அமேசான் நதி தென் அமெரிக்காவின் வடக்குப் பகுதியில் மேற்கிலிருந்து கிழக்காகப் பாய்கிறது. இந்த நதியானது பெரு நாட்டின் ஆண்டிஸ் மலைகளில் உருவாகிறது. பிறகு ஈக்வடார், கொலம்பியா, வெனிசுலா, பொலிவியா மற்றும் பிரேசில் வழியாகப் பயணித்து அட்லாண்டிக் பெருங்கடலில் கலக்கிறது. அமேசான் அருகே பல பழங்குடிகள் வாழ்கின்றனர் அதில் வெளியுலகத் தொடர்பே இல்லாத ஒரு பூர்வக் குடியைச் சேர்ந்த குழுவில் எஞ்சியிருந்த ஒரே மனிதனும் இறந்து விட்டதாக அதிகாரிகள் அறிவதிருக்கின்றனர்.
பெயர் தெரியாத அந்த நபர் கடந்த 26 ஆண்டுகளாகத் தனிமையில்தான் வாழ்ந்து வந்தார். அவர் ஆழமான துளைகளைத் தோண்டியதால் அவர் துளையின் மனிதன் என்று அழைக்கப்பட்டார். அந்த துளைகள் விலங்குகளைப் பொறி வைத்துப் பிடிப்பதற்கும், அவர் மறைந்து வாழ்வதற்கும் பயன்பட்டன.
அவரது உடல் ஆகஸ்டு 23 அன்று அவரது வைக்கோல் குடிசைக்கு அருகே கண்டெடுக்கப்பட்டது அவர் வன்முறையில் ஈடுபட்டதற்கான எந்த அறிகுறியும் அங்கே இல்லை. அவர் தனது 60வது வயதில் இறந்து போனார்.
பொலிவியாவின் எல்லையான ரொண்டேனோயா மாநிலத்தில் உள்ள தனாரு பூர்வீகப் பகுதியில் வசிக்கும் ஒரு பழங்குடியினக் குழுவில் எஞ்சி நிற்கும் கடைசி மனிதராக அவர் இருந்தார்.
அவரது பழங்குடியின மக்களில் பெரும்பாலோர் 1970களில் கொல்லப்பட்டனர். அவர்களின் நிலத்தைக் கைப்பற்ற விரும்பிய ஆக்கிரமிப்பு நிலப்பிரபுக்களால் இந்த பழங்குடி மக்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர்.
1995ஆம் ஆண்டில் அவரது பழங்குடியினரில் மீதமுள்ள ஆறு பேர் சட்டவிரோத சுரங்கம் நடத்துபவர்களால் கொல்லப்பட இவர் மட்டுமே உயிர் பிழைத்த ஒரே பழங்குடியாக இருந்தார்.
பிரேசிலின் பூர்வீக விவகார முகமை (Funai) 1996 இல் அவர் உயிர் பிழைத்திருப்பதை அறிந்தது. மேலும் அவரது சொந்த பாதுகாப்பிற்காக அப்பகுதியைக் கண்காணித்து வந்தது.
பூர்வீக விவகார முகமையின் அதிகாரியான அலெடெய்ர் ஜோஸ் அல்கயார் வழக்கமான ரோந்துப் பணி சென்றும் போது அந்த பழங்குடி மனிதரின் உடல் வைக்கோல் குடிசைக்கு வெளியே காம்பில் மக்கா இறகுகளால் மூடப்பட்டிருப்பதைக் கண்டார்.
பழங்குடி மக்கள் குறித்து ஆய்வு செய்யும் வல்லுநரான மார்செலோ டோஸ் சாண்டோஸ் ஊடகங்களிடம் பேசிய போது, அந்த பழங்குடி நபர், தான் இறக்கப் போவதை அறிந்தே தன் மீது இறகுகளை வைத்திருப்பதாகக் கூறினர். மேலும் அந்த கடைசி பழங்குடி மனிதர் மரணத்திற்காகக் காத்திருந்திருக்கலாம். அவர் வன்முறையில் ஈடுபட்டதற்கான அறிகுறிகள் ஏதுமில்லை என்றும் சாண்டோஸ் கூறினார். பூர்வீக மனிதரின் உடல் கண்டுபிடிப்பதற்கு 40 முதல் 50 நாட்களுக்கு முன்பு அந்த நபர் இறந்திருக்கலாம்.
