இராக் யாசிதி மக்கள்: யார் இவர்கள்? சாத்தானை வழிபடும் மக்களா இவர்கள்?

இவர்களின் மக்கள் தொகை எவ்வளவு என்று கூறுவது கடினம். 70 ஆயிரம் முதல் 5 லட்சம் வரையிலான எண்ணிக்கையில் யாசிதிகள் இருக்கலாம் என்று பலர் கூறுகின்றனர். அச்சத்துக்கும், பழிவாங்கலுக்கும், கொடுமைக்கும் இலக்கான இந்த இனத்தின் மக்கள் தொகை கடுமையான பாதிப்பை எதிர்கொண்டது.
இராக்  யாசிதி மக்கள் - சித்தரிப்புக்காக
இராக்  யாசிதி மக்கள் - சித்தரிப்புக்காகPexels
Published on

2014ம் ஆண்டு வடமேற்கு இராக்கில் ‘இஸ்லாமிய அரசு’ அல்லது ஐ.எஸ். என்று தங்களை அழைத்துக்கொண்ட தீவிரவாதிகள் சுமார் 50 ஆயிரம் யாசிதி மக்களை இனப்படுகொலை செய்தனர்.

ஏராளமான யாசிதி பெண்கள் பாலியல் அடிமைகளாக்கப்பட்டனர்.

இஸ்லாம், கிறிஸ்வத மதக் கூறுகளும், ஜொராஷ்ட்ரிய சமயத்துக்கு முந்திய பண்டைய இராக்கிய சமயத்தின் வேர்களையும் கொண்டிருக்கிற, விந்தையான சமூக, சமயப் பழக்க வழக்கங்களை மேற்கொள்கிற யாசிதி மக்கள் வெளியுலகத்துக்கு எப்போதுமே புதிர்தான். அவர்களது விந்தையான மதத்தில் இருந்து  அவர்களை மாற்றும் நோக்கத்தோடுதான் ஐ.எஸ். இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் செய்திகள் வெளியாயின.

2014 வாக்கில் இராக்கில் ஐ.எஸ். அமைப்பினர் தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை விரிவாக்கிக்கொண்டு முன்னேறினர்.  அப்போது, வடமேற்கு இராக், வடமேற்கு சிரியா, தென்கிழக்கு துருக்கி ஆகிய பகுதிகளை பூர்வீகமாக கொண்ட, குர்திஷ் மொழி பேசுகிற யாசிதிகள் ஐ.எஸ். அமைப்பினரிடம் சிக்கிக் கொண்டனர்.  பல்லாயிரம் யாசிதி மக்கள் சிஞ்ஜர் மலையில் உணவும் தண்ணீரும் இன்றி மாட்டிக்கொண்டு கொடுமைகளை அனுபவித்தனர். பல லட்சம் யாசிதி சிறுபான்மையினர் அகதிகளாக வெளியேறினர்.

பிறகு, ஐ.எஸ். அமைப்பினரின் சாம்ராஜ்ஜியம் சரியத் தொடங்கி, 2019ல் அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த கடைசி பிராந்தியமும் பறிபோனது வேறு கதை.

ஈராக் யசீதி
ஈராக் யசீதி

யார் இந்த யாசிதி மக்கள்?

யார் இந்த யாசிதி மக்கள்? அவர்களது சமயப் பழக்கவழக்கம்தான் என்ன? ஏன் இவர்கள் சாத்தானை வழிபடுகிறவர்கள் என்று பார்க்கப்படுகிறார்கள்?

இதைப் பற்றி ஆராய்ந்த எழுத்தாளர் டயானா டார்கே பிபிசி கட்டுரை ஒன்றில் இப்படி எழுதினார்: “தங்கள் மீது இழைக்கப்பட்ட கொடுமை காரணமாக சட்டென்று கவனத்தைப் பெற்ற யாசிதி மக்கள் வழக்கமாக இத்தகைய சர்வதேச கவனத்தை விரும்புகிறவர்கள் அல்லர். வழக்கத்துக்கு மாறான அவர்களது நம்பிக்கைகள் காரணமாக, சாத்தானை வழிபடுகிறவர்கள் என்று தவறாக, கருதப்பட்டவர்கள் அவர்கள்”. பாரம்பரியமாக இராக், சிரியா, துருக்கி நாட்டின் சில பகுதிகளில் சிறு சிறு குழுக்களாக வசிப்பவர்கள் யாசிதிகள். 

இவர்களின் மக்கள் தொகை எவ்வளவு என்று கூறுவது கடினம். 70 ஆயிரம் முதல் 5 லட்சம் வரையிலான எண்ணிக்கையில் யாசிதிகள் இருக்கலாம் என்று பலர் கூறுகின்றனர். அச்சத்துக்கும், பழிவாங்கலுக்கும், கொடுமைக்கும் இலக்கான இந்த இனத்தின் மக்கள் தொகை கடுமையான பாதிப்பை எதிர்கொண்டது.

பிறப்பின் அடிப்படையில்

மத்தியக் கிழக்கில் உள்ள துருசே, அல்வாயிஸ் போன்ற சில சிறுபான்மை மதங்களைப் போல யாசிதி மக்களின் சமயத்துக்கு யாரும் மாறிச் செல்ல முடியாது. அந்த மதத்தைப் பின்பற்றவேண்டும் எனில் நீங்கள் யாசிதியாகப் பிறந்திருக்கவேண்டும். அவ்வளவே.

இந்த இனத்தின் பெயர் காரணமாக ஏற்பட்ட தவறான புரிதலே அவர்கள் எதிர்கொண்ட கொடுமைகளுக்கு பெரிதும் காரணம் என்று எழுதினார் டயானா டார்கே.

உமய்யத் வம்சத்தை சேர்ந்த, எதிர்ப்புகளை சம்பாதித்த, இரண்டாவது கலீபாவான யாசித் இபின் முவாவியா (647-683)வின் பெயரில் இருந்துதான் யாசிதி மக்களுக்கு அந்தப் பெயர் வந்ததாக ஐ.எஸ். போன்ற சுன்னி தீவிரவாதிகள் கருதினார்கள். ஆனால், நவீன ஆராய்ச்சியில் அந்த கலீபா யாசித்துக்கோ, யாஸ்த் என்ற பாரசீக நகரத்துக்கோ எந்த தொடர்பும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. யாசிதி மக்கள் கூட்டத்தின் பெயர் ‘இசத்’ என்ற பாரசீகச் சொல்லில் இருந்தே தோன்றியிருக்கிறது என்பதை நவீன ஆய்வுகள் காட்டுகின்றன. இந்த சொல்லுக்கு கடவுள் அல்லது தேவதை என்று பொருள். ‘இஸ்திஸ்’ என்ற சொல்லுக்கு கடவுளை வழிபடுகிறவர்கள் என்பதுதான் நேரடிப் பொருள். இப்படித்தான் யாசிதி மக்கள் தங்களை குறிப்பிடுகிறார்கள்.

இராக்  யாசிதி மக்கள் - சித்தரிப்புக்காக
முருக கடவுள், நெற்றித் திலகம் - இந்து பண்பாட்டை பிரதிபலிக்கும் ஈராக் யசீதி கலாசாரம்

பைபிளா? குரானா?

‘தாசீன்’ (பன்மை: தவாசீன்) என்பதுதான் அந்த மக்கள் தங்களுக்கு சூட்டிக்கொண்ட பெயர். நெஸ்டோரியன் கிறிஸ்துவ சபையைச் சேர்ந்த பெயர் இது. அவர்களது பல நம்பிக்கைகள் கிறிஸ்துவத்தில் இருந்து வந்தவை. யாசிதி மக்கள் பைபிள், குரான் இரண்டையுமே புனிதமாக மதிக்கிறார்கள். ஆனால், அவர்களது மரபின் பெரும்பகுதி வாய்வழியாகவே அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லப்படுகிறவை. யாசிதி மரபில் சூரியனை வழிபடும் வழக்கம் உண்டு. இருட்டுக்கும், ஒளிக்கும் ஒரு முக்கியப் பங்கு உண்டு. ஆனால், இந்த சிக்கலான மரபில் உள்ள ரகசியத் தன்மை காரணமாக இதற்கும் ஜொராஷ்ட்ரியன் சமயத்துக்கும் தொடர்பு உண்டு என்று தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது.

இவர்களது ஆலயங்கள் பல இடங்களில் சூரியனின் உருவம் கொண்டு அலங்கரிக்கப்படுகின்றன, கல்லறைகள் சூரியன் உதிக்கும் கிழக்குத் திசையை நோக்கி அமைக்கப்படுகின்றன. ஆனாலும், கிறிஸ்துவத்துக்கும், இஸ்லாத்துக்கும் யாசிதி மரபுக்கும் இடையில் நிறைய ஒற்றுமைகள் உண்டு.

இராக்  யாசிதி மக்கள் - சித்தரிப்புக்காக
சீனா - செளதி அரேபியா 1500 ஆண்டுகால நட்பு: வணிகமும், வரலாறும் - ஒரு விரிவான பார்வை

ஞானஸ்னானம் எப்படி நடக்கும்?

யாசிதி குழந்தைகளுக்கு, பிர் என்று அழைக்கப்படும் அவர்களது குருக்கள் புனித நீர் தெளித்து ஞானஸ்னானம் செய்வார். திருமணங்களில் அவர் ரொட்டியை இரண்டாக வெட்டி மணமகனுக்கும், மணமகளுக்கும் ஆளுக்கு ஒரு துண்டாகத் தருவார். மணமகள்கள் சிவப்பு நிற ஆடையை அணிந்து கிறிஸ்துவ தேவாலயங்களுக்கு செல்வார்.

இராக்  யாசிதி மக்கள் - சித்தரிப்புக்காக
ஓமன் : ஓர் அரபு நாட்டின் அசுர வளர்ச்சி - வியக்க வைக்கும் சுவாரஸ்ய வரலாறு

நோன்பும், ஒயினும்

டிசம்பர் மாதத்தில் மூன்று நாள்கள் நோன்பு இருக்கும் யாசிதி மக்கள், பிறகு ‘பிர்’ குருக்களோடு ஒயின் அருந்துவர். ஆண்டுதோறும், செப்டம்பர் 15-20 தேதிகளில், மொசூலுக்கு வடக்கே லாலேஷ் என்ற இடத்தில் உள்ள ஷேக் அடி என்ற புனிதரின் சமாதிக்கு புனிதப் பயணம் செல்வார்கள். அங்கே ஆற்றில் அவர்கள் புனிதக் கடமைகளை நிறைவேற்றுவார்கள். விலங்குகளைப் பலியிட்டு குழந்தைகளுக்கு சுன்னத்தும் செய்வார்கள்.

மயில் தேவதையும், கிறிஸ்துவமும்

இவர்களது கடவுளுக்கு யாஸ்தான் என்று பெயர். நேரடியாகத் தொழ முடியாத அளவுக்கு அவர் உயர்ந்த ஸ்தானத்தில் வைக்கப்படுகிறார். அவர் அதிகம் செயலற்றவராக கருதப்படுகிறார். உலகைப் படைத்தவர் அவராக இருந்தாலும், காப்பவர் அவரில்லை. அவரில் இருந்து  ஏழு பெரும் சக்திகள் வெளிப்படுகின்றன. அவற்றில் மிகவும் சிறப்பு வாய்ந்த மயில் தேவதையான ‘மலக் தாவுஸ்’ கடவுளின் கட்டளையை நிறைவேற்றும். ஆரம்ப கால கிறிஸ்துவ மதத்தில் மயில் மரணமின்றி வாழக்கூடியது என்ற நம்பிக்கை இருந்தது. மலக் தாவுஸ், கடவுளின் மறு வடிவமாக, கடவுளிடம் இருந்து பிரிக்க முடியாததாக இருப்பதாக நம்பப்படுகிறது. எனவேதான், யாசிதி மார்கம் ஓரிறை மார்கம் என்றே அழைக்கப்படுகிறது.

யாசிதி மக்கள் ஒரு நாளைக்கு ஐந்து முறை மலக் தாவுஸைத் தொழுகிறார்கள். மலக் தாவுசுக்கு உள்ள இன்னொரு பெயர் ஷைத்தான். அரபி மொழியில் இதற்கு தீய சக்தி என்று பொருள். இதைக் குழப்பித் தவறாகப் புரிந்துகொண்டுதான் யாசிதி மக்கள் சாத்தானை வணங்குகிறவர்கள் என்று முத்திரை குத்திவிட்டார்கள்.

ஆன்மாக்கள் பல உடல்களை, பிறவிகளை எடுத்து படிப்படியாக தம்மைத் தூய்மை செய்துகொண்டு நரகம் என்ற ஒன்று தேவையில்லாமல் செய்துவிடுகின்றன என்பது யாசிதிகளின் நம்பிக்கை. தங்கள் சமூகத்தில் இருந்து விலக்கப்படுவதுதான் ஒரு யாசிதிக்கு மோசமான கெடுவினை. ஏனென்றால் சமூகத்தில் இருந்து விலக்கப்பட்டுவிட்டால், ஆன்மா முன்னேற இயலாது என்று அவர்கள் நம்புகிறார்கள். எனவே, மதம் மாறுவது என்பது கேள்விக்கு அப்பாற்பட்டது.

18, 19ம் நூற்றாண்டில் துருக்கியின் ஓட்டோமான் ஆட்சியின்போது யாசிதி மக்கள் 72 முறை இனப்படுகொலைத் தாக்குதலுக்கு இலக்கானதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி ஒன்றை மேற்கோள்காட்டி, தி கார்டியன் பத்திரிகை செய்தி வெளியிட்டது.

அதைப் போல எவ்வளவு கொடுமைக்கு இலக்காக்கப்பட்டாலும், அவர்கள் தங்கள் நம்பிக்கைகளை விட்டுக்கொடுக்கமாட்டார்கள். அவ்வளவு உறுதியான உள்ளம் படைத்தவர்கள் அவர்கள்.

2014ல் இராக்கில் இனப்படுகொலைத் தாக்குதலுக்கு இலக்கான இவர்கள் அமைதியாக வாழவும் தங்கள் நம்பிக்கையைப் பின்பற்றவும் துருக்கி இடம் அளித்தது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com