ஒரு சாதாரண மனிதர் கைது செய்யப்படுவதே அந்த வட்டாரத்தில் பெரும் சலசலப்பைக் கிளப்பும். ஒரு நாட்டின் டாப் 10 பணக்காரர்களில் ஒருவராக இருக்கும் ஒரு குடும்பம் கைது செய்யப்பட்டால் அதை எப்படி எடுத்துக் கொள்வது?
எந்த நாடாக இருந்தாலும், மிகப் பெரிய பணக்காரர்கள் அத்தனை எளிதில் கைது செய்யப்படுவதில்லை. ஆனால் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த குப்தா சகோதரர்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் சஹரன்பூர் என்கிற பகுதியிலிருந்து 1993ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் குடியேறியது குப்தா சகோதரர்கள் குடும்பம். அஜய் குப்தா, அதுல் குப்தா, ராஜேஷ் குப்தா இவர்கள் 3 பேரும் சகோதரர்கள்.
இந்த சகோதரர்கள் 1993ஆம் ஆண்டு சஹாரா கம்ப்யூட்டர்ஸ் என்கிற நிறுவனத்தைத் தென்னாப்பிரிக்காவில் தொடங்கினார். இதுதான் குப்தா சாம்ராஜ்யத்தின் முதல் படி.
மெல்ல குப்தா குடும்பம் சுரங்கத் தொழில், விமானச் சேவை, எரிசக்தி, தொழில்நுட்பம், ஊடகம்... எனப் பல தளங்களில் தங்கள் சாம்ராஜ்ஜியத்தைக் கட்டமைக்கத் தொடங்கினர்.
தென்னாப்பிரிக்க அரசியலில் பெரும் புள்ளி என்கிற நிலையில் அந்நாட்டின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா உடன் குப்தா சகோதரர்களுக்கு அறிமுகம் ஏற்பட்டது. மெல்ல குப்தா சகோதரர்களின் நிறுவன விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் ஜேக்கப் சுமாவை அழைக்கத் தொடங்கினர்.
ஜேக்கப் ஜுமா 2009ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை தென்னாப்பிரிக்காவின் அதிபராகப் பதவியிலிருந்தார். இந்த காலகட்டத்தில் குப்தா சகோதரர்களின் சொத்து மதிப்பு விண்ணைத் தொட்டது.
2016 ஆம் ஆண்டு ஜே எஸ் இ லிஸ்டட் ஹோல்டிங்ஸ் என்கிற நிறுவனத்தின் மதிப்பீட்டின் அடிப்படையில் தென்னாப்பிரிக்காவின் ஏழாவது பெரிய பணக்காரர் அதுல் குப்தா. அவர் சொத்து மதிப்பு 10.7 பில்லியன் தென்னாப்பிரிக்கா ராண்ட். அமெரிக்க டாலர் மதிப்பில் இதைக் குறிப்பிட வேண்டுமானால் 773.47 மில்லியன் டாலர்.
தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா பல பெண்களைத் திருமணம் செய்து கொண்டார். கடைசியாக 2012 ஆம் ஆண்டு போங்கி கெமே (Bongi Ngema) என்பவரைத் திருமணம் செய்து கொண்டார் ஜூமா. அவர் குப்தா சகோதரர்களின் ஜெ ஐ சி சுரங்க நிறுவனத்தில் வேலை பார்த்தவர்.
அவரது மகள் டுடுசில் ஜூமா (Duduzile Zuma) குப்தா சகோதரர்களின் சஹாரா கம்ப்யூட்டர் நிறுவனத்தில் இயக்குநராக வேலை செய்தவர். அதேபோல அவரது மகன் டுடுசான் ஜூமா (Duduzane Zuma) குப்தா சகோதரர்களின் பல்வேறு நிறுவனங்களில் இயக்குநராக வேலை பார்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா மற்றும் குப்தா சகோதரர்கள் என இரு குடும்பமும் இணைந்து செய்த பல விஷயங்கள் அந்நாட்டு மக்களை கடும் அதிருப்திக்கு உள்ளாக்கியது.
எனவே ஜேக்கப் ஜூமா என்கிற பெயரிலிருந்து சு என்கிற எழுத்தையும், குப்தா சகோதரர்களின் பெயரில் இருக்கும் 'ப்தாவை' இணைத்து "சுப்தாஸ்" என மக்கள் அழைக்கத் தொடங்கினர்
2013ஆம் ஆண்டு குப்தா சகோதரர்கள் தங்கள் சகோதரி மகளின் திருமணத்திற்கு பிரிட்டோரியா என்கிற பகுதிக்கு அருகிலுள்ள வாட்டர் கிளாப் ஏர் பேசை (Waterkloof Air Base) தனிமனித பயன்பாட்டுக்குப் பயன்படுத்திக் கொண்டனர்.
இது அந்நாட்டு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ராஜரீக ரீதியிலான வெளிநாட்டு அதிகாரிகள், நாட்டின் அதிபர்கள் பிரதமர்கள் போன்ற மிக உயரிய வெளிநாட்டு விருந்தினர்கள் வந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும் அந்த விமான தளம், ஜேக்கப் ஜூமாவின் நண்பர் என்கிற ஒரே காரணத்தால் குப்தா சகோதரர்களுக்குக் கொடுக்கப்பட்டது பலராலும் வெளிப்படையாகக் கண்டிக்கப்பட்டது.
அவ்வளவு ஏன் தென்னாப்பிரிக்காவில் கேபினெட் அமைச்சரவையில் யார் இடம் பெறலாம் என்பது வரை தீர்மானிக்கும் சக்தி குப்தா சகோதரர்களுக்கு இருந்தது.
பொது நிறுவனங்கள் துறை (Minister of Public Enterprises) அமைச்சர் பதவியில் வித்ஜெ மென்டார் (Vytjie Mentor) என்பவரை அமர்த்துவதாகவும், அதற்குப் பதிலாக தென்னாப்பிரிக்க ஏர்வேஸ் நிறுவனம் இந்திய வழித்தடத்தை விட்டுக் கொடுக்க வைக்க வேண்டும் என்று கூறப்பட்டதாக பல்வேறு வலைத்தளங்களில் செய்தி வெளியாகின.
கடந்த 2017 ஆம் ஆண்டு வ்ரெடே பண்ணை திட்டம் (Vrede farm project) தொடர்பாக விசாரணைக்கு அழைக்கப்பட்டது குப்தா குடும்பம். இந்த காலகட்டத்தில்தான் தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமா மற்றும் குப்தா குடும்பத்தினருக்கும் நெருக்கமான உறவு பல்வேறு ஹேக் செய்யப்பட்ட மின்னஞ்சல்கள் மூலம் தெரியவந்தது.
2018 ஆம் ஆண்டு குப்தா குடும்பத்தினர் தென்னாப்பிரிக்காவில் இருந்து வெளியேறினர். அதனைத் தொடர்ந்து குப்தா சகோதரர்களுக்கு எதிராக இன்டர்போல் ரெட் நோட்டீஸ் பிறப்பித்தது. அமெரிக்கா மற்றும் பிரிட்டன் குப்தா சகோதரர்கள் வரவேற்கத்தக்க விருந்தினர்கள் அல்ல என்று அறிவித்தது. தென்னாப்பிரிக்க நீதிமன்றங்கள் குப்தா சகோதரர்களின் பல சொத்துக்களை முடக்கியது. அப்போதைய தென்னாப்பிரிக்காவின் அதிபர் ஜேக்கப் ஜூமா தன் பதவியை ராஜினாமா செய்தார்.
ஜேக்கப் ஜூமா அதிபர் ஆவதற்கு முன்பும், அதிபர் காலத்திலும், அதிபராகப் பதவியிலிருந்து விலகிய பிறகும் பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு சட்ட ரீதியாகப் போராடி வருகிறார். இதில் பாலியல் குற்றச்சாட்டுகள், பண மோசடி, ஊழல்... எனப் பல குற்றச்சாட்டுகள் அடங்கும். தற்போதைக்கு ஜேக்கப் ஜூமா நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் கீழ் 15 மாத சிறை வாசத்தை அனுபவித்து வருகிறார்.
தென்னாப்பிரிக்காவிலிருந்து தப்பி ஓடி, கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஐக்கிய அரபு அமீரகத்தின் சட்ட முகமை அதிகாரிகள் ராஜேஷ் குப்தா மற்றும் அதுல் குப்தாவைக் கைது செய்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. அஜய் குப்தா மட்டும் ஏன் கைது செய்யப்படவில்லை என இதுவரை எந்த ஒரு தெளிவான விடையும் கிடைக்கவில்லை.
குப்தா சகோதரர்கள் விவகாரத்தில், தென்னாப்பிரிக்க அரசு, ஐக்கிய அரபு அமீரகத்துடன் முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp