இதில் குறிப்பிடத்தக்க பணத்தை அவர் சமூக சேவைக்கு பயன்படுத்தினார் என்று கூறிவிட்டு அவர் ஆடம்பரமாக செலவழித்த விடயத்தை பலரும் கவனிப்பதில்லை. தமிழ் சினிமாவில் ஒரு படத்தில் பத்து காட்சிகளிலும் ஐந்து பாடல்களிலும் வந்து போகும் நடிகைக்கே கார், பங்களா, தனி உதவியாளர்கள் என பந்தா தேவைப்படும்போது உலக நாயகனின் சாம்ராஜ்ஜியம் பற்றி விரித்துரைக்க தேவையில்லை. அவரது விலையுயர்ந்த ஆடைகள், 2500 ஏக்கரில் விரிந்திருக்கும் நெதர்லாண்ட் அரண்மனை வீடு, அதில் கேளிக்கைப் பூங்காக்கள், நூற்றுக்கணக்கான பணியாளர்கள், அங்கு நடக்கும் புகழ்பெற்ற இரவுநேர விருந்துகள் என்று ஏராளமிருக்கின்றன.
பாடலோ, நடனமோ, ஓவியமோ அதில் தோய்ந்து கரையும் கலைஞர்களை நாம் பார்த்திருப்போம். கலையின் சுபாவம் அது. இதுவே பல மக்கள் ரசிக்கும் மேடையேன்றால் அந்த கலைஞனின் பேரழகு அல்லது உயர்வு நிலையில் வெளிப்படும் நான் என்ற உணர்வு அல்லது பேரகந்தை பல மட்டங்களில் உயர்ந்து செல்லும். கலைஞன் தனது நிகழ்ச்சியை முடித்து கொண்ட பிறகு இந்த உயர்வு எண்ணத்தை விட்டு எவ்வளவு வேகமாக சகஜநிலைக்கு வருகிறானோ அந்த அளவுக்கு அவன் காப்பாற்றப்படுவான். இல்லையேல் உயர்ந்து விட்ட அந்த பேரகந்தை வாய்ப்பு கிடைக்கும் சிற்றின்பங்களில் அபரிதமாக மூழ்கத் துவங்கும். கலைஞர்கள் பலர் பெண்பித்தராகவோ, குடிகாரராகவோ, அல்லது போதை பொருளுக்கு அடிமையாகவோ இருப்பது நாம் அறிந்ததே.
செல்லுமிடமெல்லாம் ரசிகர்கள் வெறியுடன் துரத்திய ஜாக்சனது பேரகந்தையின் பரிமாணத்தை எப்படிப் புரிந்து கொள்வது? ஒரு கிராமிய சமூகத்தில் இருக்கும் ஒரு நாட்டுப்புறக் கலைஞனுக்கு அவனது ரசிகர்களும், வெகுமதியும் கண்முன்னே முடிந்து விடும் என்பதாலும் முழு கிராமமும் அவனைப் பாரமரிக்கும் என்பதால் அவன் தனது கலை உணர்ச்சியிலிருந்து அன்னியப்படுவதில்லை. பெரிய அளவு பிரச்சினையும் அவனுக்கில்லை. ஆனால் முதலாளித்துவ சமூகத்தில் உருவாகும் கலைஞன் சந்தையைக் கட்டுப்படுத்தும் நிறுவனங்களால் பராமரிக்கப்படுகிறான். கூடவே அவனது கலை எப்படி நுகரப்படுகிறது என்பதும் அவனது கவனத்துக்கு அப்பாற்பட்டதாக ஆகிவிடுகிறது. இப்படி அன்னியமாகும் கலைஞன் தனது கலைத் திறமையை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வதற்கும், தனக்கு செல்வத்தை தரும் நிறுவனங்களின் விதிகளுக்கு உட்பட்டு வாழ்வதற்கும் மிகுந்த பிரயத்தனம் செய்கிறான். இங்கே கலைக்காக வாழ்வா, வாழ்க்கைக்காக கலையா என்று தெளிவாக இருப்பதில்லை. கலைஞனுக்கும் மக்களுக்கும் அப்பாற்பட்ட முதலாளிகள் மூன்றாவது கடவுளாக இருந்து கலையை கட்டுப்படுத்துகிறார்கள். கலைஞனையும் அவனது விருப்பத்தோடு கட்டிப்போடுகிறார்கள்.
கற்பிப்பது, கற்றுக் கொள்வது, மீண்டும் கற்பிப்பது என அறிவுத்துறையின் ஆசிரியனும், மாணவனும் இணைந்து செயல்படும்போது கலைஞன், ரசிகனின் உறவு எப்படி இருக்க வேண்டும்? கலைஞனின் கலைத்திறனை நுகரும் ரசிகனின் நுகர்திறனும், அதிலிருந்து கலைஞன் பெறும் எதிரொலியும், இதை வைத்து அவன் தனது கலையை செம்மைப்படுத்துவதும் ஒரு சங்கிலித் தொடராய் நடக்க வேண்டும். மக்களின் சமூக நடவடிக்கைகளுக்கு உணர்ச்சிரீதியாக உற்சாகத்தை அளிக்கும் ஒரு கலை தனது அடுத்தகட்ட வளர்ச்சிக்கு அந்த மக்களிடமிருந்து புதிய உரத்தைப் பெறுகிறது. ஆகவே கலை என்றாலே அது மக்கள் கலையாக இருந்தால்தான் இந்த படிக்கட்டு வளர்ச்சி சாத்தியம். ஆனால் முதலாளித்துவத்தின் கலையோ இதற்கு நேரெதிராக வினையாற்றுகிறது. ரசிகனின் மேலோட்டமான உணர்ச்சியை மலிவாகத் தூண்டிவிட்டு பிறகு அதற்கு அவனை அடிமையாக்கி அதே விசயத்தை எந்த நோக்கமின்றி மீண்டும் எதிர்பார்க்கவைத்து அதற்கு பணியவைத்து ஒரு எந்திரமாக ஒரு விலங்காக பழக்குகிறது.
அறிவியல் தொழில்நுட்பத்தின், நுகர்வு கலாச்சாரத்தின் அங்கமாக முன்னிருத்தப்பட்ட மைக்கேலின் பாப்பிசையும் ஒரு வகையில் இப்படித்தான் பிரபலமானது. மைக்கேலின் பிரபலம் காரணமாக அப்போது இருந்த அமெரிக்க குடியரசுத் தலைவர் ரீகன், ஜாக்சனை வெள்ளை மாளிகைக்கு அழைத்து விருந்தளித்தார். ரீகனின் காலத்தில்தான் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இராணுவ மேலாதிக்கம், அரசியல் சதிகள் உச்சத்தில் இருந்தன. ஆனால் ஜாக்சனின் நிலவு நடனத்தை பார்த்து ரசிகர்கள் உலகமெங்கும், அமெரிக்க ஆக்கிரமிப்பின் இலக்காக இருந்த நாடுகளையும் சேர்த்து கதறி அழுதார்கள்!
ரசிகர்களை ஒரு ரசனைக்கு பழக்கப்படுத்திய இசை நிறுவனங்கள் ஜாக்சனை அதற்கு நன்கு பயன்படுத்திக் கொண்டன. இப்படி சந்தையின் வலிமையால் மக்களிடம் கொண்டு செல்லப்பட்ட கலை எப்படி வளரமுடியும்? இந்தப் புள்ளியில்தான் தனது உலகநாயகன் இமேஜை மைக்கேல் ஜாக்சனால் ஜீரணிக்கமுடியவில்லை. அதற்குரிய தார்மீக பலம் அவரிடம் இல்லை. உலகமெங்கும் ரசிக்கப்படும் ஒரு கலைஞன் அந்த புகழை பணிவுடன் ஏற்று உரமாக்குவதற்கு அவன் மக்களுடன் பிணைக்கப்பட்டிருக்க வேண்டும். இங்கே ஜாக்சன் திணிக்கப்பட்டிருந்தார். அதனால் கலைஞனுக்குரிய பேரகந்தை அவரிடம் எதிர்மறைப் பங்கையே ஆற்றியது. உலகப் பிரபலம் என்ற புகழை பெறுவதற்கு சிந்தையில் போதிய இடமில்லாத மைக்கேல் அதற்குரிய இடமாக வேறு இன்பங்களை நாடத்துவங்கினார். சிம்பன்சி பாசம், குழந்தைகள் நேசம், வலி நிவாரணிகளுக்கு அடிமையாதல் என கிட்டத்தட்ட ஒரு வித்தியாசமான மனிதராக மாறிப்போனார்.
கூடவே குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை குற்றச்சாட்டிற்கு ஜாக்சன் ஆளானார். ஒரு வழக்கில் நீதிமன்றத்திற்கு வெளியே பணம் கொடுத்து சமரசம் செய்யப்பட்டது. மற்றொரு வழக்கில் ஆதாரம் இல்லை என புகார் தள்ளுபடி செய்யப்பட்டது. எனவே இந்த குற்றச்சாட்டு உண்மையானதா என்று நம்மால் உறுதி செய்ய முடியாதென்றாலும் இதைச் செய்வதற்குரிய பலவீனம் ஜாக்சனிடன் இருந்திருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது.
எப்படி புகழை ஜாக்சனால் எதிர்கொள்ள முடியவில்லையோ இந்த குற்றச்சாட்டுகளையும் அவரால் எதிர்கொண்டிருக்க முடியாதென்பதையும் இதனால் அவர் நிலை குலைந்திருக்க வேண்டும் என்பதையும் நாம் யூகிக்கலாம். முக்கியமாக 90களின் பிற்பகுதியிலேயே ஜாக்சனுக்குரிய உலக பாப்பிசையின் அரசன் எனும் இடம் தேவையில்லை என்றாகிவிட்டது. அவரை வைத்து கல்லாக் கட்டிய இசை நிறுவனங்களெல்லாம் அவரை சீண்டக் கூட இல்லை. அவர் நட்சத்திரமாக இருந்த போது அவரை பாப்பரசிகள் விடாமல் துரத்தினார்கள். அவரைக் குறித்த அற்ப விசயங்கள் கூட ஊடகங்களின் தலைப்புச் செய்திகளாக கொட்டப்பட்டன. நட்சத்திர ஒளி மங்கிய காலத்திலும் கூட பாப்பரசிகள் விடுவதாக இல்லை.
புகழின் உச்சியில் இருந்த போது தனது செய்திகள் அடிக்கடி வருவதை போதையாக அருந்திய ஜாக்சன் இப்போது நேரெதிரான காலத்தில் வரும் செய்திகளுக்காக இடிந்து போயிருப்பார் என்றால் மிகையில்லை. ஜாக்சன் இருந்தாலும் ஆயிரம் பொன் அவர் ஒழிந்தாலும் ஆயிரம் பொன் என்று சிறார்கள் மீதான பாலியல் விவகாரத்தில் ஊடகங்கள் நடந்து கொண்டன. நீதிமன்றத்திற்கு முன்பாகவே அவர்கள் தீர்ப்பு வழங்கி ஆயுள் சிறையிலிருக்கும் ஜாக்சனது வாழ்க்கை குறித்தெல்லாம் அலசி ஆராய்ந்தார்கள். இங்கு வெள்ளை நிறவெறியும் சற்று கூடுதல் அக்கறையுடன் செயல்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. இப்படித்தான் உலகை ஒரு காலத்தில் ஆடவைத்த கலைஞன் ஈவிரக்கமின்றி சித்திரவதை செய்யப்பட்டார்.
வழக்கிற்காக மனநிம்மதியை இழந்த ஜாக்சன் அதற்காக பெரும் செல்வத்தையும் இழந்தார். பண்ணை வீட்டையும் காலி செய்தார். ஆடம்பரத்தில் உழன்று கொண்டிருந்த நேரத்தில் பிற்காலத்தில் இப்படி ஒரு நிலை வரும் என அவர் கனவிலும் கருதியிருக்க முடியாது. உலக நாயகனுக்காக அவர் ஏற்றிருந்த லவுகீக சமாச்சாரங்கள் ஒவ்வொன்றும் பராமரிக்க முடியாமல் உதிர்ந்து கரைந்தன. வீட்டில் நிம்மதி இல்லை, வெளியே நடமாடினால் பாப்பரசிகளால் நிம்மதி இல்லை, தொழில் இல்லை, கலை இல்லை என்றால் அவர் எதை வைத்து வாழ்ந்திருக்க முடியும்? போதை மருந்துகள், வலி நிவாரணிகள் மூலம்தான் அவரது இறுதி காலம் வேறு வழியின்றி நகர்த்தப்பட்டது. இப்போது வந்திருக்கும் செய்திகள் படி அவரது உடலில் இருந்த அளவுக்கு அதிகமான மருந்துகளே அவரது உயிரைப் பறித்திருக்கலாம் எனவும கூறப்படுகிறது.
ஆனாலும் ஆயுள் கைதியாக மருந்துகளின் உதவியால் ஒரு பைத்தியக்காரனைப் போல வாழ்ந்து வந்த ஜாக்சனை இசை பன்னாட்டு நிறுவனங்கள் அப்போதும் விடுவதாக இல்லை. ஒரு சிறிய காலம் அந்த நிறுவனங்களை ஆட்டிப்படைத்த அந்த கலைஞன் இப்போது அந்த நிறுவனங்களுக்கு மறுப்பேதும் சொல்லும் நிலைமையில் இல்லை. ஐம்பது வயது, முடி இல்லாத தலை, உரியும் தோல் துணுக்குகள், மருந்தின்றி நடமுடியாத நிலை, உடல் எடை குறையும் நோய், இப்படி ஆயிரத்தெட்டு பிரச்சினைகளோடு இருந்த அந்த கலைஞனை ஐம்பது நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என உத்திரவிடுவதற்கு எத்தனை கொடூர மனம் வேண்டும்? வந்த வரை இலாபம் என்பதால் முதலாளிகள் ஜாக்சனது கையறு நிலையை நன்கு பயன்படுத்திக் கொண்டனர். பொழுது போக்கு தொழிலில் அங்கமாகிப் போன இசைச் சந்தையை விரிப்பதற்கு, புதிய தலைமுறைக்கு பழையதை அறிமுகம் செய்து ஈர்ப்பதற்கு முதலாளிகள் நினைத்திருக்கலாம்.
இந்த இசை நிகழ்ச்சிகளுக்கான ஒப்பந்தத்தில் என்னென்ன விதிகள் இருந்தன என்பது நமக்கு தெரியாது. ஒருவேளை இந்த விவரங்கள் பிரேதப் பரிசோதனையைவிட முக்கியமானது என நமக்குத் தோன்றுகிறது. நோய்வாய்ப்பட்டிருக்கும் சிங்கத்தை அடித்து வேலை வாங்கும் ரிங் மாஸ்டர் வேலையை முதலாளிகள் செய்தனர். ஆனால் சிங்கமோ வேலை செய்ய இயலாமல் செத்துப் போனது.
நிகழ்ச்சிகள் நடந்தால் கடனிலிருந்து மீளலாம், அதற்கு நலிவிலிருக்கும் உடலை எப்படி தயார் செய்வது? எப்படியும் தயார் செய்தே ஆகவேண்டும். மருந்துகள், இன்னும் அதிக மருந்துகள், புதிய நிவாரணிகள், மயக்க மருந்து எல்லாம் பயன்படுத்தி எப்படியாவது உடலை தயார் செய்ய வேண்டும். நிவாரணிகளின் தயவில் புகழ்பெற்ற அந்த இரகசியக் குரல் தனது பொலிவை எடுத்து வரவேண்டும். மூளையை ஏமாற்றியாவது இரசிகர்களை சொக்கவைத்த நிலவு நடனத்தை ஆட வேண்டும். எதாவது செய்ய வேண்டும். மைக்கேலின் இறுதிக்காலம் இப்படித்தான் மிகப்பெரிய சித்திரவதையுடன் இருந்திருக்க வேண்டும். நல்ல வேளையாக இறந்ததன் மூலம் அவர் தன்னைக் காப்பாற்றிக் கொண்டார்.
முற்றும்.