ஈரான்: இஸ்லாமிய புரட்சிக்கு முன்னும் பின்னும் பெண்கள் நிலை என்ன?- பேசும் படங்கள்

இரானில் ஹிஜாப் அணியும் வழக்கம் இருந்தாலும், பல பெண்கள் மேற்கத்திய கலாச்சார உடைகளை விரும்பி அணிந்தனர். டைட் ஃபிட்டிங் ஜீன்ஸ், மினி ஸ்கர்ட் எல்லாம் 1970களிலேயே இரான் பெண்கள் அணியத் தொடங்கிவிட்டனர்
ஈரான்
ஈரான்Twitter
Published on

பெண்கள் என்ன செய்ய வேண்டும், எப்படி உடை உடுத்த வேண்டும், யாரைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும், பெண்கள் படிக்கலாமா கூடாதா, வேலைக்குச் செல்லலாமா கூடாதா... எனப் பெண்களே தீர்மானித்துக் கொண்ட நாடு தோற்றதாக சரித்திரமில்லை.

ஆனால், பெண்கள் எப்படி வாழ வேண்டும் என விதிமுறைகள் என்கிற பெயரில் வகைதொகை இல்லாமல் பட்டியலிட்டு வைத்திருக்கும் நாடுகள் பெரிதாக வென்றதாகவோ, காலம் கடந்து நிலைத்து நின்றதாகவோ வரலாறு இல்லை, இனி இருக்கப் போவதும் இல்லை.

அப்படி இரானில் இஸ்லாமியப் புரட்சி வெடித்து ஷா மொஹம்மத் பலாவி சாம்ராஜ்யம் ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்பும், பின்பும் இரான் பெண்களின் வாழ்கையில் என்ன மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன என்பதைத் தான் இங்கு புகைப்படங்களாகப் பார்க்கப் போகிறோம்.

இஸ்லாமியப் புரட்சி ஏன், எதற்கு, எப்போது?

இரானை ஆட்சி செய்து வந்த ஷா மொஹம்மத் ரெசா பலாவி அமெரிக்கா உடன் நெருக்கமாகப் பழகி வந்தார், அவர் தன்னுடைய ஆட்சியை பலமாகக் கட்டமைக்க அமெரிக்காவிடம் அதிகளவில் உதவிகளையும் பெற்று வந்தார் என இரானில் வாழ்ந்து வந்த இஸ்லாமிய கடும்போக்குவாதிகள் குற்றம்சாட்டினர்.

மக்கள் மத்தியில் செல்வாக்கோடு இருந்த ருஹல்லா காமனேனியை ஷா பலாவி நாடு கடத்தினார். அது போக பல்வேறு மதக் கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு, சமூக நீதியின்மை போன்ற பல காரணங்களால் இரானில் இஸ்லாமியப் புரட்சி வெடித்தது.

1979ஆம் ஆண்டு இரானை ஆட்சி செய்து வந்த பலாவி வம்சத்தினரை ஆட்சிக் கட்டிலிலிருந்து இறக்கினர். ஆயதுல்லா ருஹல்லா காமனேனியின் தலைமையில் இரானில் ஒரு இஸ்லாமிய அரசு நிறுவப்பட்டது. இதைத் தான் இஸ்லாமிய புரட்சி என்கிறார்கள்.

படம் 1 - தெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த பெண்கள் 1977:

பெண்கள் அந்த காலகட்டத்திலேயே இரானில் பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு எல்லாம் படித்து வந்தனர். தொடர்ந்து பெண்கள் கல்லூரிகளில் படிக்கும் எண்ணிக்கை அதிகரித்து வந்தது.

அப்போது இரானில் இருந்த அதிகாரிகள், மிகவும் பழமைவாதத்தைப் பின்பற்றிக் கொண்டிருந்த குடும்பங்களிடமும் பேசி பெண்களை கல்லூரிக்கு அனுப்பச் செய்தனர். கிராமபுறங்களில் வாழ்ந்த பெண்களின் குடும்பங்களிடம் கூட பேசி வீட்டில் இருந்து தொலைதூரத்தில் இருந்த பள்ளிக்கூடங்கள் & கல்லூரிகளுக்கு பெண்களை அனுப்ப சம்மதிக்க வைத்தனர்.

படம் 2 - விண்டோ ஷாப்பிங் செய்யும் தெஹ்ரான் இளம் பெண்கள் 1976:

இன்று பல சினிமாக்களில் அல்லது வெப் சீரிஸ்களில் இப்படி விண்டோ ஷாப்பிங் கான்செப்டைப் பார்த்திருப்போம். அப்போதெல்லாம் இந்தியாவில் விண்டோ ஷாப்பிங் இருந்ததா என்று தெரியவில்லை. ஆனால் இரானில் இருந்தது.

அப்போது இரானில் ஹிஜாப் அணியும் வழக்கம் இருந்தாலும், பல பெண்கள் மேற்கத்திய கலாச்சார உடைகளை விரும்பி அணிந்தனர். டைட் ஃபிட்டிங் ஜீன்ஸ், மினி ஸ்கர்ட் எல்லாம் 1970களிலேயே இரான் பெண்கள் அணியத் தொடங்கிவிட்டனர் என சமீபத்தில் காலமான பேராசிரியர் ஹலே அஃப்சார் பிபிசியிடம் கூறியுள்ளார். அந்தப் படம்தான் இது.

ஈரான்
ஹிஜாப் அணிய மறுத்த பத்திரிக்கையாளர் - பேட்டியை ரத்து செய்த ஈரான் அதிபர்

படம் 3 - வெள்ளிக்கிழமை பிக்னிக் 1976:

இரான் கலாச்சாரத்தில் வார இறுதி நாட்களில் பிக்னிக் செல்வது இன்றுவரை வழக்கத்தில் இருக்கும் ஒன்று. இரானில் வெள்ளிக்கிழமை தான் வார இறுதிநாட்கள் என்பதால் பிரபல இடங்கள் மக்கள் கூட்டங்கூட்டமாக பிக்னிக் செல்வதைப் பார்க்கலாம்.

படம் 4 - சிகை அலங்கார மையங்கள் 1977:

அந்த காலகட்டத்திலேயே பெண்களுக்கான சிகை அலங்கார மையங்கள் இரானில் பெரிதாக தலை எடுக்கத் தொடங்கிவிட்டன. இது இஸ்லாமிய புரட்சிக்குப் பிறகு பெரிதாக மாறவில்லை. ஆனால் புரட்சிக்குப் பிறகு பெண்களுக்கான சிகை அலங்கார மையங்களில் ஆண்களைக் காண முடியாது.

படம் 5 - பாதுகாப்புப் படை வீரர்கள் சூழ்ந்திருக்கும் அரசர் ஷா பலாவியிடம் உரையாடும் பெண் 1971:

2500 ஆண்டு காலமாக பெர்ஷியாவில் மன்னராட்சி நிலவி வருவதைக் கொண்டாடும் வகையில் 1971ஆம் ஆண்டில் ஒரு விழா எடுக்கப்பட்டது. அதில் நவீன ஆடை அணிந்த பெண் ஒருவர், அரசர் ஷா பலாவியை சர்வ சாதாரணமாக அணுகிப் பேசும் படம்.

படம் 6 - கெத்தாக நவீன ஆடை அணிகலன்களோடு நடந்து வரும் பெண் 1976:

இஸ்லாமியப் புரட்சிக்கு முன் ஒரு பெண் அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்தி தன்னை அழகுபடுத்திக் கொண்டு, நல்ல நவீன ஆடைகள் மற்றும் அணிகலன்களை அணிந்து கொண்டு சாலையில் நடமாடலாம். அப்போது இரானிய சமூகத்தில் அப்படி பெண்கள் சுதந்திரமாக வாழ முடிந்தது. உடலை முழுமையாக மறைக்கும் சதோர் ஆடையை அணிந்து ஆக வேண்டும் என்கிற அவசியம் இல்லை.

புரட்சிக்குப் பிறகு:

படம் 1 - ஹிஜாப்புக்கு எதிராக நடந்த பெண்கள் புரட்சி 1979:

ஆயதுல்லா காமனேனி இரானின் அதி உயர் தலைவராக ஆட்சிக்கு வந்த பிறகு மார்ச் 8ஆம் தேதி சர்வதேச பெண்கள் தினத்தன்று, இரானில் இருக்கும் அனைத்து பெண்களும் சாதி, மத பாகுபாடின்றி தங்கள் உடலை முழுமையாக மறைக்கும் ஆடைகளை அணிய வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார். இதை எதிர்த்து ஆயிரக் கணக்கான பெண்கள் சாலையில் இறங்கிப் போராடினர்.

படம் 2 - அமெரிக்க தூதரகத்தின் முன் போராட்டம் 1979:

புரட்சிகரப் படையைச் சேர்ந்த மாணவர்கள் அமெரிக்க தூதரக ஊழியர்களைப் பிணைக் கைதிகளாகப் பிடித்துக் கொண்டனர். அமெரிக்காவுக்கு எதிரான போராட்டக்காரர்கள், அமெரிக்கத் தூதரகத்தைச் சூழ்ந்து கொண்டனர், இதில் பெண்களும் அடக்கம்.

படம் 3 - வெள்ளிக்கிழமை பிரார்த்தனை 1980:

வெள்ளிக்கிழமை பிரார்த்தனை செய்வது இரான் போன்ற இஸ்லாமிய நடுகளில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. குடும்பமே வெள்ளிக்கிழமை பிரார்த்தனையில் கலந்து கொண்டாலும், ஆண்கள் மற்றும் பெண்கள் தனித்தனியே அமர்ந்து பிரார்த்தனை செய்ய வேண்டும். பிரார்த்தனையில் ஆண்களே ஆதிக்கம் செலுத்துவர். ஆண்கள் இருக்கும் அறையில் பெண்கள் அமர்ந்து பிரார்த்திக்க முடியாது.

படம் 4 - திருமண ஆடைகளை வாங்கும் பெண்கள் 1986:

இரானில் திருமண ஆடைகள் பெரும்பாலும் மேற்கத்திய கலாச்சாரத்தின் படியே இருக்கின்றன. வீட்டுக்குள் அவர்கள் என்ன வேண்டுமானாலும் அணிந்து கொள்ளலாம். திருமணங்கள் மற்றும் பார்ட்டிகளில் ஆண், பெண் தனித்தனியே கூடி நடத்தப்படும். பெண்கள் மட்டுமே இருக்கும் இடத்தில் பெண்கள் என்ன வேண்டுமானாலும் அணிந்து கொள்ள அனுமதியுண்டு.

ஈரான்
ஈரான்: இளம்பெண் கொலை? ஹிஜாபிற்கு எதிராக பற்றி எரியும் போராட்டம் - விரிவான தகவல்கள்

படம் 5 - டெஹ்ரானில் நடக்கும் பெண்கள் 2005:

இரானில் உடலை மறைக்கும் ஆடை கட்டாயம் என்றாலும், அதை அனைத்து பெண்களும் முழுமையாகப் பின்பற்றி சதோரை (chador) அணிவதில்லை. தளர்வான தலையை மட்டும் மறைக்கும் ஸ்கார்ஃப் துணி & கோட் ஆடையை மட்டும் அணிய பலர் விரும்புகின்றனர். பெண்கள் தங்களின் தலையை மூடும் ஆடையைக் கூட தளர்வாக கூடுமான வரை பின்தள்ளியே அணிய முயல்கின்றனர்.

படம் 6 - காஸ்பியன் கடற்கரை 2005:

ஆண்கள் & பெண்கள் இணைந்து பொது வெளியில் குளிக்கவோ நீச்சல் அடிக்கவோ கூடாது. பெண்கள் பொதுவெளியில் நீச்சல் உடை அணிந்து குளிக்கக் கூடாது. ஆனால் சிலர் படகுகளை வாடகைக்கு எடுத்துச் சென்று யாரும் இல்லாத இடத்தில் ஆண் பெண் இணைந்து நீச்சல் அடிக்கலாம்.

படம் 7 - ஹிஜாபுக்கு ஆதரவான நடைப் பயணம் 2005:

இஸ்லாமிய கடும்போக்குவாதிகளை ஆதரிக்கும் இரான் பெண்கள், ஹிஜாபுக்கு ஆதரவாக போராடினர். அனைவரும் ஹிஜாப் அணியும் சட்டத்தை கடுமையாக அமல்படுத்த அதிகாரிகள் தவறிவிட்டதாக இந்த போராட்டம் நடந்தது. இதில் ஒரு சிறு குழந்தை மட்டும் ஹிஜாப் அணியவில்லை.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com