ஈரான்: இளம்பெண் கொலை? ஹிஜாபிற்கு எதிராக பற்றி எரியும் போராட்டம் - விரிவான தகவல்கள்

22 வயதான மஹ்சின் அமினி எனும் இந்தப் பெண் ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் உள்ள ஒழுக்க காவலர்களால் மூன்று நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு கோமா நிலையில் மரணமடைந்தார்.
ஈரான் - ஹிஜாபிற்கு எதிரான போராட்டம் ஏன்? விரிவான தகவல்கள்
ஈரான் - ஹிஜாபிற்கு எதிரான போராட்டம் ஏன்? விரிவான தகவல்கள்Twitter
Published on

ஈரானில் இஸ்லாமிய ஷரியத் சட்டம் கறாராக கடைப்பிடிக்கப்படுகிறது. இதற்கு எதிராக யாராவது செயல்பட்டால் அவர்களைக் கைது செய்து நடவடிக்கை எடுக்க "மாரல் போலீஸ்" எனும் மத ஒழுக்கக் காவலர் பிரிவு அங்குச் செயல்படுகிறது. இவர்கள் உடைக் கட்டுப்பாட்டைக் கடுமையாக அமல்படுத்துகிறார்கள். 

இந்த மாரல் போலீஸால் கடந்த திங்களன்று கைது செய்யப்பட்ட இளம் பெண் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து ஈரானில் போராட்டங்கள் வெடித்துக் கிளம்பின. 22 வயதான மஹ்சின் அமினி எனும் இந்தப் பெண் ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் உள்ள ஒழுக்க காவலர்களால் மூன்று நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு கோமா நிலையில் மரணமடைந்தார். 

ஹிஜாப் கட்டுப்பாட்டைத் தவிர அமினி ஏன் கைது செய்யப்பட்டார் என்பதற்கு காவல்துறை எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை. தனது மகள் ஷரியத் விதிகளின் படி அதைப் பின்பற்றி நீண்ட தளர்வான அங்கியை அணிந்திருந்தார் என அவரது தாயார் ஈரானிய செய்தி நிறுவனங்களிடம் தெரிவித்தார். அமினி தனது சகோதரனுடன் சுரங்கப் பாதை ஒன்றிலிருந்து வெளியேறும் போது கைது செய்யப்பட்டார். அவர்கள் நகரத்திற்குச் சென்று கொண்டிருக்கிறோம் என்று கூறிய போதும் போலீஸ் அதை ஏற்கவில்லை.

இதை ஒட்டி திங்கட்கிழமை தெஹ்ரானில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. பல பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் போராடினர். இரண்டாவது பெரிய நகரமான மஷாத்திலும் போராட்டம் நடைபெற்றது. இதனால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தெஹ்ரான் நகரின் மத்தியப் பகுதியில் ஹிஜாப் தெரு என்று அழைக்கப்படும் தெருவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒழுக்க காவலர்களைக் கண்டித்து அணிவகுத்துச் சென்றனர். பலர் தங்களது தலை முடியை வெட்டி சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டு எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

மஹ்சின் அமினி உண்மையில் எப்படி இறந்தார்?

வெள்ளிக்கிழமை அரசு தொலைக்காட்சி ஒரு சிறிய கண்காணிப்பு வீடியோவை ஒளிபரப்பியது. அதில் அமினி ஒரு போலீசுடன் வாக்குவாதம் செய்த பின்னர் நிலைகுலைந்து விழுகிறார். அமினியின் தந்தை அம்ஜத் அமினி போலீசால் வெளியிடப்பட்ட இந்த வீடியோவை ஏற்கவில்லை. இது எடிட் செய்யப்பட்டிருக்கிறது என்று அவர் கூறினார். 

ஈரானின் பாதுகாப்புப் படைகள் வெளியிட்டிருக்கும் அறிக்கையின் படி தடுப்புக் காவல் நிலையத்தில் அமினி மாரடைப்பினால் பாதிக்கப்பட்டார் என்று கூறப்பட்டிருக்கிறது. அங்கே ஹிஜாப் பற்றிய பயிற்சி வகுப்பு நடந்து வருகிறது. ஆனால் அமினியின் குடும்பத்தார் இதை மறுத்திருக்கின்றனர். அமினிக்கு எந்த உடல் உபாதைகளும் இல்லாமல் ஆரோக்கியமாக இருந்தாள் என அவர்கள் கூறுகின்றனர். 

அதே போன்று அமினிக்கு அவசர மருத்துவச் சிகிச்சை வெகு தாமதமாக அளிக்கப்பட்டது என அவரது தந்தை கூறுகிறார். மருத்துவமனைக்கு அவள் தாமதமாகக் கொண்டு செல்லப்பட்டாள் என்றும் அவர் கூறுகிறார். அமினிக்கு அவசர சிகிச்சை உடன் அளிக்கப்பட்டதாக உள்துறை அமைச்சர் அஹ்ம் வஹிடி கூறினார். அமினிக்கு ஏற்கனவே உடல்ரீதியான பிரச்சினைகள் இருந்ததாகவும், ஐந்து வயதில் அவள் மூளை அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும் அந்த அமைச்சர் கூறினார். 

இருப்பினும் அமினியின் தந்தை தனது மகளுக்கு எந்த விதமான நோய் வரலாறும் இல்லை என்றும் அவள் முழு ஆரோக்கியத்துடன் இருந்ததாகவும் கூறினார். 

இந்நிலையில் அமினியின் புகைப்படமும் வீடியவும் சமூக ஊடகங்களில் வைரலானது. அதில் அவள் மருத்துவமனையின் படுக்கையில் வாய் மற்றும் மூக்கில் குழாய்களுடன் சுயநினைவின்றி இருக்கிறாள். மேலும் அவளது காதிலிருந்து இரத்தம் கசிந்ததோடு, அவளது கண்களைச் சுற்றிலும் காயங்கள் இருந்ததும் தெரிகிறது. 

இது குறித்துப் பல ஈரானிய மருத்துவர்கள் டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளனர். அவர்கள் அமினியின் மருத்துவ அறிக்கையைப் பார்க்கவில்லை என்றாலும் அவளது காதில் இருந்து ரத்தம் வந்ததற்குத் தலையில் ஏற்பட்ட காயங்கள் மற்றும் மூளையில் ஏற்பட்ட அதிர்ச்சியாக இருக்கலாம் என்று கூறினர்.

ஈரானில் ஆடைகள் கட்டுப்பாடு

ஈரான் தன்னை ஒரு இஸ்லாமியக் குடியரசு என்று அறிவித்துக் கொள்கிறது. ஒழுக்கக் காவலர்கள் பொது இடங்களில் பெண்கள் முக்காடு அணிய வேண்டும் என்ற ஆடைக் கட்டுப்பாட்டை அமல்படுத்துகின்றனர். இறுக்கமான கால்சட்டை, கிழிந்த ஜீன்ஸ், முழங்கால்களை வெளிப்படுத்தும் ஆடைகள் மற்றும் பிரகாசமான வண்ணங்களிலான ஆடைகள் அங்கே பெண்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன.

Islam
IslamTwitter

இஸ்லாத்தில் ஆடைக் கட்டுப்பாட்டின் வரலாறு

முஸ்லீம் சமூகத்தில் முக்காடு என்பது வரலாற்று ரீதியாக ஒரே மாதிரியாக எல்லா இடங்களிலும் பின்பற்றப்படவில்லை. அது புவியியல், சமூக பொருளாதாரம், வரலாற்று சூழலை சார்ந்தே இருந்து வருகிறது. ஈரானில் நீண்ட காலமாகவே இந்தப் பிரச்சினை அரசியலாக்கப்பட்டு வருகிறது.

தனது நாட்டை நவீனமயமாக்கும் முயற்சியோடு தேசிய அடையாள உணர்வைத் தூண்டும் விதமாகவும் பஹ்லவி ஷா 1, 1936 இல் முக்காடு போடுவதைத் தடை செய்யும் ஆணையை வெளியிட்டார். மேலும் அவர் ஆண்களை ஐரோப்பிய பாணி தொப்பிகளை அணியுமாறும் வற்புறுத்தினார். சில ஆண்டுகளுக்குப் பிறகு ஷா நாடு கடத்தப்பட்டு, அவரது இளம் மகன் ஆட்சியாளராகப் பொறுப்பேற்றார். 

முகமது ரேசா பஹ்லவி தனது தந்தையின் மதச்சார்பற்ற மேற்கத்திய சார்பு நிலைப்பாட்டை விரிவுபடுத்தினார். ஆனால் 1970களில் ஈரானில் மக்கள் ஷா வம்ச மன்னர்களை எதிர்த்து போராட்டம் நடத்திய போது பெண்கள் உணர்வுப்பூர்வமாக முகமூடிகளையும், அங்கிகளையும் ஏற்றுக் கொண்டனர். அவை முடியாட்சியை எதிர்க்கும் அடையாளப் போராட்டங்களாக மாறின.

<div class="paragraphs"><p>ஹிஜாப்</p></div>

ஹிஜாப்

Twitter

ஆனால் ஈரானில் முடியாட்சி தூக்கியெறியப்பட்ட புரட்சிக்குப் பின்னர் ஹிஜாப்பை திணிப்பதற்கு அரசு செய்த முயற்சிகள் கடுமையான எதிர்ப்பை சந்தித்தன. 1979இல் ஆயிரக்கணக்கான பெண்கள் இதை எதிர்த்து வீதிகளில் போராடினர். சுதந்திரத்தின் விடியலில் சுதந்திரம் இல்லை என்று அவர்கள் முழங்கினர். 

இத்தகைய எதிர்ப்புகள் இருந்த போதிலும் கட்டாய ஹிஜாப் புரட்சிக்கு பிந்தைய சமூகத்தின இன்றியமையாத அங்கமாக மாறியது. முதலில் பலத்தாலும் பின்னர் சட்டத்தாலும் அது நிலைநாட்டப்பட்டது. இன்று ஹிஜாப் அணிவதை மீறினால் அபராதம் விதிக்கப்படுவதோடு இரண்டு மாத சிறைத் தண்டனையும் விதிக்கப்படுகிறது. 

போராட்ட வரலாறு

பல ஆண்டுகளாக ஈரானில் இது போன்ற சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. 2017டிசம்பருக்கு பிறகு ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவித்த 35க்கும் மேற்பட்ட பெண் போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசின் தகவல்படி ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்கும் பெண்களுக்கு பத்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தெஹ்ரானில் ஒரு பெண் தனது தலையில் முக்காட்டை சரியாக போடவில்லை என்று ஒரு பெண் போலீசால் அறையப்பட்டார். இது மற்றொரு பெண்ணால் வீடியோ எடுக்கப்பட்டு இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டது. இந்த வீடியோவை 30 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பார்த்ததோடு 30,000த்திற்கும் மேற்பட்ட மறுமொழிகளையும் எழுதினர். 

இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஈரானின் மகளிர் விவகாரங்களுக்கான துணைத் தலைவர் மசூமே எப்டேகரும் வன்முறைக்கு கண்டனம் தெரிவித்தார். 

ஈரான் - ஹிஜாபிற்கு எதிரான போராட்டம் ஏன்? விரிவான தகவல்கள்
ஐஸ் கிரீம் விளம்பரத்தில் நடித்த பெண்ணை தடை செய்த இரான் அரசாங்கம்

ஹிஜாப் பற்றிய பிற சர்ச்சைகள்

இந்தியா

கடந்த ஆண்டு டிசம்பரில் கர்நாடகா மாநிலத்தின் உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் ஹிஜாப் அணிந்ததால் 6 மாணவிகள் நுழையத் தடை விதிக்கப்பட்டது. இதே போன்ற வேறு சில கல்லூரிகளுலும் நடந்தது. 

இது முஸ்லீம் மாணவிகளின் கல்வி மற்றும் மத உரிமையை மீறுவதாக ஜனநாயக சக்திகளும், முஸ்லீம்களும் கூறினர். இச்சம்பவத்தை அடுத்து இந்துத்துவா அமைப்புகள் இந்து மாணவர்களை அணிதிரட்டி போராட்டம் நடத்தின. மாணவர்கள் மதத்தின் அடிப்படையில் இரு பிரிவுகளாகப் பிரிந்தனர். 

இந்த ஆண்டு மார்ச் மாதம் கர்நாடகா உயர் நீதிமன்றம், மாநில பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஹிஜாப் (தலைக்கவசம்) அணிவதைத் தடை செய்த அரசாணையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களைத் தள்ளுபடி செய்தது. ஹிஜாப் அணிவது இஸ்லாத்தில் அத்தியாவசியமான மத நடைமுறை அல்ல என்று தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு கூறியது. மேலும் சீருடை வடிவில் விதிக்கப்படும் நியாயமான கட்டுப்பாடுகளை மாணவர்கள் எதிர்க்க முடியாது என்றும் கூறியது. ஹிஜாப் குறித்த பள்ளிகளின் தடையானது அரசியலமைப்பு விதிகளை மீறவில்லை என்றும் தீர்ப்பளித்தது.

கர்நாடகா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்துத் தொடரப்பட்ட மனுக்கள் மீதான வாதங்களை உச்ச நீதிமன்றம் பின்னர் விசாரித்தது.

ஈரான் - ஹிஜாபிற்கு எதிரான போராட்டம் ஏன்? விரிவான தகவல்கள்
ஈரான் நாடு குறித்த ஆச்சர்யமான இந்த 8 உண்மைகள் தெரியுமா?

ஹிஜாப் என்பது முஸ்லீம்களின் அடையாளம் என்று வலியுறுத்திய மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, கர்நாடகாவின் தலைக்கவசம் குறித்த சர்ச்சை சிறுபான்மை சமூகத்தை ஓரங்கட்டுவதற்கான நடவடிக்கையாக இருக்கின்றன என்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

ஐரோப்பா

ஐரோப்பாவில், ஹிஜாப் மற்றும் புர்கா சர்ச்சைகள் முஸ்லீம் பெண்கள் அணியும் பல்வேறு தலைக்கவசங்களைச் சுற்றியே உள்ளன. பல நாடுகளில், ஹிஜாப் அணிவது (அரபு பெயர்ச்சொல் "மறைப்பதற்கு") அரசியல் விவாதத்தைத் தூண்டியிருக்கிறது. சில நாடுகளில் ஏற்கனவே பொது இடங்களில் முகமூடி அணிவதைத் தடைசெய்யும் சட்டங்கள் உள்ளன. 

மற்ற நாடுகளும் இதே போன்ற சட்டத்தைப் பரிசீலித்து வருகின்றன அல்லது குறைவான கடுமையான தடைகளைக் கொண்டுள்ளன. 

ஈரான் - ஹிஜாபிற்கு எதிரான போராட்டம் ஏன்? விரிவான தகவல்கள்
காஷ்மீர் : பொட்டு வைக்க கூடாது; ஹிஜாப் அணிய கூடாது - 2 பெண் குழந்தைகளை தாக்கிய ஆசிரியர்

ஹிஜாபை தடை செய்த ஐரோப்பிய நாடுகள்

பின்வரும் ஐரோப்பிய நாடுகள் ஜூலை 2021 இல் பர்தாவை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ தடை செய்துள்ளன. ஆஸ்திரியா, பிரான்ஸ், பெல்ஜியம், டென்மார்க், பல்கேரியா, நெதர்லாந்து (பொதுப் பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் பொதுப் போக்குவரத்தில்). ஜெர்மனியின் சில மாநிலங்களில் தடைசெய்யப்பட்டுள்ளன. இத்தாலி (சில இடங்களில்), ஸ்பெயின் (கேடலோனியாவின் சில இடங்களில்), ரஷ்யா (ஸ்டாவ்ரோபோல் பிரதேசத்தில்), லக்சம்பர்க், சுவிட்சர்லாந்து, நார்வே (நர்சரிகள், பொதுப் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில்) மற்றும் கொசோவோ ( பொதுப் பள்ளிகள்), போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா (நீதிமன்றங்கள் மற்றும் பிற சட்ட நிறுவனங்களில்).இவ்வாறு உலகம் முழுவதிலும் ஹிஜாப் ஒரு சர்ச்சைக்குரியதாகவே இருந்து வருகிறது. 

ஈரான் - ஹிஜாபிற்கு எதிரான போராட்டம் ஏன்? விரிவான தகவல்கள்
Hijab : கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை செல்லும் - கர்நாடக உயர்நீதிமன்றம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com