அளவுக்கு மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறது.
சார்லஸ் பொன்சியின் பிரம்மாண்டமான, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மோசடி திட்டங்கள் எல்லாம், சிறிதாக எளிதாக… தபால் ஸ்டாம்புகளில் தான் தொடங்கியது. 1919 காலகட்டத்தில், வெளிநாட்டில் இருந்து ஒருவருக்கு ஒரு கடிதம் வந்தால், அவருக்கு ஐ ஆர் சி (இண்டர்நேஷனல் போஸ்டல் ரிப்லே கூப்பன்) கிடைக்கும், அதை வைத்து பதில் கடிதம் போடலாம் என்கிறது ஸ்மித்சோனியன் பத்திரிகை.
இந்த நுணுக்கத்தைத் தெரிந்து கொண்டு, குறைந்த விலையில் ஐ ஆர் சி கிடைக்கும் நாட்டில் அதை வாங்கி, அதிக விலை கிடைக்கும் நாட்டுக்கு ஐ ஆர் சியை விற்கும் வேலையைத் தொடங்கினார் சார்லஸ் பொன்சி.
இதைச் சொல்லி, முதலீட்டாளர்களிடமிருந்து பணத்தை வசூலிக்கத் தொடங்கினார். 45 நாட்களில் 50% வருமானம் தருவதாகச் சொல்லி ஒட்டுமொத்த அமெரிக்காவை திரும்பிப் பார்க்க வைத்தார்.
வசூலான பணத்தில் ஐ ஆர் சிக்களை வாங்குவதற்கு பதிலாக, முதலில் வாங்கிய முதலீட்டாளருக்கானப் பணத்தை, அடுத்தடுத்த முதலீட்டாளர்களிடமிருந்து வாங்கிய பணத்தைப் பயன்படுத்தி வருமானமாகக் கொடுத்து வந்தார். இப்படியாக தன் திட்டத்தை 1920ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை பணத்தை சுழற்சி முறையில் கொடுத்து திட்டத்தை நடத்தி வந்தார்.
அதன் பிறகு அவருடைய மோசடிகள் வெளிச்சத்துக்கு வந்தன. அமெரிக்காவில் சுமார் 7 மில்லியன் டாலர் அளவுக்கு இவர் முதலீட்டாளர்களை ஏமாற்றி இருப்பதாக இந்த டெலிகிராப் பத்திரிகை செய்தி ஒன்றில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது சுமார் 20 மில்லியன் அமெரிக்க டாலர் வரை செல்லலாம் என்றும் கூறப்படுகிறது.
இப்படி சார்லஸ் பொன்சி தொடங்கிய இந்த பிரம்மாண்ட மோசடி திட்டத்தை ஒட்டித்தான், இன்று உலகில் எந்த நாட்டில் என்ன பண மோசடி திட்டங்கள் வந்தாலும் அதற்கு பொன்சி திட்டங்கள் என்று அழைக்கிறார்கள்.
பொதுவாக போலி மோசடி திட்டங்கள் எல்லாம் ஒரு சில ஆண்டுகளுக்குள்ளேயே கண்டுபிடிக்கப்பட்டு அரசு அமைப்புகளால் களையப்படும், இல்லையெனில் போலித் திட்டங்களை நடத்துபவர்களால் போதிய அளவுக்கு பணத்தை கொடுக்க முடியாமல் அவர்களாகவே தலைமறைவு ஆகிவிடுவார். ஆனால் ஜேம்ஸ் பால் என்கிற நபர், அமெரிக்க வரலாற்றில் ஒரு மிகப்பெரிய போலி பண மோசடி திட்டத்தை, மிக நீண்ட நாட்களுக்கு நடத்தினார்.
கலிஃபோர்னியா மாகாணத்தில் நிதி ஆலோசனை நிறுவனத்தை நடத்துவதாக கூறி, ஆண்டுக்கு 18% முதல் 40% வரை வருமானம் கொடுப்பதாக கூறி பல நபர்களிடமிருந்து பணத்தை வசூலித்தார். வழக்கம் போல முதலில் முதலீடு செய்தவர்களுக்கு அடுத்தடுத்து முதலீடு செய்தவர்களின் பணத்தை கொண்டு வருமானமாக பிரித்துக் கொடுத்தார்.
இப்படி, கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் இந்த மோசடி திட்டத்தை திறம்பட நடத்தினார். இடையில் ஜேம்ஸ் பால் அவர்களுக்கு வந்த அதிகப்படியான பணத்தைக் கொண்டு, சொகுசு பங்களாக்கள், பிரம்மாண்ட கார்கள், பெண்கள், பார்ட்டி, மது, குடி, கூத்து… என வாழ்க்கையை குதூகலமாக அனுபவித்தார்.
