கத்தார் : கால்பந்து உலகக் கோப்பையை நடத்தும் பாலைவன நாடு - 10 சுவாரஸ்ய தகவல்கள்!
2022ம் ஆண்டுக்கான கால்பந்து போட்டியை நடத்துகிறது சிறிய வளைகுடா நாடான கத்தார். உலக வரைபடத்தில் உற்றுப்பார்த்தால் மட்டுமே தெரியக்கூடிய இந்த பாலைவன நாடு உலகின் மிகப் பெரிய தொடரை நடத்துவது கொஞ்சம் வியப்பளிப்பதாகவே இருக்கிறது. இன்று உலகம் முழுவதும் தலைப்பு செய்தியாகியிருக்கும் கத்தார் குறித்த 10 உண்மைகளைப் பார்க்கலாம்.
அல் ஜசீரா மீடியா நெட்வொர்க்
AJMN என்பது கத்தார் அரசின் நிதி பங்களிப்பில் செயல்படும் ஒரு உலகளாவிய ஊடக நிறுவனமாகும். இது அல் ஜசீராவின் தாய் நிறுவனமாக செயல்படுகிறது. இதன் தலைமையகம் கத்தாரின் தலைநகரான தோஹாவில் உள்ளது. உலகளவில், பிபிசிக்கு அடுத்தபடியாக AJMN இரண்டாவது பெரிய பணிக்கத்தைக் கொண்டுள்ளது.
நவம்பர் 1, 1996 தொடக்கத்தில் அல் ஜசீரா செயற்கைக்கோளாக ஏவப்பட்டது, அதன் பின்னர் அதன் வளர்ச்சியானது இன்றைய உச்சத்தை அடைந்திருக்கிறது.
உலகின் பணக்கார நாடு
”CIA வேர்ல்ட் ஃபேக்ட்” தகவலின் படி, கத்தார் 2017-ல் $124,500 மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் கொண்டிருந்தது. ஐரோப்பாவில் உள்ள லிச்சென்ஸ்டைனுக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது பணக்கார நாடாக கத்தார் உள்ளது. 2013-ல் கத்தாரின் வேலையின்மை விகிதம் 0.1% மட்டுமே.
எந்த கத்தார் குடிமகனும் வறுமைக் கோட்டிற்குக் கீழே இல்லை. நாட்டில் உள்ள கார்ப்பரேட் சட்டத்தின்படி, கத்தாரில் தொடங்கப்படும் எந்தவொரு தொழிலிலும் 51% கத்தார் நாட்டவருக்கு வேலை வழங்கியாக வேண்டும்.
எண்ணெய் வளம்
கத்தாரின் பொருளாதாரத்தில் எண்ணெய் முக்கியமான ஆதாரமாகும். 15 பில்லியன் பீப்பாய்கள் மற்றும் எரிவாயு வயல்களின் எண்ணெய் இருப்புக்களுடன், கத்தார் உலகின் 13% எண்ணெய் வளத்தின் இருப்பைக் கொண்டுள்ளது. எனவே, பல ஆண்டுகளுக்கு அதன் பொருளாதாரத்தை நிலைநிறுத்துமளவிற்கு எண்ணெய் வளங்களைக் கொண்டுள்ளது. இதுவே சில சமயங்களின் அதன் பொருளாதாரத்தை பின்னடையவும் செய்திருக்கிறது.
எடுத்துக்காட்டாக, 1982 மற்றும் 1989 க்கு இடையில், எண்ணெய் விலை வீழ்ச்சி மற்றும் கச்சா எண்ணெய் உற்பத்தியில் OPEC ஒதுக்கீடுகள் விதிக்கப்பட்டதன் காரணமாகப் பொருளாதாரம் வீழ்ச்சியைச் சந்தித்தது. அதனால் தான், தற்போது, கத்தார் அரசாங்கம் எண்ணெய் மீதான அதிக நம்பிக்கையைக் குறைக்க பொருளாதாரத்தைப் பல வழிகளில் தக்க வைப்பதை நோக்கமாகக் கொண்டு திட்டங்கள் தீட்டி வருகிறது.
காடுகள் இல்லாத கத்தார்
கத்தாரில் இயற்கையான காடுகள் இல்லை. வறண்ட காலநிலை காரணமாக இங்கு அடர்ந்த மரங்களின் வளர்ச்சிக்கு வாய்ப்பே இல்லாத சூழல் தான் இருக்கிறது.
குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தாவர இனங்கள் மட்டுமே இங்கு வளர்கின்றன, உதாரணமாகப் பாலைவன ஸ்க்ரப். அகாசியா இங்கு வளரும் மிகவும் பொதுவான இனமாகும் மற்றும் சதுப்புநிலங்களின் சிறிய திட்டுகள் நாட்டின் வடக்கில் காணப்படுகின்றன.
முத்துக் குளித்தல்
கத்தாரில் எண்ணெய் கண்டுபிடிப்பதற்கு முன்பு முத்து வேட்டையே பிரதானமாக இருந்தது. பல நூற்றாண்டுகளாக, முத்து வேட்டை இப்பகுதியில் உள்ள மக்களின் முதன்மையான வருமான ஆதாரங்களில் ஒன்றாகும்.
சாசானியப் பேரரசின் ஆட்சியின் போது இது கி.பி 224 இல் பிரபலமாக இருந்தது. இருப்பினும், ஜப்பான் 1920 மற்றும் 1930களில் உலக சந்தையில் வளர்ப்பு முத்தை அறிமுகப்படுத்தியபோது, கத்தாரின் முத்து தொழில் கடுமையான அடியை சந்தித்தது. 1940 இல் கத்தாரில் எண்ணெய் கண்டுபிடிப்பிற்கு பிறகே கத்தாரின் பொருளாதாரம் மீண்டெழுந்தது.
கார்பன் டை ஆக்ஸைடு அதிர்ச்சி
கத்தாரின் தனிநபர் CO2 பங்களிப்பு தான் உலகிலேயே அதிகமாகும். 2014 ஆம் ஆண்டின் உலக வங்கியின் தரவுகளின்படி, கத்தாரில் தனிநபர் CO2 வெளிவிடும் அளவானது 43.9 மெட்ரிக் டன்கள் ஆகும்.
இது உலகிலேயே மிக உயர்ந்ததாகும். எனவே, புவி வெப்பமடைதல் மற்றும் காலநிலை மாற்றத்திற்கு காரணமாக இருக்கும் உலகின் மிக உயர்ந்த கார்பன் தடயங்களில் ஒன்றாக கத்தார் குடிமக்களின் கார்பன் டை ஆக்ஸைடு வெளிவிடுதல் இருக்கிறது.
ஒளிரும் மஞ்சள் கரடி
கத்தாரின் ஹமாத் சர்வதேச விமான நிலையத்தில் ஒரு பெரிய கேனரி மஞ்சள் டெடி கரடி பொம்மை விளக்குக்களால் ஒளிர்ந்தபடி அமர்ந்திருக்கிறது. இது விளக்கு கரடி என்றும் அழைக்கப்படுகிறது. சுவிஸ் கலைஞரான உர்ஸ் பிஷ்ஷரால் இந்த டெடி பொம்மை வடிவமைக்கப்பட்டது.
தோஹா நகரம்
சுமார் 1.8 மில்லியன் மக்கள்தொகையுடன், தோஹா கத்தாரின் அதிக மக்கள்தொகை கொண்ட நகரமாக விளங்குகிறது. தோஹா மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் தான் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 80% க்கும் அதிகமானோர் வசிக்கின்றனர்.
தோஹா கிழக்கு கத்தாரில் பாரசீக வளைகுடாவில் அமைந்துள்ளது. இது 1820களில் நிறுவப்பட்டது. 1971 இல் ஆங்கிலேயர்களிடமிருந்து நாடு சுதந்திரம் அடைந்ததைத் தொடர்ந்து தேசிய தலைநகராக மாற்றப்பட்டது. இன்று, தோஹா ஒரு உலகளாவிய நகரமாகக் கருதப்படுகிறது
ஒட்டகப் பந்தயம்
ஒட்டகப் பந்தயம் அரபு நாடுகளில் மிகவும் பிரபலமான விளையாட்டுகளில் ஒன்றாகும் மற்றும் பல நூற்றாண்டுகளாகப் பாரம்பரியமாக நடைமுறையில் உள்ளது. முன்பெல்லாம் குழந்தைகளின் எடையைக் குறைக்க ஒட்டக ஜாக்கிகளாகப் பயன்படுத்தினார்கள். இருப்பினும், இந்த நடைமுறை ஐ.நா மற்றும் சர்வதேச அளவில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது, ஏனெனில் இது குழந்தைகளுக்குக் காயங்கள் ஏற்படுத்தும் ஆபத்தான விளையாட்டாக கருதப்பட்டது.
இன்று, ஒட்டகப் பந்தயங்களில் குழந்தைகளை ஈடுபடுத்தவில்லை, ஆனால் ரோபோக்களை ஜாக்கிகளாகப் பயன்படுத்துகிறார்கள். இந்த ரோபோக்கள் ஒட்டகத்தின் மேல் வைக்கப்பட்டு அவை ஓடும்போது விலங்குகளைக் கட்டுப்படுத்துகின்றன. ஒட்டக உரிமையாளர் தொலைதூரத்திலிருந்து கொடுக்கும் அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப அந்த ரோபோக்கள் ஒட்டகத்தை இயக்குகின்றன.
உலகின் தட்டையான நாடு
அரேபிய தீபகற்பத்தின் முனையில் அமைந்துள்ள கத்தார், தீபகற்பத்திற்குள் உள்ள ஒரு தீபகற்பமாகும். கத்தார் நாட்டின் மிக உயரமான இடமாக 203 மீ உயரத்தில் அமைந்துள்ளது. கத்தாரின் சராசரி உயரம் 28 மீ. இது உலகின் இரண்டாவது மிகவும் தட்டையான நாடாக விளங்குகிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust

