இந்தியா தனது எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய அதிகளவில் கச்சா எண்ணெய்யை வெளிநாடுகளிடமிருந்து இறக்குமதி செய்கிறது. இந்தியாவுக்கு அதிக அளவில் கச்சா எண்ணெய் வழங்கும் நாடுகளின் பட்டியலில் தற்போது அமெரிக்கா இரண்டாம் இடத்துக்கு முன்னேறியிருக்கிறது.
முன்னதாக சவுதி அரேபியா இரண்டாம் இடத்தில் இருந்தது. ஆனால், தினசரி எண்ணெய் உற்பத்தியில் 10 லட்சம் பேரல்களைக் குறைப்பது என சவுதி அரசு எடுத்த முடிவால், இந்திய எண்ணெய் நிறுவனங்கள் அமெரிக்காவிடம் அதிகளவில் எண்ணெய் கொள்முதல் செய்திருக்கின்றன.
மேலும், OPEC எனப்படு எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு, எண்ணெய் உற்பத்தி மற்றும் விநியோக அளவை குறைக்கவும் முடிவெடுத்தன. அதோடு, அமெரிக்காவின் கச்சா எண்ணெய் தேவையும் குறைந்தது. இதனால், குறைந்த விலையில் கச்சா எண்ணெய் விற்க அமெரிக்கா முன்வந்ததும், இந்திய எண்ணெய் நிறுவனங்கள் அமெரிக்காவிடமிருந்து அதிகம் இறக்குமதி செய்யத் தூண்டியிருக்கிறது.
பிப்ரவரி 2022-ல் அமெரிக்காவிடமிருந்து இந்தியா இறக்குமதி செய்த கச்சா எண்ணெய் அளவு 48% அதிகரித்திருக்கிறது. தினசரி 5,45,300 பேரல்கள் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது. இது இந்தியாவின் மொத்த எண்ணெய் இறக்குமதியில் 14%.
அதே நேரம், பிப்ரவரி 2022-ல் இந்தியாவின் மிக முக்கிய எண்ணெய் விநியோக நாடான சவுதியிடமிருந்து, இறக்குமதியாகும் எண்ணெய் அளவு 42% சரிந்திருக்கிறது. இது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத சரிவு. தற்போது இந்தியா அதிகம் எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டது சவுதி.
“ அமெரிக்காவில் எண்ணெய்க்கான தேவை குறைந்திருக்கிறது. இதனால் சுத்திகரிப்பு நிறுவனங்களும் விலையை குறைந்திருக்கின்றன. கையிருப்பில் இருக்கும் உபரி எண்ணெய்யை, தேவை அதிகமாக இருக்கும் ஆசியாவில்தான் உடனடியாக விற்க முடியும். ஆசியாவின் மிகப்பெரும் நாடான சீனா, வர்த்தகப் பிரச்னை காரணமாக அமெரிக்காவிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதில்லை. அதனால் அமெரிக்காவுக்கு இந்திய சந்தைதான் ஒரே வாய்ப்பு" என்கின்றனர் சர்வதேச வர்த்தக ஆய்வாளர்கள்.
இந்தியாவுக்கு அதிக அளவில் கச்சா எண்ணெய் சப்ளை செய்யும் நாடுகளில் முதலிடத்தில் ஈராக் இடம்பெற்றிருக்கிறது. இந்தியாவின் மொத்த எண்ணெய் இறக்குமதியில் ஈராக்கின் பங்கு 23%.