2003 - 04 காலகட்டத்திலேயே அமெரிக்காவின் எஃப் பி ஐ அமைப்பு ஜேம்ஸ் பாலின் நடவடிக்கைகளில் கவனம் செலுத்த தொடங்கியது. மெல்ல அவருடைய போலித் திட்டங்கள் பொது வெளியில் அம்பலமாயின.
இப்படி அவர் போலி மோசடி திட்டங்களை நடத்தி கடந்த 20 ஆண்டுகளில், சுமார் 310 மில்லியன் அமெரிக்க டாலர் திரட்டி இருந்ததாக பல்வேறு வலைதளங்களில் கூறப்படுகிறது. 2006 ஆம் ஆண்டு அமெரிக்க நீதிமன்றத்தால் 30 ஆண்டுகள் சிறை தண்டனையும், 156 மில்லியன் அமெரிக்க டாலர் தொகையை முதலீட்டாளர்களிடம் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
ஸ்டான்ஃபோர்ட் இண்டர்நேஷனல் பேங்க் முதலீட்டுத் திட்டம் என்கிற பெயரில் பல பில்லியன் டாலர் டெபாசிட் சான்றிதழ் மோசடி செய்தவர் தான் ராபர்ட் ஆலன்.
ஆண்டிகுவாவில் ஸ்டான்ஃபோர்ட் சர்வதேச வங்கியைப் பயன்படுத்தி, சுமார் 8 பில்லியன் டாலர் மதிப்பிலான டெபாசிட் சான்றிதழை முதலீட்டாளர்களுக்கு விற்றார். அப்போது பல்வேறு தவறான விஷயங்களைக் கூறி அந்த டெபாசிட் சான்றிதழ்களை விற்றார்.
உண்மையில் அந்த வங்கியின் நிதிநிலை அறிக்கைகள் பலதும் போலியானவை என அமெரிக்க பங்குச் சந்தையை நிர்வகிக்கும் எஸ் இ சி அமைப்பு பின்னாளில் கண்டுபிடித்து பொதுவெளியில் கூறியது. இது போக இவர் மீது வரி ஏய்ப்பு, பணச் சலவை, வர்த்தக இலச்சிணை மீறல் என பல புகார்கள் இருக்கின்றன.
கடந்த 2012ஆம் ஆண்டு அமெரிக்க நீதிமன்றத்தால் ராபர்ட் ஆலனுக்கு 110 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
மோசடிக்காரர்களில் இவர் கொஞ்சம் வித்தியாசமானவர். பெரிய தவறு செய்து 25 ஆண்டு கால சிறை தண்டனையை அனுபவிப்பதற்கு முன் 20 - 21 மாத காலம் சிறை தண்டனையை வேறொரு மோசடித் திட்டத்துக்காக அனுபவித்தவர்.
2000ஆம் ஆண்டுவாகில் சிறையிலிருந்து வெளி வந்தபின், அகபெ வேர்ல்ட் இன்க் என்கிற பெயரில் ஒரு புதிய நிறுவனத்தைத் தொடங்கினார். சிறு குறு வணிகர்கள் தங்கள் வியாபாரத்தை தொடர்ந்து நடத்தத் தேவையான குறுகிய கால கடன்களைக் கொடுத்து, அதன் மூலம் பணம் ஈட்டும். வரும் லாபத்தை முதலீட்டாளர்களுக்கும் பங்கிட்டுத் தரப்படும் என்று கூறப்பட்டது.
2003 - 09ஆம் ஆண்டு வரை எல்லாம் சுமூகமாகத் தான் போய்க் கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் நிகோலஸ் காஸ்மோ, கிட்டத்தட்ட 400 மில்லியன் அமெரிக்க டாலர் வரையான பணத்தை நிர்வகித்தார் என பல வலைதளங்கள் சொல்கின்றன.
ஆனால், அகபே வேர்ல்ட் மூலம் திரட்டப்பட்ட பணத்தில் பெரும்பாலான பகுதி, கமாடிட்டி ஃப்யூச்சர்ஸ் வர்த்தகங்களில் காணாமல் போனது பிற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. 2011ஆம் ஆண்டுவாக்கில் இவருடைய மோசடிகள் எல்லாம் வெளி வந்ன, அமெரிக்க நீதிமன்றம் விசாரித்து 25 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.
வால்டர் ஃபோர்ப்ஸ் என்பவர் சி யூ சி இண்டர்நேஷன்ல் என்கிற நேரடி சந்தைப்படுத்தல் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரியாகவும், கிர்க் ஷெல்டன் அதே நிறுவனத்தின் தலைவராகவும் இருந்தனர்.
சி யூ சி நிறுவனம் 1997 டிசம்பரில் ஹெச் எஃப் எஸ் இன்க் (HFS Inc) என்கிற நிறுவனத்தோடு இணைந்தது. அதன் பிறகு செண்டண்ட் (Cendant Corp) என்கிற பெயரில் ஒரு புதிய பிராண்ட் உருவாக்கப்பட்டது. சில பல மாதங்களுக்குள்ளேயே, வால்டர் ஃபோர்ப்ஸ் மற்றும் கிர்க் ஷெல்டன் நிதிநிலை விவரங்களில் மோசடி செய்திருப்பதாக செண்டண்ட் தரப்பிலிருந்து செய்திகள் வெளியாயின.
மூன்று ஆண்டுகளில் சுமார் 500 மில்லியன் அமெரிக்க டாலர் வரையான வருமானம் அதிகமாக காட்டப்பட்டிருப்பதாகக் கூறபட்டது. இதனால் ஒரேநாளில் செண்டண்ட் பங்கு விலை 39 டாலரில் இருந்து சுமார் 9 டாலர் வரை சரிந்தது. பங்குச் சந்தையில் சுமார் 14 பில்லியன் டாலர் சந்தை மதிப்பு சரிந்தது.
இது தொடர்பாக வழக்குகள் தொடுக்கப்பட்டன. 2005ஆம் ஆண்டு கிர்க் ஷெல்டன் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது. வால்டர் ஃபோர்ப்ஸ் 2007ஆம் ஆண்டு குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு 12 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
அவ்வளவு ஏன்…? சி யூ சி நிறுவனத்திந் முதன்மை நிதி அதிகாரி, முதன்மை கணக்காளர் உடப்ட பலரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். நஷ்டமடைந்தது என்னவோ சி யூ சி நிறுவனத்தில் பணத்தை முதலீடுச் செய்திருந்த முதலீட்டாளர்கள் தான்.
உலகின் மிகப்பெரிய பொன்சி திட்டத் தலைவர் இவர் தான். 1960களில் ஒரு சிறிய பங்குச் சந்தை தரகராக தன் வாழ்கையைத் தொடங்கிய பெர்னார்ட், 1970களில் தன் பொன்சி திட்டத்தைத் தொடங்கி இருக்கலாம் என சில வலைதளங்களில் கூறப்பட்டிருக்கிறது.
வழக்கம் போல, என் நிறுவனத்தில் முதலீடு செய்தால், என்னை நம்பி பணத்தைக் கொடுத்தால் அதிக வருமானத்தைக் கொடுக்கிறேன் என பேசிப் பேசியே பலரை மயக்கினார். காசும் குபேரனின் கஜானா போல கொட்டோ கொட்டென கொட்டியது.
ஆனால், பெர்னார்ட் திரட்டிய பணத்தை எல்லாம் பங்குச் சந்தையில் முதலீடு செய்யவில்லை. மாறாக, முதலில் முதலீடு செய்த முதலீட்டாளர்களுக்கு, அடுத்தடுத்து முதலீடு செய்தவர்களின் பணத்தைப் பயன்படுத்தி வருமானத்தைக் கொடுத்து வந்தார்.
2008 காலகட்டத்தில் உலகப் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போது, லேமென் பிரதமர்ஸ் போன்ற மிகப்பெரிய நிதி நிறுவனங்களே சரிந்தன. இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த பெர்னார்டின் முதலீட்டாளர்கள், கணிசமாக பணத்தைத் திருப்பிக் கேட்டனர். மறுபக்கம் புதிய முதலீட்டாளர்களிடமிருந்து போதிய அளவுக்கு பெர்னார்டின் கைகளுக்கு பணம் வந்தடையவில்லை.
எனவே, முதலீட்டாளர்களுக்கு பணத்தைக் கொடுக்க கடன் மூலமாகவெல்லாம் பணத்தைத் திரட்டினார். கடைசியில் இவர் பல தசாப்தங்களாக முதலீட்டாளர்களையும், ஒட்டுமொத்த அமெரிக்க அரசு அமைப்புகள் & முகமைகளை ஏமாற்றிக் கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
2008ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பெர்னார்ட் மெடாஃப் கைது செய்யப்பட்டார். 2009 ஜூன் மாதம் அவர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு 150 ஆண்டுகள் சிறை தண்டணை விதிக்கப்பட்டது.
இவருக்கு எதிராக வாதாடிய வழக்குரைஞர்கள் இவர் 64.8 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு மோசடி செய்திருக்கலாம் என்று கூறியதாக சில வலைதளங்கள் சொல்கின்றன.
பெர்னார்ட் மோசடிதான் செய்து கொண்டிருக்கிறார், அவர் உண்மையில் முதலீடு எல்லாம் செய்து பணத்தைக் கொண்டு வரவில்லையென மார்கோபொலோஸ் என்கிற தடயவியல் கணக்காளர் தொடர்ந்து கூறி வந்தார் என்பதும் இங்கு நினைவுகூறத்தக்கது. கடந்த 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார் பெர்னார்ட்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust