பூடான், தென்-மத்திய ஆசியாவில் இந்தியவின் வடகிழக்கில் உள்ள ஒரு நாடு. இமயமலையின் கிழக்கு முகடுகளில் அமைந்துள்ளது. வரலாற்று ரீதியாக பூடான் ஒரு தொலைதூர தொடர்பில்லாத ராஜ்ஜியம். பூட்டான் 20 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் மெதுவாக மாறத் துவங்கியது.
21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், இந்திய எல்லையிலிருந்து பூடான் தலைநகரான திம்புவுக்கு ஒரு கோவேறு கழுதை மூலம் பயணம் செய்தால் ஆறு நாட்கள் ஆகும். தற்போது இந்த பயணத்தை, எல்லை நகரமான ஃபண்ட்ஷோலிங்கிலிருந்து வளைந்த மலைப்பாதையில் காரில் சென்றால் சில மணிநேரங்களில் அடைய முடியும். அரசாங்க அமைப்பும் அடியோடு மாறியது. 1950கள் மற்றும் 60களில் மன்னர் ஜிக்மே டோர்ஜி வாங்சுக் (1952-72 ஆட்சி செய்தவர்) சீர்திருத்தங்களைத் துவக்கினார். அதன் போக்கில் 1990களில் முழுமையான முடியாட்சியிலிருந்து விலகி 2008ல் பல்கட்சி நாடாளுமன்ற ஜனநாயகத்தை நிறுவுவதற்கு வழிவகுத்தது.
தற்போது பூடானின் பிரதமர்: லோட்டே ஷெரிங். தலைநகரம் திம்பு. மக்கள் தொகை 7,56,100. அரசின் தலைவர்: மன்னர் ஜிக்மே கேசர் நம்க்யால் வாங்சுக். அரசாங்கத்தின் வடிவம் முடியாட்சி ஜனநாயகம். தேசிய கவுன்சிலில் 252 பேரும், தேசிய சட்டமன்றத்தில் 47 பேரும் இருக்கின்றனர்.
பூட்டான் வரலாற்றின் ஆரம்பம் புதிரானது. அதன் நிலம் மலைகளால் சூழப்பட்டுள்ளது. வெளியுலகம் இதை 'மறைக்கப்பட்ட புனித பூமி,' 'கடவுளின் தாமரை தோட்டம்' போன்ற பல பெயர்களில் அழைக்கிறது. பூட்டானிய மக்கள் தங்கள் நாட்டின் பெயரை 'ட்ருக் யூல்' என்று அழைக்கிறார்கள்.
இதன் பொருள் 'தி லாண்ட் ஆஃப் தண்டர் டிராகன்' - இடி டிராகனின் பூமி. 'பூடான்' என்ற வார்த்தையானது 'திபெத்தின் முடிவு' என்று பொருள்படும் 'போட்டான்ட்' என்ற சமஸ்கிருத வார்த்தையிலிருந்து அதன் வேர்களைக் கொண்டுள்ளது.
பூட்டானின் வரலாற்றை ஆராய்வதன் மூலம் அந்நாடு எப்படி உருவானது என்பதைப் பார்ப்போம்.
பூட்டானின் வரலாற்றுக்கு முந்தைய காலங்கள் தெளிவாக இல்லை. எனினும் அதன் வரலாற்றுக் காலம் தெளிவானது. சாங்ட்சன் காம்போ என அழைக்கப்படும் திபெத்திய ஆட்சியாளரால் 7 ஆம் நூற்றாண்டில் புத்த மதம் பூட்டானில் பரவியதாக நம்பப்படுகிறது. கி.பி.747 ஆம் ஆண்டு பூட்டானின் கலாச்சாரத்தை வடிவமைத்த மிக முக்கியமான பிரபலமான குரு ரிம்போச்சே (குரு பத்ம சாம்பவா) என்று அழைக்கப்படுபவரின் வருகையைக் குறிக்கிறது. புத்தரைப் போலவே இவரும் கௌரவமானவராகக் கருதப்படுகிறார்.
பத்ம சாம்பவா பூட்டானில் புத்தமதத்தின் நிங்மாபா பிரிவை நிறுவியவர். பின்னர், பூட்டான் நிலம் பல சிறிய முடியாட்சிகளாகப் பிரிக்கப்பட்டது, ஒரு பௌத்த அரசரால் ஆளப்பட்டது. இது பூட்டானின் பிராந்தியங்களில் பௌத்தத்தைப் பரப்பியது.
ட்ருக்பா பிரிவைச் சேர்ந்த துறவியான நகாவாங் நம்க்யால், பூட்டானின் வரலாற்றில் மிகவும் புகழ்பெற்ற ஆளுமையாகக் கருதப்படுகிறார், ஏனெனில் அவர் நாட்டின் அதிகாரப்பூர்வ மதத்தைப் பரப்புவதற்குப் பொறுப்பானவர். அவர் கெலுக்பா பிரிவினருக்கு எதிராகக் கடுமையாக இருந்தார் மற்றும் பௌத்தத்தின் ட்ருக்பா பதிப்பைப் பரப்புவதற்காகப் பல திபெத்திய எதிர்க்கட்சித் தலைவர்களுடன் போராடினார். அவர் தன்னை Zhabdrung Rinpoche ஜபத்ருங்கின் ரின்போச்சி (அவரது காலடியை வணங்கக் கூடிய சர்வவல்லமையுள்ளவர்) என்றும் அறிவித்தார்.
அவர் சிறிய அதிகார மையங்களாக இருந்த Dzongs ஐ உருவாக்கினார் மற்றும் அண்டை ஆட்சியாளர்களை அதன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார். இது பூட்டானை ஒருங்கிணைக்க உதவியது மற்றும் ஜாப்த்ருங்கின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. இது பல வெளிநாட்டு படையெடுப்பாளர்களை வெற்றிகரமாக எதிர்க்கப் பூட்டானுக்கு உதவியது.
ஜபத்ருங் 1651 இல் காலமானார். ஆனால் பூட்டானின் வரலாற்றின் படி, அவர் நாட்டின் கலாச்சார மற்றும் அரசியல் ஒருமைப்பாட்டைப் பேணுவதற்குக் காரணமாக இருந்தார்.
அடுத்த இரண்டு நூற்றாண்டுகள் அரசாங்கத்திற்குள் உள் மோதல்களால் நிரம்பியது. இது இறுதியில் உள்நாட்டுப் போருக்கு வழிவகுத்தது.
பூட்டானின் கூச் பெஹாரின் ஆட்சியாளர் கிழக்கிந்திய கம்பெனி தங்கள் மாநிலத்திலிருந்து பூட்டானிய ஆட்சியை அழிக்க அணுகினார். இப்படியாகப் பூட்டானில் பிரிட்டிஷ் தலையீடு தொடங்கியது.
கூச் பெஹார் மன்னர் அவர்களுக்கு ஒரு கவர்ச்சியான ஒப்பந்தத்தை வழங்கினார். பூட்டானில் பெஹார் மூலம் கிடைக்கும் வருவாயில் பாதியை கிழக்கிந்திய கம்பெனிக்கு பகிர்ந்து கொள்ள முன்மொழியப்பட்டது.
இந்த பணி பிரிட்டிஷ் கவர்னர் வாரன் ஹேஸ்டிங்ஸிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் இந்தியப் படைகளுடன் கூச் பெஹாரில் பூட்டான் ஆட்சியைத் தாக்கினார். அந்தப் போரில் வெற்றி பெற்றார். ஆனால் பெரும் அளவில் இராணுவ வீரர்களை இழந்ததோடு பெரும் பணத்தையும் அவர் இழந்தார்.
இழப்புகளை ஈடுசெய்ய, பிரிட்டிஷ் கம்பெனி ஏற்கனவே போட்ட ஒப்பந்தங்களை அமல்படுத்துமாறு வற்புறுத்தியது. கைப்பற்றப்பட்ட பிரதேசத்தின் மீது கட்டுப்பாட்டையும் கோரியது. கூச் பெஹார் ஆட்சியாளர் அவர்களின் கோரிக்கைகளுக்குப் பணிந்தார்.
தனது வணிகத்திற்கு மிகவும் லாபகரமானதாக இருக்குமென கிழக்கிந்திய கம்பெனி உணர்ந்தது. எனவே அவர்கள் 1773 ஆம் ஆண்டில் பூட்டான் பகுதிகளான காலிம்போங் மற்றும் ஃபுயென்ஷோலிங் மீது பல தாக்குதல்களை நடத்தினர்.
அந்த நேரத்தில் பூட்டானை ஆண்ட தேசி, உதவிக்காக திபெத்திய லாமாவிடம் முறையிட முடிவு செய்தார்.பஞ்சன் லாமா பூட்டானுக்கு உதவ ஒப்புக்கொண்டார். மற்றும் வங்காளத்தின் பிரிட்டிஷ் ஆளுநருக்குத் தந்திரமாக ஒரு கடிதம் எழுதினார்.
கவர்னர் ஒப்புக்கொண்டு சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இதன் மூலம் கையகப்படுத்தப்பட்ட பகுதியைப் பூட்டானுக்கு திருப்பி அனுப்பினார்.பூட்டான் காடுகளில் மரங்களை வெட்ட வேண்டும் என்ற கிழக்கிந்திய கம்பெனியின் கோரிக்கைகளை நிறைவேற்றத் தேசி மன்னர் முடிவு செய்தார்.
பிரம்மபுத்திரா நதியின் திறந்தவெளிப் பகுதியும் பூட்டானின் கீழ் மலைகளும் துவாரஸ் என்ற அழைக்கப்பட்டன. துவாரின் மேற்குப் பகுதி பெங்கால் துவார்ஸ் என்று அறியப்பட்டது. அது பூட்டான் அரசாங்கத்தின் கீழ் இருந்தது. கிழக்கு துவார் பகுதி பூடான் மற்றும் அஸ்ஸாமின் கூட்டு உரிமையைக் கொண்டிருந்தது. பர்மியப் போருக்குப் பிறகு, ஆங்கிலேயர்கள் அஸ்ஸாமில் இருந்து கிழக்கு துவாரைக் கைப்பற்றினர்.
இரு நாடுகளுக்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்தன மேலும் கிழக்கு துவார் பகுதியைக் கைப்பற்றப் பூட்டானுக்கு எதிராகப் போரை நடத்த ஆங்கிலேயர்கள் முடிவு செய்தனர். அவர்கள் பூட்டானுக்கு ஆண்டு தோறும் பணம் வழங்க ஒப்புக்கொண்டாலும், துவார் பகுதிகள் ஒரு சிறந்த தேயிலை வளரும் பிரதேசமாக இருந்ததால், பூட்டானின் கைகளில் அவை இருப்பதை அவர்களால் ஏற்க முடியவில்லை.
முதலில், பூட்டானுக்கு வாடகை கொடுப்பதை நிறுத்தினார்கள். பின்னர் தேசி ஜிக்மே நம்கியாலின் தொடர்ச்சியான பதிலடிக்குப் பிறகு, அவர்கள் வங்காள துவார்களின் மீது கட்டுப்பாட்டைப் பெற முடிந்தது. இதன் மூலம், பூட்டான் அதன் வருவாய் மற்றும் வர்த்தகங்களில் உரியை பங்கை இழந்தது.
ஜிக்மே 1879 வரை தனது பதவியைத் தக்க வைத்துக் கொண்டார். அதன் பிறகு அவரது மகன் உக்யென் வாங்சுக் அவருக்குப் பிறகு பதவியேற்றார். அவர் ஒரு திறமையான தலைவர் என்பதை நிரூபித்தார். அவர் பூட்டான் வரலாற்றில் மிக முக்கியமான நபராக கருதப்படுகிறார்.
1907 இல் ஜிக்மே நம்கியால் இறந்த பிறகு, பூட்டானின் மன்னராக உக்யென் வாங்சுக் முடிசூட்டப்பட்டார். இது பூட்டானில் பரம்பரை முடியாட்சியின் தொடக்கத்தைக் குறித்தது. திபெத்தின் சில பகுதிகளை ஆக்கிரமிப்பதில் ஆங்கிலத் தளபதி பிரான்சிஸ் யங்ஹஸ்பண்டிற்கு, உக்யென் உதவினார். இதன் மூலம் பிரிட்டிஷ் பேரரசின் இதயங்களை வென்றார். பிரிட்டிஷ் அரசு அவருக்கு நைட் கமாண்டர் என்ற பட்டத்தை வழங்கியது.
பூடானின் உள் விவகாரங்களில் பிரிட்டிஷ் அரசாங்கம் தலையிடக் கூடாது என்று அவரது ஆட்சியின் போது புனகா ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால் அதன் வெளி உறவுகளின் மீது ஆங்கிலேயர்கள் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கும் என்று ஒப்புக் கொள்ளப்பட்டது. துவார் பிராந்தியத்திற்காக பூடானுக்கு வழங்கப்படும் ஆண்டு வாடகையும் இரட்டிப்பாகியது.
உக்யென் வாங்சுக்கின் மரணத்திற்குப் பிறகு, ஜிக்மே வாங்சக் அவரது பதவியை ஏற்றுக்கொண்டார். அவரது ஆட்சியின் போது, இந்தியா ஒரு இறையாண்மை கொண்ட நாடாகப் பூட்டானை அங்கீகரித்தது, அதன் உள் விவகாரங்களில் தன்னிச்சையாக செயல்படச் சுதந்திரம் அளித்தது.
பூட்டானின் நவீனமயமாக்கல் சகாப்தம் 1952 இல் ஜிக்மே டோர்ஜி வாங்சுக்கின் ஆட்சியுடன் தொடங்கியது. அவர் படித்தவர். மேலும் உலகத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட கொள்கை பூட்டானின் வளர்ச்சிக்கு உதவாது என்பதை அவர் உணர்ந்தார். நேருவின் ஆட்சிக் காலத்தில் இந்தியாவுடனான தனது உறவை வலுப்படுத்தினார். அவரது மேற்பார்வையின் கீழ், பூட்டான் 1971 இல் யுனிவர்சல் போஸ்டல் யூனியன் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையில் இணைந்தது. ராயல் பூட்டான் இராணுவம் என்று அழைக்கப்படும் பூட்டானிய இராணுவத்தை உருவாக்கவும் அவர் வழிவகுத்தார்.
ஜிக்மே டோர்ஜி வாங்சக் 1972 இல் அவரது திறமையான மகன் ஜிக்மே சிங்யே வாங்சக் என்பவரால் மாற்றப்பட்டார். முக்கிய பூட்டானின் மரபுகள் மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாக்கும் அதே வேளையில் பூட்டானை நவீனமயமாக்கும் தனது தந்தையின் திட்டத்தை அவர் மேற்கொண்டார்.
2007ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது.
பூடான் சிறிய நாடாக இருந்தாலும் அந்நிய சக்திகளுக்கு அடிபணியவில்லை. சமீப காலம் வரை, பூட்டான் தனிமைப்படுத்தல் கொள்கையைப் பின்பற்றி வந்தாலும், வெளியுலக உதவியின்றி சுமுகமாகச் செயல்பட்டு வருகிறது. தனித்துவமான தேசிய அடையாளத்தைப் பாதுகாப்பது பூட்டான் கலாச்சாரத்தில் ஆழமாக உள்ளது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com