அந்த பூர்வீக மனிதரின் பிரதேசத்தில் எந்தவித ஊடுருவலும் நடந்ததற்கான அறிகுறிகள் ஏதுமில்லை. அதே போன்று அவரது குடிசையில் எதுவும் தொந்தரவு செய்யவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர் அவருக்கு நோய் தாக்கியதா என்பதை அறிய பிரேதப் பரிசோதனை செய்யப்படும்.
இறந்து போன பூர்வீக மனிதர் வெளியாட்களுடனான தொடர்பைத் தவிர்த்துள்ளதாலும், அவர் எந்த மொழியில் பேசுவார், எந்த இனத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவில்லை.
2018ஆம் ஆண்டில் பூர்வீக விவகார முகமையைச் சேர்ந்த உறுப்பினர்கள் காட்டில் ஒரு சந்தர்ப்பத்தில் அந்த பூர்விக மனிதரைப் படம் எடுக்க முடிந்தது. அந்தக் காட்சிகளில் அவர் ஒரு மரத்தின் கோடாரி போன்ற ஒன்றை வைத்து வெட்டுவதைக் காணலாம். அதன் பிறகு அவர் காணவில்லை. அவரது வைக்கோல் குடிசைகளும், அவர் தோண்டிய ஆழமான குழிகளையும் மட்டுமே பூர்வீக விவகார முகமையின் உறுப்பினர்கள் காண முடிந்தது.
சில குழிகளின் அடிப்பகுதியில் கூர்மையான முள் போன்ற அமைப்பு இருந்தது. இது அந்த பூர்வீக மனிதர் காட்டுப்பன்றி போன்ற விலங்குகளுக்கான பொறிகளாக வைத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
அவரது உடலைக் கண்டுபிடித்த பூர்வீக விவகார முகமை உறுப்பினர் அல்கேயர், அந்த மனிதர் பல ஆண்டுகளாகக் கட்டிய 50க்கும் மேற்பட்ட குடிசைகளைக் கண்டார். அந்த குடிசைகளில் மூன்று மீட்டர் ஆழத்திற்குத் துளைகள் வெட்டப்பட்டிருந்தன.
இந்த துளைகள் மனிதனுக்கு ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கலாம் அல்கேயர் கருதுகிறார். மற்றவர்களோ அந்த குழிகளை அந்த பூர்வீக மனிதர் மறைவிடமாகப் பயன்படுத்தியிருக்கலாம் என்று ஊகிக்கின்றனர்.
இப்பகுதியில் பல ஆண்டுகளாகக் கிடைத்த சான்றுகளின் படி அந்த பூர்வீக மனிதர் சோளம் மற்றும் மரவள்ளிக்கிழங்குகளைப் பயிரிட்டார். மேலும் அவர் தேன், பப்பாளி மற்றும் வாழைப் பழங்களைச் சேகரித்தார் என்றும் தெரிகிறது.
பிரேசில் நாட்டு அரசியலமைப்பின் கீழ், பழங்குடியின மக்களுக்கு அவர்களின் பாரம்பரிய நிலத்தில் உரிமை உள்ளது. இந்தப் பிரதேசம் தனாரு பூர்வீக பிரதேசம் என்று அழைக்கப்படுகிறது. இதில் 1998 ஆம் ஆண்டு முதல் வெளியாட்கள் நுழைவதற்குத் தடை செய்யப்பட்டுள்ளது.
தனாரு பிரதேசத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் விவசாயத்திற்காகப் பயன்படுகின்றன. தனாரு பிரதேசத்தில் நுழைய முடியவில்லை என்பதற்காக விவசாயம் செய்யும் சமவெளி மக்கள் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
பிரேசிலில் சுமார் 240 பழங்குடியினர் உள்ளனர். சட்டவிரோத சுரங்கத் தொழில் செய்பவர்கள், மரம் வெட்டுபவர்கள் மற்றும் விவசாயிகள் பழங்குடி மக்களின் எல்லைக்குள் நுழைவதால் பழங்குடி மக்கள் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர்.
உலகின் நுரையீரல் என்று அழைக்கப்படும் அமேசான் மலைக்காடுகளில் வாழும் இந்த பூர்வ குடி மக்கள் இன்று வாழ முடியவில்லை என்பது நாகரீகம் அடைந்தோர் என்று சொல்லிக்கொள்ளும் மனிதர்களுக்கு ஒரு பெரும் இழுக்காகும். பழங்குடி மக்களைப் பாதுகாப்பது நமது கடமையாகும்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust