இலங்கை : ரணில் விக்ரமசிங்கே அதிபரானாலும் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீளுமா தீவு தேசம்?

"இதற்கு மேல் மக்கள் சிக்கன நடவடிக்கைகளை எடுக்க முடியாது என்பதே யதார்த்தம்" என யாழ் பல்கலைக்கழகத்தின் அரசியல் பொருளாதார நிபுணர் அகிலன் கதிர்காமர் கூறுகிறார்.
இலங்கை
இலங்கைTwitter
Published on

இலங்கையின் அதிபராக ரணில் விக்ரமசிங்கே, புதன்கிழமை பாராளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்போது நாட்டை பொருளாதார நெருக்கடியிலிருந்து விடுவிக்கும் பணியை அவரது அரசாங்கத்தால் செய்ய முடியுமா? கடனில் மூழ்கி விட்ட இலங்கைப் பொருளாதாரம் உணவு, எரிபொருள் மற்றும் மருந்துக்குப் பணம் இல்லாததால் பெரும் நெருக்கடியைச் சந்தித்தது. அதனால் பல மாதங்களாக இலங்கை மக்களின் எதிர்ப்பு போராட்டம் நடந்து வந்தது.

அரசாங்கம் 51 பில்லியன் டாலருக்குக் கடன்பட்டுள்ளது. அசல் தொகையைச் செலுத்துவது ஒருபுறமிருக்க அந்த கடன்களுக்கான வட்டியைச் செலுத்த முடியாமல் இலங்கை திணறுகிறது.

பல ஆண்டுகளாக இருந்த தவறான நிர்வாகமும் ஊழலும் தான் இந்த நெருக்கடியை உருவாக்கியதாகப் பல ஆய்வாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சீனாவிடம் இருந்து பொறுப்பற்று கடன் வாங்குவது உட்பட, பல கடன் திட்டங்கள் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு என வாங்கப்பட்டு ஊழலுக்கும் நட்டத்திற்குமே பயன்பட்டது.

கோவிட்-19 தாக்குதலுக்கு சில மாதங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட அதிகமான வரிக் குறைப்புக்கள்; மற்றும் பயிர் விளைச்சல் சரிவைத் தோற்றுவிக்கும் விதத்தில் இயற்கை விவசாயத்திற்கு திடீரென மாறியது உள்ளிட்ட பல கொள்கைத் தவறுகளால் கடன் நெருக்கடி அதிகரித்தது.

2019 ஈஸ்டர் குண்டுவெடிப்பு பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து வந்த கோவிட் பொது முடக்கத்தாலும் அந்நிய செலாவணியின் முக்கிய ஆதாரமான ​​சுற்றுலா வருவாயில் பெரிய வீழ்ச்சி ஏற்பட்டது. இவை ஏற்கனவே இருந்த நெருக்கடியைத் தீவிரமாக்கியது.

பொருளாதாரம் இந்த ஆண்டு 8% வரை சுருங்கும் நிலையில் உள்ளது. அதே நேரத்தில் பல உணவுப் பொருட்கள் மற்றும் எரிபொருளின் விலை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. மற்றும் இலங்கையின் நாணய மதிப்பு 80% சரிந்துள்ளது.

IMF பிணை எடுப்பு பலன் தருமா?

ரணில் விக்கிரமசிங்கேவின் புதிய அரசாங்கத்தின் முதல் முன்னுரிமை இலங்கையின் பாரிய கடன்களை மறுசீரமைப்பதாகும். சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) இருந்து பிணை எடுப்பதற்கான பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே நடந்து வருகின்றன. ஆனால் அதற்கு தற்போதைய IMF கடன்களை மேலும் மறுசீரமைக்க வேண்டும். அதே போன்று சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளிடமிருந்து இலங்கை வாங்கியிருக்கும் கடனையும் மறுசீரமைக்க வேண்டும்.

Ranil Wickramasinghe
Ranil WickramasingheTwitter

எந்தவொரு மீட்புத் திட்டமும், அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களைத் தனியார்மயமாக்குதல் மற்றும் ஆழமான சிக்கன நடவடிக்கைகள் உட்படப் பலவற்றைக் கோரலாம். ஐ.எம்.எஃப் நிறுவனமே இத்தகைய நிபந்தனைகளோடுதான் தனது மீட்புக் கடனை கொடுப்பதோ இல்லை இருக்கும் கடன்களை மறுசீரமைப்பதையோ செய்யும்.

ஆனால்"இதற்கு மேல் மக்கள் சிக்கன நடவடிக்கைகளை எடுக்க முடியாது என்பதே யதார்த்தம்" என யாழ் பல்கலைக்கழகத்தின் அரசியல் பொருளாதார நிபுணர் அகிலன் கதிர்காமர் கூறுகிறார். "பலருக்கு எந்தவிதமான வசதியும் இல்லை," என்று அவர் கூறினார். ஏனெனில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு இலங்கை மக்கள் முறைசாரா பொருளாதாரத்தில் வேலை செய்கிறார்கள். அவர்களிடம் சிக்கனப் படுத்துவதற்கு ஏதுமில்லை.

IMF பிணையெடுப்பு பற்றி கதிர்காமர் சந்தேகத்தை எழுப்புகிறார். கொழும்பு தனது வெளிநாட்டுக் கடனை அதிகரிக்கவைப்பது எளிதானதல்ல என்கிறார் அவர். ஏனெனில் இதனால் இலங்கையின் மூலதனச் செலவு மிக அதிகமாக இருக்கும் என்று காரணத்தையும் அவர் கூறுகிறார்.


வர இருக்கும் பஞ்சத்தைத் தவிர்க்கக் கூடுதல் நிவாரணம் தேவை

இலங்கையின் அன்னியச் செலாவணி வருமானம் மாதம் 1.3 முதல் 1.5 பில்லியன் டாலராக இருக்கும் போது இன்னும் பற்றாக்குறையாக உள்ள உணவு, எரிபொருள் மற்றும் மருந்து போன்ற அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு முன்னுரிமை அளிக்குமாறு கதிர்காமர், அதிபர் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார்.

இலங்கை
இலங்கை : இன்றைய நெருக்கடிக்கு 5 முக்கிய காரணங்கள்

பஞ்சத்தின் அதிகரித்து வரும் அச்சுறுத்தலுக்கு மத்தியில், பொதுமக்களுக்கு மேலும் நிவாரணம் வழங்க அரசாங்கம் பற்றாக்குறை செலவினங்களை அதிகரிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார்.

அதிபர் கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூருக்குத் தப்பிச் சென்று புகலிடம் அடைந்திருக்கலாம். ஆனால் அவரது அரசாங்கம் தற்போதைய நெருக்கடிக்குக் காரணமாகச் செய்த சில கொள்கைப் பிழைகளைச் சரி செய்யப் பல ஆண்டுகள் ஆகலாம்.

வரி குறைப்புகள் தலைகீழாக மாற்றப்பட்டாலும் பயன் தருமா?

எடுத்துக்காட்டாக, முன்மொழியப்பட்ட IMF பிணை எடுப்பின் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய உதவுவதற்காக, வளர்ச்சியைத் தூண்டுவதற்காக 2019 இல் அறிவிக்கப்பட்ட பெரும் வரிக் குறைப்புக்கள் கடந்த மாதம் மாற்றப்பட்டன.

ப்ளூம்பெர்க் இதழின் கூற்றுப்படி, அரசின் வருவாய் ஆண்டுக்கு 800 பில்லியன் ரூபாய்கள் அல்லது 2.2 பில்லியன் டாலர் குறைந்துள்ளது. மேலும் தற்போது விற்பனை வரி (VAT) மற்றும் கார்ப்பரேட் வரிகள் மிக மோசமான நேரத்தில், அதுவும் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த நேரத்தில் உயர்த்தப்பட்டதால் அவை போதுமான அளவு வரி வருவாயை அதிகரிப்பது கடினம்.

"வரி உயர்வுகளின் பலன்கள் மிகக் குறைவாக இருக்கும் ," என்று இந்தியாவைத் தளமாகக் கொண்ட அப்சர்வர் ரிசர்ச் ஃபவுண்டேஷனின் ஆய்வாளர் சௌமியா பௌமிக் கூறுகிறார். "கூடுதல் வரி வருவாய் பொருளாதாரத்தை வலுப்படுத்தச் செல்லாது, ஆனால் உணவு பற்றாக்குறை மற்றும் பிற நடவடிக்கைகளைச் சமாளிக்கும்," என்று அவர் கூறுகிறார்.

இயற்கை விவசாயத்தால் ஏற்பட்ட அழிவை மாற்றுவது அவசியம்

நவம்பரில், செயற்கை உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளுக்கு நாடு தழுவிய தடையை அறிவித்த சில மாதங்களுக்குப் பிறகு, இயற்கை விவசாயத்தில் ஒரு பெரிய பரிசோதனையை அரசாங்கம் தொடங்கியது. தடையின் விளைவாக, உள்நாட்டு அரிசி உற்பத்தி மூன்றில் ஒரு பங்காகக் குறைந்தது. மற்றும் நாட்டின் முதன்மை ஏற்றுமதி மற்றும் வெளிநாட்டு நாணயத்தின் ஆதாரமாக இருக்கும் தேயிலை உற்பத்தி 16% குறைந்துள்ளது.

"குறுகிய காலத்தில், பல ஆண்டுகளாக விவசாயிகள் அடைந்த உற்பத்தித் திறன் ஆதாயங்களை அவர்கள் அழித்துவிட்டனர். எனவே மீண்டும் கட்டியெழுப்புவதற்கு நிறைய நேரம் எடுக்கும். அதுவும் அவர்கள் தற்போதைய நெருக்கடியைச் சமாளித்தால்தான் சாத்தியம்" என்று பௌமிக் கூறினார்.

இலங்கை
இலங்கை பொருளாதார நெருக்கடி : இந்தியா கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் என்ன?

இலங்கையின் 20 இலட்சம் விவசாயிகளில் பலர் இயற்கை விவசாயத் தவற்றுக்குப் பின்னர் "நம்பிக்கையை இழந்து விட்டனர்" என்றும், அவர்களது நிலத்தில் மீண்டும் பயிரிடுவதற்கு அவர்களை ஊக்குவிக்க அரசாங்கத்தின் முன்னெடுப்பு திட்டங்கள் தேவைப்படும் என்றும் கதிர்காமர் கூறினார்.

"ஜிடிபி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் விவசாயம் குறைவாக இருந்தாலும், எமது உணவுப் பாதுகாப்பு மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தைப் பொறுத்தவரை இது உண்மையில் ஒரு பெரிய துறை," என்று கதிர்காமர் கூறினார்.

சுற்றுலாத்துறையும் மீண்டு வர நீண்ட காலம் ஆகலாம். இலங்கையின் சுற்றுலா வருவாய் 2018 இல் 4.3 பில்லியன் டாலர்களை எட்டியது, ஆனால் தொற்றுநோய்களின் போது கிட்டத்தட்ட 80% சரிந்தது.

சமீபகாலமாக பெரும்பாலான ஆசிய நாடுகள் சர்வதேசப் பயணிகளின் அதிகரிப்பைக் கண்டாலும், இலங்கையில் நிலவும் பரவலான உள்நாட்டு அமைதியின்மை மற்றும் கடுமையான இடையூறுகள் பல விடுமுறைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் பயணத்தை ரத்து செய்ய வைத்து விட்டன.

Gotabaya Rajapaksa
Gotabaya RajapaksaTwitter

அந்நிய செலாவணிக்கு வெளிநாட்டிலிருந்து இலங்கை மக்கள் அனுப்பும் பணம் இன்றியமையாதது

வெளிநாட்டில் பணிபுரியும் 30 இலட்சம் இலங்கை மக்களிடமிருந்து வரும் வெளிநாட்டுப் பணம் அதிகரிப்பது வருமானத்தைப் பெருக்கும் ஆதாரமாக இருக்கலாம். ஆனால் அதுவும் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட தொற்றுநோய் மற்றும் நாணயக் கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளது.

மொத்தமாக வெளிநாட்டில் இருக்கும் இலங்கை மக்கள் மாதத்திற்கு 500 முதல் 600 மில்லியன் டாலர் வரை வீட்டிற்கு அனுப்புகிறார்கள். ஆனால் அரசாங்கம் ரூபாய் மாற்று விகிதத்தைப் போட்டியற்ற விலையில் நிர்ணயித்தபோது, ​​முறைசாரா "ஹவாலா" பரிமாற்ற முறையின் பயன்பாடு அதிகரித்தது. அதே நேரத்தில் அதிகாரப்பூர்வ பண வரத்து 52% வரை குறைந்துள்ளது.

"ஹவாலா" என்பது புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், தொழிலாளியின் குடும்பம் ரூபாயில் சமமான தொகையைப் பெறுவதை உறுதிசெய்யும் ஒரு இடைத்தரகருக்கு அவர்கள் சம்பாதிக்கும் நாணயத்தில் பணத்தை அனுப்ப அனுமதிக்கிறது.

"முறையான வழிகள் மூலம் பணம் அனுப்புவதை ஊக்குவிக்கும் வழியை அரசாங்கம் கண்டுபிடிக்கும் வரை, அந்த எண்ணிக்கை முந்தைய நிலைக்குத் திரும்பாது" என்று கதிர்காமர் கூறினார்.

இலங்கை
இலங்கை : பொருளாதார நெருக்கடி - தீவு தேசம் மீள என்ன வழி? - விரிவான விளக்கம்

எவ்வாறாயினும், பௌமிக் அதிக நம்பிக்கையுடன் இருக்கிறார். உள்நாட்டில் வேலையின்மை அதிகரித்துள்ளதால் இலங்கை மக்கள் வெளிநாட்டில் வேலை தேடுவது அதிகரித்துள்ளது என்கிறார் அவர்.

"தொற்றுநோய்க்குப் பிந்தைய மீட்சி மற்றும் வளர்ச்சி நிகழும் போது ஒரு வருடத்திற்குள் பணம் அனுப்புவது இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று நான் மிகவும் நம்புகிறேன்," என்று அவர் கூறினார்.

மொத்தத்தில் ரணில் விக்ரமசிங்கே புதிய அதிபரானாலும் இலங்கை நெருக்கடியில் பெருமளவு மாற்றம் வர வாய்ப்பில்லை. அது சரியாவதற்கு மிக நீண்ட காலம் பிடிக்கும். ரணில் அதிபரானதைப் போராடும் மக்கள் ஏற்கவில்லை எனும் அரசியல் பிரச்சினையை இவற்றோடு சேர்த்துப் பார்த்தால் இப்போதைக்கு இலங்கையில் அமைதி நிலவ வாய்ப்பில்லை.

இலங்கை
இலங்கை நிலைதான் அனைத்து நாடுகளுக்கும் : சர்வதேச அளவில் பொருளாதார மந்தநிலை - ஓர் எச்சரிக்கை

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com