உலகின் மூன்றாவது மிகப்பெரிய பணக்காரராக இருந்த, அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி, சமீபத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பெர்க் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட ஓர் அதிர்ச்சி அளிக்கும் அறிக்கையின் காரணமாக, பல பில்லியன் டாலர் சொத்து மதிப்பு கரைந்து போய் உலகின் நான்காவது பணக்காரர் ஆகியிருக்கிறார்.
ஹிண்டன்பெர்க் ஆராய்ச்சி நிறுவன அறிக்கையில், அதானி குழுமம் பல்வேறு முறைகேடுகள், ஸ்டாக் மேனிபுலேஷன் என்று அழைக்கப்படும் பங்கு விலை போக்கை தீர்மானிக்கும் மோசடிகள், கணக்கு வழக்குகளில் மோசடி செய்திருப்பது என பல விஷயங்களை குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் கடந்த சில தினங்களாக இந்திய பங்குச் சந்தையில் அதானி குடும்பத்தின் ஏழு நிறுவன பங்குகளின் விலை கணிசமான சரிவை எதிர் கொண்டிருக்கிறது. ஆனால், அதானி குழுமமோ ஹிண்டன்பெர்க் ஆராய்ச்சி நிறுவனத்தின் குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்துள்ளது.
யார் இந்த ஹிண்டன்பெர்க் ஆராய்ச்சி நிறுவனம்? ஹிண்டன்பெர்க் ஆராய்ச்சி குழும அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் மோசடிகள் என்ன? வாருங்கள் சுருக்கமாக பார்ப்போம்.
நீட் ஆன்சர் என்பவரால் கடந்த 2017 ஆம் ஆண்டு நியூ யார்க் நகரத்தில், கார்ப்பரேட் நிறுவனங்கள் தொடர்பான முறைகேடுகளை தடயவியல் ரீதியில் ஆராய்ந்து பொதுவெளிக்கு கொண்டு வரும் நிறுவனமாகத் தொடங்கப்பட்டது ஹிண்டன்பெர்க்.
நிறுவனங்களின் கணக்கு வழக்கு முறைகேடுகள், தவறான நபர்கள் நிர்வாகத்தின் முக்கிய பதவிகளில் இருப்பது, கம்பெனி தொடர்பான பரிமாற்றங்கள் ரகசியமாக வைக்கப்படுவது அல்லது பொதுவெளியில் அறிவிக்கப்படாமல் இருப்பது, முறைகேடாக வியாபாரம் செய்வது, முதலீட்டாளர்கள் மற்றும் அரசு தரப்பை ஏமாற்றி ஒரு நிறுவனத்திற்குள் நடந்திருக்கும் நிதி முறைகேடுகள்… போன்ற பிரச்சனைகளை இவர்கள் ஆராய்ந்து வெளியிடுகிறார்கள்.
தங்களுடைய ஆராய்ச்சியின் அடிப்படையில், கடந்த காலங்களில் பல்வேறு நிறுவனங்களின் முறைகேடுகளை பொதுவெளிக்கு கொண்டு வந்திருக்கிறார்கள். உதாரணமாக நிக்கோலா என்கிற மின்சார டிரக் நிறுவனத்தில் நடந்த முறைகேடுகள் எல்லாம் இந்த நிறுவனம் தான் பொது வெளியில் அம்பலப்படுத்தியது. ஒரு சர்வதேச ஊடகம் வெளியிடும் அறிக்கைகளுக்கு என்ன மரியாதை கொடுக்கப்படுகிறதோ கிட்டத்தட்ட அதே அளவுக்கான மரியாதையையும் கவனத்தையும் ஹிண்டன்பெர்க் நிறுவனத்தின் அறிக்கைகள் பெறுகின்றன. சரி, அதானியின் கதைக்கு வருவோம்.
கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக அதானி குழுமம் தொடர்பாக ஹிண்டன்பெர்க் நிறுவனம் மேற்கொண்ட ஆராய்ச்சியில், கடந்த பல ஆண்டுகளாக அதானி குழுமத்தின் கணக்கு வழக்குகளில் முறைகேடுகள் செய்யப்பட்டு இருப்பதாகவும், அதானி குழுமத்துக்கு சொந்தமான பங்குகளின் விலை தவறாக கையாள பட்டு இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.
உலகின் மூன்றாவது பணக்காரராக விளங்கும் கௌதம் அவர்களின் சொத்து மதிப்பு கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டுமே கிட்டதட்ட 100 பில்லியன் டாலருக்கு மேல் அதிகரித்து இருக்கிறது. இதற்கு அதானி குழுமத்தின் ஏழு நிறுவனங்கள் இந்திய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டிருப்பதும், அதன் விலை அதீதமாக அதிகரித்து இருப்பதுமே முக்கிய காரணம் என்பதை நாம் பல்வேறு கட்டுரைகளில் பார்த்திருக்கிறோம் படித்திருக்கிறோம்.
அப்படி அதானி குழுமத்தின் பங்குகள் மிக அதிக விலையில் வர்த்தகமாகி வருவதற்கு போதிய அடிப்படை காரணங்கள், அதாவது நிதிநிலைகள் இல்லை என குற்றம்சாட்டுகிறது ஹிண்டன்பெர்க் ஆராய்ச்சி நிறுவனம்.
அதானி குழுமத்துக்கு சொந்தமான ஏழு நிறுவனங்கள் இந்திய பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டு வர்த்தகமாகி வருகின்றன. பங்குகளின் விலை கடந்த மூன்று ஆண்டுகளில் எவ்வளவு அதிகரித்து இருக்கிறது என்பதை கீழே கொடுக்கப்பட்டிருக்கும் படம் 1-ல் பார்க்கலாம்.
படம் 1
ஒரு நிறுவனத்தின் பங்கு, எந்த விலைக்கு வர்த்தகமாகிறது என்பதற்கும், அந்நிறுவனத்தின் நிதி நிலைக்கும் மிக நெருக்கமான தொடர்பு உண்டு. ஆனால் அதானி குழுமப் பங்குகள் சந்தையில் வர்த்தகமாகும் விலைக்கும் அதனுடைய நிதி நிலைக்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது ஹிண்டன்பெர்க்.
உதாரணத்திற்கு அதானி குழும பங்குகளின் தற்போதைய விலையோடு அந்நிறுவனங்கள் ஈட்டும் வருவாய் விகிதங்களை (Price to Earnings) ஒப்பிட்டால் பல நூறு மடங்கு அதிகமாக இருக்கிறது. அதே நிறுவனங்களின் பங்குகள் சார்ந்த துறையோடு ஒப்பிட்டால், விலை: வருவாய் விகிதம், சராசரியாக 30 மடங்குக்கு மேல் அதிகமாக இல்லை.
இதே போல பங்கு விலைக்கும் அதானி குழும நிறுவனங்களின் விற்பனைக்கும் விகிதாச்சார (Price to Sales) அடிப்படையில் கணக்கிட்டு பார்த்தாலும் அந்தந்த துறையின் சராசரியை விட அதானி குழும பங்குகளின் விலை : விற்பனை விகிதம் பல மடங்கு அதிகமாக இருக்கிறது.
இப்படி அதானி குழுமத்தின் அடிப்படை நிதி நிலை விவரங்களோடு, அந்நிறுவனங்களின் பங்கு விலையை ஒப்பிட்டுப் பார்க்கும் விவரங்களைக் கீழே படம் 2ல் பார்க்கலாம்.
படம் 2
இந்திய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும் 7 அதானி குழும நிறுவனங்களில், பல நிறுவனங்கள் தாங்கள் ஈட்டும் வருவாயை விட பல மடங்கு அதிக கடனை வாங்கி இருக்கின்றன. உதாரணத்திற்கு அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் தான் ஈட்டும் எபிட்டா வருவாயை விட 12.1 மடங்கு அதிக கடன் தொகையை வாங்கி இருக்கிறது. இது கிரீன் எனர்ஜி துறையில் இருக்கும் சராசரியை விட இரு மடங்கு அதிகம் என்பதை கீழே கொடுக்கப்பட்டிருக்கும் படம் 3-ல் பார்க்கலாம்.
படம் 3
ஒரு நிறுவனம் உண்மையாகவே தன்னுடைய திறமையை நிரூபித்து முதலீட்டாளர்களிடமிருந்து பணத்தை பெற்று வரும் முதலீடுகளே, அந்த நிறுவனத்திற்கும் அந்த நிறுவனம் இயங்கும் நாட்டிந் பொருளாதாரத்திற்கும் நன்மை பயக்கும்.
ஒருவேளை, ஒரு தாய் நிறுவனம் தான் ஈட்டும் லாபத்தை வேறு ஒரு நிறுவனத்தின் பெயருக்கு மாற்றி, அந்த நிறுவனத்தில் இருந்து வேறு ஒரு வெளிநாட்டு நிறுவனத்திற்கு மீண்டும் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டு, மீண்டும் தாய் நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டால் இதை ஆங்கிலத்தில் ரவுண்டு ட்ரிப்பிங் என்பர். இது சட்டப்படி தவறு, இப்படி ஒரு நாட்டில் முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டால் அது வரி ஏய்ப்பாகக் கூட இருக்கலாம். அதோடு, நிறுவனங்கள் பலமாக இருப்பது போன்ற ஒரு தவறான, போலி பிம்பத்தை ஏற்படுத்தும்.
அப்படி ஒரு மோசடி அதானி குழுமத்தில் நடப்பதாக ஹிண்டன்பெர்க் ஆராய்ச்சி நிறுவனம் தன் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.
அதானி குழுமத்தின் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் இருந்து (Adani Group Listed Companies), அதானி குடும்பத்திற்கு சொந்தமான வெளிநாட்டு டிரஸ்டுகள் மற்றும் நிறுவனங்களுக்கு பணம் பரிமாற்றப்படுவதாகவும், மீண்டும் அதானி குழுமத்தின் வெளிநாட்டு டிரஸ்ட்கள் மற்றும் வெளிநாட்டின் நிறுவனங்களில் இருந்து மொரிஷியஸ் ஃபண்ட்ஸ் உட்பட பல்வேறு வெளிநாட்டு போலி நிறுவனங்களில் முதலீடு செய்யப்படுவதாகக் குற்றம்சாட்டுகிறது ஹிண்டன்பெர்க்.
கடைசியாக போலி வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்து மீண்டும் அதானி குழுமத்தின் பட்டியலிடப்பட்டிருக்கும் நிறுவனங்களுக்கே முதலீடுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் குற்றம் சாட்டுகிறது. இதை கீழே கொடுத்திருக்கும் படம் 4-ல் எளிமையாகப் புரிந்து கொள்ளலாம்.
படம் 4
குடும்பத்தின் கட்டுப்பாட்டில் அதானி குழுமப் பங்குகள்:
இந்தியாவில் ஒரு தனியார் நிறுவனம் இந்திய பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டால், பட்டியலிடப்பட்ட தேதியில் இருந்து அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் 25 சதவீத பங்குகளை பொதுவெளியில் முதலீட்டாளர்கள் வர்த்தகத்திற்கு விட வேண்டும் என எகனாமிக் டைம்ஸ் பத்திரிக்கையின் சமீபத்திய கட்டுரை ஒன்றில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஆனால் அதானி டிரான்ஸ்மிஷன், அதானி என்டர்பிரைஸ் லிமிடெட், அதானி பவர் லிமிடெட், அதானி டோட்டல் கேஸ் ஆகிய நான்கு நிறுவனங்களில், ப்ரொமோட்டாருடன் தொடர்புடைய சந்தேகத்திற்குரிய நபர்கள் அல்லது நிறுவனங்கள் கணிசமான பங்குகளை வைத்திருப்பதாக ஹிண்டன்பெர்க் ஆராய்ச்சி நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது அந்த விவரங்களை கீழே கொடுத்து இருக்கும் படம் 5-ல் பார்க்கலாம்.
படம் 5
இது போக மொரீஷியஸ் நாட்டைச் சேர்ந்த பல்வேறு நிறுவனங்கள் கணிசமான அளவுக்கு அதானி குழும நிறுவனங்களின் பங்குகளை வைத்திருப்பதாகவும் ஹிண்டன்பெர்க் நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.
அதேபோல இந்தியாவையே உலுக்கிய, 2001 - 2002 இந்திய பங்குச் சந்தை ஊழல்களோடு தொடர்புடைய சிலரோடு இணைந்து, அதானி குழுமப் பங்குகளின் விலை கடினமாக கட்டுப்படுத்தப்படுவதாகவும் ஹிண்டன்பெர்க் குற்றம்சாட்டியுள்ளது.
இதுபோக ஏகப்பட்ட சிக்கலான பணப் பரிமாற்றங்கள் நிதி மோசடிகளில் அதானி குழுமம் ஈடுபட்டு இருப்பதாகவும் ஹிண்டன்பெர்க் நிறுவனம் அடுக்கடுக்காக பல குற்றச்சாட்டுகளை சுமத்தி இருக்கிறது. இதெல்லாம் சாமானிய மனிதர்களால் எளிதில் படித்து புரிந்து கொள்ள முடியாத, பொது வெளியில் கிடைக்கும் விவரங்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் தவறு என உணர்ந்து கொள்ள முடியாத அளவுக்கு மிக மிக சிக்கலானவை.
ஒரு நிறுவனத்தில் எப்படி முதன்மை செயல் அதிகாரி அடிக்கடி மாற்றப்பட்டால் அந்நிறுவனத்தின் போக்கின் மீது முதலீட்டாளர்களுக்கு சந்தேகம் ஏற்படுமோ, அதே போல ஒரு நிறுவனத்தின் முதன்மை நிதி அதிகாரி ஒரு சில வருடங்களிலேயே தொடர்ந்து மாற்றப்பட்டாலும் அந்நிறுவனத்தின் நிதிநிலையில் குளறுபடிகள் இருக்கலாம் என சந்தேகப்படுவதில் தவறு ஒன்றும் இல்லை.
அப்படி அதானி எண்டர்பிரைஸ் நிறுவனத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை ஐந்து முதன்மை நிதி அதிகாரிகள் மாற்றப்பட்டு இருக்கிறார்கள். அதானி கிரீன் எனர்ஜி, அதானி போர்ட்ஸ், அதானி பவர் போன்ற நிறுவனங்களில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மூன்று முதன்மை நிதி அதிகாரிகள் மாற்றப்பட்டு இருக்கிறார்கள் என குற்றச்சாட்டுகளின் பட்டியல் நீள்கிறது.
இதற்கு அதானி தரப்பில் கொடுக்கப்பட்டிருக்கும் விளக்கங்கள் & பதில்கள் போதுமானதாக இல்லை. இந்த நிலை நீடித்தால், அதானி குழுமத்தின் கடன்கள் இந்திய வங்கித் துறையின் மீது பெருந்தாக்கத்தை ஏற்படுத்தலாம், இந்தியாவில் ஆளுங்கட்சியாக இருக்கும் பாஜகவுக்கும், இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்குக் கூட அரசியல் ரீதியில் பல நெருக்கடிகளை ஏற்படுத்தலாம் என்பதை மறுப்பதற்கு இல்லை.
இந்த விஷயத்தை ஊடகங்கள், எதிர்கட்சி அரசியல் தலைவர்கள், ஆளும் பாஜக அரசு எப்படி கையாள்கிறது என்பதைப் பொறுத்து 2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளில் கூட இதன் தாக்கங்கள் எதிரொலிக்கலாம்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust