Titanic 1943: ஹிட்லர் உருவாக்கிய டைட்டானிக் திரைப்படம்; வெளிவராதது ஏன்?- சுவாரஸ்ய தகவல்கள்
1912ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட டைட்டானிக் கப்பல் அந்த ஆண்டிலேயே ஏப்ரல் மாதம் தனது முதல் பயணத்திலேயே கவிழ்ந்தது.
உலக வரலாற்றில் மறக்க முடியாத இந்த கப்பல் விபத்தில் 1,500க்கும் மேற்பட்டோர் இறந்தனர்.
1997ம் ஆண்டு இது குறித்து வெளியான திரைப்படம் மிகப் பெரிய வெற்றியடைந்து உலகிலேயே அதிகம் வசூல் செய்த படமாக நீண்ட நாட்கள் நிலைத்திருந்தது.
இந்த விபத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்த ஹிட்லர் ஒரு படத்தை தயாரித்தார் என்பது நம்மில் பலருக்கும் தெரியாது.
இதற்கான மூளை ஹிட்லரின் அமைச்சர் ஜோசப் கோயபல்ஸ். டைட்டானிக் கப்பல் விபத்துக்கு காரணம் அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் பேராசை தான் எனக் கூறும் விதமான ஒரு கதை அவருக்கு கிடைத்தது.
ஏன் டைட்டானிக் எடுக்கப்பட்டது?
அமெரிக்கா மற்றும் நாஜிக்களுக்கு எதிரி நாடுகளுக்கு எதிராக மக்களை திரட்ட திரைப்படங்கள் மற்றும் பிற பொழுதுபோக்கு சாதனங்கள் உதவின.
கேப்டன் அமெரிக்கா உள்ளிட்ட சூப்பர் ஹீரோ காமிக்கள் ஹிட்லரை வில்லனாக சித்தரிக்கும் விதமாக வெளியானதைப் பார்க்க முடியும்.
1942ம் ஆண்டு காசாபிளாங்கா என்ற ஹாலிவுட் காதல் படம் வந்தது. நாஜி எதிர்ப்பை பேசிய அந்த படம் ஜெர்மனிய அதிகாரிகளையே வியக்க வைத்தது.
ஏற்கெனவே ஜெர்மனி அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தை குற்றம் சொல்லும் விதமாக படங்களை எடுத்துக் குவித்திருந்தாலும்,காசாபிளாங்கா போன்ற சிறப்பான படங்களுக்கு போட்டியாக எதாவது செய்ய வேண்டியிருந்தது.
இதனால் தான் டைட்டானிக் என்ற நாஜி திரைப்படம் உருவானது.
ஜெர்மனியின் டைட்டானிக் கப்பல்
ஹிட்லரின் கடற்படை தளத்தில் அனைத்து ஆடம்பர வசதிகளும் இருந்த எஸ் எஸ் கேப் அரிகோனா என்ற கப்பல் இருந்தது.
எங்கோ உருவாக்கப்பட்டு கடற்படை முகமாக 1940ல் சேர்த்துக்கொள்ளப்பட்ட இந்த கப்பல் பார்ப்பதற்கு டைட்டானிக் போலவே இருந்தது முற்றிலும் தற்செயலானதே என்கின்றனர் வரலாற்றறிஞர்கள்.
இரண்டு கப்பல்களுக்கு சின்ன வித்தியாசமே இருந்தது. டைட்டானிக்கில் 4 புகைப் போக்கிகள் இருந்தன. கேப் அர்கோனாவில் 3 மட்டுமே.
தற்கொலை செய்துகொண்ட இயக்குநர்
அந்த நேரத்தில் ஜெர்மனி பல இடங்களில் தோல்வியைத் தழுவி வந்தது. ஆனால் படமெடுப்பதற்காக பெரும் பணத்தை செலவு செய்தது நாஜி அரசு.
அந்த காலத்தில் 40 லட்சம் ( அப்போதைய ஜெர்மனிய நாணயத்தில் ) ப்ட்ஜெட் ஒதுக்கப்பட்டது. இன்றைய மதிப்பின் படி, 180 மில்லியன் அமெரிக்க டாலர்கள்.
இந்த படத்தில் பணியாற்றுவதற்காக இராணுவ வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். இவர்கள் படத்தில் நடித்த பெண் கலைஞர்களை பாலியல் ரீதியில் சீண்டியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.
மறுபக்கம் நடிகர்கள் அனைவருமே எப்போது வேண்டுமானாலும் நேசநாட்டு படைகள் இந்த பளபளப்பான செட்டில் குண்டு வீசலாம் என்ற அச்சத்துடனே இருந்தனர்.
படப்பிடிப்பிலும் உருவாக்கத்திலும் நாஜி அரசாங்கம் மூக்கை நுழைத்தது இயக்குநர் ஹெர்பர்ட் செல்புக்கு கடுப்பேற்றியது.
இது குறித்து அதிருப்தி தெரிவித்ததற்காக கைது செய்யப்பட்டார். அமைச்சர் கோயபல்ஸ் தானே அவரை விசாரித்தார்.
சில நாட்களிலேயே ஹெர்பர்ட் சிறையில் தற்கொலை செய்துகொண்டார்.
ஜெர்மனியிலேயே தடை செய்யப்பட்டது
மூலக்கதையை மாற்றி இங்கிலாந்தின் பேரசையால் டைட்டானிக் கவிழ்ந்ததாகவும் ஒரு ஜெர்மனிய இளைஞன் கப்பலின் வேகத்தை குறைக்க போராடுவதாகவும் கதையை அமைத்தனர்.
இறுதியில் இங்கிலாந்தில் அதிகபட்ச லாபம் ஈட்டும் கொள்கையே டைட்டானிக் வீழ்ந்ததற்கு காரணம் என மெஸ்ஸேஜ் வைக்கப்பட்டது.
ஆனாலும் இந்த படத்தின் மூலம் மக்களை வெகுண்டெழச் செய்யலாம் என்ற கனவு பலிக்காமல் போனதற்கு சில காரணங்கள் இருக்கிறது.
படத்துக்காக லட்சக்கணக்கில் பணத்தை தண்ணீராய் செலவழித்த அமைச்சர் கோயபல்ஸே படத்தைப் பார்த்துவிட்டு தலையில் அடித்துக்கொண்டார்.
கதைப்படி டைட்டானிக்கில் பணியாற்றும் ஜெர்மனிய இளைஞன் தனது மூத்த அதிகாரிகளுக்கு கீழ்ப்படியாமல் இருக்கும் விதம், இந்த படத்தை நாஜி வீரர்களுக்கு காண்பிக்காமல் இருக்க காரணமாக இருந்தது.
மேலும் சில காரணங்களால் இந்த படம் அப்படியே போடப்பட்டது. ஜெர்மனியில் இதனை வெளியிடத் தடை விதிக்கப்பட்டது.
1949ம் ஆண்டு இந்த படம் தோண்டி எடுக்கப்பட்டு ஜெர்மனியர்களுக்கு காட்டப்பட்டது.
அரசியல் சார்பு கொண்டிருந்தாலும், யாருக்கும் பயன்படாமல் போனாலும் இது தொழில்நுட்ப ரீதியில் மிகவும் நுட்பமாக எடுக்கப்பட்டிருந்ததாம்.
குறிப்பாக கப்பல் மூழ்கும் காட்சிகள் தத்ரூபமாக இருந்தனவாம்.
கப்பல் என்ன ஆனது?
எஸ் எஸ் கேப் அர்கோனா திரையில் வரவில்லை என்றாலும் வேறொரு காரணத்துக்காக உலகம் முழுவதும் பிரபலமாக பேசப்பட்டது.
படப்பிடிப்புக்கு பிறகு இந்த கப்பல் போரில் பயன்படுத்தப்பட்டு வந்தது.
1945 மே 3ம் தேதி ஜெர்மனியின் முக்கிய தளபதிகள், அதிகாரிகள், உள்ளிட்டோர் கைதிகள் முகாமாக இருந்த இந்த கப்பலில் தப்பி செல்ல முயன்றுள்ளனர்.
இந்த செய்தியை உளவுத்துறை மூலமாக அறிந்துகொண்ட பிரிட்டிஷ் கடற்படை இந்த கப்பலை குண்டு வீசி தாக்கியுள்ளது. அந்த தாக்குதலில் 300 பேர் மட்டுமே தப்பினர்.
அந்த கப்பலில் மொத்தமாக 5000க்கும் மேற்பட்டோர் இருந்ததாக இரு தரப்பு தகவல்களும் கூறுகின்றன.
இப்படி உண்மையான டைட்டானிக்கை விட டைட்டானிகாக நடித்த இந்த கப்பலின் முடிவில் அதிகமான மக்கள் இறந்தனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust