ரஷ்யா : பழைய சோவியத்திற்கு எதிராக கிளர்ச்சி செய்த ஒற்றை ஆஃப்கன் பெண்

நீண்ட அடக்குமுறை, ஆணாதிக்க, அடிப்படைவாதத்தில் பிடிபட்டிருக்கும் ஆப்கானிஸ்தானில் ஒரு தேவதை தோன்றினார். அந்த தேவதையின் பெயர் மீனா. இன்றைக்கும் ஆப்கான் பெண்களுக்கு அவர் ஒரு முன்னோடி.
Meena

Meena

Twitter

ஆப்கானிஸ்தான் இந்த உலகில் போர்களால் அதிகம் உருக்குலைந்த ஒரு நாடு. சோவியத் யூனியன், அமெரிக்கா இரண்டு வல்லரசு நாடுகளையும் எதிர்த்துப் போரிட்ட ஒரே நாடு. இந்த எதிர்ப்பினூடாக இஸ்லாமிய அடிப்படைவாதிகளிடம் சிக்கிக் கொண்ட தேசம். தற்போது தாலிபான்களின் பிடியில் எந்த உரிமையும் இல்லாமல் பரிதவித்துக் கொண்டிருக்கும் மண்.

ஆப்கானில் பெண்களின் துயரம் சொல்லில் அடங்காது. சோவியத் ஆக்கிரமிப்பில் அவர்கள், குடும்பத்தினரை இழந்தார்கள். அமெரிக்க ஆதரவு பெற்ற முஜாஹிதீன்களின் ஆட்சியில் தமது சுதந்திரத்தைப் பறிகொடுத்தார்கள். இப்போது அமெரிக்கப் படைகள் விலகிக் கொண்ட பிறகு தாலிபான்களின் ஆட்சியில் பெண் என்பவள் ஒரு மனித உயிர் அல்ல. அவள் ஒரு பொருள்.

ஆனாலும் இந்த நீண்ட அடக்குமுறை, ஆணாதிக்க, அடிப்படைவாதத்தில் பிடிபட்டிருக்கும் ஆப்கானிஸ்தானில் ஒரு தேவதை தோன்றினார். அந்த தேவதையின் பெயர் மீனா. இன்றைக்கும் ஆப்கான் பெண்களுக்கு அவர் ஒரு முன்னோடி.

மீனாவின் இளமைக் காலம்

முகமது ஸாகிர் ஷா எனும் அரசரின் கடைசி பத்தாண்டுகளில் 1956 ஆம் ஆண்டில் பிறந்தார் மீனா. அந்த அரசர் பழமைவாதி அல்ல. நவீனப் பார்வை கொண்டவர். பல துறைகளிலும் பெண்கள் நுழைந்தனர். வானொலியில் பெண்களின் குரல் ஒலித்தது. பெண்கள் முக்காடு போடும் பழக்கம் தானாகவே மறைந்தது. லோயா ஜிர்கா எனும் சட்டசபையில் பெண்கள் பங்கேற்றனர்.

லைசி மலாலை என்பவர் ஆப்கான் மக்களின் அன்பைப் பெற்ற நாட்டுப்புற நாயகி. 1880களில் பிரிட்டிஷ் படைகளை எதிர்த்துப் போரிட்டவர். அவரது பெயர் கொண்ட பள்ளி காபூலிலிருந்தது. மீனா அதில் பயின்றார். இருப்பினும் ஆப்கான் பெண்களின் சமூக நிலை பெரிதும் அன்று மாறிவிடவில்லை. மீனாவின் தந்தை அவரது இரண்டு மனைவிகளை அடிக்கடி அடிப்பார். தனது தாயார்களின் அடிமை நிலையைக் கண்ணுற்ற மீனா தனது நாட்டின் பெண்கள் நிலை குறித்து இளவயதிலையே அனுபவித்திருக்கிறார்.

RAWA

RAWA

Twitter

தந்தை ஒரு கட்டிடக் கலைஞர். தாய்மார்கள் படிப்பறிவற்றவர்கள். அவரது உறவினர்கள் வேலையாட்களை அடிமை போல நடத்துவர். ஆப்கான் ஆண்கள் பெண்களை ஒடுக்குகிறார்கள். பெண்களோ அதற்குக் கட்டுப்பட வேண்டியவர்கள் என்ற மனநிலையிலிருந்தார்கள். அவர்களுக்கென்று தனியான வாழ்க்கை இல்லை. இத்தகைய சூழலில் அவர்களை விடுவிப்பது மீனாவின் தேடலாக இருந்தது.

ஆப்கானில் 225 ஆண்டுகள் நீடித்த மன்னராட்சி1973 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. 1976 ஆம் ஆண்டில் மீனா காபூல் பல்கலையில் சட்டம் படித்து வந்தார். பல்கலை வளாகங்களில் கம்யூனிஸ்டுகள், மன்னராட்சி ஆதரவாளர்கள், இஸ்லாமிய சீர்திருத்தவாதிகள் என்று பல பிரிவினர் இருந்தனர்.

இந்த சூழ்நிலை அவரது மணவாழ்க்கை தேர்வுக்கு உதவியது. அவர் மாவோயிசத் தலைவராக இருந்த ஒரு மருத்துவரை மணம் செய்தார். இந்த திருமணத்தில் இஸ்லாமிய சட்டப்படி பெண்ணுக்குப் பணம் கொடுக்கப்படவில்லை. மீனாவின் கல்வி, பள்ளி வேலைக்குக் கணவர் தடையில்லை. கணவர் கம்யூனிஸ்ட்டாக இருந்ததால் மீனாவும் ஒரு இடதுசாரியாக மாறினார். ஆனால் கட்சியின் பெண்கள் பிரிவில் சேருவதை விட ஆப்கானில் பெண்களை விடுதலை செய்யம் ஒரு அமைப்பை நிறுவுவது குறித்தே அவர் விரும்பினார்.

Meena

Ukraine Volodymyr zelenskyy : காமெடி நடிகர் டு உக்ரைன் அதிபர்; யார் இந்த செலன்ஸ்கி?

ஆப்கானிய பெண்களின் புரட்சிகர சங்கத்தின் தோற்றம்

அப்படி அவர் ஆரம்பித்த இயக்கம்தான் ஆப்கானிய பெண்களின் புரட்சிகள் சங்கம் - Revolutionary Association of the Women of Afghanistan (RAWA). சங்கத்தின் முதல் வருடத்தில் 5 பேர் சேர்ந்தனர். அடுத்த வருடம் 11 பேர். சங்கத்தின் பெண்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்கள் இல்லை. அவர்கள் அரிதாகவே சந்தித்தனர். மெல்ல மெல்லச் சங்கம் தனது செயல்பாட்டை அமைத்துக் கொண்டது.

அரசு, அரசின் வீழ்ச்சி போன்ற அரசியல் துறைகளில் சங்கம் ஈடுபடவில்லை. படிப்பறிவற்ற பெண்களுக்கான கல்வி வகுப்புகளை நடத்தியது. ஆணாதிக்கத்தின் பிடியில் சிக்கியிருக்கும் குடும்பப் பெண்களுக்குக் கல்விதான் ஒரு சுயமரியாதையைக் கொண்டு வரும் என்று மீனா நம்பினார்.

RAWA

RAWA

Twitter

சோவியத் ஆக்கிரமிப்பில் ஆப்கானிஸ்தான் - பெண்கள் நிலை

1978 இல் சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்து கம்யூனிச ஆதரவு அரசாங்கத்தை நியமித்தது. சில சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன. நிலப் பகிர்வு, கம்யூனிச சிவப்புக் கொடி, பெண்களுக்கு மண வயது 18, மணமகனுக்குக் கொடுக்க வேண்டிய மணத்தொகை குறைப்பு ஆகியவை அரசால் செய்யப்பட்டன. இதனை இஸ்லாமிய மதவாதிகளை உள்ளிட்டு ஆப்கானிய சமூகத்தின் பெரும்பான்மையே எதிர்த்தது.

இப்போது மீனாவிற்கும் சங்கத்திற்கும் ஒரு பிரச்சினை. சோவியத் ஆதரவுடன் பெண்கள் முன்னேற்றத்திற்கு போராடினால் அவர்கள் மக்களின் எதிர்ப்புக்கு உள்ளாவார்கள். ஆகவே சங்கம் ஏகாதிபத்திய எதிர்ப்பையும், பெண்களின் விடுதலை முன்னேற்றத்தையும் ஏற்றுக் கொண்டு செயல்படத் துவங்கியது. நாட்டின் விடுதலையும், பெண்களின் விடுதலையும் வேறுவேறு அல்ல என மீனா புரிந்து கொண்டார். உண்மையில் அது மீனாவிற்கும் சங்கத்திற்கும் நெருக்கடியான காலம்.

Meena

Ukraine Russia Conflict : ரசிய ஊடக விளம்பரங்களைத் தடை செய்த Google - Latest Updates

Meena

Meena

Twitter

சோவியத் எதிர்ப்பு போராட்டமும், மீனாவின் சங்கப் பணியும்

சோவியத் யூனியனை எதிர்த்த போராட்டம் ஆப்கான் முழுவதும் பரவியது. அதற்கேற்ப அரசின் அடக்குமுறையும் அதிகரித்தது. கைது, சிறையில் அடைத்தல், மரணதண்டனை அன்றாட நிகழ்வாகியது. பலர் காணாமல் போயினர். மீனா இப்படி அடக்குமுறைக்குள்ளான குடும்பங்களைச் சந்தித்து ஆறுதல் கூறத் துவங்கினார்.

இப்படித்தான் பல பெண்கள் புரட்சிகர சங்கத்தில் இணைந்தனர். ஆணாதிக்கத்தை எதிர்த்து தமது கோபத்தையும், விரக்தியையும் ஒழுங்குபடுத்தி சங்கத்தின் அமைக்கப்பட்ட எதிர்ப்பாகக் காட்டுவதற்கு அப்பெண்கள் தயாராயினர்.

டிசம்பர் 1979 இல் சோவியத் டாங்கிகள் ஆப்கானில் நுழைந்தன. பெண்கள் சங்கம் அதை எதிர்த்த பல ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றது. பிரசுரங்களை ரகசியமாக மக்களிடம் விநியோகித்தனர். பெண்கள் செய்தி எனும் பத்திரிகை துவங்கப்பட்டது. மதச்சார்பற்ற முஜாஹிதீன்கள் எனப்படும் போராளிகளுக்கு உதவும் வேலையைச் சங்கம் செய்தது. மருத்துவ உதவி செய்ததோடு துப்பாக்கிகளைப் பயன்படுத்தவும் சங்கத்துப் பெண்கள் கற்றுக் கொண்டனர்.

மீனாவின் சங்கம் குறித்த தன்வரலாற்று நூலை எழுதிய அமெரிக்காவின் மெலெடி எர்மாசில்ட் சாவிஸ் தனது நூலில் மீனாவின் கடுமுழைப்பை விவரித்திருக்கிறார். இதற்காக அவர் சங்கத்துப் பெண்கள் பலரிடம் பேசி பதிவு செய்திருக்கிறார். நாள் முழுவதும் வீடு வீடாகச் சென்று பெண்களிடம் பேசி விட்டு இரவில்தான் மீனா வீடு திரும்புவார். இதனால் நீரிழப்பு, சோர்வு, ஊட்டச் சத்துக் குறைபாடு எனப் பல பிரச்சினைகளோடு அவர் பணியாற்றினார். கர்ப்ப காலத்திலும் மீனா தனது பணியினை நிறுத்தவில்லை.

ஒரு முறை அரசு பொது மன்னிப்பின் பேரில் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கான பெண்கள் சிறைகளுக்குச் சென்று தமது குடும்ப உறுப்பினர்களை சந்திக்க ஆவலாக இருந்தனர். ஆனால் 120 பேர்கள் மட்டுமே விடுவிக்கப்பட்டனர். கோபம் கொண்ட பெண்கள் சிறையை உடைத்து நுழைந்து பார்த்தால் அங்கே இறந்து போன உடல்கள் ஏராளமாக இருந்தன. இந்தக் காட்சிகள் மீனாவால் தாங்க முடியவில்லை. நிலைகுலைந்து போனார்.

மீனா

மீனா

Twitter

மீனாவை வேட்டையாடிய ஆப்கானிய அரசு

மீனாவின் அரச எதிர்ப்பு போராட்டம் உலக அளவில் பிரபலமானதன் காரணமாக அவரது புகைப்படம் பொது இடங்களில் ஒட்டப்பட்டு தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். சங்கத்தின் பெண்களும் கைது செய்யப்பட்டனர். மீனாவின் கணவர் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார். பின்னர் இருவரும் பாகிஸ்தானுக்கு தப்பிச் சென்றனர்.

பாகிஸ்தானில் ஆயிரக்கணக்கான ஆப்கானிய மக்கள் அகதிகளாய் இருந்தனர். அங்கே மீனாவும் சங்க உறுப்பினர்களும் பள்ளிகள், மருத்துவ நிலையங்கள், ஆதரவற்றவர்களுக்கான இல்லங்களைத் துவங்கி நடத்தினர்.

மீனாவின் கணவர் 1986 ஆம் ஆண்டு ஒரு முஜாஹிதீன் குழுவால் கொல்லப்பட்டார். இக்குழு போல பல குழுக்கள் அமெரிக்காவின் சி.ஐ.ஏவால் நிதி அளிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டன. மூன்று மாதங்கள் கழித்து மீனாவும் காணாமல் போனார். ஆகஸ்டு 1987 இல் அவரது உடல் கைவிடப்பட்ட ஒரு வீட்டின் அருகே கிடந்தது.

சங்கத்தின் ஆண் ஆதரவாளர் ஒருவர் துரோகியாக மாறி மீனாவைக் காட்டிக் கொடுத்தார். மீனா சித்திரவதை செய்யப்பட்டு கழுத்து நெறிக்கப்பட்டு கொல்லப்பட்டார். அவரைக் கொன்றவர்கள் சோவியத் ஆதரவு ஆப்கானில் அரசின் உளவுத்துறையுடன் தொடர்புடையவர்கள். மீனா இறந்து 15 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானில் அவ்விரு குற்றவாகளும் தூக்கிலிடப்பட்டனர். ஆனால் அப்போதும் கூட மீனா ஆரம்பித்த புரட்சிகர பெண்கள் சங்கம் மரணதண்டனை கூடாது எனும் தனது கொள்கையை வலியுறுத்தியது.

Meena

Ukraine Russia War : Europe மிகப் பெரிய அணுமின் நிலையம் Zaporizhzhia தாக்கப்பட்டதா?

இன்றும் அந்த பெண்கள் சங்கம் இயங்குகிறது. அவர்களில் பலர் மீனாவை நேரில் பார்த்தவர்கள் இல்லை. ஆனால் மீனாவின் தியாகக் கதையை கேட்டு அவர்கள் இன்றும் கண்ணீர் விடுகிறார்கள். சோவியத் ஆட்சி வீழ்த்தப்பட்டபிறகு அமெரிக்க ஆதரவு பெற்ற தாலிபான்களின் காட்டுமிராண்டித்தனமான ஆட்சியை எதிர்த்தும் சங்கம் போராட்டங்கள் பலவற்றை நடத்தியிருக்கிறது.

சங்கத்தின் பெண்கள் தற்போதும் ஆப்கானில் இரகசியமாக இயங்குகிறார்கள். மீனாவின் கொலைக்குப் பிறகு அவர்கள் தமது சங்கத்தை பல பிரிவுகளாக பிரித்து வெளியே தெரியாதவாறு செயல்படுகிறார்கள். 2000 ஆம் ஆண்டுகளில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானில் சங்கத்தில் சுமார் 2000 பெண்கள் இணைந்திருப்பதாக ஒரு மதிப்பீடு கூறுகிறது. ஆனால் உண்மையான எண்ணிக்கை யாருக்கும் தெரியாது.

தாலிபான் ஆட்சியில் சங்கம் ஒரு இணைய தளத்தை ஆரம்பித்து நடத்தியது. மேலும் தாலிபான்கள் பெண்கள் மீது நடத்தும் கொடூரங்களை ஆவணப்படுத்தியது. காபூல் கால்பந்து மைதானத்தில் ஏழு குழந்தைகளின் தாய் ஒருவர் வெட்டிக் கொல்லப்படுவதை சங்க உறுப்பினர்கள் இரகசியமாக பதிவு செய்தனர். ஆனால் மேற்குல ஊடகங்கள் எவையும் அதை வெளியிடவில்லை.

பெண்கள் போராட்டம்

பெண்கள் போராட்டம்

Twitter

ஆனால் செப்டம்பர் 2001 இல் அமெரிக்கா தாக்கப்பட்ட பிறகு இக்காட்சியை மேற்குல ஊடகங்கள் காட்டின. ஆப்கான் மீது குண்டு போடுவதற்கு இந்த இரண்டு ஆண்டுகளுக்கு முந்தைய காட்சி அமெரிக்கர்களுக்குத் தேவைப்பட்டது. அமெரிக்க மற்றும் மேற்குல நாடுகள் சங்கத்தின் பெண்களை தமது நாடுகளுக்கு அழைத்து சென்று பேசச் செய்திருக்கின்றன. ஆனால் அது அமெரிக்காவின் சுயநல நோக்கத்திற்காக இருந்ததே அன்றி சங்கத்தின் நோக்கம் வரலாறு அது எத்தனை இடர்களோடு இயங்குகிறது என்பது பேசப்படவில்லை.

2000 ஆம் ஆண்டுகளின் மத்தியில் பாகிஸ்தானில் இருக்கும் ஆப்கானிய முகாம்கள் கலைக்கப்பட்டு மக்கள் நாடு திரும்பினர். அதன் பிறகு சங்கம் ஆப்கானில் இன்றும் வேலை செய்கிறது.

தாலிபான்களால் சுடப்பட்டு தற்போது உலகப் புகழ் பெற்றிருப்பவர் மலாலா. அவர் தனது இளம் வயதில் படித்த முதல் புத்தகமே மீனாவைப் பற்றியது என்று கூறியிருக்கிறார். ஆப்கான் பெண்கள் உரிமைக்காகப் போராடிய அந்த நூல்தான் தனது உத்வேகத்தின் துவக்கம் என்கிறார் அவர்.

இன்று மீனா இல்லை. ஆனால் அவரது போராட்ட நினைவுகள் ஆப்கான் பெண்களிடையே ஒரு அடிபணியாத உறுதியான தேவதையாக மீனா உயிர் வாழ்கிறார்.

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com